தினமலர் செய்தி - திருப்புவனம்:கீழடியில், தொல்லியல் துறையினர் துவங்கியுள்ள, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில், முதல் கட்டமாக, நான்கு குழிகள் தோண்டி, அதில் ஆய்வை துவக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், 13ம் தேதி துவங்கிய, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில், விவசாயி கருப்பையாவின், 1 ஏக்கர் நிலத்தில், 47 லட்சம் ரூபாய் செலவில், ஆய்வு பணிகள் துவங்கின.முதல் கட்டமாக, நான்கு குழிகள் தோண்டி, அதில் அகழாய்வு பணிகளை, தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, நான்கு கட்டங்களாக நடத்திய அகழாய்வில், 4 மீட்டர் வரை ஆழம் தோண்டிய பின்னரே, பொருட்கள் கிடைத்தன.ஆனால், ஐந்தாம் கட்ட அகழாய்வில், 1 மீட்டர் ஆழம் தோண்டியதும், பொருட்கள் கிடைக்க துவங்கியுள்ளன. தற்சமயம், பழங்கால மண் ஓடு, பானை, அழகு பானைகள் கிடைத்துள்ளன.'விவசாயிகள் கருப்பையா மற்றும் முருகேசன் ஆகியோரின் நிலங்கள் முழுவதிலும் ஆய்வு செய்தால், பழங்கால பொருட்கள் கிடைக்கும்' என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.