(நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: தொடர்ச்சி)
அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே!
கோதை அருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ (டி)யாதும் உரையற்க – பேதை
உரைக்கின் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையால்
வழுக்கிக் கழிதலே நன்று.
நாலடியார் பாடல் 71
அறிவில்லாதவனிடம் ஒன்றும் சொல்லற்க! சொன்னால் அதைச் சிதைத்துப் பிறரிடம் சொல்வான். ஆதலால் இயலும்வழியில் எல்லாம் அவனை விட்டு நீங்குதல் நன்று.
பதவுரை
கோதை=மாலை>நீரில் மாலைபோல் சேர்ந்து கலந்து விழும் பூக்கள் கொட்டும்; அருவி=அருவி; குளிர்= குளிர்ந்த; வரை=மலை; நன்னாட=நல்ல நாட்டையுடைய; தலைவனே; பேதையோடு=அறிவில்லாதவனிடம்; யாதும்=எதையும்’ உரையற்க= சொல்லாதிருப்பாயாக; பேதை=அவ்அறிவில்லாதவன்; உரைப்பில்= எதையும் சொன்னால்;சிதைந்து= நீ சொன்னதைப் பேதை பிறரிடம் சிதைத்துக் கேடுண்டாகும்படி; உரைக்கும்=சொல்வான்; (ஆதலால்) ஒல்லும்=இயலும்; வகையால்=விதத்தால்; வழுக்கி= தப்பிl கழிதல்= (அவனை விட்டு) நீங்குதல்; நன்று= நல்லது.
அறிவில்லாதவனுக்கு எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்காது. ஆதலின் எதையும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். சரியாகப் புரிந்து கொள்ளாததுடன் தான் தவறாகப் புரிந்து கொண்டதை மேலும் தவறாகப் பிறரிடம் சொல்வான். ஆதலின் சொல்லிய கருத்து பிறரிடம் தவறாகவே சென்று சேரும். எனவேதான், பேதையிடம் எதையும் சொல்லாதே என்கிறது நாலடியார்.
இல்லாமையாகிய துன்பத்தில் பெரும் துன்பம் அறிவுஇல்லாமையே என்கிறார் திருவள்ளுவர்.
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. (திருக்குறள்,௮௱௪௰௧ – 841)
எனச் சொல்லும் திருவள்ளுவர் புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களையும் பேதைமை என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களையும் வழங்கி அறிவில்லாதவர்களைப்பற்றி உணர்த்தியுள்ளார்.
சரியாகச் சொல்வனவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு பிறரிடம் சொல்வதால் தீமைதான் விளையும். நல்லன சொல்லியும் புரிதலின்மையால் அல்லனவே விளையும். எனவே, அறிவிலிகளிடம் எதையும் சொலலாதிருப்பதே நன்றாகும். எனவேதான், நாலடியாரும் நாட்டுத் தலைவனிடம் அறிவி்ல்லாதவனிடம் எதையும் சொல்லாதே என்கிறது. நாட்டுத்தலைவன் அவ்வாறு சொால்வது நாட்டிற்கே தீங்காக விளையும். ஆனால், இது நாட்டின் தலைவனுக்கு மட்டும் உரிய அறிவுரை அல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே உரியதாகும். நாடடுத் தலைவன் அறிவில்லாதவனிடம் சொல்வது நாட்டிற்கே தீங்காவதுபோல் தனிப்பட்டவர் அறிவிலியிடம் சொல்வது அவருக்கும் அவர் குடும்பத்தினரக்கும் தீங்கை விளைவிக்கும்்.
எனவே, நாம் அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதிருப்போம்!