கரிகாலன் கல்லணை பற்றி முதன் முதலில் கூறும் தெலுங்குச் சோழரின் (Telugu Chodas) மாலேபாடு (Malepadu Plates) செப்பேடுகள் & கல்வெட்டுகள்
கரிகாலன் கட்டிய கல்லணை குறித்து முதன்முதலில் தெலுங்குச் சோழர்களின் மாலேபாடு செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்தச் செப்பேடுகள், புராணக் கதைகளின்படி கவேர முனிவரின் தவத்தால் தோன்றிய காவிரி நதியின் வெள்ளப்பெருக்கைக் கரிகாலன் தடுத்து நிறுத்தியதாகக் கூறுகின்றன. மேலும், இந்தச் செப்பேடுகள் கரிகாலனின் ஆட்சி, சோழர்களின் சின்னம், மற்றும் பிற அரச குடும்பங்களுடனான தொடர்புகள் குறித்த முக்கிய தகவல்களைத் தருகின்றன.
கவேரனின் தவத்தால் காவேரி காவிரி நதி சோழநாட்டில் பிறந்தது எனவும் , கவேரனின் மகள் காவிரி ஆறு என்று புராணங்கள் கூறுகின்றன. இத் தெலுங்குச் சோழரின் இந்த செப்பேடு "கவேரன் மகளின் கரை கடந்து ஓடும் வெள்ளப் பெருக்கினை தடுத்து நிறுத்தியது கரிகாலன்" என்று கூறுகிறது. காவிரி பூம்பட்டினம் கவேரப்பட்டினம் என்றும், காவிரி நதியை சுற்றி இருந்த வனங்கள், கவேர வனம் என்றும் அழைக்கப்பட்டது. 
இந்த செப்பேடுகள் மூன்று பலகைகளைக் கொண்டவை. இவை தோராயமாக 7 அங்குலம் நீளமும், 2 3/4 அங்குலம் அகலமும் கொண்டவை. இவை ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்தின் முனைகள் ஓவல் வடிவ முத்திரையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த முத்திரை சுமார் 1 1/4 அங்குலம் நீளமும், 1 3/4 அங்குலம் அகலமும் கொண்டது. இந்த முத்திரையில் புடைப்புச் சிற்பமாக ஒரு புலி பொறிக்கப்பட்டுள்ளது. இது இடதுபுறம் திரும்பி, இடது முன் பாதத்தை உயர்த்தியபடி, வாய் திறந்த நிலையில், சுருண்ட வாலுடன் காட்சியளிக்கிறது.
குறிப்பு: இந்த பதிவை எழுதிய ராஜ பாண்டியன், ஏன் சோழர்கள் தெலுங்கில் இந்த செப்பேட்டை எழுத வேண்டும் என்று கேட்டுருக்கிறார். 
1. கரிகால் சோழன் தென்னிந்தியாவிலேயே மிகப்பிரபலமான மன்னன். சங்க காலம். சிலப்பதிகார நிகழ்வு இரண்டாயிரம் முன்பு நிகழ்ந்தது என்று கருதினால் அதற்கும் முன்பாக வாழ்ந்த பெரும் வீரன்.
2. இவன் மனுநீதிச்சோழன் என்று நாம் அழைக்கும் எல்லாள மன்னன்/Elara வுக்கு பிந்தியே இருந்திருக்க வேண்டும். எல்லாளன் சோழ மன்னன் என்பதை மகாவம்சம் பதிவு செய்கிறது. அங்கும் இங்கும் இருக்கும் குறிப்புகள், செய்திகளை வைத்துப்பார்க்கும் போது எல்லாளன் பெரும் படையுடன் சென்று இலங்கையை ஆக்கிரமிக்கவில்லை. சிறு குழுவாக சென்று, அங்கே இருந்த ஆதித்தமிழ்க்குடிகளுடன் இணைந்து மன்னனாக இருந்திருக்கிறான். ஆனால் கரிகாலன் அப்படி அல்ல, பெரும் படையுடன் கப்பல்களில் சென்று இலங்கையை பிடித்து அங்கிருந்த சிங்கள அல்லது பூர்வகுடியினரை பிடித்து தமிழகம் கொண்டு வந்தவன். இன்றைய காலகட்டத்தில் இது தவறு. ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெரும் வீரம், ஆளுமை, படை நடத்தும் திறன், அமைப்பு என்று மிகப்பெரிய விஷயம். 
3. ஆதி சோழர் நிலமென்பது காவிரி கடலில் கலக்கும் இடத்தில் தோன்றியிருந்தாலும் அதன் விரிவு மெதுவாக காவிரியுடன் மேலே படர்ந்தது. கொங்கு பகுதியின் சமூகங்கள் தொன்று தொட்டே தங்களது பூர்வீகம் சோழநிலப்பரப்பு என்ற முன்நினைவை தொடர்ந்து எடுத்துச்சென்றுகொண்டிருந்தன. அதே போல சோழர்களின் நிலப்பரப்பு தொண்டைமண்டலத்தையும் உள்ளடக்கியது என்பதையும் தொண்டமண்டலமென்பது இன்றைய ஆந்திராவின் தென்பகுதிகளையும் உள்ளடக்கியது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். சோழர்களிலிருந்து பிரிந்த பாதி சோழர் மீதி நாகர் என்ற கலப்புக்குழுவே பல்லவர்கள் என்று நமது தொன்ம நம்பிக்கை.
4. கரிகாலன் வீரசைவ (கன்னட) பழம் ஏடுகளிலும் பெரும் சைவனாக புகழப்படுகிறான். தெலுங்கு சோழர்கள் அவன் வழி வந்தவர்களாக தங்களை சொல்லிக்கொண்டனர். அது உண்மையாகவும் இருக்கக்கூடும், இப்படிப்பட்ட தொன்மங்கள் வெறும் புனைவாக இருந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. 
5. தெலுங்கை உருவாக்கியவர்கள் சோழர்கள் கிடையாது. ப்ரொடோ திராவிடத்திலிருந்து கிளர்ந்தெழுந்த மொழி அது. ஆனால் தெலுங்கு மொழி செம்மைப்பட்டது, அதற்கு கவுரம், அரசமொழி அந்தஸ்து தந்தது தெலுகு சோடா எனும் தெலுக்கு சோழர்களால். கரிகால் சோழன் வழிவந்த தெலுங்கு சோழ அரச குடும்பத்தில் ஒருவரே தெலுங்கு இலக்கியத்தின் ஆதி கர்த்தா - இராமாயணத்தை தெலுங்கில் எழுதியவர். தமிழுக்கு பின்னாலேயே செம்மைப்பட்ட மொழி தெலுங்கு, அதற்கும் பின்னால் கன்னடம், மிகமிக சமீபகாலத்திலேயே மலையாளம். ப்ரோடோ திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து நேரடியாக வந்தவை இந்த மொழிகள் எல்லாம் என்றாலும், ஆதி குடி, ஆதி நாகரிகம் தமிழகமே, தமிழே. இதை சொல்லும்போது எம் மீது தமிழ்வெறியர் என்ற குற்றச்சாட்டு எழலாம். ஆனால் வரலாறு பற்றி பேசும்போது politically correct ஆக எப்படி பேசுவது, உண்மையை அப்படியே சொல்வதுதானே முறை?
6. மாலேபாடு செப்பேடு புண்யகுமாரா (புண்ணியகுமாரன்) என்ற தெலுங்கு சோழன் காலத்தியது. தெலுங்கு சோழர்கள் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஸாவின் தென் பகுதி, கர்னாடகத்தில் சில பகுதிகள் என்று பெரிய நிலப்பரப்பை ஆண்டவர்கள். தெலுங்கு சோழர்கள் பல பிரிவினராக பிரிந்து பல நிலப்பரப்பை ஆண்டவர்கள். ரேனதி சோழர்கள், பொட்டப்பி சோழர்கள், வேளநாட்டி (வேளநாடு?) சோழர்கள், கோணிதேன சோழர்கள், நன்னூறு (நல்லூர்?) சோழர்கள், நெல்லூர் சோழர்கள், குண்டூரு சோழர்கள் என்று எல்லோரும் தங்களது குலப்பெருமை சொல்லும்போது குறிப்பிடுவது தாங்கள் கரிகாற்சோழன் வழிவந்தவர்கள் என்பது.
7. யுவான் சுவாங் போன்ற சீன யாத்ரிகர்களும் இந்த ரேனாதி சோழர்களைப் பற்றிய குறிப்புகளை விட்டுச்சென்றிருக்கின்றனர். 
8. இன்று இணையமெங்கும் ஒரு பெரும் புரட்டு நிலவுகிறது. அது சோழர்களை தெலுங்கர்கள் என்பது. அது பெரும் அயோக்கியத்தனம். தமிழர்களின் பெருமை சோழர்கள். சோழர்களின் கலை, இலக்கியம், ஆன்மீகம். அதையெல்லாம் சிறுமைப்படுத்தும் முயற்சி இது. சிங்கள நூல்கள் தெளிவாக சோழர்களை தமிழர்கள், சைவ மத வெறியர்கள் என்று சொல்கின்றன. கன்னட நூல்கள் சோழர்களின் சிவபக்தியை மெச்சுகின்றன, எல்லாளனும், கரிகாலனும் அவர்களது சிவபக்திக்காக மெச்சப்படுகின்றனர். ஆனால் அவர்களின் நிலம் தமிழ்ச்சோழமே. தெலுங்கு சோழர்கள் தங்களை கரிகாலன் வழி வந்தவர்கள் என்று சொல்லும்போது கரிகாலன் ஆந்திரா என்று சொல்லவில்லை, கரிகாலனுக்கும் காவிரிக்குமான தொடர்பையே பெருமையாக தமது முன்னோர்களின் நிலம் தமிழ்ச்சோழம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.
9. சிங்கள பவுத்த நூல்கள் கரிகாலன் தம் மக்களை பிடித்துச் சென்றான் என்று குறிப்பிடுகிறது. அவன் தமிழன், சைவன் என்பதையும் குறிப்பிடுகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் கரிகாலன் கல்லணையை கட்டிய செய்தி பொதுயுகம் ஏழாம் நூற்றாண்டில் மாலேபாடு பட்டயத்தில் வெளிப்படுகிறது. கல்லணை கட்டிய மன்னன் தமிழ்ச்சோழ நிலத்தவன் என்பதை அதை சொல்லவேண்டிய அவசியம் இல்லாத, ஓரளவுக்கு வரலாற்று ரீதியாக ஆதாரமான தகவல்களை தரும் சிங்கள பவுத்த நூல்கள் தெரிவிக்கின்றன. கரிகாலன் தெலுங்கன் என்றால் அவை தெளிவாக அதை தெரிவித்திருக்கும். 
10. இன்னொரு புரட்டு பல்லவர்கள் சோழர்களை தாக்கி அவர்களை வடக்கே தெலுங்குப்பகுதிக்கு விரட்டினர் என்பது. அதற்கு ஆதாரமாக நந்திவர்மன் என்ற தெலுங்குசோழன் பெயரை ஆதாரமாக காட்டுகின்றனர். பல்லவர்களே பாதி சோழர்கள் எனும்போது, இதை எப்படி ஏற்றுக்கொள்வது. பல்லவர்கள் சோழர்களின் கிளை என்பதே எல்லா பழம் தமிழ் நூல்கள், தொன்மங்கள் சொல்வது. பல்லவம் என்றாலே கிளை. தொண்டை என்பது பல்லவம் என்பதன் தமிழ் வார்த்தை, இரண்டுமே கிளை என்பதையே குறிக்கின்றன. வடவிலைங்கையின் ஒரு குடி இன்றைய செங்கல்பட்டு, ஆற்காடு பகுதியில் குடியேறதன் நினைவாக மாவிலங்கை எனும் ஊர் இன்றும் இருக்கிறது. ஆனால் இந்த குடி சோழர்களும், இலங்கையின் பூர்வகுடி நாகர்களும் (நாகர்கள் புகார் பகுதியில் இருந்த தொன்மங்களும் நம்மிடையே உள்ளன) இணைந்து உருவானதே பல்லவர்கள். அவர்கள் நடுவே உயர்ந்து சோழ நிலத்தை ஆண்டு பின்பு சுருங்கி சோழர்களுடன் இரண்டறக்கலந்துவிட்டனர். அவர்களும் தமிழரே.
11. கரிகாலன் எனும் legendary tamil warrior காலம் காலமாக நம் நினைவில் நிற்பான். பெரும் வீரம், பெரும் சிவபக்தன். புகார் என்ற தமிழகத்தின் முன்னோடி மற்றும் பெரும் கடற்கரை நாகரிகத்தின் நினைவு அவன்.
நன்றி: ராஜ பாண்டியன் மற்றும் இணையத்தரவுகள்