தமிழ்நாட்டில் 98 ஆறுகள் ஓடுகின்றனவாம். இத்தனை ஆறுகளுக்குள் ஒரு ஆற்றிற்கு மட்டுமே தமிழ் தெரியுமாம். ஆமாம் தமிழ்மொழி அறியுமாம் வைகை ஆறு. இதனைத் “தமிழ் அறி வைகைப் பேர்யாறு” (பாடல் எண் 3338) என்கிறது திருவிளையாடற் புராணம். வையை வைகை வேகவதி கிருதமாலை என்ற நான்கு பெயர்களால் திருவிளையாடல் புராணம் வைகை ஆற்றைக் குறிப்பிடுகிறது.
ஆனால், தமிழ் இலக்கியத்தைச் சங்ககாலப் பாடல்கள் என்றும், பக்தி இலக்கியப் பாடல்கள் என்றும் பிரித்துப் பார்த்தால், சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் வையை என்ற பெயர் மட்டுமே 92 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது. வைகை வேகவதி கிருதமாலை என்ற பெயர்கள் காணப்பெறவில்லை.
இதற்கு நேர்மாறாகத் தேவாரப் பாடல்களில் வைகை என்ற பெயர் மட்டுமே 19 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது. வையை வேகவதி கிருதமாலை என்ற பெயர்கள் இடம் பெறவில்லை.
திருவிளையாடற் புராணத்தில் மட்டுமே வையை, வைகை, வேகவதி, கிருதமாலை என்ற நான்கு பெயர்களும் இடம் பெற்றுள்ளன. திருவிளையாடற் புராணத்தில், வையை என்ற பெயர் 3 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வைகை என்ற பெயர் 42 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வேகவதி என்ற பெயர் 2 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கிருதமாலை என்ற பெயர் 1 பாடலிலும் இடம் பெற்றுள்ளது. பாடல் எண் 875இல் மட்டும் வைகை வேகவதி கிருதமாலை என்ற மூன்று பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
சங்கப் பாடல்களும் சிலம்பதிகாரமும் வையைப் பாடியுள்ளன. பக்திஇலக்கியங்கள் வைகையைப் பாடியுள்ளன. திருவிளையாடற் புராணம் வையை வைகை வேகவதி கிருதமாலை என்ற நான்கு பெயர்களையும் பாடுகிறது.
இதனால் சங்ககாலத்தில் ஓடிய வையை ஆறானது, வழிமாறி தடம்மாறி உருமாறி, வையை என்ற பெயரும் மாறி, வைகை என்ற பெயருடைய ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற கருத வேண்டியுள்ளது.
நன்றி – தொடரடைவு http://tamilconcordance.in
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/…/blog-p…
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 14 (01.10.2019) செவ்வாய்கிழமை.
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)