(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 436-440
உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.
இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.
மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும்.
உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.
அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே உருப்பொருள் வெருளி.
சில இடங்களில் பொருட்காட்சி வெருளியையும் ஆடற்காட்சி வெருளியையும் Objectshowphobia என்றே குறிக்கின்றனர். எனினும் முதன்மையாக இஃது உருப்பொருள் வெருளியையே குறிக்கிறது.
00
இடி மின்னல் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது உருமு வெருளி.
பொதுவாகச் சிறாரிடம் இவ்வெருளி தோன்றுகிறது. பலர் அகவை கூடும் பொழுது இவ்வெருளியில் குறைந்து காணப்படுகின்றனர். சிலர் எவ்வகை மாற்றமுமில்லாமல் இவ்வெருளியால் துன்புறுகின்றனர்.
வானிலை மாற்றத்தால் துயரம் வரும் வாய்ப்பு இல்லாத பொழுதும் அல்லது குறைந்த அளவு துன்பம் வரும் என்று அறிய நேர்ந்த பொழுதும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வழி யிருந்தும், மிகப்பேரிடராகக் கற்பித்துக் கொண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
விலங்கினம், பறவையினங்களுக்கும் இத்தகைய வெருளி வரும் என்கின்றனர்.
இடியைக் குறிக்கும் மற்றொரு சொல் உருமு.
இடிப்பதால் வரும் ஓசை:
“பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய வெண் குருகு” (அகநானூறு:141:18-9) என்னும் பாடலில் நக்கீரர், அவல் குற்றும் உலக்கையின் இடி ஓசைகேட்டு பேரிடிபோல் கருதி அஞ்சும் நிறைந்த சூலினை உடைய வெண்குருகு பற்றிக் கூறுகிறார்.
“கடிது இடி உருமின் பம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே” (குறுந்தொகை:391:3-4)
என்னும் பாடலடியில் பொன்மணியார் இடியுடன் கலந்து இனிதாக மழை பெய்த பொழுது விரைந்து வரும் இடியோசையால் பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறார்.
“இடி ஓசை கேட்ட நாகம் போல” என்னும் உவமையும் இடிக்குப்பாம்பு அஞ்சுவதைக் குறிப்பிடுகிறது.
பாம்பின் உருமுவெருளி குறித்த பல குறிப்புகள் உள்ளன.
எனவே பிற உயிரினங்களுக்கும் உருமு(இடி) வெருளி வரும் என்பதை அன்றே தமிழர்கள் உணர்ந்திருந்தனர் எனலாம்.
bronte என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் இடி.
astrape என்பதற்கு மின்னல் எனப் பொருள்.
Cerauno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இடி, மின்னல்.
00
உருளப்பம் (rigatoni/tube-shaped pasta) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளப்ப வெருளி.
rigatoni என்பது என்னும் இத்தாலியச் சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள்,கோடிட்டது/வரி என்பன. எனினும் இங்கே உருள் வடிவமான இத்தாலிய உணவு வகை ஒன்றின் பெயரைக் குறிக்கிறது.
இத்தாலிய உணவு வகைகளை விரும்புபவர்கள்கூட, உருளப்பம் உடல் நலனுக்குக் கேடு தரும் எனச் சிலர் கூறுவதைக் கேள்வியுறுவதால் இதன் மீது அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
உருளி ஓடம் (roller coaster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருளி ஓட வெருளி.
தண்ணீரிலும் தரைக்கு மேலும் சுழன்று உருண்டு செல்லும் பொழுதுபோக்கு வண்டியான இதனை உருளி ஓடம் எனலாம்.
விரைவாக உருண்டோடும் சக்கரம் உடைய விளையாட்டு வண்டியைக் குறிப்பிடுவதால், இதனை உருளி ஓடம் எனலாம். உருளி தரையில் இயங்கவும் ஓடம் நீரில் இயங்கவும் உதவுகின்றன.
விரைவாக இயங்குவதாலும் நிலத்திலும் நீரிலும் மாறி மாறி இயங்குவதாலும் மிகு அச்சம் கொள்கின்றனர்.
vēlōx என்னும் இலத்தீன் சொல்லிற்கு விரைவு/வேகம் எனப் பொருள்.
rota என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சக்கரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி – 2
? யார் முதலில் இந்தவேண்டுதலை முன் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா?
# 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது. இவற்றிற்குப் பின்னர் பல்வேறு அமைப்புகளும் அறிஞர்களும் செவ்வியல் மொழி அல்லது செம்மொழி என்னும் தகுதியேற்பைத் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டும் என வேண்டினர்.
? செம்மொழி என்று அறிவிப்பதற்கு ஏதும் தகுதி வரையறை உண்டா?
# மொழியியலாளர்கள் ஒரு மொழியைச் செம் மொழியாக அறிவிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என வரையறுத்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் அறிஞர் மணவை முசுதபா, செம்மொழித் தகுதிகளாகத் 1) தொன்மை 2) தனிச்சீர்மை 3) பொதுமைப்பண்பு 4) நடுவுநிலைமை 5) தாய்மைத்தன்மை 6) பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு 7) பிற மொழிச் சார்பின்றித் தனித்து இயங்கும் தனமை 8) இலக்கிய வளம் 9) உயர் சிந்தனை 10) கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடும் பங்களிப்பும் 11) மொழிக்கோட்பாடு எனத் தொகுத்தளித்துள்ளார். இவற்றுள் 7 தகுதிகள் மட்டும் உள்ள சமற்கிருதத்திற்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு வழங்கிவிட்டு 11 தகுதிகளும் உள்ள தமிழ் புறக்கணிக்கப்பட்டமையாலேயே போர்க்கொடி உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், தமிழுக்கு அறிந்தேற்பு வழங்கும் பொழுதுதான் அத்தகைய அறிந்தேற்பு எதுவும் வழங்காமலேயே வழங்கியதாகப் பொய்யான கருத்துப் பரவலை ஏற்படுத்தி அம்மொழிக்குப் பல கோடி உரூபாய் உதவி வருவது தெரிய வந்தது.
# அறிந்தேற்பிற்காகப் போராடியவர்கள், போராடிய அமைப்புகள் ஆகியன குறித்துப் பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால், இத்தகைய அறிந்தேற்பால் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் விளைந்தனவா இல்லையா என விளக்குங்களேன்.
# தமிழுக்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு வழங்கப் பட்டமையால் இதனை வளர்க்கவும் பரப்பவும் பேணவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவ்வமைப்பு இயங்கிச் செயல்பட்டு வருவது அறிந்தேற்பின் முதல் நன்மை எனலாம். இம்மையத்தின் சார்பாகச் செம்மொழி என்னும் இருமொழி இதழ் வெளிவருவதுடன், தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் நல்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடத்த நிதியுதவி நல்கி வருகின்றனர்; எனவே, பல்வேறு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது காரைக்குடியில் திசம்பர் 2009இல் கோவிலூர் மடத்துடன் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கம் ஆகும். இக் கருத்தரங்கம் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என வரையறுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கு ஆய்வுநிதிஉதவி செய்து வருகின்றனர். அறிஞர்களுக்கும் இவ்வாறு ஆராய்ச்சி நிதியுதவி அளித்து வருகின்றனர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலியவற்றை எளிதில் பயில்வதற்கு அல்லது மனனம் செய்வதற்கு வசதியாக முற்றோதல் ஒலிப்பேழைகளாக வெளியிட்டு வருகின்றனர். இவற்றால் தமிழ் மாணாக்கர்கள் மட்டும் அல்லாமல் பிறரும் இவற்றை அறியவும் படிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மொழி பெயர்ப்புப் பணியிலும் வெளியீட்டுப் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனவே, இவ்வாறான தமிழ் வளர்ச்சிப் பணிகளும் பரப்புப் பணிகளும் செம்மொழி அறிந்தேற்பால் நமக்குக் கிடைத்த நன்மைகள் என்று சொல்லலாம்.
? இவை தவிர வேறு நன்மைகள் இல்லையா?
# உலக அளவிலான மாநாடு நடைபெறுவதும் தமிழ்க்கூடல் நடைபெறுவதும் அறிந்தேற்பால் விளைந்த பயன்தானே.
? அப்படியானால் இந்த மாநாட்டை நீங்கள் வரவேற்கிறீர்களா?
# தமிழ்ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளினால் இத்தகைய விழா நடைபெறவேண்டா என எண்ணுவோர் உணர்வில் தவறில்லை. குடும்பத்தில் துயர நிகழ்ச்சி நடைபெற்றால் ஓராண்டு கழித்துத் துயரத்தை மறந்து வழக்கமான நிகழ்வுகளில் பங்கேற்பது இயற்கைதானே! குளத்தில் தன் தேவைக்காகப் புழுக்களை மீன் தின்றாலும் குளம் தூய்மையாக உதவுவதாகக் கலைஞர் குறிப்பிடுவது அதன் தன்னலம் பொதுநலத்திற்கு உதவுவது இதற்கும் பொருந்தும் அல்லவா? மாநாட்டின் நோக்கம் என்னவாக இருந்தாலும் உலக அறிஞர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கிறது; மேடைகளில் இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறைச் சந்திப்புகளில் தத்தம் உணர்வைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. ஆய்வரங்கங்களும் பிற அரங்கங்களும் ஆய்வாளர்களும் நோக்காளர்களும் தங்களை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும்; தமிழ் மேம்பாட்டிற்கு இவை வழிவகுக்கும். மாநாட்டை முன்னிட்டுப் பெயர்ப்பலகைகளில் தமிழ், சான்றிதழ்களில் தமிழ் எனச் சென்னை மாநகராட்சித் தலைவர் திரு மா.சுப்பிரமணியம் நடவடிக்கை எடுப்பதும் பிற மாவட்டங்களில் அதிகாரிகள் இவை போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதும் இம்மாநாட்டின் விளைவுதான் எனில் அதற்கு மூலக்காரணம் செம்மொழி அறிந்தேற்புதானே! செம்மொழிப்பாடல், செம்மொழிச் சுடர் ஓட்டம் முதலானவற்றின் மூலம் குறிப்பிட்ட தரப்பாருக்காவது எழுச்சி ஏற்படுவதும் நன்மைதானே! அத்துடன் மாநாடு நடத்துவது என முடிவான பின்னர் தமிழன்பர்கள் புறக்கணித்தால், தமிழ்ப்பகைவர்கள் தங்களுக்கு வாய்ப்பாக மாநாட்டைப் பயன்படுத்தித் தமிழுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள் அல்லவா? அதைத் தடுக்க வேண்டாவா?
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் (திருக்குறள் 487)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அதை நினைவில் கொள்ள வேண்டும்.
? இந்தத் திருக்குறளுக்கு என்ன பொருள்?
# திருக்குறளில் 49 ஆம் அதிகாரமான காலம் அறிதலில் 7 ஆவது குறள் இது. அறிவு மிகுதியுடையார் பிறருடைய தீமையைக் கண்டு உடனே வெளிப்படையாகச் சினம் கொள்ள மாட்டார்; அவரை வெல்லுவதற்குரிய காலத்தினை எதிர்நோக்கி அது வருந்துணையும் உள்ளத்தின் உள்ளே வெகுண்டு கொண்டு இருப்பர் என இக்குறளுக்குச் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கம் அளித்துள்ளார். நாம் என்னதான் புற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டாலும் நம் உள்ளம் இழைக்கப்பட்ட அநீதிபற்றிய வேதனையில்தானே இருக்கும். எனவே, வெல்வதற்கு வாய்ப்பு இல்லாத பொழுது வீணாகச் சினத்தை வெளிப்படுத்தி நம் உணர்வையும் உள்ள உறுதியையும் பாழ்படுத்துவதைவிட உள்ளத்திற்குள் கறுவிக் கொண்டு இருந்து உரிய சமயத்தில் பழி வாங்க வேண்டும் என்னும் அருமையான இத்திருக்குறள் பொன்மொழியை நாம் மனத்தில் எண்ணினால் மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறான எண்ணம் வராது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்