முதல் குறளில் தெய்வ நிலையை விளக்கிவிட்டார். அடுத்த குறளில் சீவனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி மிக நுண்மையாக உயிர் நிலையை அதன் சிறப்பாற்றலை அறிவினைக் கொண்டே விளங்கிக் கொள்ளுமாறு குறிப்பு காட்டிவிட்டார்.
இது வெளிப்படையாக விளக்கிக் காட்ட முடியாத நிலை. உயிரானது உடலில் புலன்கள் மூலமாகப் படர்ந்து இயங்கும்போது உணர்ச்சிகளாக - புற மனமாக இருக்கிறது. படர்க்கை சுருங்கி தன்னிலையில் அடங்கியபோது அறிவாக - உள் மனமாக இருக்கிறது. அதுவே தன் விரவை முழுமையாக நிறுத்திக்கொண்டு அமைதி பெறும் நிலையில் தெய்வமாக இருக்கிறது. இந்நிலைகளை முறையான அகநோக்குப் பயிற்ச்சிகளின் மூலமே உணர முடியும். பிறர் விளக்கக் கேட்டோ, புத்தகப் படிப்பின் மூலமோ, கற்பதால் முழுப்பயன் கிட்டா. மாறாக அறிவில் முழுமை பெற்று சீவன் நிலை மெய்யுணர்வால் சிவநிலையாதலேயாகும். இது யோகத்தின் அல்லது அகத்தவத்தின் முடிவான நிலையாகும். சீவன் அறிவின் முழுமையால் சிவ நிலையுணர்ந்து, அச்சிறந்த நிலையின் பெரும் பேற்றில் திளைத்தால் அல்லாது வெளிப்புறக் கல்வியால் மட்டிலும் பயனில்லையென்று விளக்கும் ஆழ்ந்த ஒரு மறைபொருள் விளக்கமே உயிர் விளக்கம் ஆகும்.
சீவனின் சிறப்பே அறிவு.; சீவனின் மூலமே மெய்ப்பொருள் அறிவைக்கொண்டு உயிரையும் உயிரின் மூலமான மெய் நிலையையும் புத்தகப்படிப்பால் உணர முடியாது. அறிவின் களமான உயிரையும் முடிவான மெய் நிலையையும் அந்நிலையுணர்ந்த ஆசான் மூலம் அகநோக்குப் பயிற்ச்சி பெற்று அறிவைக்கொண்டே உணர்ந்து இணைந்து பயன் பெற வேண்டும் என்பதே இக்குறளின் குறிப்பு.
-வேதாத்திரி மகரிஷி அவர்கள்