(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22
ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!
“…பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…”
– கபிலர், நற்றிணை 32: 7 – 9
பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர் = நட்பு கொண்டோர்
ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.
தலைவியிடம், நீ முதலில் தலைவனுடன் நட்பு கொண்டு பின்னர் மாறுபடுவது தவறு எனச் சொல்லும் தோழி பெரியோர் கூற்றைத் தெரிவிக்கிறாள்.
ஒருவருடன் நட்பு கொண்ட பின் அதிலிருந்து விடுபட முடியாது. எனவே ஒருவரின் பண்பு நலன்களை ஆராயாமல் நட்பு கொண்டால் அதுபோல் கேடு தருவது வேறில்லை என்கிறார் திருவள்ளுவரும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
– திருக்குறள் , ௭௱௯௰௧ – 791
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் என்று விளக்குகிறார் கலைஞர் மு.கருணாநிதி. ஆராயாமல் மேற்கொள்ளும் காதலும் அப்படித்தானே!
காதலித்தவன் கயவன் என்று தெரிந்த பின், கேடுகள் விளைவிக்கும் தவறான காதலைக் கைவிடவும் முடியாமல், காதலைத் தொடரவும் முடியாமல் காதலி தவிப்பது இயற்கைதானே!
கண்டதும் காதல், முதல் பார்வையிலேயே காதல் என்றெல்லாம் சொல்வார்கள். காதலும் நட்புபோல்தான்.
காதலிக்க விரும்பும் முன், அவன் ஏற்றவன்தானா? நற்குணங்கள் நிறைந்தவான்தானா? ஏமாற்றிக் கைவிட்டுச் சென்று விடுவானா? கடைசிவரை உடனிருப்பவனா?
வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணைவனாக இருப்பானா என்றெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத் தோழி, பெரியோர் கூறுவதுபோல் ஆராயாமல் நட்பு கொள்ளக் கூடாது, காதலிக்கக் கூடாது என்கிறாள்.
காதலித்தபின் கைவிட்டால் அதைப்போல் கேடு தருவது வேறில்லை என்கிறாள்.
நட்பின் நிலைப்பாட்டைக் கூறுவதன் மூலம் காதலின் நிலைப்பாட்டைக் கூறுகிறாள் தோழி.
மேலே குறிப்பிட்டுள்ள கடைசி மூன்று அடிகளின் முந்தைய அடிகள் (நற்றிணை 32, அடி1-7) வருமாறு,
”மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்” என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய வாழி, தோழி!
(வரை = மலை; கவாஅன் = மலைப்பக்கம்)
இதன் பொருள் வருமாறு:
வாலியோன் போன்ற வெண்ணிற அருவி உள்ள மாயோன் போன்ற பெரிய மலைக்கு உரிய அவன், உன்மீது அன்புகொண்டு அது கிடைக்கப்பெறாமல் வருந்துகிறான்.
நீயும் இசைந்து பேசு. உன் குடும்பத்தினருடன் கலந்து பேசி, அவனைக் கண்டு, அவனுடன் அளவளாவ வேண்டும். இதனை மறுத்தற்கு ஒன்றுமில்லை.
தோழி ஆராய்ந்தறிந்து அவன் நல்லவன் என உணர்ந்து அவனுடன் பேசுமாறு கூறுகிறாள்.
நாமும் சங்கப் புலவர்கள் பொன்னுரையைப் பின்பற்றி, நட்பு கொண்ட பின் ஆராய்ந்து பயனில்லை. ஆதலின் ஆராயாமல் நட்பு கொள்ள வேண்டா!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
5
மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்
இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:
“தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமை வாய்ந்ததாயுள்ளது தொல்காப்பியம். “
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில
“தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை.” என்கிறார் பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11)
“ஐந்திரம்” என்னும் நூலே, தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாகும். இந்தத் தமிழ் ஐந்திரத்தைத் தழுவியே, வடமொழிகளுக்கு எழுத்துகளும், இலக்கணங்களும் வடிக்கப்பட்டன. வடமொழிகளான, மாகத, பாகத(பிராகிருத) மொழிகளின் இலக்கணங்களைக் கற்கப் புகுவோரெல்லாம் தமிழ் ஐந்திரத்தை முதலில் கற்றேயாக வேண்டும் என்னும் நிலை கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. இதனைக் கருநாடகத்தின் கொப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட அருகச் சமயக் குரவர்களைப் பற்றிய கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது.(அத்திப்பட்டு முரளிதரன் முகநூல்) எனவே பாணினியத்திற்கும் வழிகாட்டி ஐந்திரமே. அவ்வாறிருக்க பாணினியத்தைத் தொல்காப்பியத்தின் மூல நூலாகக் கூறுவது தவறல்லவா?
இந்தியவியலாளர் கோல்ட்சுடக்கர், பண்டார்கர், முனைவர் இராதா குமுத்து முகர்சீ, பாடக்கு ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும்,வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாத்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர் என்கிறார் ஒருவர். ஆனால், அவர் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு.120 என வேண்டுமென்றே தவறாகக் கூறுகிறார். எனவே, நடுநிலை தவறிய இவரது கருத்து ஏற்கத் தக்கதல்ல.
விக்கிபீடியாவில் உள்ளவாறு பாணினியின் காலம் பொ.ஊ.மு.520க்கும் பொ.ஊ.மு.460க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறும் காலமும் தவறு.
பாணினி காந்தார நகரத்தில் தோன்றியதாகக் கூறுகின்றனர். கிமு 330-இல் பழைய காந்தார நகரத்தை அலெக்குசாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக் குசாந்தர் ஆவார். காந்தார நகரம் உருவானபொழுதே பாணினி தோன்றியவராக இருந்தாலும் அவரது காலம் கி.மு.330இற்குப் பிற்பட்டதே. எனவே அதற்கு முந்தையதாகக் கூறுவனவெல்லாம் கட்டுக்கதைகளே. பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் முனைவர் பந்தர்க்கார். நகர வரலாற்று அடிப்படையில் இக்கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது.
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 456 – 460
456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia
உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.
உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.
Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.
அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர் மோனிகாவுடன் தகா உறவு மெய்ப்பிக்க மோனிகாவின் உள்ளாடை ஒரு காரணம் என்பதால் தகாப்பாலுறவருக்கு உள்ளாடை மீத அச்சம் வருகிறது.
00
உறவினர் மீதான அளவு கடந்த பேரச்சம் உறவினர் வெருளி.
மாமன்மார், அத்தைமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார்,உடன்பிறந்தோர், அம்மான்சேய், மாமனார், மாமியார், மருமகள், நாத்தூண்நங்கை(நாத்தனார்), ஓரகத்தி, மருகர், உடன் மருகர் எனப் பலவகைகளிலும் உள்ள உறவினர்களால் தொல்லை நேரலாம், வீண் செலவிற்கு ஆளாகலாம், வம்பு தும்பில் மாட்டலாம் என்பன போன்ற பெருங்கவலைகளால் பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். ஒவ்வோர் உறவுமுறைக்கான பேரச்சம் குறித்த வெருளி தனித்தனியே குறிக்கப் பெறுகிறது. இருப்பினும் இங்கே பொதுவாகக் குறிக்கப்பெறுகிறது.
sy என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ‘அதே’. gen என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மரபு வழியினர் அல்லது பரம்பரையினர்.
00
உடல் உறுப்பு இழப்பு நேரும் என்று அஞ்சுவது உறுப்பிழப்பு வெருளி.
உறுப்பு என்றாலே உடலையும் உடல் உறுப்பையும் குறிக்கும். எனவே உடலுறுப்பு இழப்பு எனச்சொல்வதை விடச்சுருக்கமாக உறுப்பிழப்பு என்றாலே போதும்.
கிரேக்கச்சொல்லான Apo என்பதற்கு அப்பால், தொலைந்துபோ எட்டச்செல், ஒழி எனப் பொருள்கள் உள்ளன. கிரேக்கச்சொல்லான temno என்பதற்கு வெட்டு, அறு, துண்டி, நீக்கு எனப் பல பொருள்கள் உள்ளன. உறுப்புத் துண்டிக்கப்பட்டு எறியும் நிலை என சொற்கள் இணைக்கப்படும் பொழுது பொருள் வருகிறது. துண்டிக்கப்பட்டு எறிவதால் உறுப்பு இழப்பாகின்றது என்றுதானே பொருள்.
00
உறை குறித்த வரம்பற்ற பேரச்சம் உறை வெருளி.
உறைகளில் இழப்பு, நோய்விவரம், வேறு துன்பச்செய்திகள் அடங்கிய குறிப்புகள் அல்லது மடல் இருக்கலாம் எனக் கவலைப்பட்டுப்பேரச்சம் கொள்கின்றனர்.
பணிகளில் உள்ளவர்கள், உறைகளில் பதவிப் பறிப்பு, பணப் பிடித்தம், குற்றச்சாட்டு ஆணை என எதுவும் உறைகளில் இருக்கலாம் என்ற வெருளியும் வருகிறது.
உறை வெருளி என்பது பொதுவாக அஞ்சல் உறைகளையே குறிக்கிறது.எனவே, அஞ்சல் வெருளி (postal phobia) உள்ளவர்களுக்கு உறை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
உறைபனி மழை(freezing rain) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி மழை வெருளி.
pluvia, frigore, என்னும் இலத்தீன் சொற்களுக்கு உறைபனி, மழை எனப் பொருள்கள்.
மழை வெருளி (Ombrophobia) உள்ளவர்களுக்கு உறைபனி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5