ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 16 May 2026
(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்!
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459)
[ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. ]
மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும்.
பதவுரை:
மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்; இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு=வலிமை; உடைத்து=உடையது ஆகும்.
ஏமாப்பு=சிறப்பு; அரணாதல்; வலிமையாதல்; பாதுகாப்பு; இறுமாப்பு; ஏமம் + ஆப்பு – “ஆப்பு” சொல்லாக்க ஈறு.
மறு முறை பிறப்பதை மறுமை என்றனர். மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும் பரிதி மறுசென்மம் என்றும் பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு ‘மறுமை இன்பம்’ என்றும் பொருள் உரைத்துள்ளனர். செல்வம் என்று பொருள் கொண்டும் உரைத்துள்ளனர். இறந்தபின் அடையும் வீட்டின்பம் என்றே பலரது விளக்கங்களும் அமைந்துள்ளன. பேரா.முனைவர் சி.இலக்குவனார், அரசியலில் உள்ள இக் குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை என்கிறார்.
மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு “ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்” என்றும் “மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்” என்றும் “மறுமையெனும் மக்கள்” என்றும் “ஒரு நிலையினின்று மேல் செல்லும் மறு நிலை” என்றும் “பின்வரும் சந்ததி” என்றும் பொருள் கூறியுள்ளனர்.
“மறுமை-மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார். “அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லார்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.” (இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746) என விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
பேரா.சி.இலக்குவனார் கருத்தை அடியொற்றி மீண்டும் பெறும் பதவி வாய்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவகை நன்மைகளையும் மீளப் பெறுவதைக் குறிக்கும் வகையில் பொதுவாக “மீண்டும் கிடைக்கும் நல்வாய்ப்பு” எனப் பொதுவாக விளக்கியுள்ளேன்.
மறுபிறவியில் அடையும் இன்பம் என்றால், மறு பிறவி உள்ளதா? மறுபிறவி மனிதப்பிறவிதானா? என்றெல்லாம் வினாக்கள் வரும். இப்பிறவிக்கான எதிர்விளைவு அடுத்த பிறவியில் நிகழ்வதால் இப்பிறவியில் என்ன பயன்? அந்தந்தப் பிறவியில் உள்ள செயல்களுக்கான நன்மை தீமைகள் அந்தந்தந்தப் பிறவியிலேயே அமையும் என்றால்தான் வாழும் பிறவியிலேயே நன்மை கிடைக்க வேண்டும் என்றும் தீமை கிடைக்கக் கூடாது என்றும் தீச்செயல்களை விலக்குவர்; நற்செயல்கள் புரிவர்.
“இன நலம் ஏமாப்புடைத்து” என்பதற்கு மணக்குடவர், அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து என்கிறார்.
இனச்சுற்றம் மனநலத்தால் பெறும் சிறப்பை, நாம் பயனை மறுமுறை அடைவதற்குப் பாதுகாப்பாக விளங்கும். எனவே, மன நலத்தின் சிறப்பு இன நலத்தால் வலிமை பெறுகிறது எனலாம்.
உள்ளத்தின் சிறப்பால் இன நலத்தின் பாதுகாப்புடன் மீள் நன்மையை நாம் அடைவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1421 -1425
ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.
நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.
நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.
‘எங்க ஊர் ராசா’ படத்தில் வரும் கண்ணதாசனின் பாடலும் நம்பக வெருளியின் விளைவே!
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
என்னும் பாடல் பிள்ளைகளின் மீதான நம்பக வெருளியை உணர்த்துகிறது.
ஒரு நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பில் விளைவது நம்பிக்கை(faith). அந்த நம்பிக்கையை உறவு முறையில் அல்லது பணிமுறையில் ஒருவர் மீது வைப்பது நம்பகம்(trust).
காண்க: நம்பிக்கை வெருளி – Eupistophobia
00
நம்பிக்கை குறித்த வரம்பற்ற பேரச்சம் நம்பிக்கை வெருளி.
தனக்கோ பிறருக்கோ நேர்ந்த நம்பிக்கை மோசடியினால் நம்பிக்கை வெருளிக்கு ஆளாகின்றனர்.
வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை
நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை
இனி தொடுவா னம்தான் உன்எல்லை!
என்னும் கவிஞாயிறு தாராபாரதியின் பாடல் வரிகளை நினைத்து உற்சாகம் கொண்டால் நம்பிக்கையுடன் இருந்து நம்பிக்கை வெருளியை ஓட்டலாம்.
காண்க: நம்பக வெருளி – Pistanthrophobia
00
நீதி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நயன்மை வெருளி.
இவ்வெருளிக்கு ஆளானவர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர் என்ற அளவில் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதைப்பற்றிக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்வர்.
தவறான நீதிகளால், நீதி முறைமைகளால் வெறுப்பு ஏற்படுவதும் இதில் அடங்கும்.
சட்டத்தின் ஆட்சி சமம் என்று சொல்லிக் கொண்டே இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கிவைக்கப்பட்ட எழுவரின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது பாதிப்புள்ளானவர்களுக்கும் அவர்களின் நலன் விரும்பிகளுக்கும் வெறுப்பு வருவது இயற்கைதானே!
பொய்ச்சான்று, தவறான உசாவல்(விசாரணை) முறைமை, அடக்கு முறைமை போன்றவற்றால் நீதி மறுக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என்ற பேரச்சமும் வருவது இயற்கையாகிறது. நீதி முறைமை குறித்து அச்சம் வராமல் பாதுகாவல் என்ற நம்பிக்கை வருவதே நன்று.
dik என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நீதி.
00
நரிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நரி வெருளி. விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும்.
தந்திர நரி(fox) வெருளியை Alepouphobia என்றும் குள்ளநரி(jackal) வெருளியை Sakaliphobia என்றும் வேறு படுத்திக் கூறுகின்றனர்.
00
உடல் நலத்திற்கான உணவுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நல உணவு வெருளி.
நலம் தரும் உணவு(ஆரோக்கியத்திற்கான உணவு) என்று மிகுதியாக உட்கொள்வதால் உடல் எடைகூடும் என்ற பேரச்சம் வரும். நல உணவுகளால் செலவு மிகும், சுவை இருக்காது, மன நிறைவளிக்காது என்று எண்ணிப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
ஊட்ட உணவு மிகு விருப்பர்களுக்கு நல உணவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Salute cibo என்னும் இத்தாலியச் சொல்லிற்கு நல உணவு எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5