ஆய்வுச் சுருக்கம்
செம்மொழித் தமிழின் வலிமைக்கு இணையத்தின்
பங்களிப்புகள் மதிப்பீடு
தமிழ்ச் செம்மொழியாகி உலக அரங்கில் நிலைத்த இடத்தைப் பெற்றுவிட்டது. இவ்விடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அது இணையத்தில் இணையில்லாத அளவிற்கு வளர வேண்டும். தமிழின் படைப்புகள் அனைத்தும் இணையப் பரப்பிற்கு வந்து சேர வேண்டும். அவ்வாறு வந்து சேர்ந்தபின்னரே தமிழ மொழிக்கு அழியா நிலையும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நாம் அனைவரும் உணர்வால், பண்பால் ஒரே இனத்தவர் என்ற எண்ணமும் ஏற்படும்.
தமிழ் மொழியின் அழியா இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் தற்போது பல தளங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைகயில் பல தேடுதல் வசதிகளுடன் இந்நூல்கள் கிடைக்கின்றன. மற்றும் மதுரைத்திட்டம், சென்னை லைப்பரரி, தமிழம் போன்ற தளங்களிலும் இந்நூல்களும், பிற நூல்களும் கிடைத்து வருகின்றன. இத்தளங்கள் நூல்களை மின்னாக்கம் செய்கின்றன. இம்மின்னாக்க முயற்சி பாராட்டிற்கு உரியது. என்றாலும் இன்னும் இந்த முயற்சியில் செம்மை சேர்க்கப் பட வேண்டும். இலக்கியங்கள் இணைய ஏற்றம் செய்யப்படுகையில் அவ்விலக்கியத்தில் உள்ள சொற்கள் அடைவாக்கப் பெற்று, அவ்விலக்கியத்தின் மொழிநிலை ஆராய ஏற்ற அளவில் அவை உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக டாகிங் முறை என்ற நிலையில் ஏற்றப்படும் நூல்கள் அனைத்திலும் உள்ள சொற்கள் நிரலாக்கம் செய்யப் பட்டால் இலக்கியத்தின் காலநிலை, அவ்விலக்கியத்தில் குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ள சொல்லின் நிலை முதலியன பற்றிய செய்திகள் பெறும் அளவிற்கு இவ்வலையேற்றங்கள் அமைய வேண்டும்.
இணைய இதழ்கள் அவ்வப்போது பல இலக்கியக் கட்டுரைகளை வழங்கி வருகின்றன. இவைதவிர அச்சுவடிவ இதழ்களும் இணையநிலையில் பல கட்டுரைகளைத் தருகின்றன.
வலைப்பூக்கள் என்ற நிலையில் பல நல்ல இலக்கியக் கட்டுரைகள் வலம் வருகின்றன.
இவைதவிர சங்க இலக்கியங்களுக்கு வளம் சேர்க்கின்ற நிலையில் அவற்றில் இடம் பெற்றுள்ள பூக்கள், மற்றும் பல கருப்பொருள்கள் பற்றிய பல செய்திகள் இணையப் பக்கங்களில் இடம் பெற்று வருகின்றன.
மேலும் இசை வடிவிலான காட்சி வடிவிலான பல முயற்சிகளும் இணையப் பரப்பில் அமைந்து வருகின்றன.
பல தரங்களில் இணைய நிலையில் நடைபெற்று வரும் முயற்சிகளை இணைத்துப் பயன் பெறத்தக்க வகையில் ஒருங்கிணைப்பு ஏற்பட வேண்டும். சங்க இலக்கியங்களுக்கு என்ற நிலையில் தனித்த ஒட்டு மொத்த இணையப்பரப்பு அமைந்து அதற்குள் அனைத்து இணைய நிலைகளும் இடம் பெறச் செய்யப்பட வேண்டும். சங்க இலக்கிய தலைப்பு கொண்ட இடுகைகள் அனைத்தையும் காணச் செய்யும் முறைமை இணையத்திற்குள் வர வேண்டும்.
இந்த முயற்சியை முன்னிறுத்தி அதே நேரத்தில் இதுவரை செய்யப் பெற்றுள்ள சங்க இலக்கியம் அல்லது செம்மொழி தொடர்பான பணிகளை மதிப்பீடு செய்து இனி ஆற்ற வேண்டிய பணிகளுக்கு இட்டுச் செல்வதாக இக்கட்டுரை அமையும்.
--
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com