Re: முதிரை ‘Horsegram'

39 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 5, 2023, 10:44:27 AM10/5/23
to Santhavasantham, Meenakshi Sundaram, Dr. Y. Manikandan, sivasub...@sivasubramanian.in, George Hart, Vasu Narayanan, stalingun...@gmail.com
கொள்ளு என்னும் தானியத்துக்கு இரண்டு பெயர்கள் உள்ளன. (1) முதிரை - மூத்தது என்னும் பொருள். முல்லை நிலத்து வேட்டுவர், குறிஞ்சிக் குறவர்கள் வித்திட்டு விளைப்பது. இதன் வெள்ளாமை மகசூல் அளவு குறைவு. முதிரை :: small scale hunter-gatherer population's first attempts at domestication of horsegram in the Western Ghats (Sahyadri), South India. This starts around 1500 BCE. இதை மட்டுமே அறிந்த கொடவர் குடகில் முதிரை என்று எல்லாக் கொள்ளையும் அழைக்கின்றனர். அதேபோல் தான், சைய மலை படுபொருள் முதிரை என்ற பெயரால் மலையாளிகள் கொள் எல்லாவற்றையும் அழைக்கின்றனர். (2) கொள்ளு என்னும் தானியம்/கூலம் பெரிய அளவில் பயிரிடப்பட்டது சிந்து சமவெளியில். சிந்து நாகரிகம் மகாராஷ்ட்ராவுக்கு கி.மு. 1800-ன் பின்னர் வந்தது. அங்கே கொள் பயிரிடல் மிகுதியானது. வட தக்காணம் கொள்கானம்/கொண்கானம் என்ற பெயர் பெற்றது. கொண்கானம் = கொங்கானம் = Konkan region: https://en.wikipedia.org/wiki/Konkan கி. மு. 500 வாக்கில் இந்தக் கொள்ளு வெள்ளாமை தமிழகச் சமவெளிகளுக்கு வேளிரால் கொணரப்பட்டது.

மலையில் விளையும் கொள்ளுக்கு ”முதிரை”என்ற பழம்பெயர் உண்டு. இதனைச்  சங்க இலக்கியம், நிகண்டுகள் விளக்குகின்றன. உதாரணமாக, திவாகர நிகண்டில், ஏராளமான கூலப் பேர்களைப் பட்டியல் இடுகின்றார். முதலில் பல மரம், செடிகளின் பெயர்கள், பிறகு, நெல், அரிசி, பிறகு பலவகைத் தானியங்களின் பெயர்கள். இவற்றையெல்லாம் பட்டியல் கொடுத்தபிறகு, மேலே சொன்னதெல்லாம் ”முதிரை, அவரை, துவரை முதலாயின” என முடிக்கிறார். அதாவது, இந்த மகுட வாக்கியத்தில் கொள்ளு, அவரை, துவரை குறிப்பிடப்படுகின்றன. முதலில் கொள்ளின் பெயரை வைத்தலால், வேளாண்மைத் தொழிலில் அதன் பழமை அறியலாகும். இதனைத் தற்கால உரைகள் பல புரிந்து எழுதக் காணோம். எள் பழைய தானியம். எள்நெய்/எண்ணெய் எல்லா ஆயிலுக்கும் பொருள் விரிவதுபோல, முதிரை கொள்ளு, பின்னர் எல்லாப் பருப்புகளுக்கும் ஒரு பெயர் ஆகிறது “நானா முதிரையின்” என்பார் கம்பர்.  நானாவிதப் பருப்புகள்  எனப் பொருள்.  இறுதி வாசகமாக, அதுபற்றி அடுத்துச் சொல்லுகிறேன். பதிற்றுப்பத்து, வஞ்சி மாநகரை (கரூர்) ஆண்ட சேர மன்னர்களின் புகழ்கூறும் இலக்கியம் ஆகும். அதில். மேற்குத் தொடர்ச்சி மலையில் விளையும் முதிரை என்னும் மலைக் கொள்ளு சாதம் பற்றிய ஒரு வரி வருகிறது. அது சைவ சாப்பாடு என்பதற்கு “செவ்வூன் தோன்றாத” என வர்ணித்தபின், அரிசியம்கொள்ளுச் சோறு என்கிறார் புலவர். கொள்ளுச்சாதத்தில் புலால்கறி இன்றைக்கும் சேர்த்துதல் இல்லை. அரிசியம்பருப்புச் சோறு கொங்குநாட்டில் பிரசித்தி. தற்காலத் தமிழில் ’கவுண்டர் வீட்டு பிரியாணி’ என்ப. அரிசீம்பருப்புச்சோறு - இது துவரம்பருப்பு. சங்க நூலான பதிற்றுப்பத்தின் ‘ஆடு கோட்பாடு’ என்பது பற்றி விளக்கியுள்ளேன். பஞ்சாங்கம் கணித்தல், வானியல் அறிவு வடக்கே இருந்து வல்லுநர்களைக் கொணர்ந்து, சித்திரை மாதத்தை முதல் மாதமாக “ஆடு தலையாக” எனச் செய்த பெருமைக்குரியவன். அதனால் “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்” எனப் புகழப்படுபவன். அவனது சேர நாடு இந்த வானியலால் கணிதத்தில் பெரும்புகழ் பெற்றது. இப்போது, கால்குலஸ் என்னும் உயர்கணிதப் பெரும்பிரிவே லெய்பினிட்ஸ்-நியூட்டனுக்கு முன்பே, மாதவன் எம்பிராந்திரி என்னும் கணித நிபுணர் கண்ட கணிதம் என நிறுவப்பட்டுள்ளது (Kerala School of Mathematics). எனவே, சைவ உணவினர் பற்றிச் சொல்லியபின், அடுத்த வரியில், வெள்ளாட்டுக் கறி (வாலூன்) சமையல் பேசப்படுகிறது. இந்திய மன்னர்களிலே சேரர்கள் வேளிர் குலத்தார் எனக் காட்டப் பல சான்றுகள் உள்ளன. வஞ்சி மாநகரில் கிடைக்கும் சேரர் காசுகளில் வேளிர்கள் சேர மன்னர் ஆயினர் என்பதற்குச் சான்று கிடைக்கிறது. சேரன் என்ற பெயரே சேர்/ஏர் என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்.

பழைய மடலில் சொன்னேன்:
வஞ்சி மாநகரில் (கரூர்) கிடைக்கும் சங்க காலச் சேரர் நாணயங்களை ஆராய்ந்து வருகிறேன். அதில் வேளிர் வேளாண்மை பற்றிக் கண்கிறோம். ஏர்க்கால் கலப்பை, எருத்து முகம் கொண்ட காசுகள் சேரர்களின் வேளிர் தொடர்பைக் காட்டுகின்றன. ஏர் < கேர்/சேர். கீறு- (பாறு- பருந்து; முரி-முறி- போல் ர்/ற் மாற்றம்.). இன்றும் யாழ்ப்பாணத்தார் உழும் ஏரினைச் சேர் என்கின்றனர். கேரள/சேரல - இவற்றில் எல்லாம் இந்த ஏர்க் கலப்பை உண்டு.

பழு- என்ற சொல் நிறத்தைக் குறிப்பது. பாண்டியர் என்றாவதன் தாதுவேர் என்பர் அறிஞர். அது போல், வெள்- என்பதும் நிறம் பற்றி எழுந்ததாகும். வேள், வேளிர். ஒளியர் என்றும் வேளிருக்குப் பெயர் உண்டு. சேரர், பாண்டியர் பெயர் பற்றிச் சொன்னேன். கோழி கொண்டு யானையை வென்றவன். எனவே, சோழன், சோழநாடு என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

முதிரை என்ற தானியம் இருக்கிறது. முதிரை என்னும் மரமும் இருக்கிறது.  கொங்குநாட்டுப் பெரிய வள்ளல்களில் குமணன் என்பவன் புகழ்பெற்றவன். இவனது முதிரம் என்னும் ஊர், முதிரை மலை, முதிரப்புழா ஆறு, முதிர மரங்களால் ஏற்பட்ட பெயர். முதிரை என்னும் கொள்ளின் வரலாறோ, முதிரமலை எங்குள்ளது என்பது பற்றியோ சரியாக  விளக்கினோர் இல்லை. திராவிட மொழிகளின் ஒப்பீட்டால் இவை பற்றி அறிகிறோம். முதிரை மரம் = https://ta.wikipedia.org/wiki/முதிரை  
முதிரை மரம் கெட்டியானது. இதன் தாவரவியல் பெயர் = Chloroxylon swietenia.https://en.wikipedia.org/wiki/Chloroxylon_swietenia
https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:577966-1
https://eol.org/pages/5618122  etc.,

முந்தைய மடலில் சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளையவர்களுக்கு கொங்கு நாட்டு வள்ளல் குமணனின் முதிரமலை, முதிரையாறு (முதிரப்புழா), முதிரம் ஊர் (முக்கூடல்) உள்ள மூணாறு/மூன்றாறு, இருப்பிடம் தெரியவில்லை என்பதற்கு “ஊரும் பேரும்” நூலைச் சான்று காட்டினேன். மயிலை சீனி வேங்கடசாமிக்கும், குமண வள்ளலின் நாடு தெரியவில்லை. இதுபோல் பலருக்குக் கொங்குநாட்டு முதிரம் எங்கே உள்ளது (இப்போது கேரளா!) எனத் தெரியாது. மயிலையாரே குறிப்பிடுகிறார்: ”அச்செய்யுளில் அப் புலவருடைய வறுமை நெஞ்சையுருக்கும் தன்மையதாக இருந்தது. அச் செய்யுளைக் கேட்ட குமணன், தன்னுடைய துன்பத்தைவிடப் புலவரின் துன்பம் கொடியது என்று உணர்ந்து, தன் கையில் பொருள் இல்லாதபடியால், தன்னுடைய வாளைப் புலவரிடம் கொடுத்து, தன் தலையை வெட்டிக் கொண்டுபோய்த் தன் தம்பியிடங் கொடுத்தால் அவன் பரிசாகப் பொருள் கொடுப்பான் என்று கூறினான். வாளைக் கையில் வாங்கிக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் வாள்கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. குமணனைப் பற்றி இவ்வளவுதான் தெரிகின்றது. *குமணனுடைய முதிரம் என்னும் ஊர் கொங்கு நாட்டில் எவ்விடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை*. இளங்குமணனைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை.”

https://worldtamilforum.com/historical_facts/king-kumanan/

சங்ககால மன்னன் குமணன்!

குமணன் சங்ககால மன்னன். முதிரம் இவன் நாடு. இவன் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன். இவனது தம்பி இளங்குமணன்.

பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் இருக்கிறது குமணமங்கலம் (கொமரலிங்கம் என்பது தற்போதைய பெயர்). இப்பெயர் இப்பகுதியை ஆண்ட குமணனின் பெயரால் துலங்குகிறது. முதிரமலை என்பது இதனுடைய பழைய பெயர். குமணன் இயற்றமிழை வளர்த்த புலவர்களையும் இசைத்தமிழை வளர்த்த பாணர்களையும் நாடகத்தமிழை வளர்த்த கூத்தர்களையும் புரந்தான். அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் கொடையாகக் கொடுத்தான். இதனால் குமணனின் புகழ் பரவியது. இதனைக் கண்டு குமணனுக்குத் தம்பியான இளங்குமணன் பொறாமை கொண்டான். இதனை அறிந்த குமணன், போரைத் தவிர்த்து தன்னுடைய நாட்டை இளங்குமணனிடம் ஒப்படைத்துவிட்டு, நண்பர்களோடு காட்டிற்குச் சென்றுவிட்டான். ஆனால் இளங்குமணனோ தன் அண்ணனை ஒழிக்க நினைத்தான். எனவே, ‘குமணன் தலையை கொய்துகொண்டு வருபவர்களுக்கு ஆயிரம்பொன் பரிசு’ என இளங்குமணன் அறிவித்தான். இந்நிலையில் குமணனிடம் கொடை பெற்றுச் செல்வதற்காக பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர் முதிர மலைக்கு வந்தார். நடந்தவைகளை அறிந்தார். பெருஞ்சித்திரனாருக்கு யானையைப் பரிசளித்த வள்ளல் குமணனின் நிலையை எண்ணி இரங்கினார். குமணனைத் தேடி காட்டிற்கு சென்றார். அவனைச் சந்தித்தார். குமணனனோ புலவருக்கு எதனைக் கொடையாகக் கொடுப்பது எனத் தெரியாது தவித்தான். அப்பொழுது அவன்தன் தம்பியின் ஆணை நினைவிற்கு வந்தது. தன்னுடைய உடைவாளை எடுத்து புலவரிடம் கொடுத்தான். தனது தலையைக் கொய்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்களைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினான். புலவர் குமணனின் வாளை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து அகன்றார்.

புலவர் மறுநாள் குமணனின் தலையை ஒரு கையிலும் அவனது வாளை மறுகையிலும் ஏந்திக்கொண்டு இளங்குமணனின் அரண்மனைக்குச் சென்றார். குமணன்னின் கொய்யப்பட்ட தலையைக் கண்ட இளங்குமணன், புலவரின் வறுமையை நீக்க தனது தலையையே கொடுத்த குமணன் பெருமையை எண்ணி, தன்னுடைய தவறை உணர்ந்து அழுது புலம்பினான்; தற்கொலை செய்துகொள்ள முயன்றான். அம்முயற்சியைத் தடுத்த புலவர், “குமணன் சாகவில்லை. இது செவ்வாழைத் தண்டால் செய்யப்பட்ட போலித்தலை. உன்னைத் திருத்துவதற்காக நான் செய்தது” எனக் கூறினார். பின்னர் இளங்குமணன் காட்டிற்குச் சென்று தன் அண்ணன் குமணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைத்தான்.

புறநானூறு தரும் பாடல் வாரியான செய்திகள்

குமணன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவன்.
குமணன் மேம்பட்ட குடியில் பிறந்தவன்.
நண்பர் சூழ முதிரமலைப் பகுதியில் வாழ்ந்தவன்.
மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு மகளிர் மகிழ்வு தர வாழ்ந்து வந்தான்.
முரசு முழங்கும் அவன் வளமனைக்கு வரும் அவனது குடிமக்கள்
பெருஞ்செல்வம் பெற்று மகிழ்ந்தனர். இவனது வாள்-படை மிகவும் பெரியது.

இவன் வழங்கும் கொடையானது கொடையைப் பெற்றவர் பிரருக்கெல்லாம் வழங்கி மகிழும் அளவுக்கு மிகுதியாக இருந்தது.

அவ்வப்போது பசுமையான கோலை வளைத்துச் செய்துகொண்ட யாழை மீட்டிப் பாடும் வயிரியரின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவன்.

பாடுவோருக்கெல்லாம் யானைகளைப் பரிசிலாக வழங்கி மகிழ்ந்தவன் இவன். இவனைப் பெருந்தலைச் சாத்தனார் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்த காலத்தில் பாடினார். அவன் தன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையாக அவன் தரும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும்படி வாளைப் புலவருக்கு வழங்கினான்.

சிவாலயம் :

குமணன் என்பவன் பழனிமலைத் தொடரினை ஆண்டு வந்த அரசனாவான். இவன் முதிரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவன் குறுநில மன்னனாவான். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டவன் என்பதும், தலையேழு வள்ளல்களில் ஒருவன் என்பதும் செய்தியாகும். பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே குமணமங்கலம் என்று ஊர் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பதை இவர் உருவாக்கினார். மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிலிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.

ஜர்னலிஸ்ட் மீனாட்சி, குமணன் பற்றிச் சிறுகுறிப்பு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
https://meenakshisundaramwriter.blogspot.com/2014/06/lending-ears-to-ancient-bards-of.html

~NG

On Mon, Oct 2, 2023 at 10:50 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
முதிரை ‘Horsegram'
=======================

தமிழில் மரங்களுக்கும், கொடிகளுக்கும் ஒரே பெயர் அமைவதுண்டு. காட்டாக, வஞ்சி மரம், வஞ்சிக்கொடி இருக்கின்றன. சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரம் பெயர் பெறுவது இத்தாவரத்தால். ஆன்பொருநைக் கரையில் உள்ள வஞ்சிக்கொடி அம்மன் ஆலயம் பலருக்கும் குலதெய்வம். இதே போல, முதிரை என்னும் மரம் இருக்கிறது. முதிரை என்ற தானியம் இருக்கிறது. மலையில் விளையும் கொள்ளுக்கு ”முதிரை”என்ற பழம்பெயர் உண்டு. இதனைச்  சங்க இலக்கியம், நிகண்டுகள் விளக்குகின்றன. அதுபற்றி அடுத்துச் சொல்லுகிறேன். கொங்குநாட்டுப் பெரிய வள்ளல்களில் குமணன் என்பவன் புகழ்பெற்றவன். இவனது முதிரம் என்னும் ஊர், முதிரை மலை, முதிரப்புழா ஆறு, முதிர மரங்களால் ஏற்பட்ட பெயர். முதிரை என்னும் கொள்ளின் வரலாறோ, முதிரமலை எங்குள்ளது என்பது பற்றியோ சரியாக  விளக்கினோர் இல்லை. திராவிட மொழிகளின் ஒப்பீட்டால் இவை பற்றி அறிகிறோம். முதிரை மரம் = https://ta.wikipedia.org/wiki/முதிரை  
முதிரை மரம் கெட்டியானது. இதன் தாவரவியல் பெயர் = Chloroxylon swietenia. https://en.wikipedia.org/wiki/Chloroxylon_swietenia
https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:577966-1
https://eol.org/pages/5618122  etc.,

வள்ளல் குமணன் ஆண்ட முதிரமலை, முதிரம், முதிரைப்புழை “மூணாறு (3 rivers)”
--------------------------------------------------------------
சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, ஊரும் பேரும்:
“குமணன் கடையெழு வள்ளல்களின் காலம் கழிந்த பின்பு கொங்கு நாட்டுக் குறுநில மன்னனாகிய குமணன் சிறந்த கொடையாளனாக விளங்கினான்.

முதிரம் என்னும் மலையும், அதைச் சேர்ந்த நாடும் அவன் ஆட்சியில் அமைந்திருந்தன. குமணண் வாழ்ந்த ஊர் குமணம் என்று  பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்ததென்று அறிந்தோர் கூறுவர். கோவை நாட்டைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில் கொழுமம் ஒரு சிற்றூராக இன்று காணப்படுகின்றது. சோழீச்சுரம் என்னும் பழைமையான சிவாலயம் இவ்வூரில் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொங்கு நாட்டை யாண்ட வீரசோழன் அங்கே கட்டிய கோயில் விரசோழீச்சுரம் என்னும் பெயர் பெற்றுப் பின்னர்ச் சோழீச்சரம் எனக் குறுகி வழங்கலாயிற்று என்பது சாசனங்களால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழிகளால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும் குதிரை மலையே பழைய முதிர மலை என்பர். முதுகிற் சேணமிட்டு நிற்கும் குதிரை போன்று இம் மலை காட்சி யளித்தலால் பிற்காலத்தார் அதனைக் குதிரை மலை என்று அழைத்தனர் போலும்! ” https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZYdjuIy.TVA_BOK_0004026/page/1/mode/2up

ரா. பி. சேதுப்பிள்ளை இவ்வாறு எழுதியபின் பலரும் இப்பிழையைப் பிரதி எடுத்தனர். பழனி அருகே உள்ள குதிரை மலை வேறு. இப்போது கேரளத்தில் உள்ள முதிரை மலை வேறு.

குழுமம் என்ற ஊர்ப்பெயர் கொழுமம் என்றானது. ஆன்பொருனை (அமராவதி) ஆற்றங்கரையில் உள்ள ஊர். குளிர்ந்த ஆன்பொருனை எனப் பழைய உரைகளில் விளக்கம் பெறும் தண்ணான்பொருநை ஆறு. வஞ்சி மாநகர் அருகே காவிரிய்டன் ஆன்பொருனை கலக்கிறது, கொழுமம் (< குழுமம்) எதிர்க்கரையில், சங்க கால வள்ளல் குமணன் வழிவந்தோர் காசியில் இருந்து மாட்டுவண்டியில் பாணலிங்கம் எடுத்துவந்து குமணலிங்கம் என்ற பெயரில் கோயில் எடுத்துள்ளனர். இதனால், இவ்வூர் குமணலிங்கம் > குமரலிங்கம் > கொமரலிங்கம் ஆகிவிட்டது! சென்றமுறை ஊர் சென்றபோது குமணன் சந்ததியார் கட்டிய காசிவிசுவநாதர் கோயில் சென்றேன். மிகக் கீலமாக இருந்ததைக் கொஞ்சம் சரிசெய்துள்ளனர். https://tamil.samayam.com/latest-news/tiruppur/tirupur-people-demands-to-protect-centuries-old-stone-hall-near-amaravathi-river-bank/articleshow/94496613.cms
  நண்பர் மீனாட்சி குமணன் வரலாற்றை ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார்: https://meenakshisundaramwriter.blogspot.com/2014/06/lending-ears-to-ancient-bards-of.html

நல்லதண்ணி ஆறு என்னும் சிற்றாறு கன்னிமலையில் பிறக்கிறது. குண்டலை ஆறு அதன் அருகே ஓடுகிறது. இவை இரண்டும் ஓடி, முதிரைப்புழை (முதிரப்புழா) ஆற்றுடன் சங்கமிக்கின்றன. இந்த மூன்று ஆறுகளின் கூடல் உள்ள இடத்தில் உள்ள நகரம் தான் மூணாறு என அழைக்கிறோம். முதிர மலை, அம்மலையில் முதிரப்புழா என்னும் ஆறு பாய்ந்து, கேரளாவின் பெரிய ஆறான சுள்ளியம் பேரியாற்றுடன் கலக்கிறது.  இந்த முதிரப்புழா (முதிரையாறு) பாயும் மலைநிலம் சங்க கால வள்ளல் குமணனின் மலை என உறுதியாகத் தெளியலாம். மூணாறு ஊரோ, அருகிலோ, குமணனின் முதிரம் இருந்துள்ளது. சுள்ளியம் பேரியாறு இன்று கேரளாவின் பெரியாறு. பெரியாறு கடலில் கலக்கும் கரையிலே முசிறிப் பட்டினம் யவனர்களை வரவேற்றது. அண்மையில் தொல்லியல்துறையினர் முசிறிப்பட்டினத்தைக் கண்டறிந்தனர். தமிழ் பிராமி பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளன.

https://www.researchgate.net/publication/220473250_Morphometric_aspects_of_a_small_tropical_mountain_river_system_the_southern_Western_Ghats_India
”The Muthirapuzha watershed (MW) is one among the major tributaries of Periyar – the longest west flowing river in Kerala, India. A morphometric analysis was carried out to determine the spatial variations in the drainage characteristics of MW”
https://www.google.com/maps/search/Muthirapuzha/@10.0979872,76.7285283,11z?hl=en&entry=ttu
https://en.wikipedia.org/wiki/Muthirapuzha_River

குமண வள்ளலின் நாடாகிய முதிரமலையும், முதிரப்புழா ஆறும் அறிதற் தகுந்தது. மேலும் பார்ப்போம்.
நா. கணேசன்
muthiram_kumanan.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages