பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!
வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக.
�பிறைமேடை� இதழ் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் நுழைகிறோம். வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியன. தொடக்கம் பெற்ற முதல் தாளின் தரம், அச்சாகும் தெளிவு, தரப்பட வேண்டிய வண்ணம், வழங்க வேண்டிய செய்திகள், காணப்பட வேண்டிய கட்டுரைகள், உணர்த்தப்பட வேண்டிய உண்மைகள் என பல்வேறு அம்சங்களிலும் அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டிய திருத்தங்களிலும் அதிக கவனம் செலுத்தி நம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் இதழின் தரத்தினை கொஞ்சமும் குறையாமல் பார்த்து வந்திருக்கிறோம். அதே நேரத்தில் இதழில் நேயர்கள், முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் முன்னோடிகள், தாய்ச்சபைத் தொண்டர்கள், சங்கைமிகு உலமா பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், அரசியல் நோக்கர்கள், சமுதாயத்தின் ஆன்றோர் பெருமக்கள், சாமானியர்கள், சாதாரணமானவர்கள் என பலதரப்பட்ட ஆர்வலர்கள் இதழுக்குத் தொடர்ந்து அன்பான ஆதரவும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பும் நல்கி வருவதை நன்றிப் பெருக்குடன் நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதனிடையே விளம்பரங்கள் தந்து இதழின் சிறப்பை மேலும் மெருகூட்டிய வணிகப் பிரமுகர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
நம் சமுதாயத்தில் பத்திரிகை நடத்துவது என்பது மிகப் பெரிய சவால்தான். சிரமங்கள் இடையிடையே குறுக்கிட்டாலும் விரக்தி ஒருபோதும் தலைகாட்டியதில்லை. காரணம், �சமுதாயத்திற்கான தொடர்பயணம்� என நினைத்துவிட்டால் பொது வாழ்வில் எந்த சிரமமும் நமக்குத் தடையாக இருப்பதில்லை. தயாள எண்ணம் கொண்ட பலபேர் நம் சமூகத்தில் இருக் கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சார்புடைய அல்லது தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து விளம்பரங்கள் தந்து உதவுவதும், சந்தாக்கள் சில செலுத்தி சுற்றுப்புறப் பகுதியிலுள்ள மஸ்ஜித்களுக்கு அனுப்பச் செய்வதும் நிகழ்ந்தால் சிரமங்களைத் தாங்கும் சாத்தியக்கூறுகள் நிச்சயமாக தென்படும். தயாள எண்ணங்களின் தாராள அழைப்புகள் நம் கதவுகளைத் தட்டட்டும். எதிர்பார்த்திருப்போம்.
இந்த இதழின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அங்கமான �முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை� மூலமே நடைபெறுகின்றன. இயக்கத்தின் மற்ற வெளியீடுகளான �மணிச்சுடர்� நாளிதழும், �டைம்ஸ் ஆஃப் லீக்� ஆங்கில மாத இதழும் இவ்வாறே வெளியிடப்படுகின்றன. தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அனைத்து வெளியீடுகளும் எக்காலத்திலும் யாராலும் தனிப்பட்ட அளவில் சொந்தம் கொண்டாடபடக்கூடாத வகையில்தான் இவ் அறக்கட்டளையின் சட்டத்திடங்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பிறை நெஞ்சே! முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை பற்றிய சில முக்கிய தகவல்களை உன்னுடன் பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். இதன் தலைவராக நமது மாநில முஸ்லிம் லீகின் தலைவர் இருப்பார், செயலாளர், பொருளாளர் மற்ற ஏனைய அறங்காவலர்கள், புரவலர்கள் என்று வேறு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இதன் மூலம் திரட்டப்படும் நிதி & பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள், தேர்தல்கள் போன்ற அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாமல் நூல் வெளியிடுதல், இதழ்கள் வெளியிடுதல், ஏழை குமர்களின் திருமணங்களுக்கான உதவிகள், ஏழை மாணவ மாணவியரின் உயர்க்கல்வி உதவித் தொகைகள், இயற்கை பேரிடர்களான புயல், வெள்ளம் மற்றும் தீ விபத்துச் சேதங்களுக்கான நிவாரண உதவிகள், சிறைவாசிகளின் குடும்பங்களுக்கான தர்ம காரியங்கள், வயதான நிலையில் முடங்கிப் போய்விட்ட சங்கைமிகு உலமாக்களுக்கான உதவிகள், வறுமையில் வாடுவோரின் நோய் நிவாரண சிகிச்சைகள் போன்ற அறக்காரியங்களுக்கு மட்டுமே செலவிடப்படும் வகையில் இதன் திட்ட வரையறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சமுதாயத்தின் பலதரப்பட்ட தேவைகளுக்கு நம்மைத் தேடிவரும் வேண்டுகோள்களும், நாமே முன் சென்று செயல்பட வேண்டிய பொருளாதார உதவிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அண்மையில் கடந்த சில மாதங்களுக்குள்ளாகவே திருப்பூர் வெள்ள நிவாரணப் பணிகள், கோவை சிறைவாசிகளின் குடும்ப உதவிகள், தானே புயல் நிவாரண உதவிகள் என்று ஏறத்தாழ 15 லட்ச ரூபாய் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையின் மூலம் வழங்கியிருக்கிறோம். இத்தகைய உதவிகள் எல்லாம் நம்மிடையே திறந்த புத்தகமாக, முறையான வரவு & செலவு விவரங்களாக, தெளிவான குறிப்புகளாக அறக்கட்டளையின் கோப்புகளில் இடம் பெறுகின்றன. இத்தகைய நலக் காரியங்கள் சமுதாயத்தில் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டுமானால், நிதி ஆதாரங்களைப் பெருக்கியாக வேண்டும். இல்லையெனில் இத்தகைய அறக்காரியங்களை தொடர முடியாமல் போய்விடும்.
எனவேதான் நமது தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களுடன் அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகிகள், அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயிலுடன் சேர்ந்து ஆலோசனை செய்து சமுதாயம் பற்றிய அக்கறையுள்ளோரோடும் நம் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் உணர்வோடும் திகழும் சமுதாய புரவலர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். இந்நிகழ்ச்சி சென்ற 25.2.2012 அன்று சென்னை ஹோட்டல் அபூ பேலசில் நடந்தேறியது.
வருகை தந்த அனைவருமே ஆர்வத்தோடும் கவலை உணர்வோடும் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்தார்கள்.
அறக்கட்டளையின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்திட முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்கள். சமுதாயத்தின் அறக்காரியங்களை சிறப்புடன் செயல்படுத்த இயலும் என்கிற வெளிச்சம் பளிச்சென்று தெரிய தொடங்கியிருக்கிறது. இதற்குக் காரணமான இவர்கள் முஸ்லிம் லீக் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இடம் பெறுகிறார்கள். இவர்களைப் போன்ற தயாள எண்ணம் கொண்டவர்கள் பலர் நிச்சயம் முன்வருவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. செயல்படுகிற நமது தாய்ச்சபை முன்னணியினருக்கும் உத்வேகம் மலர்ந்திருக்கிறது.
இது தொடக்கம்தான்; தொடர்ச்சியைக் காண்போம்.
வல்ல இறைவனின் பேரருளைப் பெறுவோம்.