(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!
இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம் சாற்றி அவர்கள் மீது தடை விதித்துள்ளது முறையா?
தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக இன்றும் பரிந்து உரிமைக்குரல் கொடுக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர் இலங்கைத்தமிழர்க்கு எவ்வகை உதவியும் செய்யக் கூடாதென்று தடைசெய்வது முறையாகுமா? வடவர்க்கிருக்கும் இனப்பற்று தமிழர்க்கு இருக்கக் கூடாதா? கருநாடகத்திலும், பம்பாயிலும் தமிழினம் கொடுமைப்படுத்தப்பட்டதை இந்திய அரசே, கேட்டாயா? உலகம் முழுவதும் ஓடி வாழும் தமிழினத்திற்கு என்ன உதவி செய்கிறாய்? இந்திய அரசே! தமிழினத்தை அழிக்க முற்படாதே! பழிக்குப் பழி வாங்கப்படுவாய்! எச்சரிக்கை!
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படுவதற்கு இரக்கம் காட்டுவது குற்றமா?
கன்னியாகுமரியில் ஒரு பார்ப்பானுக்குத் தேள் கொட்டியது என்றால், காசுமீர் பார்ப்பானுக்கு அண்டை கட்டுகிறது. தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு வெள்ளையர் ஆட்சியில் வடநாட்டார் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பும் வடவர் இலங்கையில் தமிழினம் சிங்களர்களால் கொல்லப்படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் ஏன்? இரக்கங்காட்டாமல் இராசீவு காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கைத் தமிழர்களாகிய விடுதலைப் புலிகள்தாம் காரணமென்று கற்பனை செய்து அவர்களுக்குத் தடைவிதித்துள்ளது இந்திய ஆரிய அரசு.
ஈழத்தமிழர்கட்கும், தமிழர்கட்கும் பண்டு தொட்டு உறவுண்டு. யாழ்ப்பாணத்தார் பன்னூற்றுவர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இலங்கை முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட, பாடுபடுகிற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்களே. அவர்களை வெளியேற்ற இந்திய அரசு இலங்கையரசுடன் ஒப்பந்தஞ் செய்து கொண்டது.
இந்திய அரசா? தமிழர் அரசா?
ஆரியர் அரசு. உறவினர் இலங்கையில் இருக்கும் போழ்து தொடர்பில்லாமல் இருக்கவியலுமா? தொழிலமைச்சர் தொண்டைமான் தமிழ்நாட்டவர்தாமே? விடுதலைப் புலிகட்குத் தமிழ்நாட்டில் உறவினர் பலருளர். சிங்களர் கொடுமை தாங்காமல் ஓடி வந்து தமிழ்நாட்டில் ஏதிலிகளாயிருப்பவர்கள் யாவரும் விடுதலைப்புலிகளின் உறவினர்களே. தொடர்பு வைத்திருப்பவர் என்று சிறையிடுவது முறையாகாது.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
8
பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல்
பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள், அகரமுதல 24.07.2016)
தொல்காப்பியரைப் பின்பற்றிய யாசுகர்
தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும். வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் விட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.
” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே “
என்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக. – பேரா.சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம் : 114
தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை
தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துகளை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)” என்கிறார் மறைமலை அடிகள்(தமிழின் தனிச்சிறப்பு) அத்தகையவர்கள் தமிழர்களுக்கு முன்னோடியாக இலக்கண நூல் படைத்தனர் என்பது நம்பும்படியாகவா உள்ளது? தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து வைத்துக் கொண்டு தங்கள் நூல்களே முதன்மையானவை என்று பொய் கூறும் ஆரியத்தினர் இதிலும் அவ்வாறே பொய் கூறியுள்ளனர்.
“ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டது” என்கிறார் பேரா.சி.இலக்குவனார். “பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர். பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துகளோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடிவெழுத்துகளையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துகளைத் திருத்தி அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 39). மேலும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் ஆரியர்கள் எழுத்து வடிவைத் திருத்தி அமைத்துக் கொண்டனர் என்றும் விளக்குகிறார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 44). எனவே, தொல்காப்பியக் காலத்திற்கு முன்னர் ஆரியர்க்கு எழுத்து வடிவே இல்லாத பொழுது ஐந்திரத்தைச் சமற்கிருத நூலாகச் சொல்வது முழுப்பொய் அன்றி வேறில்லை. அதுபோல் பாணினியத்தையோ வேறு நூலையோ தழுவித் தொல்காப்பியம ்எழுதப்பட்டதாகக் கூறுவதும் பொய்யிலும் புரட்டிலும் கை வந்தவர்கள் செயல்களாகும். (ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன், தொல்காப்பிய விழா மலர், தொல்காப்பிய மன்றம், கனடா, 2023)
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்