(வெருளி நோய்கள் 446 – 450 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 451 – 455
மன உலைச்சல்(anxiety) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலைச்சல் வெருளி. உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உலைச்சல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
மன உளைச்சலானது சுற்றுச்சூழல், தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள், வேலையில் அதிக அழுத்தம், குமுகப் புறக்கணிப்பு, தனிப்பட்ட துயரங்கள், சோர்வு போன்ற காரணங்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். பதற்றம் கொள்கின்றனர். அளவுகடந்தபதற்றமும் மன உலைச்சலும் மன நோய் வரவும் காரணமாகின்றன.
00
உழுவை(Tractor) தொடர்பான மிகையான பேரச்சம் உழுவை வெருளி.
பேரளவிலான உழுவைகளைக் கண்டு மக்கள் தங்கள் ஏருழவுப்பணிக்கும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பாதிப்பு வரும் என்று வெருளி கொள்கின்றனர்.
இழுவைப்பொறி, இழுவை இயந்திரம், இழுவை எனக் குறிப்பிடப்படும் உழவுப்பணிப் பொறியை உழுவை என்பதே பொருத்தமாக இருக்கும்.
00
உழைப்பாளர் நாள் மீதான அளவுகடந்த பேரச்சம் உழைப்பாளர் நாள் வெருளி.
மே முதல் நாள் கொண்டாடப்படுவதால் மே நாள் என்றும் தொழிலாளர் நாள் என்றும் அழைக்கப்பெறும் உழைப்பாளர் நாள் தொடர்பான பேரச்சம் தொழிலாளர்களுக்கும் வரலாம், முதலாளிகளுக்கும் வரலாம்.
00
மன இருப்பு/உள்ளதாகும் நிலை(mental plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உளதாகு வெருளி.
00
உளதாம் நுண் தன்மை(abstract plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உளதாம் தன்மை வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்?
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்
தக்கார்- அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்; ஒழுகுதல்-அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்; வல்லானை-திறமையுடையவனை; செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை.
‘தான்ஒழுக வல்லானை’ என்றதற்குப் பரிமேலழகர் வழியில் பெரியார் சிந்தனை ஓட்டத்தைத் ‘தானும் அறிந்து பின்பற்ற வல்லவரை என்பர்.
வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலிமையாலும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த. ஆயினும், தானும் அறிந்து, தக்கவர் கூட்டத்தில் இணைந்து அவர் வழியில் நடப்பவனுக்குப் பகைவரால் எத்தீங்கும் விளையாது.
திருக்கோவில்களில் பூசை, வருவாய், நகை முதலியவற்றைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள, அரசால் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களுக்கும் தக்கார் என்றுதான் பெயர்.
இக்குறளுக்கு விளக்கம் தரும் பரிமேலழகர் முதலான ஒரு சாரார் அரசருக்கே அறிவுரை கூறுவதாக விளக்குகின்றனர். ஆனால், அரசருக்கு மட்டுமில்லை. ஆளும் பொறுப்பில் உள்ளவர்க்கும் தனி மனிதருக்கும்கூடப் பொருந்தும். யாராய் இருந்தாலும் தக்கவர் கூட்டத்தை விட்டு விலகாமல் இருப்பின் பகைவரால் அவர்க்குத் தீங்கு எதுவும் வராது என்பதே திருவள்ளுவர் நெறியுரை.
செறு என்றால் வேறுபடுதல் என்றும் பொருள். எனவே, செற்றார் என்பது வேறுபட்டு நிற்பவர் என்றும் பொருளாகும். எனவேதான், தக்கார் இனத்தவருடன் சேர்ந்து இருப்பவரை அவரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள், அவருக்கு எதிராகத் தீய நிலையில் இருப்பவர்கள் என்ன தீங்கு இழைத்தாலும் தக்கார் இனமே தக்கார் இனத்தவரைக் காப்பாற்றி விடும் என்பர்.
பெரியார் சிந்தனையின் அலைவரிசையில் தானும் செயல்படுவோருக்கு எத்தீங்கும் நேராது என்பதே வள்ளுவர் வாக்கு.
பெரியாரைத் துணையாகக் கொள்வோர் மேன்மை யடைவர், துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவர் என்றெல்லாம் அறிவுறுத்தவே ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தைத் திருவள்ளுவர் வகுத்துள்ளார். நாமும் பெரியாராகிய
தக்கவர் இனத்தில் சேர்ந்து தக்கவராய் வாழ்ந்தால்
பகைவரால் வரும் தீமை எதுவும் இல்லை.
– இலக்குவனார் திருவள்ளுவன்