இன்னமொரு நூற்றாண்டு இரும்
(நேரிசை வெண்பா)
இன்றமிழ்ச்சீர் ஓங்க இருந்தமிழ்நூல் ஆய்வோங்க
மன்றமெலாம் வண்டமிழர் மாண்போங்க - வென்றிமிகு
தொன்னிலமாம் கொங்குவரும் சொற்றேர் கணேசரே
இன்னமொரு நூற்றாண் டிரும்.
குறிப்பு:
இன்றமிழ் = இனிய தமிழ்; வென்றி = வெற்றி; தொன்னிலம் = தொன்மை + நிலம் =
பழம்பெருமை மிக்க நிலம்; கொங்குவரும் = கொங்கு நாட்டில் தோன்றியவரான;
சொற்றேர் = சொல் + தேர் = சொல்லாற்றல் மிக்கவர்
7:53இமயவரம்பன் said...
தமிழ்க்கடல் கணேசனார்
(பாவகை : எழுசீர் சந்தக் கலிவிருத்தம்;
தாளநடை: தான தான தான தான தான தான தானன;
பாரதியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாட்டின் மெட்டு)
சிந்து வான்வி ளங்கு மீன்சி றப்பை நாமு ணர்ந்திடச்
சிந்தை மேவு மன்பி னாலொர் தெள்ளு ரைவ ழங்கினார்
நந்த லற்று யர்ந்த ஞானி ஞால மேத்து நாவலர்
செந்த மிழ்க்க டற்க ணேசர் சீரி லங்க வாழ்கவே.
பதம் பிரித்து:
சிந்து வான் விளங்கு மீன் சிறப்பை நாம் உணர்ந்திட
சிந்தை மேவும் அன்பினால் ஓர் தெள் உரை வழங்கினார்
நந்தல் அற்று உயர்ந்த ஞானி ஞாலம் ஏத்தும் நாவலர்
செந்தமிழ்க் கடல் கணேசர் சீர் இலங்க வாழ்கவே!
குறிப்பு:
சிந்து வான் விளங்கு மீன் = மகரமீன் (துருவ நட்சத்திரம்);
சிந்தை மேவும் = மனத்தில் நிறைந்த;
தெள்ளுரை = தெளிவான உரை;
நந்தல் அற்று உயர்ந்த ஞானி = அழிவற்ற உயர்ந்த ஞானத்தை உடையவர்;
ஞாலம் = உலகம்; ஏத்தும் = புகழும்; நாவலர் = சொல்லாற்றல் மிக்கவர்; இலங்க = விளங்க