கீழடி ஊறல்-பானைகளும், நாட்படு தேறல்-பானைகளும்

12 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 29, 2019, 2:18:14 AM11/29/19
to Kalai Email, thiruppuvanam, Dr.SubasChandra Bose, Pirama Dr Palanichamy FFE, Dr.E.M.Sudarsana Natchiappan
கீழடியில் கிடைத்தவை ஊறல்-பானைகளும், நாட்படு தேறல்-பானைகளுமா?
(குறிப்பு - இது தொல்லியல் ஆராய்ச்சிக் கருத்து அல்ல.  கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து ஆகும்.)

கீழடி அருகே நகரநாகரிகம் ஒன்றைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  இங்கே  மிகவும் கூடுதலான எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.   இவற்றில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஏராளமான பொருட்களும் அடங்கும்.  கண்டறிப்பட்டுள்ள சுடுமண் பொருட்களுன்  இரண்டுவிதமான சுடுமண்பானைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.  முதலாவது சுடுமண்குழாய்களுடன் இணைந்த பானைகளாகும், மற்றது மூடியுடன் கூடிய பெரிய பானைகளாகும்.
இந்த இரண்டுவிதமான பானைகளும் பண்டைத் தமிழர்களால் எதற்காகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன? எனப் பல்வேறு கருத்துக்களை அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

Tamil_News_large_2370126.jpg
1) நாட்படு தேறல் -
தேறல் என்றால் கள் என்று பொருள்.
அகழாய்வில் மூடிவைக்கப்பட்ட பெரிய பானைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  மூடியுடன் கூடிய இந்தப் பானைகளைக் காணும் போது இவை கள்ளை நீண்ட நாட்களுக்குச் சேமித்துவைத்துப் பயன்படுத்தப்பட்ட பானைகளாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
பனைமரம் தென்னைமரம் ஈச்சமரம் இவற்றின் பாலைகளைச் சீவி விடுவார்கள்.  இவ்வாறு சீவிவிடப்பட்ட பாலைகளில் ஓர் மண்கலயத்தைக் (மண்சட்டி அல்லது முட்டி) கட்டிவைத்துவிடுவார்கள்.  சீவிவிடப்பட்ட பாலையில் இருந்து சொட்டுச்சொட்டாகக் கள் வடிந்து இந்த மண்கலயத்தில் சேர்ந்திடும்.  இவ்வாறு கள் நிறைந்த கலையத்தை மரத்திலிருந்து இறக்கிக் கள்ளைக் குடிப்பார்கள்.
குடித்தது போக, மீதமிருக்கும் கள்ளை என்ன செய்வது?
கள் இறக்காத நாட்களில், குடிப்பதற்குக் கள்ளுக்கு எங்கே போவது?
விருந்து நடக்கும் நாட்களில் கள் அதிகமாகத் தேவைப்படுமே,  அப்போது அதிகான கள்ளுக்கு எங்கே போவது?
பூமியில் ஒருபெரிய குழியைத் தோண்டி அதனுள் ஒரு பெரிய மண்பானையைப் புதைத்து வைத்திருப்பார்கள்.  தினமும் கள்ளை இறக்கிப் பயன்படுத்தியதுபோக,  மீதமுள்ள கள்ளை இந்தப் புதைக்கப்பட்டுள்ள பெரிய மண்பானையில் ஊற்றி மூடிச் சேமித்து வைத்து விடுவார்கள்.
இவ்வாறு நீண்டநாட்கள் பானையில் சேமித்துவைக்கப்பட்ட கள்ளிற்குப் போதை அதிகமாம்.
தேள் கொட்டினால் கடுக்கும் அல்லவா?
அது போன்று கடுப்புச் சுவைகூடியதாக இருக்குமாம் இந்தக் கள்.


ஊறல்1.png
2) ஊறல் -
சுருங்கை என்று சுடுமண்குழாய்களைச் சங்கத்  தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடுகின்றன என்றும், இதுவே கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அறிஞர்கள் கூறிவருகின்றனர்.  சுருங்கை என்றால் ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு நீர் வழிந்தோடுவதற்கான குழாய்போன்றதொரு அமைப்பு என்றும் சொல்கின்றனர்.   ஆனால் அகழ்வாராய்ச்சியில் ஒரு பெரிய மண்பானையுடன் இணைந்தே இந்தச் சுடுமண்குழாய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அமைப்பு முறையால் இந்தச் சுடுமண்குழாய்கள் சுருங்கையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதவேண்டியுள்ளது.
திரு அமர்நாத் அவர்கள் அகழாய்வு செய்யும்போது, பெரிய மண்பானையுடன் இணைந்த சுடுமண்குழாய் கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் தமிழகஅரசின் தொல்லியல்துறையினரின் அகழாய்விலும் இதே போன்று மண்பானையுடன் இணைந்த சுடுமண்குழாய் கண்டறியப்பட்டுள்ளது.  அதாவது சுடுமண்குழாய் கண்டறியப்பட்ட இடங்களில் சுடுமண்குழாயுடன் மண்பானையும் இணைந்தே உள்ளன.    மேலும் இவற்றின் அருகே துளைகளுடன் கூடிய சுட்டமண்ணினால் செய்யப்பெற்ற வடிகட்டியும் கிடைத்துள்ளது.
சுடுமண் குழாய், அதனுடன் இணைந்த பெரியமண்பானை, இவற்றின் அருகே வடிகட்டி என மூன்றும் இணைந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பு முறையால், இது சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் “ஊறல் பானை” போன்றதொரு அமைப்பாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

ஊறல் 6.png
பழங்களை ஊறவைத்து நொதிக்கவைத்தும், கரும்பை ஊறவைத்து நொதிக்கவைத்தும் வடித்து எடுத்துப் போதை தரும் பானமாகப்  பயன்படுத்துவார்கள்.   இவ்வாறு நொதிக்க வைக்கப்பட்ட பழச்சாற்றையோ கரும்புச் சாற்றையோ பயன்படுத்திச் சாராயம் காய்ச்சி எடுத்தும் பயன்படுத்துவார்கள்.
பழங்களைவிடக் கரும்புச்சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் சுவைமிகுந்தது, போதை மிகுந்தது என்றும் சொல்வார்கள். கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பானையுடன் இணைந்த சுடுமண்குழாயானது சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் “ஊறல் பானை” போன்றதொரு அமைப்பாக இருக்கலாம்.
அரியல் கள் தசும்பு தேறல் தேன் தோப்பி நறவம் நறவு நறா நனை பதம் பிழி மகிழ் மட்டம் மட்டு மது வேரி முதலான சொற்கள் கள்ளினைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாகத் தமிழ்இலக்கியங்களில் அறியமுடிகிறது.
இந்தச் சுடுமண்குழாய் மற்றும் மூடியபானைகளுக்குள் இருந்த  பொருட்களின் வேதித்தன்மைகள் அறிவியல் அடிப்படையில் கண்டறியப்படும்போது,  உண்மைத் தன்மையை அறியக் கிடைக்கலாம்.

அதியர்கோன் மகன் பொகுட்டு எழினி என்றொருவன் இருந்தான்.
அவன் வீட்டுக் கடைவாயிலில் விடியற்காலையில் நின்று, தடாரிப் பறை கொண்டு அவன் வெற்றிச் சிறப்புகளை ஔவையார் பாடுகிறார்.
‘வாளேர் உழவனே வாழ்க’ என்று புகழ்ந்து ஏத்திப் பாடுகிறார்.
ஔவையின் பாடல்கேட்டு வந்த ‘பொகுட்டு எழினி’, வியர்வையால் நனைந்த பாசிவேர் போன்ற கிழிந்த ஔவையின் ஆடையை நீக்கி, அழகிய கரை இட்ட ஆடையைக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தான்.
தேள் கொட்டினால் கடுக்கும் அல்லவா? அது போன்று கடுப்புச் சுவையுடன் கூடிய நாள்பட்ட  புளித்தகள்ளையும்,  நட்சத்திரங்களைப் பதித்துள்ளது போன்று மின்னுகின்ற கல(ய)த்தில் உணவும் கொடுத்து ஔவையைச் சிறப்பித்தான்.

கடல் கடந்த நாட்டில் கரும்பு இருந்தது.  அந்தக் கரும்பின் சுவையானது தேவர்களின் அமுதம் போன்று இனிக்கும்.  அமுதம்போன்ற இனிப்புச் சுவையுடைய கரும்பினைக் கடல்கடந்து போய்க் கொண்டுவந்து தமிழர்களுக்கு கொடுத்தவர் பொகுட்டுஎழியின் முன்னோர்.
கரும்பு கொண்டுவந்து கொடுத்த முன்னோர்கள் வழி வந்த தலைவனான பொகுட்டு எழினியே நீ வாழ்க! கரும்பையும், தேள்கடுப்ப கள்ளையும் பாடிவைத்த ஔவையே நீயும் வாழ்க!

தொல்லியலாளர் போற்றுவோம்.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.
கரும்பும் நாட்படு தேறலும் வழங்கிய எழினியைப் போற்றுவோம்.
விருந்தோம்பலைப் பாடிவைத்த ஔவையைப் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 13 (29.11.2019) வெள்ளிக்கிழமை.
-- 
Reply all
Reply to author
Forward
0 new messages