திருக்கச்சூர் தண்டனைக் கல்வெட்டுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் சுந்தரரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கச்சூர் கச்சபேசுவரர் திருக்கோவில். இது சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 3 கி.மி. மேற்கில் அமையப் பெற்றுள்ளது. இக்கோவிலில் 124 கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு நூலாக வெளி வந்துள்ளன. இங்கு அவற்றுள் இரண்டு மட்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
- ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமற்கீற்திக்கு மேல் ஸ்ரீ கோச்சட பன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுன்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 13 பதின்மூன்றாவது கும்ப நாயற்று பூர்வபக்ஷத்து பஞ்சமியும் பு
- தந் கிழமையும் பெற்ற அஸ்வதி நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து இரண்டாயிர வேலிப்பற்றில் அகர ப்ரஹ்ம தேஸங்களில் உள்ளாரும், வேளான் ஊர்களில் உள்ளாரும் நகர
- ங்களில் உள்ளாரும் இன்னாட்டு ஆமூற் கோட்டத்து தமுழா னாட்டு உத்திபாக்கம் ஆன ஆதினாயக்கச் சதுர்வ்வேதி மங்கலத்து உடையார் திருவகத்தீசுர முடைய னாயனார் கோயில் தானத்தாற்கு
- உடையார் ஸ்ரீ கையிலாயமுடைய னாயனார் கோயில் தாநத்தாற்க்கும் ப்ரமாணம் பண்ணிக்குடு[த்]த பரிசாவது இன்த உத்திபாக்கத்தில் ப்ராஹ்மணரில் ஆவணிச் செட்டு ஐயன் மக்களில் ஆட்கொண்டவில்
- லியும் பாம்பணையானும் ஸஹஸ்ரகீணரும் வரதனும் செல்வநும் ப்ராஹ்மணரும் வேளாளரும் வத்திக்கும் முறைமைகள் ஒழிய கீழ்சாதிகள் செய்யும் முறைமைகளிலே ஆயிதங்கள் கட்டியும் ப்ரா
- ஹ்மணரை வெட்டியும் செவி அறுத்தும் ப்ராஹ்மணிகளைத் தூஷித்தும் களவு கண்டும் கன்றுகால்களை அழித்து விற்றும் செய்து போன்தபடிகளாலே முன்பு னாடு செய்த விக்கிரம சோழ தேவராந இரு
- ங்கோளர் தநியன் வாணராயர் திருமலை தந்தார் ஆன முனையதரைய[ர்] உள்ளிட்ட முதலிகள் பலரும் இவர்களைப் பிணைத்தும் அடித்தும் தெண்டங் கொண்டு வீடுகள் இடித்தும் வண்ணார்ப சிறை இட்டும்
- செய்த இடத்தும் இவர்களை அறச்செய்து விடாதபடியாலும் பின்பும் இவர்கள் குணகநங்கள் _ _ _ _ தபடியாலும் பிள்ளை பொத்தப்பியராய _ _ _ ஒடுக்கக் கடவதாய் எழுதிந்திருப்பானத அளவிலே இன்
- னாட்டில் அகர ஜனங்களும் நாட்டவரும் இவர்கள் செய்திகளும் விண்ணப்பஞ் செய்து இதனைச் சாதித்து தரவேணுமென்று விண்ணப்பஞ் செய்த அளவிலே பிள்ளை பொத்தப்பியராயரும் இவர்களைக் கட்டிக் கொண்
- டு வருவதாக வள்ளுவ நாடாள்வாந் இருங்கோளரும் அடைப்பல் விடை இட்ட மலையாளரைப் போகவிட்ட அளவில் போனவர்களை வெட்டியும் குத்தியும் அம்பிட்டெய்தும் ஆய்தம் பறித்தும் மலையிலே ஏறிநவன் _ _ லே பின்
- பிடித்து ஆட்கொண்ட வில்லியையும் பாம்பநணையாநையும் கைக்கொண்டு வந்து திருக்கச்சூர் தண்டலிலே புணைத்து வைத்து இவர்களையும் காட்டிலே பல சிறைகளையும் கண்ணத்தூராற் உலகுடைய பெருமாள் சீபாத
- (த)த் தேற்க்கொண்டு போகச்செய்தே வடபிடாகையில் சானூர் அரசபாக்கத்தில் காட்டிலே இவர்கள் தம்பிமார் ஆய்த்தப்பின் மூவரும் மனிதரைக் கூட்டிக்கொண்டு வந்து இவர்களையும் இவர்கள்
- உடன் போகிற பல சிறைகளையும் வெட்டிவிடுவித்துக் கொண்டு போனபடியாலே இவர்கள் செய்தி தவிர உலகுடைய பெருமாள் ஸ்ரீ பாதத்திலே விண்ணப்பஞ்செய்து இவர்கள் இருந்த இடங்களிலே கைக்கொண்டு
- கீழ்சாதிகளை தெண்டிக்கும் முறைமைகளிலே தெண்டிப்பித்துக் கொள்ளக்கடவோமாகவும் இவர்களுக்கு இன்னாட்டில் மனைகளையும் காணியும் உள்ளவை திருக்கோயில்களுக்கும் திருமுற்றங்களுக்கும் திருநாமத்துக்காணி
- யாக விற்று விற்ற பணம் இவர்களைத் தெண்டமாகக் கருவூலகத்தே ஒடுக்குவதாகவும் அறுதி இடுகையில் இவர்கள் காணியாய் உடையார் திருவகத்தீசுர முடைய நாயனார்க்கும் உடையார் ஸ்ரீ கயி
- லாயமுடைய நாயனார்க்கும் திருநாமத்துக்காணியாக விற்ற உத்திபாக்கத்தில் இவர்கள் ஒபாதி பங்கு நத்தமும் புதுக்குளம் நான்கு எல்லைக்குட்பட்ட விளைநிலமும் கொல்லையும் நத்தமு உட்ப்படக்கொண்டு இவர்
- கட்டிந நற்பணம் 200 இருநூறு. இப்பணம் இருநூறும் திருக்கச்சி ஊர்க் கருவூலகத்தே ஒடுக்குவித்துக் கொள்கையில் இவர்களுக்கு உத்தி பாக்கத்தில் உள்ள ப்ராப்திஆன எல்லைகளிலும் புதுக்
- குளம் ஊர் ஒன்றான நான்கு எல்லைகளிலும் திருச் சூலஸ்தாபனமும் திருக்கோயில்களிலே சிலாலேகையும் பண்ணிக்கொண்டு சந்திராதித்த வரையும் திருநாமத்துக்காணியாக அனுபவித்துக் கொள்ளக்
- கடவதாக ப்ரமாணம் பண்ணிக் கொடுத்தோம். இரண்டாயிரம் வேலிப்பற்றில் அகர ப்ரஹ்ம தேசங்களிலாரும் வே(ள)ளான் ஊர்களிலாரும் நகரங்களிலாரும் இவ்வணைவோம். இப்படிக்கு இவை கூத்த நல்லூழான்
- ஆதித்ததேவன் எழுத்து. இவை நன்திமங்கலங்கிழான் எழுத்து. இளன்தேவநெழுத்து. செங்கழுநீர் பிள்ளை எழுத்து. புடோலி பிள்ளை எழுத்து. வயிராதராய னெழுத்து வீரன் எழுத்து. இவை
- தரிகைக் காத்துழா நெழுத்து. பணிக்க புறத் அருளாள பட்டஸ்ய அருளாள பட்டஸ்ய மண்டலபுருஷ பட்டஸ்ய இராயந் தேவராஜ பட்டஸ்ய அருளாள[ப]ட்டஸ்ய விநாயக பட்டஸ்ய தியாந பட்டஸ்ய பாண்டவதூத பட்டஸ்ய காலகால பட்டஸ்ய
- நாராயண பாரத்வாஜிந மலைகிநிய நின்றான் பட்டஸ்ய சிந்தை உடையாந் பட்டந் எழுத்து. உலகங்காத்தா நெழுத்து உக்கிரக் கண்ணந் எழுத்து. களப்பாளன் எழுத்து. கீரன் கைஎழுத்து. இது மாஹேஸ்வர ரக்ஷை.
நாயற்று - ராசி; பூர்வ பக்ஷ்ம் - வளர் பிறை; பரிசாவது - ஏற்பாடாவது, எந்த முறையில்; வத்திக்கும் - உளதாதல், வாழும் நெறியில்; ஒழிய - அல்லாமல், முறையாகாத; கன்றுகால் - கால்நடை; தூஷி - வண்டை வண்டையாக திட்டு; நாடு செய் - நாட்டாண்மை செய்; தெண்டம் - ஒறுப்பு கட்டணம், fine; வண்ணார்ப - வலிமை அடங்க பிணித்து; அற - தப்பித்து; அடைப்பல் - உறுதிமொழி, pledge; தண்டல் - தண்டனைத் தூண் அல்லது கம்பம்; உத்தி > உதி > ஒதி > ஒதிய மரம். உத்தி பாக்கம், அரச பாக்கம் என்பதில் உள்ள பாக்கம் மிகத் தெளிவாக மரத்தை குறிப்பதானது பாக்கம் என்றால் கடலை ஒட்டிய பகுதி என்ற தவறான புரிதலை இங்கு தகர்ப்பது காண்க.விளக்கம்: வேந்தன் சடையவர்ம சுந்தர பாண்டியனின் 13 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1263 இல் கும்ப ராசியும் வளர்பிறை ஐந்தாம் நாள் புதன் கிழமையும் கூடிய அஸ்வதி நாளில் செயம்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர் கோட்டத்தின் இரண்டாயிரம் வேலிபற்றின் அக்ரஹாரங்களில் வாழ்பவரும், வெள்ளாளர் ஊர்களில் வாழ்பவரும், நகரங்களில் வாழ்பவரும் ஒன்று கூடினர். இந்நாட்டு தமுழா நாட்டில் உள்ள உத்திப்பாக்கம் என்னும் ஆதிநாயகச் சதுர்வேதி மங்கலத்தின் இறைவன் திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு; அதே போல கையிலாயமுடைய நாயனார் கோயில் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு கட்டளை தந்த ஏற்பாடு யாதெனில், இந்த உத்திப்பாக்கத்தில் வாழும் பிராமணரில் ஆவணிச்செட்டு ஐயனின் பிள்ளைகளில் ஆட்கொண்டவில்லி, பாம்பணையான், ஸஹஸ்ரகீணன், வரதன், செல்வன் ஆகிய ஐந்து பேரையும் மற்ற பிராமணர், பிள்ளைமார் வாழும் அகிம்சை முறையில் அல்லாமல் கீழ் சாதியார் ஈடுபடும் இம்சையான தாக்குதல் வாழ்க்கை முறையில் போர் ஆயுதங்களை ஏந்தி பிராமணரை வெட்டியும், காது அறுத்தும், பிராமணிகளை வண்டையாக வண்டையாக திட்டியும், பொருள்களை திருடியும், கால்நடைகளை கொன்று விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தனர் அரம்பர் (rowdies). முன்னர் நாடாட்சி செய்த விக்கிரம சோழ தேவ இருங்கோளர், தனியன் வாணராயன், திருமலை தந்தாரான முனையத்தரையர் ஆகிய படைத் தலைவர்கள் பலரும் இந்த ஆயுதம் ஏந்திய அரம்பரைக் (rowdies) கட்டிப்போட்டு அடித்து, தண்டம் தண்டி, வீடுகளை இடித்து இவருடைய வலிமை, கொட்டம் அடங்க பிணித்து சிறையிலிட்டு தப்பித்துவிடாதபடி செய்தனர். அப்படியான போதும் இவர்களது குணநடவடிக்கைகள் திருந்தாதபடியாலும் அதற்கு மீண்டும் பிள்ளை பொத்தப்பிராயர் அரம்பர்கள் தண்டம் கட்டவேண்டும் என்று எழுதிக் கட்டளையிட்ட அளவில் அக்ரஹார மக்களும் ஊரவரும் இவர்களை பற்றி மேலும் செய்திகளை சொல்லி இவர்களை அடக்கி வைக்க வேண்டுகோள் வைத்ததால் பிள்ளை பொத்தப்பிராயரிடம் அரம்பர்களை கட்டிப் பிணித்துக் கொண்டு வருவதாக வள்ளுவ நாடாள்வான் இருங்கோளன், உறுதிமொழி தந்த மலைவாழ் மலையாளரையும் வழி அனுப்பினார் பொத்தப்பிராயர். அப்படி பிடிக்கப் போனவர்களை வெட்டியும் குத்தியும் அம்பு எய்தியும் காயப்படுத்தினர். அரம்பர் இவர்களது ஆயுதங்களையும் பறித்தனர். அப்படி இருந்தும் தப்பி மலையில் ஏறியவனை பின் தொடர்ந்து கடத்திப் போய் ஆட்கொண்ட வில்லியையும், பாம்பணையானையும் பிடித்து வந்து திருக்கச்சூர் சிறைத் தூணில் பிணித்து வைத்து துன்புறுத்தினர். இவர்களைக் காட்டில் பல சிறைகளில் அடைத்தனர்.பிறகு, கண்ணத்தூர் உலகுடைய பெருமாள் சீபாதரின் தேரிலே போய் வடக்கே உள்ள பிடாகையில் சாணூர் அரசபாக்கக் காட்டில் இவர்களுடைய தம்பிமார் அண்ணன்மாரைத் தேடிய பின் அந்த மூவரும் அண்ணன்களோடு பிற மனிதர்களையும் மீட்டுக் கொண்டு வந்தனர். இவர்களையும் இவர்கள் போன பல சிறைகளையும் வெட்டிவிடுவித்து கொண்டு வந்த செய்தியை தவிர்த்து பிற செய்திகளை உலகுடை பெருமாள் திருவடிகளில் கோரிக்கையாக வைத்தனர். அதாவது, அரம்பர் இருக்கும் இடங்களை கைப்பற்றியாகியது இனி, இவர்களை கீழ்சாதிகளை தண்டிக்கிற முறையில் தண்டிக்க வேண்டும். அரம்பருக்கு இந்நாட்டில் உள்ள வீடுகளையும், விளை நிலங்களையும் திருக்கோவில்களுக்கும் கோவில் சுற்றிடத்திற்கும் திருநாமத்துக் காணியாக விற்று விற்ற பணத்தை அரம்பர்களின் தண்டத் தொகையாக கருவூலத்தில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தமையால் இவர்களுடைய விளைநிலங்களை இறைவன் திருவகத்தீசுவர முடைய நாயனாருக்கும் கையிலாயமுடைய நாயனாருக்கும் திருநாமத்து காணியாக விற்றதில் உத்திப்பாக்கத்தில் அரம்பர் செலுத்தவேண்டிய வரி நிலுவை போக புறம்போக்கு நிலம், புதுக்குளத்தின் நான்கு எல்லையுள் அகப்பட்ட விளை நிலம், கொல்லை, நத்தம் உட்பட வாங்கிய பணத்தில் இவர்கள் கட்டிய நல்பணம் இருநூறு. இந்த பணம் இருநூறையும் திருக்கச்சி ஊர்க் கருவூலகத்தில் கட்டிவிட இவர்களுக்கு உத்திபாக்கத்தில் சொந்தமான நில எல்லைகளிலும் புதுக்குளம் ஊரில் அடங்கிய நான்கு எல்லைகளிலும் உள்ள நிலங்களுக்கு திருச்சூலம் நாட்டி இக்கோயில்களில் கல்வெட்டி இது சந்திர சூரியன் நிலைக்கின்ற நாள் வரையில் திருநாமத்துக்காணியாகவே பயன்பட்டு போவதாக உறுதியளித்து கொடுத்தோம் என்றனர். இரண்டாயிரம் வேலிப்பற்றில் அக்ரகார வாசிகளும், வேளாண் ஊர்வாசிகளும், நகரவாசிகளும் ஆக இவ்வனைவரும் இதற்கு உடன்பட்டோம்.இப்படியாக கூத்த நல்லூழான், ஆதித்ததேவன், நன்மங்கலக் கிழான், இளந்தேவன், செங்கழுநீர் பிள்ளை, புடோலி பிள்ளை, வயிராதராயன், தரிகைக் காத்துழான் ஆகியோர் உடன்பட்டு கையெழுத்திட்டனர். பணிக்கபுர அருளாள பட்டனின், அருளாள பட்டனின், மண்டலா புருஷ பட்டனின், இராயன் தேவராஜ பட்டனின், விநாயக பட்டனின், தியான பட்டனின், பாண்டவதூத பட்டனின், கால கால பட்டனின், நாராயண பாரத்வாஜின மலைக்கினிய நின்றான் பட்டனின், சிந்தை உடையான் பட்டனின் எழுத்து. உலகங்காத்தான் எழுத்து. உக்கிரகண்ணனின் எழுத்து. களப்பாளன் எழுத்து. கீரன் கையெழுத்து என்று பலர் இதற்கு பிராமணர், வெள்ளாளர், அரசு தரப்பில் இருந்து உடன்பட்டுள்ளனர். இது சிவனடியார் பாதுகாப்பு என கல்வெட்டு முடிகிறது.11 - 13 ஆம் வரிகள் புரிந்து கொள்ள முடியாதபடி குழப்பமாக எழுத்தப்பட்டுள்ளன. இடங்கை 96 கலனை, வலங்கை 96 கலனை என்று தான் கல்வெட்டுகளில் சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் முதன் முதலாக இக்கல்வெட்டில் தான் சாதி என்ற சொல் பயன்பாடு வந்துள்ளது. இடங்கை, வலங்கை அல்லாத சாதிகளை தான் கீழ்ச் சாதி என்று குறிப்பிடுகிறதா என்று தெரியவில்லை? காட்டில் சிறை என்ற சொல்லாட்சியை வைத்து பார்த்தால் இந்த அரம்பர்கள் பழங்குடி மக்களா? என்று ஐயுற வேண்டி உள்ளது.திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் திருச்சுற்று வடக்கு சுவரில் உள்ள 22 வரி கல்வெட்டு, தமிழ்நாட்டுக்கு கல்வெட்டுகள் தொகுதி 32, பக்கம் 96 - 99விளக்கம்: சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனுடைய 28 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1244 இல் செயம்கொண்ட சோழ மண்டலத்தின் களத்தூர் கோட்டத்தில் அடங்கிய செங்குன்ற நாட்டின் திருக்கச்சூர் இறைவன், திருவாலக்கோயில் தலைவனின் கோவிலுடைய காவல் காணியை பெற்று காவல் புரியும் இரந்தி தேவர் கண்ணப்பன் விசையாலய பறையன், தூளாயன் வேங்கையான் வன்நெஞ்சி பறையன் ஆகிய இருவரிடம் சந்தி விளக்கு ஏற்ற ஐந்து பசுக்களை இக்கோவிலின் காணி பெற்ற சிவ பிராமணர்கள் காஞ்சிக்குறி தக்ஷிணா மூர்த்தி பட்டனும், நாற்பத்தெண்ணாயிர பட்டன் பொன்னம்பல கூத்தனும், திருச்சிற்றம்பல பட்டன் மாதேவனும், சதாசிவ பட்டன் பிச்சனும் ஆகிய நால்வர் முன்னின்று இந்த ஐந்து பசுக்களை பெற்றுக்கொண்டு சந்திர சூரியன் நிலைக்கும் நாள் வரை ஒரு சந்தி விளக்கு ஏற்றுவதாக உறுதி அளித்து கல்லும் வெட்டுவித்தனர். இதை மாகேஸ்வரரான சிவ பக்தர்கள் காக்க வேண்டும் என்கின்றனர்.
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 28 வது
- செயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்துச் செங்குன்ற நாட்டுத் திருக்கச்சூ
- ருடையார் திருவாலக் கோயிலுடைய நாயனார்க்கு இக்கோயில் காவல் காணி உடைய இரந்தி தே
- வர்க் கண்ணப்பன் விசையாலப் பரையன், துளாயன் வேங்கையான் வன்னெஞ்சிப் ப
- ரையன் வைத்த சந்தி விளக்கு 1 க்கு பசு ஐ[ஞ்]சுக்கு இக்கோயில் காணியுடைய சிவ ப்ராஹ்மணன்
- காஞ்சிகுறி தக்ஷணா மூர்த்தி பட்டநும் நாற்பத் தெண்ணாயிர பட்டன் பொன்னம்பலக் கூத்தரும்
- திருச்சிற்றம்பல பட்டன் மாதேவரும் சதாசிவ பட்டன் பிச்சரும் கைக்கொண்ட பசு ஐஞ்சு.
- இப்பசு அஞ்சும் கைக்கொண்டு சந்திவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவரை எரிப்பதாக
- சிலாலேகைப் பண்ணிக் கொடுத்தோம் இவ்வணைவோம். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
பண்டு கோயில் பணியாளர்களுக்கு சம்பளம் என்பது இல்லை. எனவே பிழைப்பிற்காக விளைச்சல் நிலம் வழங்கப்பட்டது. இதில் பயிர் செய்து பணியாளர் வாழ்க்கை நடத்துவர். கோவிலுக்கென்று வரியாகவும் கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்தும் நெல்லும் பிற தானியங்களும் வரும். அவற்றை பாதுகாக்கும் காவல் பணிக்கு பறையர் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் மூலம் ஊர் நடுவே அமைந்த கோவிலில் பறையர் நுழைந்து வந்ததை வைத்து தமிழ் வேந்தர் காலத்தில் தீண்டாமை இருக்கவில்லை என்று உறுதியாக கூற முடியும். தீண்டாமை தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சியில் 17 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று பிற கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. எனவே தீண்டாமையை மதம் ஏற்படுத்தவில்லை அயல் ஆட்சியாளர் ஏற்படுத்தினர் என்பதை அம்மக்கள் ஏற்க வேண்டும். கடந்த 150 ஆண்டுகால பொய் பரப்புரை அகல கல்வெட்டுகளை தேடி படிக்க வேண்டும் என்பது இதற்காகவே.திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் திருச்சுற்று மேற்கு சுவரில் உள்ள 9 வரி கல்வெட்டு, தமிழ்நாட்டுக்கு கல்வெட்டுகள் தொகுதி 32, பக்கம் 109 -110




