கீழடியில் கண்டறியப்பட்டவை சுருங்கையா? ஊறல் பானைகளா?
(குறிப்பு - இது தொல்லியல் ஆராய்ச்சிக் கருத்து அல்ல. கட்டுரையாளரின் தான்தோன்றித்தனமான கருத்து ஆகும்.)
கீழடி யருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் தமிழரின் தொன்மைக்குச் சான்றாக உள்ளது.
2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் நாகரிகமாகத் தமிழர் நாகரிகம் உள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியில் “சுருங்கை” என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் நீர்போக்கிக்குழாய் போன்றதொரு அமைப்பை உடைய சுடுமண்குழாய்களைக் கண்டறிந்துள்ளனர். சுருங்கை என்ற இந்தச் சுடுமண்குழாயின் ஒருபுறத்திலிருந்து நீர் வழிந்தோடி அந்தக் குழாயின் மற்றொரு பகுதிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், கீழடியில் கண்டறியப்பட்டுள்ள சுடுமண்குழாயின் ஒருபகுதியானது ஒரு பெரிய மண்பானையுடன் கண்டறியப்பட்டுள்ளது.
திரு அமர்நாத் அவர்கள் அகழாய்வு செய்யும்போது பெரிய மண்பானையுடன் இணைந்த சுடுமண்குழாய் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் தமிழகஅரசின் தொல்லியல்துறையினரின் அகழாய்விலும் இதே போன்று மண்பானையுடன் இணைந்த சுடுமண்குழாய் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சுடுமண்குழாய் கண்டறியப்பட்ட இடங்களில் குழாயின் அருகே ஒரு மண்பானையும் இணைந்தே உள்ளது. மேலும் இவற்றின் அருகே துளைகளுடன் கூடிய சுட்டமண்ணினால் செய்யப்பெற்ற வடிகட்டியும் கிடைத்துள்ளன.
சுடுமண் குழாய், அதனருகே பெரியமண்பானை, இவற்றின் அருகே சுட்டமண்ணினால் செய்யப்பட்ட வடிகட்டி என மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. இந்த அமைப்பு முறையால், இது சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் “ஊறல் பானை” போன்றதொரு அமைப்பாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்
அரியல் கள் தசும்பு தேறல் தேன் தோப்பி நறவம் நறவு நறா நனை பதம் பிழி மகிழ் மட்டம் மட்டு மது வேரி முதலான சொற்கள்
கள்ளினைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாகத் தமிழ்இலக்கியங்களில் அறியமுடிகிறது. இந்தச் சுடுமண்குழாய் மற்றும் பானைகளுக்குள் உள்ள பொருட்களின் வேதித்தன்மையைக் கண்டறியப்படும்போது இதன் உண்மைத் தன்மையை அறியக் கிடைக்கலாம்.
அன்பன்
கி. காளைராசன்