கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

0 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 18, 2022, 9:54:07 PM1/18/22
to வல்லமை, hiru thoazhamai

 கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

 

"கூடிவாழ்ந்தால் கோடி நன்மை". பிறர் நலத்துடன் சார்ந்ததே தன் நலமும் என்ற எண்ணமே ஒரு வலுவான சமூகத்தை, தொழில் அமைப்பை  கட்டமைக்க இன்றியமையாததாகிறது.  

ஒற்றைத்திரள் (centralised) முறையில் தொழில் என்பது லாப நோக்கில் மட்டுமே நடக்கும் ஆனால் பல சுக்கல் (decentralised) முறையில் தொழில் என்பது மக்கள் நுகர்விற்காகவே (consumption) நடத்தப்படுகிறது. பல சுக்கல் பொருளியல் அணுகுமுறை நகரம், கிராமம் போன்ற இடம் சார்ந்த ஏற்றத் தாழ்வை (regional disparity) அறவே ஒழிக்கும். ஏனென்றால் இதில்  பொருளும் செல்வமும் எல்லா இடத்திலும் சமமாக பகிரப்படுகிறது. இது பண்டைய கால கிராமிய பண்டமாற்று பொருளியலுக்கு ஒப்பானது. ஒருவர் மரம் அல்லது தங்கத்தை வாங்கிக் கொடுத்தால் தச்சர் அல்லது பொற்கொல்லர் அதில் பொருளை வேண்டியவாறு செய்து தருவார். அதற்கு கூலியை மட்டும் பெற்றுக் கொள்வார். நுகர்வோர் வாழும் இடத்திலேயே உற்பத்தியாளரும் தனது வீட்டுக் கடமையை ஆற்றிக்கொண்டே தனது தொழிலை செய்து வாழ்வார். இது நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் இடையே ஒரு நேரடி உறவை வளர்கிறது. ஒற்றைத்திறல் அர்குமியியத்தில் (centralised capitalism) இந்த உறவு இருப்பதில்லை, எங்கும் ஏற்றத்தாழ்வு தான்.   

  

இக்காலத்தே பண்டமாற்று கால கிராமிய பொருளியலில் இருந்தது போன்ற பொருளியலில் தற்சார்பு, தன்னிறைவு, சமன்பட்ட வளர்ச்சி என்ற நோக்கில் பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையில் தொழில்கள் பல சிறுசிறு வட்டங்களில் சிறு அளவில் நிறுவப்பட்டு அங்கத்து மக்களின் பொருளியல் தேவைகளுக்கு மட்டும் அங்கத்து மூலப்பொருளையும்  அங்கத்து மக்களையும் மட்டுமே கொண்டு  நிறைவேற்றப்படும். பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்ய பொருள் உற்பத்தி மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏற்றுமதி  பிற வட்டங்களின் தற்சார்பை பாதிக்கும். இதற்கு ஒரு அமைப்பு தேவை அதுவே கூட்டுறவு சங்கம் என்பது. "மக்கள், மக்களுக்காக, மக்களால்" என்ற குடிநாயகக் கருத்திற்கு உண்மையான வடிவம் கொடுப்பதே பல சுக்கல் முறையில் இயங்கும் இந்த கூட்டுறவு சங்கங்கள் தாம். தொழிற் கூட்டுறவு சங்கங்களை தொடங்கும் முன் அதற்கான உளவியல் சூழலை உள்ளூர் வட்டத்து மக்களிடம் உருவாக்க வேண்டும். அப்போது தான் கூட்டுறவு சங்கங்கள் நிலைத்து வெற்றியாரமாக செயற்படும். இதற்கு நாம் எல்லோருமே அந்த கடவுள் என்னும் ஒரே தந்தையின் பிள்ளைகள் (universal fraternity) என்ற எண்ணம் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் உருவாகியிருக்க வேண்டும் என்பதை பல சுக்கல் பொருளியல் அணுகுமுறையை விரும்பும் இடதுசாரி நாத்திகர் புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களிடம் உடன்பிறப்பு உணர்வை ஏற்படுத்தும். "சாமி இல்லை, பூதம் இல்லை, பேய் இல்லை, பிசாசு இல்லை" என்ற கோர்வை சொலவடை பேசும்  நாத்திகரால் ஒருநாளும் இந்த மனநிலையை மக்களிடம் உருவாக்க இயலாது. எனவே நாத்திகம் ஒரு பொய்மை அது உலகை விட்டு ஒழியட்டும். 

 

கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்துதல் (cooperative formation)

 

இன்றைய உலகில் நிர்வாக மேலாண்மையில் ஒருவரது மேற்பார்வைக்கு உட்பட்ட கீழ்படிந்த மேலாண்மையே (subordinated management) வழக்கில் உள்ளது,  கூட்டிணைந்த மேலாண்மை என்பது இல்லை. இந்த கூட்டிணைந்த மேலாண்மை (coordinated management) முறையை தன்னகத்தே சிறப்பாக கொண்டது தான் கூட்டுறவு என்னும் அணுகுமுறை. பல சுக்கல் பொருளியல் அணுகுமுறையில் தொழில்கள் மூலத்தொழில்கள் (key industries), இடைநிலைத் தொழில்கள் என்ற சிறு, பெரு தொழில்கள், குழுமத் தொழில்கள் (corporation) என மூன்றாகப் பகுக்கப்படும். மூலத்தொழில்கள் என்பன பெரும்பாலும் மூலப்பொருள்களின் உற்பத்தியை மேற்கோள்பவை. இந்த மூலப்பொருள் உற்பத்தி  நின்றால் அதை சார்ந்த அத்தனை தொழில்களும் நின்றுபோகும். எனவே இந்த தொழில்கள் கீழ்நிலை உற்பத்தி நிர்வாக அமைப்பான வட்ட நிர்வாகத்தின்  (block level administration) நேரடி முதலீட்டில், கண்காணிப்பில் கூட்டுறவு சங்க முறையிலேயே இயங்கும். எடுத்துக்காட்டாக, நூற்பாலை. இந்த நூற்பாலையின் நூல் உற்பத்தியை சார்ந்து பல விசைத்தறிகள் கூட்டுறவு முறையில்  இயங்கும்.  இதை  உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்  (producer's cooperatives) மேற்கொள்ளும். இவற்றின் ஆக்கம் முடிந்த (finished products) பொருள்களை  நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் (consumer's  cooperatives) மக்களுக்கு சந்தைப்படுத்தும். அளவில் சிறிய வணிகங்களை  கூட்டுறவு சங்கங்களால் நடத்தவே முடியாது. எடுத்துக்காட்டாக இளநீர், வெற்றிலை பாக்கு,  பூ கட்டுதல் விற்கும் கடை போன்ற தொழில்கள் தனியாரிடமே இருக்கும்.  ஆனால் இவர்கள் அதிக பணம் சேர்த்துவிடாதபடி இவர்களுக்கு பொருள் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள் இவர்களுக்கான பொருள் அளிப்பை (supply) கட்டுப்படுத்தும்.

 

அடுத்ததாக பெரிய தொழில்கள். இவை பெரும் முதலீடு தேவைப்படும் எந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் ஆகும். இதாவது, வட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தொழிற் கூடங்களில் தேவைப்படும் எந்திரங்கள்,  வினைக்கருவிகள், அவற்றின் உதிரி பாகங்கள் போன்றவற்றை வட்ட அளவில் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் 9-10 வட்டங்களை ஒன்றுசேர்த்து ஒரு தொழில் மாவட்டமாக அறிவித்து அவற்றில் வட்ட அளவில் உள்ள  தொழிற் கூடங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமே உற்பத்தி  செய்யப்படும்.  சிறுஅளவு உற்பத்தியால் அதிக செலவு  பிடிக்கும் பொருள்களின் உற்பத்திச் செலவை குறைக்க அத்தகு பொருள்களின் உற்பத்தியும் இந்த தொழில் மாவட்டங்களிலேயே  கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும். இதாவது ஒரு லட்சம் பேர் வாழும் ஒரு வட்டத்தில் ஒரு பொருளின் தேவை ஒரு மாதத்திற்கு 500- 1000 வரை தான்  என்றால் அதன் ஆக்கச் செலவு அதிகமாக இருக்கும் என்னும் போது அதை 9-10 வட்டங்களில் வாழும் 10 லட்சம் மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் 5,000- 10,000 என்ற அளவில் உற்பத்தி செய்தால் அதன் ஆக்கச் செலவு குறைவாகக் இருக்கும் என்றால் அத்தகு பொருள்களை தொழில் மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்து அந்த மாவட்ட அளவில் சந்தைப்படுத்தலாம். மாவட்ட அளவில் உற்பத்தியாகும் பொருளை உற்பத்தி செய்யும் கூட்டுறவு நிறுவனமோ அல்லது நுகர்வோர் கூட்டுறவு நிறுவனமோ தான் பொருளை சந்தைப்படுத்த வேண்டும். தனியார் கடைகள் (private outlet) இதை செய்ய அனுமதி இல்லை.

 

கூட்டுறவு முறையில் உற்பத்தி மேற்கொள்ள முடியாத குழும (corporation) அளவில் மட்டுமே மேற்கொள்ள கூடிய அதிபெரும் தொழிலை மாநில அரசே முதலீடு செய்து, கண்காணித்து உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். அப்படி உற்பத்தியான பொருளை பகிர்வோர் (distributor) இல்லாமல் அந்தந்த குழும நிறுவனமே சந்தைப்படுத்த வேண்டும். காட்டாக, இரும்பு & உருக்கு, வானூர்தி, கப்பல் கட்டுதல், இரயில் பெட்டி, கன்னெய் தூய்மிப்பு (petro refining) போன்றன. இவற்றை 9-10  தொழில் மாவட்டங்களை இணைத்து பெரிய தொழில் மண்டலமாக அறிவித்து அங்கே இவற்றின் உற்பத்தியை  ஒரே இடத்தில் குவிக்காமல் சிறுசிறு உற்பத்தி அலகுகளாக இவற்றின் செய்முறையை (processing) பிரித்து மண்டலத்தில் பரவலாக வேலைவாய்ப்பு  கிடைக்கும் வண்ணம், பெரிய நகரம் உருவாகாத வண்ணம், பொருளியல் சமநிலை உருவாகும் வண்ணம் தொலைவான பல இடங்களில் உதிரி உதிரியாக (spares) உற்பத்தியை மேற்கொண்டு விட்டு இணைப்பு (assembling) வேலையை மட்டும் ஓரேஒரு இடத்தில் மேற்கொள்ளலாம். இதனால் வட்ட அளவில் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பு உறுதி ஆகும்.  இரும்பு  தொழிலை எடுத்துக்கொண்டால் இரும்புத் தாதுவை பொடிந்து மண்ணைத் தனியே பிரித்து சிறுசிறு பாலங்களாக அவ் இரும்பை ஆக்கி பின்  ஒவ்வொரு மாவட்ட தொழிற் பிரிவிலும் அதற்கு மேலான செய்முறைக்கு (process) அனுப்பலாம். பிலாய், போகரோ, உரூர்கேலா, துர்காபூர், சேலம், விசாகப்பட்டினம் போன்ற பெரிய ஆலைச் செயன்முறையை தவிர்க்க வேண்டும்.  ஏனென்றால் இங்கெல்லாம் 10,000 - 20,000 பேர் வேலை செய்கின்றனர். இப்படி ஒரே இடத்தில இவ்வளவு பேர் வேலை செய்வதை தவிர்த்து 300 - 500 பேர் வரை இருக்குமாறு பிரித்தால் இதன் செய்முறை 15-20  இடங்களுக்கு விரியும். இதனால் அந்தந்த இடங்களும் வளர்ச்சி அடையும்.  

 

வட்டப் பிரிவு உருவாக்கம் (Block divisions formation) 

 

ஒரு வட்டப் பிரிவு உருவாக்கத்தை அப்பகுதியின் இயற்கை அம்சங்கள் (ஆற்றுப் பள்ளத்தாக்குகள், மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள், நிலஅமைப்பு, மண்ணின் தன்மை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வகை, முதலியன உட்பட), மக்களின் சமூக-பொருளாதாரத் தேவைகள்,  பிரச்சனைகள் போன்ற காரணிகள், அங்கத்து மக்களின்  உடல்-உளவியல் விருப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சற்றொப்ப ஒரு லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழில் வட்டத்தையும் உருவாக்க வேண்டும். மக்கள் தொகையும் நிலப்பரப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் திறம்பட்ட பல சுக்கல் பொருளியல் திட்டமிடலுக்கு அடிப்படையாக வட்டங்களை அறிவியல் ரீதியாகவும் முறையாகவும் வரையறுக்கப்பட வேண்டியது முதல் வேலை ஆகும். ஒவ்வொரு வட்டத்திலும் நிலத்தடி நீரை சார்ந்திராமல் நீர் பாசனத்திற்கும் குடிநீருக்கும் தேவைப்படுகின்றன ஏரி, குளங்கள், தாங்கல்களை பல இடங்களில் அமைக்க வேண்டும். மரத்தேவைக்காக எல்லா வட்டங்களிலும் குறுங்காடுகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும். புனல் மின், அனல் மின், அணு மின் தவிர்த்து கடல் அலை, காற்றலை, சூரியன் உள்ளிட்ட மாற்று ஆற்றல்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தடையற்ற மின்சாரத்தை வட்டங்களுக்கு  வழங்க வேண்டும். 

 

வட்டங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடுப்பு, உறையுள், கல்வி, மருத்துவம் இவற்றை எட்டுவதற்கு தேவையான பொருள்களை அந்தந்த வட்டத்திலேயே உள்ளூர் மக்களையே  உறுப்பினர்களாகவும் தொழிலாளர்களாகவும்  கொண்ட  கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். வேளாண் இடுபொருள், அதன் வினைக் கருவிகளை ஆக்குவதற்கு தனியே வேளாண் மூலப் பொருள் தொழில்களையும் (agrico industries), அறுவடை முடிந்த பின்னான வேளாண் மதிப்பு கூட்டு தொழில்களையும் (agro industries) உழவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். வட்டத்து மக்களின் பால்பொருள் தேவைகளை நிறைவு செய்யம் நடவடிக்கையை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவகங்கள், பலகாரம் சுட்டு  விற்றல் ஆகியன  கூட்டுறவு சங்கங்களின் மூலமே நடத்தப்பட வேண்டும். ஒரு இடத்தில் என்ன பயிர் விளையுமோ அதைத் தான் மக்கள் உண்ண வேண்டும். இன்றைய உலகில் உண்பதற்கு 80,000 விளைபொருள்கள் இருந்தாலும் மக்கள் 30 வகையான பொருள்களையே  அதிகம் நாடி உண்கின்றனர். அதிலும் குறிப்பாக நெல், கோதுமை, சோளம் இந்த மூன்றைத் தான் அதிகம் உண்கின்றனர். ஏதேனும்  ஒரு வட்டத்தில் அல்லது தொழில் மாவட்டத்தில் இம்மூன்றும் அல்லாத கம்பு, கேழ்வரகு போன்ற பயிர் தான் விளையும் என்றால் மக்கள் அதை தான் உண்ண வேண்டும். பண்டமாற்று கால கிராமிய பொருளியல் இப்படி தான் இயங்கியது. அதைவிடுத்து பிற இடங்களில் இருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்யக்கூடாது. இது செயற்கையான உணவுப் பற்றாக்குறையாகும். அதோடு பிற வட்டங்களுக்கு இன்னொரு இடத்தின் தேவையை நிறைவுசெய்யும் சுமையை ஏற்றுவதாகும். இவ்வகை இறக்குமதி தற்சார்பு, தன்னிறைவு பொருளியல் கருத்திற்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

 

உடுப்பிற்கான இழைகளுக்கு உள்ளூரிலேயே பருத்தி, சணல் போன்ற பயிர் விளைவிக்கப்பட்டு நூலிழை ஆலைகள் மற்றும் துணிகள், ஆடைகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்பட வேண்டும். செயற்கை இழைகளையும் உற்பத்தி செய்யலாம். அதே போல வட்டத்து வாழ் மக்களின் குடியிருப்பு, தொழிற்சாலை கட்டடங்களுக்கு  தேவைப்படும் கட்டுமான வினைக் கருவிகள் பிற கட்டுமானப் பொருள்களை கட்டுமானக்  கூட்டுறவு சங்கங்களால் மேற்கொள்ள வேண்டும்.  இதனால் உள்ளூர் மூலப் பொருள்கள் முழுமையாக பயன்படுத்தப்படும் நிலை உருவாகும்,  உள்ளூர் மக்களுக்கு அருகிலேயே வேலையும் கிட்டும். கட்டுமானத்திற்கு இரும்பு, செங்கல், மணல், பாறைச் சல்லி, கல், பொடி ஆகியன தவிர்த்து பழங்கால தொழில் நுட்பத்தில் மண்  கட்டடங்களை கட்டினால் போதும். இயற்கை அமைப்பான மலைகள், குன்றுகள் காக்கப்பட வேண்டும்.

 

கல்விக்கு தேவையான எழுது பொருள்கள் அந்தந்த வட்டங்களிலேயே கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படவேண்டும். நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன செய்தியாளர், எழுத்தாளர் அடங்கிய கூட்டுறவு சங்கங்களால் தொழில்மாவட்ட அளவில் நடத்தப்பட வேண்டும்.  மருத்துவமனைகள் மருத்துவர்களால் கூட்டுறவு முறையில் இயக்கப்படவேண்டும். மருந்து பொருள்களும் அந்தந்த வட்டங்களிலேயே கூட்டுறவு முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.  ஊழியக் கூட்டுறவு சங்கங்கள் (service cooperatives) மூலம் வங்கிகள், காப்புறுதிகள், நாடக கலை செயற்பாடுகள் இயக்கப்பட வேண்டும்.     

 

தொழில் முதலாளிகள் பொருள்களை  குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்காக  குறைந்த விலையில் மூலப்பொருள்களை எங்கிருந்தோ குறைந்த செலவு போக்குவரத்தின் மூலம் தருவித்து குறைந்த சம்பளம் கொடுத்து, குறைந்த செலவு மின்னாற்றல், குறைந்த செலவு நீர் இவற்றை கொண்டு பொருளை உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்ட அதிக விலைக்கு பொருளை எல்லை கடந்து விற்பர்.  பொருள் உற்பத்திக்கு தனிஆள் அர்குமியியம் (individual capitalism), குழு அர்குமியியம் (group capitalism) அல்லது அரசு அர்குமியியம் (state capitalism) இப்படி எந்த வடிவில் இருந்தாலும் முதலாளிகள் ஒற்றைத்திறல் (centralized) உற்பத்தி முறையையே நாடுவர். எல்லா வகையான அர்குமியியலும் அடிப்படையில் ஒன்றே அவற்றில் வேற்றுமை என்பது இயக்குவோரை பொறுத்ததே. ஆனால் பல சுக்கல் உற்பத்தி முறையில் வட்டத்து மக்கள் தமது வீட்டை விட்டு வெளியே சென்று ஒரு  தொழிலகத்தில் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்காது. இதனால் வீட்டை கவனித்துக்கொள்ள தனியாக இன்னொரு ஆளை அமர்த்தி செலவு செய்ய வேண்டிய தேவையும் வராது.  பெண்களும், முதுமையில் பணி ஒய்வு பெற்றோரும் தமது பொருளியல் தற்சார்பிற்காக  பிறரது வருவாயை நம்பி இராமல் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து தனி ஒரு ஆளுக்கான வருவாயை தாமே ஈட்டிக் கொள்ளலாம்.  

 

கூட்டுறவு சங்க ஊழியர் ஒவ்வொருவரும் அதன் பங்குகளை வாங்கியவராக இருக்கவேண்டும். இதனால் அவ் ஊழியர்கள் லாபத்தில் பங்கு பெறுவர் என்பதுடன் இயக்குனர் வாரியத்தையும் மேலாளர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் பெறுவர். கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக சேரும் ஒரு ஊழியர் அலுவலர் (officer) மட்டம் வரையே பதவி உயர்வு பெறுவார். அந்த அலுவலகளுள் அறநெறியுடன் நல்ல அனுபவமும் நற்பெயர் பதிவும் பெற்றுள்ள அலுவர்களை மட்டுமே 2 ஆண்டுகளுக்கு இயக்குநராகவும், மேலாளராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள்  முடிந்த பின் மீண்டும் அவர் அலுவலர் ஆகிவிடுவார். மீண்டும் அவர் மேலாளர், இயக்குனர் தகுதி பெற 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதனால் ஒரு சிலர் மட்டுமே, ஒரு சில சாதிமார் மட்டுமே மேலாளர் ஆக முடியும் என்ற நிலை மாறும், அதிகம் பேர் மேலாளர் ஆவதற்கு வாய்ப்பு உருவாகும். இந்த தேர்தல் முறை  (selecto-electo) நிரந்தர பதவியால் வரும் அந்தஸ்தை, கௌரவத்தை தொழிலகத்தில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் ஒழிக்க உதவும்.  கூட்டுறவு சங்கங்கள் இன்றுள்ள பெரிய தொழிலகங்கள் போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொண்டிராமல் 20 - 50 தொழிலாளர்களை மட்டுமே  பெற்றிருக்கும். அதிகம் போனால் 100 - 150 பேருக்கு மேல் இராது. இதனால் கூட்டுறவு சங்கங்களில் முதன்மை மேலாளர் (chief manager), முதுநிலை மேலாளர் (senior manager), துணை இணை மேலாளர்   போன்ற பதவிகளே போதுமானதாக இருக்கும். பொது மேலாளர் பதவி என்பது சங்கிலி தொடர் போல கிளைகளை கொண்ட மாவட்ட அளவில் இயங்கும் கூட்டுறவுகளில் மட்டுமே தேவைப்படும். அர்குமியியத்தில் பெரிய தொழிலகங்களில் உள்ளது போன்ற  துணைத் தலைவர் (V.P.), தலைவர் (president0, செயற் இயக்குனர் (E.D.), CEO போன்ற பெரும் பதவிகள் அறவே இரா. இந்த பெரும் பதவிகளை பெரும் MBA கல்வித் தகுதியும் இனி தேவைப்படாது.  அமெரிக்காவில் உள்ளது போல வேலைக்காக ஒருவர் முதுமை வரை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையும் அறவே ஒழியும். புது தொழில்நுட்ப அறிமுகம் அல்லது ஒருவர் தொழில் மாறும் நிலை உருவானால் அதற்கான சில வார பயிற்சி தந்தால் மட்டும் போதும். 

 

கூட்டுறவு சங்கங்கள் உழவிலும் தொழிலிலும் அதிகப்படியான நவீனமயமாக்கலை அமல்படுத்தும். அதே நேரம் சமூகத்தில் முழு வேலை  வாய்ப்பை உறுதி செய்ய வேலைநேரக் குறைப்பையும்  அமல்படுத்தும். அதன்படி 8 மணிநேர வேலை என்பது படிப்படியாக 6 மணிநேரம், 4 மணிநேரம் என்று குறைக்கப்படும் அல்லது வாரம் 6 நாள் வேலையை படிப்படியாக 3 நாள் அதற்கும் குறைவாகவும் குறைக்கும். நெடிய எதிர்காலத்தில் (remote future) சில தொழில்களில் மனிதர்க்கு பதிலாக (substitute) ரோபோக்கள் வேலை செய்யும் அந்த ரோபோக்களின் வேலைக்கு அதன் தனிஉரிமையாளர்  சம்பளம் பெறுவார். அவர் அந்த ரோபோவை பேணுவகற்கு ஒரு வாரத்திற்கு 5-10 நிமிடம் செலவிட்டால் போதும் என்ற அளவிற்கு மனித  வேலைநேரம் குறையும். இந்த வேலை நேரக்குறைப்பு பல சுக்கல் (decentralised) முறையில் மட்டுமே சாத்தியமாகும். அர்குமியியத்தில்  (capitalism) லாப நோக்குள்ள முதலாளி இதை அனுமதிக்க மாட்டார். மாறாக நவீனமயமாக்கல் மூலம் ஆள்குறைப்பு செய்து முன்னைய சம்பளச் செலவை லாபமாக்கிவிடுவார்.  மனிதர்கள் உயிர் பிழைப்பிற்காகவே அதிக நேரம் செலவிடுவது குறைந்து அவர் அந்த நேரத்தை தியானம், மக்கள் தொண்டு உள்ளிட்ட வேறு உயரிய செயற்பாடுகளில் செலவிடுவார்.  

 

இன்று உள்ளது போன்ற ஆயிரக்கணக்கான தனியார் சிறு மற்றும் பெரிய கடைகள் பல சுக்கல் (decentralised) முறையில் அறவே இன்றி ஒழிக்கப்படும். மாறாக  ஆயிரக்கணக்கான சிறிய பெரிய கடைகள் எப்படி மக்களின் தேவைகளை நிறைவேற்றினவோ அதை ஒவ்வொரு வட்டத்திலும் தனி இடம்  ஒதுக்கப்பட்டு இயங்கும் சில நூறு மிகப் பெரிய நுகர்வோர்  கூட்டுறவு சங்க கடைகள் (super market) நிறைவேற்றிவிடும். இதனால் இப்போது சாலைகளின் இருமருங்கும் உள்ள கடைகளால் வாகன நிறுத்தத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து அறவே ஒழியும். ஒரு வீட்டு உரிமையாளர் வாடகைப் பேராசையில் வீட்டின் முன்பகுதியில் கடையை  கட்டி விட்டு விட்டு பின்புறம் குடியிருப்போருக்கு வெளிச்சமும் காற்றும் இல்லாமல் கட்டிய வீட்டை வாடகைக்கு விடுவதும் ஒழியும். கூட்டுறவு சங்கங்களில் ஒருவருடைய சம்பளத்தில் பாதி ரொக்கப் பணமாகவும் எஞ்சிய பாதி பொருளாகவும் தரப்படும். எல்லாம் இன்றும் போல அட்டை தான் (debit card). இதை வைத்து தமது வட்டத்தில் உள்ள எந்த கூட்டுறவு கடைகளிலும் ஒருவர் எவ்வகை பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.  இது ஒருவர் அந்தந்த வட்டத்தில் உள்ள கூட்டுறவு கடைகளில் மட்டும் தான் பொருள் வாங்க முடியும் என்ற கட்டுப்பட்டால் மக்கள் வேறு வட்டங்களில் சென்று பொருள் வாங்குவதை தடுக்க உதவும். இதனால் அந்தந்த வட்டத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருள் விற்பனையாவது உறுதி ஆகும். ஒரு கூட்டுறவு  சங்கம் இப்படி தன்னிடம் பொருள் வாங்கும் மொத்த வாடிக்கையாளர்களின் மொத்த கொள்வுக் (shopping) கணக்கை  வைத்து பிற கூட்டுறவுகளுக்கு தான் செலுத்த வேண்டிய தொகையை தனக்கு அந்த கூட்டுறவு சங்கம் செலுத்த வேண்டிய தொகையை கழித்துக்கொண்டு எஞ்சியவற்றுக் மட்டும் பணம் செலுத்தும்.  

 

வெளி வட்டத்தவர், மாநிலத்தவர், நாட்டவர் எவரும் வட்டத்தின் உள்ளூர் பொருளியல் நடவடிக்கைகளில் அல்லது உற்பத்தி, பகிர்வு முறைமையில் தலையிட அனுமதி இல்லை. அப்படி அனுமதிக்கப்பட்டால் வந்துபோகும் மக்கள்தொகை (floating population) உருவாகி உள்ளூரின்  பொருளியல் செல்வம்  உள்ளூரில் இருந்து வெளியே பாய்ந்து கரைந்து போய்விடும். இதனால் உள்ளூர் பொருளியல் வெளியாரின் பொருளியல் சுரண்டலுக்கு உட்பட நேரும். இதனால் பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறை தோல்வியுறும், பொருளற்றுப் போகும். எனவே பிற இடங்களில் இருந்து பொருளை எவ்வாறு இறக்குமதி செய்யக்கூடாதோ அது போலவே வெளி இடத்தில் இருந்து தொழிலாளரையும்  இறக்குமதி செய்யக்கூடாது. எப்படி உற்பத்தி செய்து பொருளை ஏற்றுமதி செய்யக்கூடாதோ அது போல வளைகுடா நாடுகள், மேலை நாடுகள் போன்ற இடங்களுக்கு  உள்ளூர் தொழிலாளரை ஏற்றுமதி செய்து அவர்கள் மூலம் அவ்வந்நாட்டு பணத்தையோ பொருளையோ இறக்குமதி செய்யக்கூடாது. இதனாலும் உள்ளூரில் தேவைப்படும் துறையில் தொழிலாளர் இல்லா பற்றாக்குறை ஏற்படும். இது ஒருவகை சமனற்ற நெருக்கடியை உண்டாக்கிவிடும்.  ஒரு உள்ளூர் வட்ட அமைப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இனி ஐந்து, ஐந்து மருத்துவர்கள் தொடந்து தேவைப்படுவார்கள் என்றால் அந்த ஐந்து மாணவர்களையும் உள்ளூர் வட்டத் இருந்து தான் தெரிந்தெடுத்து நிதி ஆதரவு (sponsorhip) தந்து கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு மருத்துவ ஊழியம் கிட்டும். இதே முறையில் தான் பிற உயர்கல்விக்கும் வட்ட அளவில் இருந்து தான் மாணவர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்று இடஒதுக்கீடு இடம் சார்ந்தே இருக்கவேண்டும். இப்போதுள்ள மாநில அளவிலான சாதிமுறை இடஒழுதுக்கீடு பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறைக்கு எதிரானது. அது ஒரு ஒற்றைத்திறல் (centralised) சார்ந்த அணுகுமுறை ஆகும். எனவே அதை கைவிட வேண்டும். இப்போதுள்ள ஒற்றைத்திறல் (centralised selection) தேர்வின் மூலம் தமிழகத்தின் மருத்துவ மாணவர்கள் 4,000 பேரில் 90% சென்னை, கோவை வட்டங்களிலிருந்தே தேர்வாகிவிடுகின்றனர். இந்த முறை எல்லா இடத்திற்கும் சம வாய்ப்பு  என்பதற்கு வேட்டு வைக்கிறது.  உயர்கல்வி முடிந்த பிற்பாடு எவரேனும் வேறு வட்டத்தில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றால் அவரோ அல்லது அவர் செல்லும் வட்ட நிர்வாகமோ அந்த மாணவருக்கு செலவழித்த முழுக்க கல்விச் செலவையும் செலவு செய்த வட்ட நிர்வாகத்திற்கு திருப்பி செலுத்த வேண்டும்.  இதுவே பல சுக்கல் முறையின் ஏரணம் (logic) ஆகும்.

 

கூட்டுறவு சங்கங்கள் அல்லது  அவற்றின் கூட்டமைப்பு  எல்லா வட்டங்களிலும் இலவச தொடக்கப் பள்ளிகளை நடத்த வேண்டும். அதே போல இலவச மருத்துவமனைகளையும் நடத்த வேண்டும். அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமான உச்சவரம்பு வைத்துவிடுவதால் தமது வருமானத்தில் செலவு செய்யாத எஞ்சிய பணத்தை மக்கள் ஆண்டின் இறுதியில் இவ்வகை பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளித்து விடலாம். அரசு அந்த பணத்தை தனதாக்கிக்கொள்ளக் கூடாது. அது முறையும் அன்று. இதே போல ஆதரவற்ற முதியோர், சிறுவர் காப்பகங்களையும் நடத்தலாம். இவற்றை நடத்த நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டும் வட்டத்து அரசிடம் நிதியை பெற்றுக்கொள்ளலாம்.

 

உடம்பிற்கு நுகர்வதில் வரையறை உள்ளதால் யாரும் அதை மீறி பணம், பொருளை அனுபவிக்கவே முடியாது. வேறு யாரோ அதை அனுபவிக்கின்றனர். இதை உணாந்து அரசு குடும்ப வருமான உச்ச வரம்பை, பொருள் சேர்ப்பிற்கு உச்ச வரம்பை வைத்துவிடுவதால் தனிநபர் வருமான வரி (income tax) என்பது அறவே ஒழிக்கப்படும். இந்த வருமான வரி இழப்பை  ஈடுகட்ட அரசு  ஆக்கப்படும் ஒவ்வொரு  பொருளின் கலால் வரியில் (excise duty) சிறிது கூடுதலாக இதாவது, 8% என்று இருந்தால் 14% என்று ஆக்கி வசூலிக்கலாம். இப்போதுள்ள அதிகார குவிப்பு முறையில் வரி வருவாயை மாநில அரசோ அல்லது ஒன்றிய அரசோ தான் வசூல் செய்து அதை கீழுள்ள நிர்வாக அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்கிகின்றன.  இந்த வரியை வசூலிக்கவும் அதை திட்டமிட்டு கீழ் அமைப்புகளுக்கு செலவிடவும் ஒரு பெரிய அலுவலர் கூட்டத்தை (bureaucrats) பணியில் அமர்த்த வேண்டியுள்ளது. மக்கள் வரிப்பணம் இப்படி அரசு ஊழியர் சம்பளமாக வீணே செலவாவது ஏரணமற்றது, நியாயமற்றது ஆகும். இது ஒழிக்கப்பட வேண்டும். கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி அமைப்புகள் நிதி இன்றி மேலதிகார அமைப்பிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. இது இயற்கைக்கு முரணானது. ஒரு நீர்த்துளி நீர்ப்பரப்பின் மேல் விழும்போது அது சிறுசிறு வட்ட அலைகளை ஏற்படுத்தும். அது போல நிர்வாக முறையில் அதிகாரம் கீழ் இருந்து தான் மேலே விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். ஆனால் அதிகாரக்குவிப்பு (centralised administration) முறையில் எல்லாமே மேலே தான் உள்ளது. இதனால் கீழ்மட்ட நிர்வாக அமைப்பில் நிதி இல்லை என்ற பரிதாப நிலைக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. இந்த அவல நிலையை ஒழிக்க அந்தந்த வட்டங்களில் திரட்டப்படும் வரி வருவாயில் 7/8 பங்கு வரியை அந்தந்த வட்டம் நிர்வாகமே தன் வளர்ச்சிக்காக வைத்துக்கொள்ளும்.  எஞ்சிய 1/8 பங்கு வரிவருவாயை மட்டும் மேலே உள்ள  தொழில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழங்கும். 9-10 வட்டத்தை தன்னகத்தே கொண்ட ஒவ்வொரு தொழில் மாவட்டமும் 9-10 வட்டங்களில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கில் 7/8 பகுதியை தனது தொழில் வளர்ச்சிக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய 1/8 பகுதியை மட்டும் மாநில நிர்வாகத்திற்கு வழங்கு. இப்படி 35-40 தொழில் மாவட்டங்களில் இருந்து தனக்கு பங்காக வந்த வரிப்பங்கில் 7/8 ஐ தன்னிடம் வைத்துக்கொண்டு எஞ்சிய 1/8 வரிப்   பங்கை ஒன்றிய அரசிற்கு 25-30 மாநிலங்கள் வழங்கும்.  இவ்வகை வரிப்பகிர்வு முறையில் அநியாயம் ஏதும் இல்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் உலக அரசிடம் மட்டுமே படைக் கட்டமைப்பு இருக்கப்போகிறது. எனவே ஒன்றிய அரசிற்கு படைச்செலவு அறவே இல்லை. அதோடு ஒன்றிய அரசு  எந்த தொழிலையும் நடத்தக்கூடாது. அது மாநில அரசுகளால்  நடைபெறவேண்டும். அப்போது தான் எல்லா இடங்களிலும் சமன்பட்ட வளர்ச்சியை எட்டமுடியும். எனவே தொழில்நடத்தும் செலவும் ஒன்றிய அரசிற்கு இராது. ஒன்றிய அரசின் வேலை சட்டம் இயற்றி வழிகாட்டு நெறிகளை வகுப்பது மட்டுமே. இதை நிறைவேற்ற ஒன்றிய அரசிற்கு சில நூறு பணியாளர்கள் மட்டுமே போதும். எனவே மாநிலங்கள் தரும் 1/8 வரிப்பங்கு மிகவும் போதும். ஒன்றிய அரசின்  வழிகாட்டு நெறிகளை உண்மையில் நடைமுறைப்படுத்தப் போவது வட்ட நிர்வாகக் அரசு (block level govt) மட்டுமே. இங்கு தான் மக்களுக்கு கடவுச்சீட்டு முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வரை அனைத்துமே வழங்கப்படும். இங்கே தான் அதிக அரசுப் பணியாளர்கள் தேவைப்படும். அந்தந்த வட்ட நிர்வாகத்துக்கு அந்தந்த வட்டத்தில் வாழும் மக்களில் இருந்து தான் அரசுப் பணியாளர்களை தேர்வு  செய்யவேண்டும். இது பல சுக்கல் தான் முறையும் கூட. இதனால் பணியாளர்கள் இப்போதுள்ளது போன்ற அரசு நிர்வாகத்தில் வேலைக்கு பணி இடம் மாறுவது ஒழியும்.  மாவட்ட நிர்வாகம் என்று ஏதும் இல்லை அது பெரிய தொழில்களின் எல்லைக்கான வரையறை மட்டுமே. அதையடுத்து வருவது மாநில நிர்வாகம். மாநிலம் சில சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றிருக்கும். மாநிலம் பல தொழில் மாவட்டங்களை ஒன்று சேர்த்து தொழில் மண்டலமாக அறிவித்து அங்கே சில குழும அளவு தொழில்களை மண்டலத்தில் பரவலாகத் தொடக்கத்தில் நடத்தும். எனவே மாநில அரசிற்கு நிர்வாக செலவோ பணியாளர் சம்பள செலவோ பின்னர் அதிகம் இராது. மாநில அரசு தனது சில நூறு அரசு பணியாளர்களை மூப்பின் அடிப்படையில் வட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்களில் இருந்து தேர்ந்து இரண்டாண்டிற்கு பணியில் அமர்த்திக்கொண்டு மீண்டும் அவர்களை வட்ட நிர்வாகத்திற்கே அனுப்பிவிடும். மாநில, ஒன்றிய அரசுகளுக்கு என்று தனியே பணியாளர் தேர்வாணையம் (service commission) தேவைப்படாது. இதுவே பல சுக்கல், நிர்வாக அதிகார பரவல் ஆகியவற்றின் அரச பணியாளர் தேர்வு வழிகாட்டு நெறி.  இதனால் அரச பணியாளர் தேர்வில் 100% இடம் சார்ந்த இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் சாதிமுறை இட ஒதுக்கீடு அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு சாதி அல்லது மொழிச் சிறுபான்மை இனம் அரசுப்பணி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிந்தால் எந்த ஒரு  சாதியும், சிறுபான்மை மொழியினமும்  2% மேல் அரசுப் பணியிலோ  அல்லது கூட்டுறவு நிருவாக பணியிலோ இடம்பெறலாகாது என்ற கட்டுப்பாட்டை  வைக்கலாம்.  

 

ஒவ்வொரு வட்ட அளவிலும் ஒரு புள்ளியில் துறை (statistics dept) செயற்படும். இந்த துறை அந்தந்த துறை கூட்டுறவு அமைப்புகளின் மூலம் செயற்படுத்தப்படும். இந்த புள்ளியில் துறை அந்தந்த வட்டத்து மக்களிடம் அவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு தேவைப்படும் உணவுப் பொருள், உடை, கட்டுமானம் தொடர்பான பொருள் இன்னும் பிற தேவை விவரங்களை சேகரிக்கும். இதே போல தொழில் மாவட்ட அளவிலும் மூலப்பொருள் தேவை குறித்த புள்ளி விவரங்கள் புள்ளியியல் துறையால் சேகரிக்க்கப்படும். திரட்டப்பட்ட இந்த புள்ளியியல் விவரங்களின் அடிப்படையிலேயே திட்டமிட்ட முறையில் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும். எனவே மக்கள் உண்மையான தேவை விவரங்ளை மட்டுமே வழங்க வேண்டும். தாம் தந்த புள்ளி விவரப்படியே அவர்கள் பொருள்களை வாங்கிக் கொள்ளவும்  வேண்டும். இது ஒருவகையில் பொருளுக்கான கேட்பானை (demand order) போன்றது தான். அதனால் உற்பத்தியான பொருளை வேண்டாம் என்று யாரும் பின்னீடு மறுக்க முடியாது.  இந்த திட்டமிடலின் மூலம் எந்த பொருளும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வீணே தேங்கிவிடாமல் தடுக்கப்படும், அதோடு குறைந்த உற்பத்தியினால் பொருள் தடுப்பாடு ஏற்படாமலும் தடுக்க முடியும். தன்னிறைவு (self sufficiency) என்பது ஒரு பொருளுக்கான தேவை ஒரு வட்டத்தில் 500 அலகு உள்ளது என்றால் அந்த 500 அலகையும் மக்களுக்கு கிடைக்கும்படி உற்பத்தி செய்யவேண்டும் இல்லாவிடில் கருப்பு சந்தை (black marketing), வட்டத்திற்கு வட்டம் பொருள் கடத்தல் (smuggling), தரமற்ற போலி (duplicate) விற்பனைகள் பெருகிவிடும். இது பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையின் தற்சார்பு தன்மையை (self dependency) சீர்குலைத்துவிடும். மண்டலஅளவில் குழுமங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கும் இதே போல தேவைக்கான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும்.  அதன்படியே உற்பத்தி அளவு இருக்கும். இந்த புள்ளிவிவரம் ஏற்றுமதி, இறக்குமதியை தவிர்க்க திட்டமிட்ட முறையில் உற்பத்தி மேற்கொள்ள உதவும். இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டமும், ரசியாவில் ஏழாண்டு திட்டமும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இவற்றால் முழு இலக்கை எட்ட முடியவில்லை. ஏனென்றால் அவை பல சுக்கல் (decentralised) முறையில் அமைத்திருக்கவில்லை என்பதுடன் எல்லாத் துறைக்கும் சமமான திட்டமிடல் அங்கே இல்லை என்பதால் இந்த ஆண்டுத் திட்டங்கள் முழுத் தோல்வி கண்டன. ஆண்டுத்  திட்டத்திற்கு சரியான மாற்று, சிறந்த மாற்று துறைவாரித் திட்டமிடலே (sectorial planning) ஆகும். காட்டாக, பால் உற்பத்தி என்று வரும் போது ஒரு வட்டத்தில் வாழும் ஒரு லட்சம் மக்களின் அன்றாட, மாத, ஆண்டுப் பால் தேவை என்ன என்று முதலில் அறிய வேண்டும். அறிந்த பின் பால், பால் பொருள் உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்கள் இந்த இலக்கை எட்ட எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?  என்னென்ன தொழில்நுட்பத்தை கையாள்வது? செலவுத்தொகை எவ்வளவு போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு 100% பால் தேவையை நிறைவு செய்ய மூன்று  ஆண்டுகள் பிடிக்கும் என்றால் அந்த மூன்று ஆண்டுகளுக்குள் அந்த இலக்கை எட்டியாக  வேண்டும். இதில் தம்முடைய உற்பத்தி பங்கு (production share) என்ன என்பதை அவை கூட்டாகக் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.  அதன் பின்னர் பால் தேவை குறையும் என்றால் அதை குறைக்கும் திட்டமும் ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் தன் பங்கிற்கு எவ்வளவு குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதன்படி செயற்பட வேண்டும்.  இது அந்தந்த துறையில் தொழிற் போட்டியை (cut throat competition) மட்டுப்படுத்தும்.  இது வட்டத்து பொருளியலில் சமநிலையை பேண உதவும். எனவே துறைவாரித் திட்டம் உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் பொருளியல் சமநிலையை ஏற்படுத்தும். எந்த ஒரு பொருளும் மக்களிடம் இருந்து கேட்பாணை (demand order) பெற்ற பிறகே உற்பத்தி செய்யப்படும். இதனால் மக்களிடம் பொருள் சேர சில நாள்கள் ஆகலாம். 

மார்வாடி, குசராத்தி, சிந்தி, பஞ்சாபி போன்ற வடவர் பிற இடங்களில் இருந்து பொருள்களை வருவித்து விற்று அதிக லாபம் சம்பாதித்து வளமையாக வாழவே பெருநகரங்களில் குடியேறித்  தமது வணிகத்தை ஏற்படுத்துகின்றனர். பல சுக்கல் (decentralized) முறையில் அந்தந்த வட்டத்து மக்களுக்கு தேவைப்படும் பொருள்கள் அந்தந்த வட்டங்களிலேயே  கூட்டுறவு முறையில் அந்தந்த வட்டத்து வாழ் மக்களைக் கொண்டே உற்பத்தி செய்யப்பட்டு அந்தந்த வட்டத்திலேயே விற்கப்படுவதாலும், ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு வீடு, வங்கிக் கணக்கு சேமிப்பில் வரையறை, பொன் பொருள் முதலீட்டில் வரையறை என்று வைத்து விடுவதால் அவர்களால் முன்னைப்போல பணம், பொருள் சேர்க்க,   செல்வநிலையில் வாழ வாய்ப்பு இல்லாத காரணத்தால் இந்த வாழ்க்கையை தமது சொந்த மாநிலத்திலேயே பெற முடியும் என்று அந்த அயலவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச்சென்று விடுவர். இந்த வகையில் பல சுக்கல் பொருளியல் அணுகுமுறை வெளியாரை வெளியேற்றுவதற்கு என்று எந்த தனி சட்டமும் இயற்றாமலேயே வெளியாரை வெளியேற்றிவிடும் சிறப்பியல்பு கொண்டுள்ளது. கூட்டுறவு தொழில் முறை தனியார் வணிகக் கூட்டமே (business community) இல்லாமல் அற்றுப்போகச் செய்துவிடும்.      

ஒவ்வொரு வட்டமும் பொருளியல் தற்சார்பு, தன்னிறைவு எய்துவிட்டால் நகரங்கள், பெருநகரங்களுக்கு முன்பு பிற இடங்களில் இருந்து வந்துகொண்டிருந்த கேட்பாணை (demand order) அடியோடு நின்று போகும். இதனால் நகர தொழில்கள் நீர்பெருக்கின்றி, ஓட்டமின்றி ஆறுகள் வற்றி அழிந்து போவதைப் போல நகரங்கள் தொழில் வளமின்றி அழிந்து போகும் நிலை உண்டாகும். எனவே இந்த ஆபத்தை உணர்ந்து நகர மக்கள் நகரங்களை காலிசெய்துவிட்டு தமது முன்னோர்கள் வாழ்ந்த அல்லது தமக்கு தோதுபட்ட வட்டங்களில் சென்று குடியேறிவிடுவதே நல்லது. அல்லது அரசே நகர மக்களை 3,000 - 5,000 பேர் என்ற அளவில் குடியேற்றி புது ஊர்களை ஏற்படுத்த வேண்டும்.       

வெள்ளையர் ஆட்சியில் ஒருவர் அரசு வேலை பெற 8 ம் வகுப்பு கல்வித் தகுதியே போதும் என்று இருந்தது. ஏனென்றால் 8 ம் வகுப்பு படித்தவர் சொல்வதைப் புரிந்து கொண்டு வேலையை செய்து முடிக்கும் பக்குவம் பெற்றவராக உள்ளார் என்பதே அதற்கு காரணம். கல்வியை பொருத்தமட்டில் எவ்வளவு படித்தாலும் அது சில மாதங்களில் மறந்து போகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் கலை / அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்ற ஒருவரை விட இப்போது இளநிலையில் முதலாமாண்டு கலை / அறிவியல் பாடம் முடித்த மாணவர் அந்த பாடத்தில் நல்ல நினைவுள்ளவராக உள்ளார். ஏனென்றால் 20 ஆண்டுகள் முன் படித்தவர் அப்பாடத்தில் அடுத்தடுத்த காலங்களில் தொடர்பற்று படித்தவற்றை மறந்து போகிறார் என்பதே இதற்கு காரணம். இப்படி மறந்து போகிற ஒரு கல்வியை வைத்து  தான் சமூகத்தில் இவர் அவரை விட உயர்ந்தவர், அவர் கல்வியால் இவரை விட தாழ்ந்தவர் என்று முட்டாள் தனமாக வேற்றுமைப்படுத்துகின்றனர் (discrimination). இந்த கல்வி வேற்றுமைப்படுத்தத்தை வேலை வாய்ப்பு, திருமண இணை தேடுதலின் போது ஒவ்வொருவரும் வாழ்வில் அனுபவிக்க முடியும். உண்மையில் செய்யும் விலைக்கு சற்றும் தொடர்பே இல்லாத பட்டக் கல்வியை எல்லா வேலைக்கும் தகுதியாக வைத்ததே இந்த வேற்றுமைப்படுத்தம் அரங்கேறக் காரணமாக உள்ளது.  இதை உடனடியாக அரசு உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் கைவிட வேண்டும். மனிதனுக்கு உள்ள மறதி எல்லா பட்டக் கல்வியையும் மதிப்பற்றதாக ஆக்கிவிடும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு அது தேவையற்ற பண விரயம், 3 - 4 ஆண்டு கால விரயம், ஆற்றல் வீண் என்பதை புரிந்து கொண்டு ஐரோப்பிய நாகரிகம் நம்மேல் திணித்த இந்த பட்டக் கல்வி நோயை புறந்தள்ளிவிட வேண்டும். மாணவருக்கு 14-15 வயதில் 9 ம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியை கற்றுத்தந்து அதன் பின் நான்கு ஆண்டுகள்  I.I.T. தரத்திற்கு தொழில்நுட்ப கல்வியை ஒவ்வொரு வட்டத்திலும் கற்றுத்தந்தால் மாணவருக்கு உடனடியாக வேலை கிடைக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் 18-19 வயதில் ஒருவர் வேலை செல்வதற்கு தயாராகிவிடுவார். 23-24 வயதில் திருமண குடும்ப வாழ்க்கைக்கு தயாராகிவிடுவார். நமக்கு அமெரிக்க வழிகாட்டுநெறியில் 12 ம் வகுப்பு பள்ளித்தரம்  என்பதே தேவை இல்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தேவை இல்லை. அது கல்வி வணிகத்திற்கே வழிவகுக்கும். உண்மையில் கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் உள்ளவர் அவற்றை  படிக்கச் வேண்டும் என்றால் அவர்களாகவே science club, mathematics club, history club என தொடங்கி அதில் சேர்ந்து அதை 10-15 ஆண்டுகள் பயின்ற பின் 30-35 வயது முடித்த பின் CA, ICWAI, maths olympiad, science olympiad போல தேர்வு வைத்து தேறலாம். ஆனால் இதை ஒரு வேலைவாய்ப்பு தகுதியாக மட்டும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் மீண்டும் வேற்றுமைப்படுத்தம் சமூகத்தில் தலைதூக்கும்.  

இன்றைய குடிநாயக தேர்தல் முறையில் மாற்றம் மிக அவசியமாகிறது. மக்களுக்கு ஓட்டு போடும் உரிமைக்கு மேல் எதுவும் தரப்படுவதில்லை என்பதுடன் குறிப்பிட்ட வயதடைந்ததும் பொதுவான வாக்குரிமை (universal suffrage) என்ற ஏற்பாட்டில் பெருவாரியான மக்களுக்கு சமூக பொருளியல் அறிவோ தெளிவோ இருப்பதில்லை. இதனால் மக்கள் தகுதியற்ற, தவறான, குற்றப்பின்னணி உள்ளவரை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். அத்தகையோர் சமூக அரசியல் பொருளியல் சூழலையே தமக்கு சாதகமாக்கி மக்கள் துயரப்படும்படி செய்துவிடுகின்றனர். சலுகை அர்குமியியம் (crony capialism) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கட்சி அரசியல் "கட்சி, கட்சிக்காக, கட்சி உறுப்பினர்களால்" என்ற வகையில் செயற்பட்டு சாதியும் மதமும் மக்களைப் பிரிப்பது போல கட்சியும் மக்களை பல கூராகப் பிரிக்கிறது.  எனவே கட்சி அரசியல் தேர்தல் முறை கைவிடப்பட்டு கட்சி அரசியல் முற்றாகத் தடை செய்யப்படவேண்டும். அதே போல பொதுவாக்குரிமையும் தடை செய்யப்பட வேண்டும். ஒரு லட்சம் பேர் வாழும் ஒரு தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரை இயம, நியமத்தில் வேரூன்றிய நல்ல ஒழுக்கமுள்ள மரபுவழி பெரும்பான்மை மக்களில் 25 -70 வயதினரில் 5,000 பேர் என்ற அளவில் வாக்களித்து தேர்ந்தெடுத்தால் போதும். இது மொழிச் சிறுபான்மை மக்களின் அரசியல் ஆதிக்கத்தை தடுக்கும், தேர்தல் செலவை குறைக்கும் என்பதுடன் அந்தந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மை சாதியின் ஆதிக்கத்தையும் வெகுவாக குறைத்துவிடும். 10 லட்சம் பேர் உள்ள பாராளுமன்ற தொகுதியில் 40,000 பேர் இதே போன்ற முறையில் வாக்களித்து உறுப்பினரை தேர்ந்தெடுத்தால் போதும். மூன்று தலைமுறை உறவில் முன்னும், பின்னுமாக ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே போட்டியிட வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர் மீண்டும் போட்டியிட, பதவியில் அமர 25- 30 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற தடை இருக்க வேண்டும். இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் MLA, MP பதவிக்கு போட்டியிடவோ அல்லது தேர்ந்தெடுக்கப்படவோ கூடாது.  பிரதமர் அல்லது அதிபர் பதவி எதுவாக இருந்தாலும் மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது அரசியல் நிலைத் தன்மையை உறுதி செய்யும். பிரதமர், குடியரசு தலைவர் என்று இரு தலைமை தேவை இல்லை. இதில் ஏதேனும் ஒன்றை ஒழிக்க வேண்டும். அமர்தப் பதவிகள் (appointed post) கூடவே கூடாது. அதே போல அமைச்சரவை அமைச்சர்களையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் அடாவடியாக சில அமைச்சர்கள் இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்யப்படும் எதேச்சதிகாரம் இதனால் ஒழியும். ஒன்றிய அரசிடம் படையும் இல்லை தொழில் துறையும் இல்லை என்பதால் நிதி, உள்துறை, சட்டம் போன்ற ஐந்து துறைகளுக்கு மட்டும் அமைச்சர்கள் இருந்தால் போதும் வேறு அமைச்சர்கள் தேவை இல்லை. இந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் முன்அனுபவம் பெற்றவர்களாக  இருத்தல் வேண்டும். இதனால் சாதிக்கு ஒரு அமைச்சர் மாநிலத்திற்கு ஒரு அமைச்சர் என்பது ஒழியும். அதிக அமைச்சர்கள் என்றால் அதிக தண்டச் செலவு. அமைச்சர் இல்லாத துறைகளை செயலரைக் கொண்டே நடத்தலாம். யாரும் பிரதமர், அமைச்சர் பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படலாகாது. செயலர்கள் அந்தந்த துறையின் மூத்த, அதிக அனுபவம் கொண்ட உறுப்பினர்களில் இருந்து அதே துறையை சார்ந்த பிற அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவதே முறை. இங்கும் அமர்த்தப் பதவி ஒழிக்கப்படுகிறது. மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை மக்களுக்கு பிடிக்காவிட்டால் அவர்களை திரும்ப அழைக்கும் வாக்குரிமையும் மக்களுக்கு தரப்பட வேண்டும். 

இதே போல மாநில அரசிலும் முதல்வர் அல்லது ஆளுநர் என்ற ஒற்றைப்பதவி தான் இருக்கவேண்டும். முதல்வருடன் அமைச்சர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும். ஆளுநர் போன்ற எந்த அமர்த்தப் பதவியும் இருக்க கூடாது.  மாநிலத்தில் தொழில் துறை கட்டுப்பாடு இருப்பதால் தொழில் துறை அமைச்சர் உட்பட 5 - 7 அமைச்சர்கள் மட்டும் போதும். யாரும் இந்த பதவிகளுக்கு இரண்டு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. மாநிலம் மற்றும் பாராளுமன்றத்தில் உறுப்பினரே அல்லாத NGO அல்லது துறைசார்ந்த செயற்பாட்டாளர் விரும்பினால் சட்டம் இயற்றுவதற்கு முன்மொழியும் (proposal) உரிமையை தரலாம். பின்னர் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டளித்தால் மட்டும் அதை சட்ட வடிவாக ஆக்கலாம். ஏனென்றால் உறுப்பினர் எல்லார்க்கும் எல்லாமும் தெரியாது அதேநேரம்  எல்லாத் துறையினருக்கும் உறுப்பினர் ஆகும் வாய்ப்பும் இராது. மேலும்  கட்சி அரசியலுக்கு தடை என்பதால் கட்சி என்ற அமைப்பின் கொள்கை என்று ஏதும் இருக்கப் போவதில்லை என்பதால்  NGO பிற அமைப்புகள் சட்ட முன்மொழிவை இடுவதற்கு என்ன தடை?  இதே போல வட்ட அளவில் நிருவாக அமைப்பிற்கும் தேர்தல் முறையில் மன்ற உறுப்பினர்களும் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  ஊராட்சி, நகராட்சி என்பது தேவையற்றது.  

உலகளவில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, பாய்ச்சலுக்கு நாகரிகத்தை வழிநடத்த வேண்டியுள்ளதால் உலக அரசு என்ற அமைப்பு இப்போது தேவைப்படுகிறது. இந்த உலக அரசு சுற்றுச்சூழல், விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்ட உயிரின வாழ்வுரிமை, எல்லா மக்களுக்கும் வாங்கும் திறனை எல்லா அரசுகளையும் உறுதி செய்யவைப்பது. இதற்கு அர்குமியியம் (capitalism) உலகில் எங்கும் தலைகாட்டாமல் இருக்கச்செய்வது, உலகின் எல்லாப் பகுதிக்கும் தடையின்றி அறிவியல் தொழில்நுட்ப பரவல், விண்வெளி ஆய்வு, சிறுபான்மை மக்கள் நலம் ஆகியவற்றில் சட்டம் இயற்றி அதை உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறியை வழங்கும். இதற்கு ஒரு உலக அரசியலமைப்பு வேண்டும். இனி உலக அரசு மட்டுமே படை கொண்டிருக்கும். உலக நாடுகள் காவல் துறையை மட்டுமே கொண்டிருக்கும்.  இதனால் ஒவ்வொரு நாடும் படைக்கென்று செலவழிக்கும் பெரும் பணம் இனி மக்கள் நலனுக்கு, தொழில் வளர்ச்சிக்கு பயன்படும். 

உலக நாடுகள் விரும்பினால் ஒன்றிய நாட்டினங்கள் (UN) அமைப்பை உலக அரசாக மாற்ற முடியும் ஆனால் இந்த வளர்ந்த நாடுகள் அந்த அமைப்பை தமக்கு "எடுப்பார் கைப்பிள்ளை போல்" வைத்துள்ளன. எனவே புத்தம் புதிய அமைப்பாகத்தான் உலக அரசை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தொடக்கத்தில் உலக அரசு சட்டம் இயற்றும் அமைப்பாகவே செயற்படும் அதை நிறைவேற்ற உலகில் உள்ள கூட்டரசுகள் (federation) செயல் அதிகாரம் பெற்றிருக்கும். எந்த அரசும் அதற்கு எதிராக செயற்படக் கூடாது. இந்த உலக அரசை நடத்த இரண்டு அவைகள் தொடர்ந்து இயங்கும். கீழவை 30-40 லட்சம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற கணக்கில் உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதிகளை பெற்றிருக்கும். மேலவை என்பது 30-40 லட்ச மக்கள் தொகைக்கும் குறைவான மக்கள் உள்ள ஒரு பிரதிநிதியையும் கீழவையில் பெற முடியாத நாடுகளும் பிரதிநிதிகளை பெரும் வண்ணம் ஒரு நாட்டிற்கு ஒரு பிரதிநிதி என்ற கணக்கில் மேலவை பிரதிநிதிகளை பெற்றிருக்கும்.  கீழவையில் நிறைவேறாத எந்த சட்டத்தையும் மேலவை ஏற்காது. ஆயினும் கீழவை முடிவுகளை மறுதலிக்கும் உரிமையை மேலவை பெற்றிருக்கும். 

 

மேற்கண்ட பதிவில் பலசுக்கல், கூட்டுறவு தொழில் குறித்து மிக சுருக்கமாகவே தரப்பட்டுள்ளது. இதில் பிரபாத்து ரஞ்சன் சர்க்காரது கருத்துக்கள் 70% எனது சொந்த கருத்துக்கள் 30% என்ற அளவில் தந்துள்ளேன். மேற்கண்ட யாவும் ஒருவரது சிந்தனைக் கருத்துகளே (utopian). இது உலகில் வேறு எங்கும் நடைமுறையில் இல்லை. இதில் ஏற்படும் நடைமுறைச்சிக்கல் இதனை நடைமுறைப்படுத்தும் போதுதான் அறியமுடியும். காலம் இடம் ஆள் என்பதற்கு (time, place, person) ஏற்ப இதனை நடைமுறைப்படுத்துவதும் மாற்றத்திற்கு உட்படும். மேலும் விவரம் வேண்டுவோர் PROUT IN A NUTSHEL என்ற நூலின் பல மடலங்களை இணையவெளியில் படித்து தெளியலாம்.  

seshadri sridharan

unread,
Jan 19, 2022, 5:01:20 AM1/19/22
to வல்லமை, hiru thoazhamai
ஒளவையின் அனுபவ முதுமொழியில்  https://groups.google.com/g/vallamai/c/vPNaUt3SV5c  நான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்த பதிவில் சில தீர்வுகளை முன்வைத்துள்ளேன். அன்பர்கள் இரண்டையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

seshadri sridharan

unread,
Jan 22, 2022, 4:56:13 AM1/22/22
to வல்லமை, hiru thoazhamai
ஒளவையின் முதுமொழி 

“பாடுபட்டு பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்
கூடுவிட்டு ஆவி தான் போனபின்னர் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்?“

On Wed, 19 Jan 2022 at 08:24, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages