‘தீ வேள்வி’ (அடுநெய் ஆவுதி), போர்க்கள வேள்வி (மறக்கள வேள்வி) முதலிய வேள்வி வகைகள் புறநானூற்றின் காலத்தில் புழக்கத்திலிருந்தன.
மன்னர்களின் நீடித்த புகழை நிலைநாட்டவும், அவர்தம் வெற்றியைக் கொண்டாடவும், நாட்டுவளம் பெருகவும் வேள்விகள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாடல் 15:17-21; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய புறநானூற்றுப் பாடல் 26:13-15.; கரிகால் பெருவளத்தான்மேல் கருங்குளவாதனார் பாடிய புறநானூற்றுப் பாடல் 224:7-9; கயமனார் பாடிய புறநானூற்றுப் பாடல் 321;4-6; சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்க்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் 400:19 முதலியன வேள்வியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
உதியஞ்சேரல் காலத்திலும் பெருஞ்சேரலாதன் காலத்திலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்திலும் வாழ்ந்தவர்தாம் மாமூலனார். இச்சேரலாதன் கரிகால் வளவனோடு போரிட்டதாக மாமூலனார் கூறுகிறார் (அகநானூறு 55:10-11).
மாமூலனார் கி. மு. 325க்கும் கி. மு. 250க்கும் இடையில் வாழ்ந்ததாக மறைந்த பேராசிரியர் (முனைவர்) பே. க. வேலாயுதம் கூறுகிறார். அம்மாமூலனாரின் காலம் கி. மு. 355க்கும் கி. மு. 270க்கும் இடைப்பட்டதெனப் பாலன் நாச்சிமுத்து கணித்துள்ளார்.
‘ஊனை வெட்டுகிற மணைமேல் வைத்துக் கொழுத்த இறைச்சியைத் துண்டித்து’ வேள்வித் தீயிலிட்டபோது வநத ஆவுதிப் புகை’ எனும் பொருளில் வரும்
ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை
குய்யிடு தோறு மாறா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி
என்று இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பியாகிய செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடிய பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்திலும் (பதிற்றுப்பத்து 3:21:10-13) வேள்வியைப் பற்றிய குறிப்பு வருகிறது. மாமூலனார் காலத்தவனாகிய இந்நெடுஞ்சேரலாதனின் காலத்திலும் தமிழ்ப் பார்ப்பார் வேள்வி செய்து வந்ததைத்தான் இது காட்டுகிறது.
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க எனப்
புலவுக் களம் பொலிய வேட்டோய் நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே
என்று பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றிய மாங்குடி கிழார் ‘மறக்கள வேள்வி’யைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (புறநானூறு 372)
மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் தலைமைப் புலவராக இருந்தார் என்பதை
ஓங்கிய சிறப்பி னூயர்ந்த வேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
என்று புறநானூறு (72: 13-14) குறிப்பிடுகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் காலம் கி. மு. 250க்கும் கி. மு. 175க்கும் இடைப்பட்டதாக பேராசிரியர் முனைவர் பே. க. வேலாயுதம் கூறுகிறார்.
'முடிவிலாப் புகழுடைய மன்னன், தேவர்களும் மகிழும்படி யாகச் செந்தீ வேட்டுச் வேள்வி செய்ததை' வேள்விநிலை என்றுரைத்துக் கி. பி. 7ஆம் நூற்றாண்டிற்கும் கி. பி. 12ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகக் கருதப்படும் புறப்பொருள் வெண்பாமாலை
அந்தமில் புகழான் அமரரும் மகிழச்
செந்தீவேட்ட சிறப்புரைத் தன்று
என்று கூறி ‘ஆள்வினை வேள்வி’யைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
உற்றறிந்து பார்த்தால், வேள்வி செய்யும் வழக்காறு பண்டைத் தமிழ்ப் பார்ப்பாரிடம்தான் தோன்றியிருக்க வேண்டும். இவ்வாறு சொல்லக் கேட்டு திராவிட வரலாற்றியலின் எச்சங்களில் உழல்வோர் விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் குதிக்கலாம். நான் என்ன செய்ய!
கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்படும் ‘உயிர்ப்பலி’ தொல்தமிழரிடமிருந்து தழுவப்பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கக் கூடும்.
மாசிடோனிய கிரேக்கன் அலெக்சாண்டர் சிந்துவெளியின்மேல் படையெடுத்த ஆண்டு கி. மு. 327. அது வரையில் விந்திய (விண்டு)மலைக்கு மேலே இமயமலை வரையில் தமிழ்தான் பேசப்பட்டுவந்தது.
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை (அகநானூறு 265:4-5)
என்று பாடலிபுரத்து நந்தரைப் பற்றிக் குறிப்பிடும் மாமூலனாரின் காலத்தில்தான் சிந்துவெளியின்மேல் அலெக்சாண்டர் படையெடுத்திருக்க வேண்டும். இதனால், மாமூலனாரின் காலத்திலேயே சேரர்கள் வேள்வி செய்துவந்துள்ளது தெரிகிறது.
அலெக்சாண்டர் படையெடுப்பு வரையிலும் விந்திய(விண்டு) மலைக்கும் அப்பால் தமிழே பேசப்பட்டு வந்ததெனின், தமிழ்ப் பார்ப்பார் நடத்திவந்த வேள்வி முறையில் ‘வடமரபு’, ‘தென்மரபு’ எனும் பாகுபாடு அக்கால் தோன்றியிருக்கவியலுமோ? ‘ஆரிய x திராவிட’ வரலாற்றியலின் தொற்றிலிருந்து முழுமையாக விடுபெறாமையைத்தானே இது போன்ற கூற்று காட்டுகிறது?