ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2026
(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1321 -1325
துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி.
துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர்.
00
கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.
cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி.
lingere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் துழாவுதல், நக்குதல் என்பன.
00
துளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துளை வெருளி.
உடலில் தோலில், துளைகள் அல்லது புடைப்புகள் அல்லது ஒழுங்கற்ற வடிவங்கள் கொத்தாகக் காணப்படுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
தாமரை விதை,செம்புற்றுப் பழம் ()முதலியவற்றில காணப்படும் துளைகள்கூட இத்தகையோருக்குப் பேரச்சம் தருகிறது. இந்நோய் கற்பனை சார்ந்தது எனக் கூறி மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
trŷpa என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் துளை எனப் பொருள்.
00
துறவி பேட்டிரிகன் அல்லது தூய பேட்டிரிகன் (St. Patrick) மீதான அளவுகடந்த பேரச்சம் துறவி பேட்டிரிகன் வெருளி.
துறவி பேட்டிரிகன்(பதிரீசியார்) 5ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த உரோம-பிரித்தானிய கிறித்தவ மறைப்பணியாளரும், அயர்லாந்தின் அர்மாகின் ஆயராக இருந்தவருமான திருத்தூதர். கிறித்துவத்தை அயர்லாந்தில் அறிமுகப்படுத்திய இவர் மீதான பேரச்சம் பலரிடம் உள்ளது.
அயர்லாந்து (ஐரீசு) மக்களில் பலருக்கு இவ்வெருளி உள்ளது. இவர்களில் பலருக்குப் பேய்கள்(leprechauns) தங்களைத் தாக்கும் என்ற அச்சம் உள்ளது.இவர்களிடம் பச்சை வெருளியும்(prasinophobia) உள்ளது.
00
தூய பொருள், தூய் ஆள் முதலான தூய நிலைகுறித்தும் சமயப் பொருள் குறித்தும் அளவுகடந்த பேரச்சம் துறவியர் வெருளி.
Hierophobia/hermitphobia, hagiophobia இரண்டிலும் தூய பொருள்களும் தூய ஆட்களும் பேரச்சத்திற்குரிய நிலையில் இருந்தாலும் தமிழில் தனித்தனியே துறவியர் வெருளி, தூய நிலை வெருளி என நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம்.
hiero என்னும் கிரேக்கச்சொல்லிற்குத் தூய அல்லது புனித என்று பொருள்.
புனிதம் என்பது தமிழ்ச்சொல்லே! பிறந்ததும் உள்ள மகவு நிலையைப் புனிறு என்கின்றனர்.
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல்.பொ.146)
புனிற்றிளங்குழவி (மணிமேகலை 29.5.)
புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபுராணம், திருநாளைப் போவார் 8)
முதலானவற்றின் மூலம் சொல்லப்படும் நிலையும் தூய்மைதான்.
இளமதியைப் புனிற்று மதி என்கின்றனர்.
இவற்றைப்போல் களங்கம்படியாத புதிய தூய நிலையைக் குறிக்கப் புனிறு என்னும் சொல்லில் இருந்து உருவானதுதான் புனிதம் என்னும் சொல்.
நாம் தவறு ஏதும் செய்தால் தூய உள்ளம் கொண்ட துறவியர் கண்டிப்புரை அல்லது தண்டிப்புரை கூறுவரோ என்று முன்பு அஞ்சினர். ஆனால், காஞ்சி சங்கரமடம் முதலான மடத் தலைவர்களின் கூடா ஒழுக்கம், வல்லுறவு, கொலை முதலான செய்திகளை அறிந்து போலித்துறவியரிடம் நாம் மாட்டிக் கொள்வோமோ, நம் குடும்பத்துப் பெண்கள் சிக்கிச் சீரழிவரோ என அஞ்சும் நிலை வந்து விட்டது.
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று (திருவள்ளுவர், திருக்குறள் 274)
என்பதற்கு இலக்கணமாகத்தான் இன்றைய போலித்துறவியர் மிகுதியாக உள்ளனர். “கதவைத் திற! காற்று வரட்டும்!” என்று சொல்லி விட்டு அவர்களின் கீழ்மையை உள்ளே வர வைத்து விடுகிறார்கள்.
hermit என்றால் துறவி எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2026
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
௬. தமிழ்நாடும் தமிழும்
தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை.
இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத் தக்க இடமளிக்கப்படவில்லை. ஏன்?
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்க்கு தமிழ்ப்பற்றும், நல்ல தமிழறிவும் இல்லையென்றால் மிகையன்று. இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிக்க வேண்டுமென்று முதலில் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தவர் பொட்டி சிரீராமுலு என்பராவார். அதனால், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மாநிலம் பிரிக்க வேண்டும் என்று யாரும் உண்ணா நோன்பிருக்கவில்லை. எல்லா மொழியினரும் பிரித்துக் கொண்டு விட்ட பகுதியைச் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்டது. அதில் தமிழர் வாழ்ந்தனர். விருது நகர் சங்கரலிங்கம் என்பவர் பேராயக் கட்சி ஆட்சியில் சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்ற உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டார். ஆனால், பக்தவத்சலனாரை முதலமைச்சராகக் கொண்ட பேராயக் கட்சியாட்சியில் தமிழ்நாடு என்று பெயரிட மறுக்கப்பட்டது.
அடுத்த தேர்தலில் தி.மு.கழகம் சென்னை மாநில ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சரானார். அவர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநிலம் தமிழ்நாடாயிற்று. பேராயக் கட்சியினரும் பிறரும் எதிர்த்தனர்.*** தி.மு.க. உறுப்பினர் பெரும்பான்மையாக இருந்தமையால் தீர்மானம் நிறைவேறிற்று. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பெற்றது.
தி.மு.க. ஆட்சியில் இருமொழிக்கொள்கை பின்பற்றப்பட்டது. ஆனால், பேராயக் கட்சி ஆட்சியில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது. இன்றும் பேராயக்கட்சி மும்மொழிக் கொள்கையையே வற்புறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
அ.இ.அ.தி.மு.கவும் இருமொழிக் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. ஆனால், பேராயமோ, பிறகட்சிகளோ (தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. தவிர்த்து) தமிழ்நாட்டை ஆள நேர்ந்தால் மும்மொழிக் கொள்கையே நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டில் பலமொழியினர் வாழ்கின்றனர். இன்றுள்ள 4.12 கோடி மக்களில் பண்டு தொட்டுத் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழ்பவர் மிகமிகக் குறைவு. மதச் சார்பாலும், கட்சிச் சார்பாலும் தமிழ்ப்பற்று குன்றிய தமிழர் பலர்.
தமிழ்நாட்டில் வாழும் பல மொழியினரும் பல சமயத்தினரும் தம் பிழைப்பு கருதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தம் தாய்மொழி தமிழ் என்றுதான் பதிவு செய்கின்றனர். ஆனால், அவர்கள் தம் இல்லிலும் தம் உறவினருடன் உரையாடும்போதும் தம் உண்மையான தாய்மொழியில்தான் பேசுகிறார்கள்.
இப் போலிகளையெல்லாம் சேர்த்துத்தான் நாலரை கோடி தமிழர். உண்மையான தமிழர் ஒருகோடிப் பேர்கூட இரார். உண்மையான தமிழர் ஆதி திராவிடர்தாம்.
ஆனால், அவர்களுள் படித்தவர் குறைவு. படித்தவர்கட்குத் தாய்மொழிப்பற்றில்லை. முன்காலத்தில் ஆதிதிரவிட மக்கள் பெயரெல்லாம் தமிழிலேயே இடப்பட்டன. இன்று திரைப்பட நடிகர் பெயர்களையே இடுகின்றனர். முன்னர் தமிழிலேயே பேசினர். இன்று பலமொழிச் சொற்களையும் கலந்தே பேசத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பெயர்கள் யாவும் தமிழில் இல்லையென்பதே சான்றாகும்.
தமிழ்ப் பற்றிருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் பெயரெல்லாம் தமிழாகத்தாம் இருக்கும். தமிழ்நாட்டிலுள்ள கடைகள், தொழில் நிறுவனங்களின் பெயர்கள் யாவும் தமிழாகவே இருக்கும். ஒருவருக்கொருவர் தமிழிலேயே பேசுவர். எழுதுவர். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர்களெல்லாம் தமிழிலேயே தம் படைப்புகளையெல்லாம் வேற்றுமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுவர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்தானில்லை.
தமிழ்நாட்டரசு தமிழ்பரப்ப பெருமுயற்சி எடுத்தும் பயனற்றுப் போகிறது. ஏனெனில், தமிழ்ப்பற்றற்ற பலரும் தமிழுக்கு எதிர்ப்பாக எழுகின்றனர். தடைப்படுத்த முயல்கின்றனர். அரசு இருமொழிக் கொள்கையை ஏற்று நடத்தும்போது இந்தியைப் பரப்பத் தெருத்தொறும் இந்திப் பள்ளிகள் நிறுவி இலவயமாக இந்தி கற்றுக் கொடுக்கின்றனர். பல தமிழர்களே இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தி படித்தவர்கள், “தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் ஓர் உருப்படாத மொழி, அதில் அறிவியல், பொருளியல், தொழிலியல் சொற்கள் இல்லை” என்று பேசும் அளவுக்கு வந்துவிட்டது.
குடந்தையில் பிப்பிரவரி 1982 தொடக்கத்தில் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் தலைமையில் நடத்திய மகளிர் இந்தி பயிற்றுப்பள்ளி ஆண்டுவிழாவில் ஓர் “இந்தி”யன் பேசியதுதான் மேலே குறிப்பிட்ட பேச்சு. தமிழர்க்குத் தமிழுணர்வு இருந்தால், தமிழ்நாட்டில் வந்து ஒருவர் தமிழை இழிவுபடுத்திப் பேசத் துணிவாரா? தமிழர்க்குத் தாய்மொழிப் பற்றில்லை என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. முன்னர் ஒருவர், சென்னையில் “மறைமலையடிகள் தமிழ் ஒரு தமிழா?” என்று பேசியிருக்கிறார். அவர் தமிழ்நாட்டிலே வாழ்ந்துகொண்டு, தமிழால் பிழைப்பவர்.இவற்றையெல்லாம் கருதின், தமிழ்நாட்டில், அயல்நாடுகளில் அளிக்கப்பட்டது போல், தமிழுக்குத் தக்க இடம் அளிக்க மக்கள் மறுக்கின்றனர் என்பது போதரும். வெல்க தமிழ்!
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
*** ஆசிரியர் குறிப்பு: இதற்கு முன்னர்ப் பேராயக் கட்சியினர் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலும் மாநிலங்களவையில் தனியர் வரைவாகப் பொதுவுடைமைத்தலைவர் புபேசு குப்புதா கொண்டு வந்த பொழுதும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெயரில் தமிழ்நாடும் இருக்கும் வகையில் பழைய பெயரையே அறிமுகப்படுத்தச்சொன்னாலும் இறுதியில் கட்சிச்சார்பின்றி அனைவரும் ஏற்றனர்.