அன்புள்ள ஜெயமோகன்,
ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜாஸ் டயஸ்
ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது. ”ஆஸ்திரெலியர்கள் மேல்தான் குற்றமா?” என்ற அக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில் அவர் அங்கே படிக்கச் சென்றிருக்கும், குடியேறியிருக்கும் இந்தியர்களின் நடத்தை பற்றிச் சொல்லி அது அங்குள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கும் ஆழமான மனக்கசப்பை பற்றிச் சொல்லியிருக்கிறார். நூற்றுக்கு நூறு நான் அனுபவித்தறிந்த, உடன்படக்கூடிய, ஒரு கோணம் அது
டெல்லியில் நீங்கள் இருந்திருந்தால் வட இந்தியர்கள், சீக்கியர்கள் குறிப்பாக, நடந்துகொள்ளும் முறையை அறிந்து மனம் கசந்திருப்பீர்கள். குறிப்பாக தென்னிந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். அவர்களுக்கு விசித்திரமான ஒரு உயர்வு மனப்பான்மை. பெரும்பாலான உயர்வு மனப்பான்மைகள் ஆழமான தாழ்வு மனப்பான்மையில் இருந்து செயற்கையாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவை. தென்னிந்தியர்களை மூளைக்காரர்கள் என்று அவர்கள் சரியாகவோ தப்பாகவோ எண்ணிக்கொண்டு வரும் உயர்வு மனப்பான்மையா இது?
நான் மும்பை விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும்போது ஒரு தடித்த சீக்கியர் தன் மனைவியுடன் வந்து ‘ஜா’ என என்னை உந்திவிட்டு என் முன்னால் நின்றார். நான் அவரிடம் வரிசையில் நிற்கும்படி சொன்னேன். என் முகத்தில் உந்தி போடா என்று இந்தியில் சொன்னார். பின்னால் நின்ற அவரது மனைவியும் என்னை வைதார். எனக்குப்பின்னால் நின்ற ஒரு தமிழர் ‘அவனுக அப்டித்தான் சார். அவனுக கிட்ட சண்டை போட முடியாது’ என்றார்
இனிமேல் கவனியுங்கள், சீக்கியர்களும் பொதுவாக வட இந்தியர்களும் உங்களை தாண்டிச்சென்றால் தள்ளி உந்தி செல்வார்கள். வழியோ மன்னிப்போ கேட்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்குக் கூட மரியாதையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள். தங்களுக்குள் நம்மைப்பற்றி கெட்டவார்த்தை சொல்லி சிரிப்பார்கள். நம்மிடம் எதையாவது கேட்டாகள் என்றால் நாம் அவர்களின் வேலைக்காரர்கள் என அவர்கள் நினைப்பது போலிருக்கும். எந்தவகையான பொது இட மரியாதைகளையும் பேண மாட்டார்கள்.
இது சென்னையிலும் தமிழகத்திலும்கூட அவர்களின் வழக்கமாக இருக்கிறது. ரயிலில் ஒரு வட இந்தியர் என்னிடம் அவரது மேல் பெர்த்தை எடுத்துக்கொள்ள முடியுமா என்றார். அவரால் ஏறமுடியாதாம். சரி என்றேன். ஆனால் படுக்கப்போகும்போது பார்த்தால் மேல் பர்த் முழுக்க அவரது பெட்டிகள். அதை கீழே எடுத்துக்கொள்ளும்படி அவரிடம் கேட்டேன். ‘அதெப்படி, கீழே இடமில்லை” என்றார். ”சரி அப்படியானால் நீங்கள் அங்கே படுங்கள்…நான் ஏன் உங்கள் பெட்டிகள் நடுவே படுத்துக்கொள்ள வேண்டும்?” என்றேன். அவர் கடுமையான கோபத்துடன் என்னை வசை பாடினார்.
நான் அவரிடம் கீழே இருக்கும் என் படுக்கையிடத்தை விட்டுத்தரும்படி கேட்டேன். ‘அதை நீ எனக்கு கொடுத்து விட்டாயே’ என்றார். எனக்கு முதலில் திகைப்பு. இப்படி க்கூடவா இருப்பார்கள்! என்ன நியாய உணர்வு அது என. பலமுறை சொன்னேன். கைநீட்டி ‘ஜாவ் ஜாவ்’ என்றார் பிச்சைக்காரனை துரத்துவது போல. அவரை அப்படியே அவரது படுக்கையுடன் இழுத்து கீழே போட்டேன். எழுந்து அடிக்க வந்தார். நானும் அடிக்க தயரானேன். பக்கத்து படுக்கையில் இருந்த பலர் கத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லாம் அவரது ஆட்கள். நானும் கத்தினேன். அது தமிழகம் என்பதனால் அவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இரவு நெடுநேரம் வசைபாடிக்கொண்டே இருந்தார்.
நான் வடஇந்தியாவில் – அதாவது பிகார், பஞ்சாப், உபியில்- பார்த்திருக்கிறேன், பஸ்ஸில் ஒருவர் அவரது பெட்டியை நம் காலடியில் வைப்பார், அவர் காலை நீட்டி வசதியாக உட்கார்வதற்காக. அதில் உள்ள பிழையே அவர்களுக்குப் படாது. சொல்லப்போனால் திட்டுவார். நம்மை தாண்டி எச்சிலை பறக்க விடுவார். ரயிலில் நம் இடத்தை எடுத்துக்கொள்வது சர்வ சாதாரணம். தனியாக வட இந்தியாவில் பயணம்செய்வதென்பது மிக அபாயகரமானது. வட இந்தியாவில் வாழ நேர்ந்த தென்னிந்தியர்கள் இவர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சித்தான் வாழ்கிறார்கள்.
இந்த மனநிலையைப் பற்றி ஒருமுறை நான் ஒரு மூத்த கேரள இதழாளர்களிடம் உரையாடியபோது அவர் சொன்ன சித்திரம் வேறு. வா இந்தியர்களாக நாம் ரயிலில், கல்வி நிறுவனங்களில் எல்லாம் காணநேரும் மக்கள் உண்மையில் வட இந்திய உயர்சாதி – உயர் குடியினர். பாரம்பரியமாகவே நியதிகளுக்கு அப்பாற்பட்டு வாழும் ஆணவம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு சட்டத்தை மதிப்பதென்பது அவர்களுக்கு இழிவான ஒன்றாகவே தெரிகிறது. உண்மையான உயர்குடிகள் என்றால் வரிசையில் நிற்கக் கூடாது, எங்கும் காத்து நிற்கக் கூடாது, எவரிடமும் பணியக்கூடாது, தன்னுடைய வசதிகளுக்காக பிறரை ஏவ வேண்டும், பிறர் தங்களுக்கு பணிசெய்ய பிறந்தவர்கள்– இதுதான் இவர்களின் பொதுவான மனநிலையாக இருக்கிறது.
இந்த ஆணவத்தை தாங்கித் தாங்கி சொல்லிழந்து சுயமிழந்துபோன கோடானுகோடி மக்களால் ஆனதே உண்மையான வட இந்தியா. அந்த மக்களைப் பார்த்தால் அவர்கள் அஞ்சி கூசி குறுகி வளைந்து வாழ்வதைப் பார்த்தால் நமக்கு துணுக்குறுகிறது. அவர்களுக்கு சுயமரியாதை என்பதே இருப்பதில்லை. நண்பர் சொன்னார், ஒரு வட இந்தியப் பணக்காரன் புத்தம் புது ஊரில் இறங்கி அங்கே நிற்கும் ஒரு ஏழையை அடே போட்டுக் கூப்பிட்டு தனக்கு ஒரு வேலையை ஏவ முடியும். அவன் செய்வான், செய்யாமலிருக்க முடியாது.
இந்தக்குடும்பங்களின் வாரிசுகள்தான் ஆஸ்திரேலியா அல்லது கனடா அல்லது அமெரிக்கா செல்கிறார்கள். தங்கள் சொந்த ஊரில் சட்டம் நெறிக்கு அப்பாற்பட்ட பூலோக தேவர்களாக எண்ணிக்கொள்ளும் அதே மனநிலையை அப்படியே அங்கும் காட்டுகிறார்கள். அது பெரும்பாலும் சகித்துக்கொள்ளப்படுவதில்லை. இந்திய மாணவர்கள் மேல் பொதுவாக உருவாகியிருக்கும் வெறுப்புக்கு இதுவே ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடும்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் இந்த மனநிலை பரவி வருகிறது. இளைஞர்கள் எந்தவித நாகரீக ஒழுங்குகளுக்கும் கட்டுப்படாது நடந்து கொள்வதே இப்போதைய மோஸ்தர் என்றால் மிகையல்ல நடுச்சாலையில் குடிப்பது, பைக்குகளில் ஆர்ப்பாட்டம் போட்டுச்செல்வது, அப்பாவிகளை துன்புறுத்துவது. இந்த மனநிலை நமது பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு இயல்பாகவே வந்து விடுகிறது. தங்களை வரம்பெற்ற மனிதர்களாக, உலகமே தங்களுக்கு ஏவல் செய்ய வேண்டிய ஒன்றாக, இவர்கள் எண்ணுகிறார்கள். எந்தச் சட்டமும் தங்களை எதுவும்செய்யமுடியாது என எண்ணுகிறார்கள்.
உண்மையில் அப்படித்தான். ஒன்றும் செய்ய முடியாது இங்கே. பணம் இருந்தால் போலீஸ் உங்கள் குற்றேவல் கும்பல்தான். நம் பெற்றோர் பிள்ளைகளை இப்படித்தான் இப்போது வளர்க்கிறார்கள். சென்னையில் எந்தவித பொதுஇட மரியாதையும் இல்லாத இளைஞர்களை நீங்கள் ஸ்பென்ஸர் பிளாசாவில்தான் பார்க்கலாம். பண்படாத மிருகங்கள் போல நடந்துகொள்ளும் சிறுவர் சிறுமியரை. …பேச்சு மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும், அதுவே நாகரீகம் என்ற நம்பிக்கையும்.
சென்ற மாதம் திருவனந்தபுரம்-சென்னை விமானத்தில் ஒரு பதின்வயதுப்பெண்ணைப் பார்த்தேன். பார்த்தாலே தெரியும் நவீன இந்திய உயர்குடிப்பெண் என. விமானம் புறப்பாடு அறிவித்த பின்னரும் அவள் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். செல்போனை அணைக்கும்படி பலமுறை அறிவிப்பு வந்தபின்னரும் அவள் பொருட்படுத்தவில்லை. பணிப்பெண் வந்து மென்மையாக செல்போனை அணைக்கும்படிச் சொன்னாள். அச்சிறுமி கோபத்துடன் ‘போ…அணைக்கிறேன்’ என்றபின் மேலும் தன் பாட்டில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.
பணிப்பெண் மீண்டும் சொன்னாள் அவள் கடும் கோபத்துடன் ‘போ…நான் அணைக்கிறேன்’ என்றபின் மீண்டும் தொடர்ந்தாள் பணிப்பெண் அருகிலேயே நின்றிருந்தாள். அவள் தலை தூக்கி புதிதாகக் கேட்பது போல ‘ஏன்?” என்றாள். பணிப்பெண் மிக பணிவாக செல் ·போனை அணக்கும்படிச் சொன்னாள். அவள் பேசாமல் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியபின் அணைத்தாள். கிட்டத்தட்ட பத்து நிமிடம். பணிப்பெண் நன்றி என்றாள். அவள் ‘கோ டு ஹெல்” என்றாள். விமானமே இந்தப்பெண்ணுக்காக காத்திருந்தது
இந்த இளவரசி யார்? கிரானைட் அல்லது இறால் ஏற்றுமதி செய்யும் ஒரு ஆசாமியின் மகளாக இருப்பாள். இன்னமும் நிலப்பிரபுத்துவ காலம் விட்டு மீளவில்லை. முதலாளித்துவத்துக்கு அதற்கான சில மரியாதைகள் பண்புநலன்கள் உண்டு. அவை எதுவுமே இவள் மண்டையில் ஏறவில்லை. முதலாளித்துவம் மூலம் உருவாக்கப்பட்ட ஒருவகை நிலப்பிரபுத்துவ ஜீவி. நம் உயர்வற்க இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்டவர்கள். சமீப காலமாக நட்சத்திர ஓட்டல்களில் இம்மாதிரி ஆசாமிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
இவர்கள்தானே ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவுக்குச் செல்லும் இந்தியர்கள்? நானே மெல்பர்னில் மெட்ரோ ரயிலில் இந்திய மாணவர்கள் இரைந்து கத்தி அநாகரீகமாக நடந்துகொள்வதைப் பார்த்தேன். ரயில் நிலையத்தில் துப்பிக்கொண்டே செல்லும் ஒருவனைப் பார்த்தேன். அவர்கள் உருவாக்கும் மனப்பதிவு என்பது இப்படி ஒரு வன்முறையாக வெடிப்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே. இந்தியாவிலும் பல இடங்களில் இத்தகைய வன்முறைகள் வெடித்துள்ளன.
இதை வெள்ளைய இனவெறி என தந்திரமாக திசை திருப்பிவிட்டது இந்திய ஊடகங்கள் என அதே சண்டே இன்டியன் இதழில் ஆஸ்திரேலிய இதழாளர் ஆண்ட்ரூ போல்ட் எழுதுகிறார். இந்திய மாணவர்கள் தக்கபப்ட்ட சம்பவங்களில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு காமிரா பதிவுகளில் தாக்கியவர்களில் எல்லா இனத்தவரும் இருப்பது தெளிவாகவே பதிவான பிறகும் இது வெள்ளைய இன வெறி என்றே வன்மமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த விஷயம் இந்திய ஊடகங்களில் இருக்கும் இதே இந்திய உயர்குடி ஆசாமிகளால் வர்க்க உணர்வுடன் மிகைப்படுத்தப்பட்டது என்றே நான் எண்ணுகிறேன்.
இந்திய மாணவர்கள் இந்த ‘நிறவெறி’ தாக்குதல்களுக்கு எதிராக சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரில்செய்த போராட்டங்கள் ஆபாசமானவை. இந்தியாவில் கும்பல்மனநிலையையே போராட்ட உத்தியாக ஆக்கும் ஒரு கேடுகெட்ட பண்பாடு நம்மிடம் உள்ளது. சாலைகளை மறிப்பது, தெருவில் கூச்சலிட்டு நடனமாடுவது, கத்துவது என அனைத்து நெறிகளையும் மீறுவதே இங்கே நாம் போராட்டமாக கருதியிருக்கிறோம். சாலையில் செல்லும் சம்பந்தமில்லாத அப்பாவிகளை தாக்குவதும், அவமதிப்பதும்கூட இங்கே போராட்டமுறைதான்.
இதற்குக் காரணம் இங்குள்ள நம் ஊடகங்கள். ஒரு நியாயமான போராட்டத்தை அவை பொருட்படுத்தாது. ஆனால் ஒரு சிறிய வன்முறை அதில் சேர்ந்துகொண்டால் பெரிய செய்தி ஆகிவிடும். நாகர்கோயில் வடசேரியில் தண்ணீர் பஞ்சம், மக்கள் தர்ணா என்றால் செய்தியே அல்ல. வடசேரியில் மக்கள் தண்ணீர்க் குடங்களால் பேருந்துகளை தாக்கினார்கள் என்றால் புகைப்படச்செய்தி. இந்த கும்பல் மனநிலையை ஆஸ்திரேலியாவில் செய்து நாம் நம்முடைய கௌரவத்தை மேலும் இழந்து வெறுப்பை மேலும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்கள் நடப்பதாக நான் நம்பவில்லை. அங்கே உள்ள தாக்குதல்கள் நம்மவர்களின் நாகரீகமில்லாத செயல்களுக்கான எதிர்வினைகளாக இருக்கும் வாய்ப்பு அதிகம். அத்துடன் சிறு திருட்டு நோக்கமும் இருக்கலாம். அதை நம்மவர் எதிர்கொண்ட முறை அந்நாட்டை அவமதிப்பது. அதற்கான எந்த தார்மீக உரிமையும் நமக்கில்லை. ஒரு கௌரவமான சிவில் சமூகமாக நாம் மாறுவதற்கு நம் இளையதலைமுறைக்கு நாம் இன்னமும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதே இந்த போரட்டங்கள் காட்டும் உண்மை
--
Have you visited our site at www.nellaimedicos.org
Have you shared your photos at www.nellaimedicos.com/photos
You received this message because you are subscribed to the Google Groups "TvMC" group. To post to this group, send email to tv...@googlegroups.com To unsubscribe from this group, send email to tvmc-uns...@googlegroups.com For more options, visit this group at http://groups.google.com/group/tvmc?hl=en