(வெருளி நோய்கள் 1036-1040: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1041-1045
சிலுவை மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சிலுவை வெருளி.
இயேசுநாதரை அறைந்து கொல்லப்பயன்படுத்திய கழுமரத்தின் குறியீடு சின்னம். எனவே, இது கிறித்துவத்தின் குறியீடாகத் திகழ்கிறது. தாழ்ந்த நிலத்திலிருந்து உயர்ந்த குன்று, மலைப்பாறை,கடல் நடுவே தெரியும் பாறைத்திட்டு எனப்பார்க்கும் இடங்களிலெல்லாம் சிலுவை அடையாளத்தை வரைந்து கிறித்துவத்தைப் பரப்புகின்றனர். இது பிற சமயத்தவருக்கு இதன்மீதான வெறுப்பை உண்டாக்குகிறது. கிறித்துவப்பரப்பலால், தங்கள் சமயம் அழியுமோ, தாங்கள் வழிபடும் கடவுள் மீதுான நம்பிக்கை மறையுமோ என்பன போன்ற கவலைகள் ஏற்பட்டுக் கிறித்துவத்தின் அடையாளமான சிலுவை மீது தேவையற்ற பேரச்சத்தை உண்டாக்குகிறது.
கிறித்துவ வெருளி, கிறித்துவர் வெருளி போன்றவையே இதுவும்.
stauro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிலுவைக் குறியீடு.
00
சிவப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் சிவப்பு விளக்கு வெருளி.
இந்த இடத்தில் சிவப்பு நிற விளக்கைக் குறிக்கிறது.
00
செந்நிறத்தைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் சிவப்பு வெருளி
சிவந்த(22), சிவந்தன்று(1), சிவந்தன(3), சிவந்தனை(2), சிவந்து(15), சிவப்ப(14),
சிவப்புற(1) எனச் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருந்தாலும், சிவப்பு என நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்று சினம் என்னும் பொருளில் வந்துள்ளது. நிறத்தைக் குறிக்கும் பிற:
சிவப்பாள் அன்று (நற்றிணை : 120.10)
சிவப்புஆனாவே (புறநானூறு : 100.11)
உன்கண் சிவப்புஅஞ்சுவாற்கு (பரிபாடல் : 6.96)
போராட்டங்களின் குறியீடாகச் சிவப்பு உள்ளதால் முதலாளிகளுக்குச் சிவப்பைக் கண்டால் அச்சம் வருகிறது.
போராட்டக்கட்சியான பொதுவுடைமக் கட்சியின் குறியீடாகவும் செந்நிறம் உள்ளதால்/செங்கொடி உள்ளதால், செந்நிறம் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.
கண்டம்(ஆபத்து) என்பதன் அடையாளமும் சிவப்பு என்பதால் பொதுமக்களுக்கும் சிவப்பு அச்சம் தருவதாக அமைந்து விடுகிறது. சிவப்பு நிறத்தில் அமையும் எதுவாக இருந்தாலும் இத்தகையோருக்கு அளவுகடந்த பேரச்சம் வருகிறது.
Erythrள என்னும் கிரேக்கச் சொல்லிற்கு (அரத்தச்)சிவப்பு நிறம் எனப் பொருள்.
00
சிறுத்தைப்புலி வகையைச் சேர்ந்த சிவிங்கிப்புலி மீதான காரணமற்ற பேரச்சம் சிவிங்கிப்புலி வெருளி. இது விலங்கு வெருளி வகையைச் சேர்ந்தது.
பூனையைப் போன்ற உடலில் புள்ளிகள் உடைய எந்த விலங்கைப் பார்த்தாலும் இவரகளுக்குப் பேரச்சம் வரும்.
சிறுத்தைப் புலி, கருஞ்சிறுத்தை முதலானபிற விலங்குகள் மீதும் பேரச்சம் இருக்கும்.
சிறுத்தை வெருளி என்று சொல்வதை விடச் சிவிங்கிப்புலி வெருளி என்பது வகைப்பாட்டிற்கு ஏற்பப் பொருத்தமாக இருக்கும்.
சோசுவா புரூக்கசு(Joshua Brookes) 1828 இல் நெடுங்கால்களுடைய புள்ளிவிலங்கைக் குறிக்க Acinonyx என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
காண்க:சிறுத்தைப் புலி வெருளி(Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/Iagouarophobia)
00
சிறப்பில்லாத பாவனம்(meme) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிறப்பிலி பாவன வெருளி.
பாவனங்கள் கண்டு களிப்பதற்காகத்தான். பல மிகுதியாக விளக்க வேண்டியவற்றைச் சுருக்கமாச் சுட்டிக்காட்டும் வண்ணம் சிறப்பாகவும் உள்ளன. ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் பொலிவற்ற, சிறப்பற்ற, மோசமான பாவனங்களும் வருகின்றன. இவை குறித்த பேரச்சத்தால் தொடர்புடையவர்களுக்கு வருவதே பாவன வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 29 January 2026 அகரமுதல
(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி)
பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!
பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ – 453)
மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும்.
பதவுரை: மனத்தான் – மனத்தைப் பொறுத்து> மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு/உணர்வு; இனத்தான்-சேரும் இனத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இத்தகையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்; சொல்- நிறை மதிப்பான அல்லது குறைமதிப்பான சொல்.
மக்களுக்கு இயற்கையறிவு அவர்களின் மனத்தால் ஏற்படும், இத்தகையவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், அவன் சேரும் இனத்தால் ஏற்படும்.
மனத்தின் தன்மைக்கேற்ப இயற்கை யறிவு அமைகிறது. ஆனால் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவனை நல்லவன் என்றும் வஞ்சகர்களுடன் சேர்ந்திருப்பவனை வஞ்சகன் என்றும் மதிப்பிட்டுச் சொல்வர்.
வானிலிருந்து விழும் மழை நீர் அது விழும் நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் மாறிவிடுகிறது. மண்ணின் நிறத்திற்கேற்பவும் மழைநீர் நிறம் பெற்று, சிவப்பு அல்லது கருப்பு அலலது சாம்பல் அல்லது பிற நிறம பெற்று விடுகிறது. ஒருவன் இயல்பாக நல்லவனாக இருந்தாலும் சேர்க்கைக்கேற்ப நல்லவனாகவும் தீயவனாகவும் மாறி விடுகிறான். ஒருவனின் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணமாக அமைவது சேர்ந்துள்ள இனத்தால்தான். எனவேதான், சேரும் இனத்தால்தான் இத்தகையவள் என்று சொல்லப்படும் சொல் பிறரால் சொல்லப்டுகிறது.
கூடாநட்பின் தீமையை உணர்த்தவே திருக்குறளிலும் நாலடியாரிலும் தனி அதிகாரங்களே உள்ளன. “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதால் கூடா நட்பு கொள்ளக்கூடாது. ஒரு வேளை கூடாநட்பு ஏற்பட்டாலும் அதனைக் கைவிட வேண்டும். சேரும் இனமே பிறரை மதிப்பிடச் செய்யும்!-
மனத்தால் அமைவது அறிவு! இனத்தால் வருவது பழிச்சொல்! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!
வெருளி நோய்கள் 1046-1050
சிறப்பு மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறப்புந்து வெருளி.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பதால் பயன்பாட்டுச் சிக்கல் தெரியாது, குறைபாடு நேர்ந்தால் உடன் சரி செய்ய முடியுமா என்னும் ஐயப்பாட்டு நிலை போன்ற காரணங்களால் பேரச்சம் கொள்வர்.
புதிய வெளியீட்டுச் சீருந்துகள், ஊர்திகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் என்பதால் புத்தூர்தி வெருளி என்றும் சொல்லலாம்.
curr என்னும் இலத்தீன் முன்னொட்டு ஓடுவதைக் குறிக்கும். இங்கே சாலையில் ஓடும் ஊர்தியைக் குறிக்கிறது.
00
சிறிய எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறிய எழுத்து வெருளி.
கீழ் விசை எழுத்து வெருளி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நடைமுறையில் எல்லா மொழிக்கும் இது பொருந்தாது. ஆங்கிலத்தில் கீழ்ப்பகுதியில் சிறிய எழுத்துகள் உள்ளதால் அவற்றைத்தான் இது குறிக்கின்றது. தட்டச்சுப் பொறி உருவாக்கிய முதலில் மொத்த எழுத்துகளும் மேலே உயர்ந்து தட்டச்சிடும் வகையில் இருந்தது. இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டது. மேலும் கணியச்சு வந்த பின்னர், தட்டச்சு பயன்பாடு பெரும்பாலும் குறைந்த விட்டது. எனவே, நேர் பொருளாகக் காணாமல் சிறிய எழுத்துகள் மீதான வெருளி எனக் கொள்ள வேண்டும். எனினும் கீழ்ப் பகுதி எழுத்திற்காக விசையை அழுத்தும் பொழுது சரியாக அழுத்தாமல் எழுத்துப்பிழை நேருவது தொடர்பான அச்சம் பலருக்கும் உண்டு.
00
சிறு குளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிறு குள வெருளி.
00
சிறு தொகை குறித்த வரம்பற்ற பேரச்சம் சிறு தொகை வெருளி.
00
சிறு பார வண்டி(semi-truck)குறித்த அளவுகடந்த பேரச்சம் சிறு பார வெருளி.
சுமைப்பகுதியும் அதனை இழுத்துச்செலலும் இழுவையும் இணைந்த இச்சுமை ஊர்தியை அரைப்பார வண்டி என்பதைவிடச் சிறுபார வண்டி என்பது சிறப்பாக உள்ளது.
semi-trailer truck என்பதன் சுருக்கம் semi-truck
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5