தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்று மன்றம்

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 23, 2026, 8:34:52 PM (9 days ago) Jan 23
to வல்லமை, hiru thoazhamai
image.png

தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்று மன்றம்.
மெட்ராஸ் ரெகார்ட் ஆபீஸாக இருந்த ஆவணக்காப்பகத்தில் 1973ஆம் ஆண்டு வரலாற்று மன்றம் ஒன்றைத் தொடங்குகிறார்கள். தென்னிந்தியாவின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆவணக்காப்பகத்தின் ஆவணங்களைப் பயன்படுத்தி, அசலான தரவுகளுடன் மேம்பட்ட ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வரலாற்று மன்றம் தொடங்கப்பட்டது.
இன்று தமிழின் முன்னோடி ஆய்வுகளாக இருக்கும் தியடோரின் The Message bearers, அம்பையின் Face behind the mask உள்ளிட்டவை, அக்காலத்தில் வந்தவை தான். (அம்பையின் ஆய்வை நிராகரித்து வரலாற்று மன்றம் கடிதம் அனுப்பியதாக அம்பை, சமீபத்தைய பேச்சில் குறிப்பிட்டார்.)

73இல் தொடங்கப்பட்டு, பொலிவாக நடந்து, பின் பெயரே தெரியாமல் முடங்கிக் கிடந்தது.
நான் ஆவணக்காப்பகத்தில் மாற்றுப் பணிக்குச் சென்ற பிறகு, நண்பர் சித்தானை ஒரு நாள், வரலாற்று மன்றம் பற்றிய குறிப்பைப் பார்த்துத் தகவல் சொன்னார். அப்போதும் கடந்துவிட்டேன். தொடர்ச்சியாக அறக்கட்டளை சொற்பொழிவுகள் நடத்தியபோது, ஒவ்வொரு அறக்கட்டளை சொற்பொழிவும் எவ்விதம் உருவானது என்று பழைய கோப்புகளைத் தேடிப் படிக்கும்போது, வரலாற்று மன்றத்தின் ஆய்வாளர்களுக்காக தொடங்கப்பட்ட உண்மை தெரிந்தது.

உடனே, மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்து, ஆவணக்காப்பகத்தின் ஆணையர்களின் முயற்சியில் தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அறிவிப்பாக வெளியாகி, இன்று 20 ஆய்வாளர்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் வரலாற்று மன்றத்தில் ஆய்வினைத் தொடங்குகிறார்கள்.
ஆய்வாளர்களின் தேர்வுக்கான அறிவிப்பினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட நாள் தொடங்கி, ஆய்வுகள் தொடங்கும் இந்த கணம் வரை, அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ யார் பெயரையும் பரிந்துரைக்கவில்லை. மாதம் 50000 ரூபாய், ஓராண்டுக்கு எனும்போது வெளியில் இருந்து அழுத்தம் வரலாம் என்று நமக்கிருக்கும் வழக்கமான மனநிலையில் பயத்துடன் இருந்தோம்.
மாண்புமிகு அமைச்சரின் அறிவிப்பு வெளியானது.

குறிப்பிட்ட நாள்களுக்குள் ஆய்வு முன்மொழிவினை ஆய்வாளர்கள் சமர்ப்பித்தார்கள்.
இறுதி நாளுக்குப் பிறகு, வல்லுநர் குழு விண்ணப்பங்களைக் கூர்ந்தாய்வு செய்து, நேர்காணலுக்கான தேதியை அறிவித்தார்கள். வல்லுநர் குழு நேர்காணலை முடித்து, 20 ஆய்வாளர்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.
மிகப் பெரும் ஆச்சரியம். இப்பணியைப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்று மன்றத்தின் துணைத் தலைவர், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் உட்பட, பணி முடிந்ததா என்று கேட்டறிந்தார்களே தவிர, யார் யார் தேர்வாகியிருக்கிறார்கள் என்று கேட்கவில்லை.
எடின்பரோவில் முதுகலைப் படித்தவர், திருச்சியை அடுத்த சின்னஞ்சிறு கிராமத்தில் படித்தவர், வரலாறு. தமிழுடன் வேறு பாடங்கள் படித்தவர்கள் என அனைத்துத் தரப்பு ஆய்வாளர்களுக்கும் சமமான வாய்ப்பு உண்டாகியிருக்கிறது.
தகுதியான வல்லுநர் குழுவின் வழிகாட்டலில், அரசின் தலையீடு இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஆய்வாளர்களிடமிருந்து, தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் வரலாற்று மன்றம், தமிழ்நாட்டு வரலாற்றின் திருப்பு முனையான ஆய்வுகளுக்காக காத்து நிற்கிறது.

எப்போதும்போல் புதிய முயற்சிகளுக்கு உற்சாகத்துடன் ஆதரவுக் கரம் கொடுக்கும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் த.உதயச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்.
Reply all
Reply to author
Forward
0 new messages