அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்பதே முதல் குறள். இக்குறள் மூலம் உயிருக்கும், உலகுக்கும் மூலமான இருப்பாற்றல் நிலை - மெய்ப்பொருள் நிலை - விளக்கப் பெற்றிருக்கிறது. இருந்த, எழுந்த, படர்ந்த மூன்று நிலைகளுக்கும் இருந்த நிலையேதான் மூலம். அந்த நிலையை முதலாகக் கொண்டே எழுந்தவையே உயிரும் உலகும் எனக் கூறியுள்ளார். எந்த மொழியானாலும் "அ" என்ற எழுத்தை முதலாகக் கொண்டே மற்ற எழுத்துக்கள் எல்லாம் அமைந்திருப்பன போன்று ஆதியாகிய தெய்வ நிலையை முதலாகக் கொண்டே உலகும் இருக்கிறது என்ற குறிப்புக் காட்டுகிறார்.
பகு, இலகு என்ற இரண்டு சொற்கள் வடமொழியிலுள்ளன. இவற்றில் இலகு என்கிற சொல் எளிய, சிறிய என்ற கருத்துக்களை விளக்கும். பகு என்ற சொல் மதிப்பு மிக்க பெரிய கருத்துக்களை விளக்கும். பகு, அவன் என்ற இரு சொற் கூட்டுதன் பகவன் என வந்திருக்கிறது. தமிழில் ஈண்டு என்ற சொல், இங்கே என்றோ அல்லது குறுகிய ஒரு எல்லைக் குறிப்பையோ காட்டுகின்றது. ஆண்டு என்ற சொல் விரிந்த பெரிய அல்லது எல்லையற்ற என்ற கருத்தை விளக்குகின்றது. ஆண்டு + அவன் என்ற இரு சொற் கூட்டு ஆண்டவன் என்ற சொல்லாட்சிக்கு வந்துள்ளது போன்றே பகு+அவன் என்ற இருசொற்கூட்டு பகவன் என்று சொல்லாட்சிக்கு வந்துள்ளது. ஆதியென்ற சொல் முதன்மை நிலையை விளக்குவதாகும். இருப்பாற்றலாகிய மெய்ப்பொருள் எல்லாத் தோற்றங்கட்கும் இயக்கங்கட்கும் மூல நிலையாக இருப்பதால், அதனைச் சிறப்பு மொழியால் மூலமான எல்லையற்ற ஒன்றாக விளக்க "பகவன்" என்று மொழிந்துள்ளார். ஆகவே ஆற்றலும், ஆற்றல் செறிவு நிலைகளுமாக உள்ள உலகம் மெய்ப்பொருளாகிய இருப்பாற்றலின் மலர்ச்சியே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.
- வேதாத்திரி மகரிஷி அவர்கள்