இந்திரகுலம், காசிப கோத்திரம், வாகை மாலை பற்றிய விளக்கம் காண்போமானால்..
இந்திர குலம்: தொல்காப்பியமும் இந்திரனை போற்றுகிறது. வள்ளுவர் இவனை " இந்திரனே சாலும் கரி” இந்திரத்தைக் கட்டுப்படுத்தி வென்றதால் அவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான் என்கிறார்.
இந்திரன் என்பதற்கு தேவர்கோன், அரசன், சூரியன், நாக நாதன், கரியவன் என்று அகராதி விளக்கம் தருகிறது.
தொண்டைமான்கள் இந்திர குலம் என்பதற்கு அரசகுலம் என்றும் பொருள் கொள்ளவும் முடியும்.
காசிப கோத்திரம்: காசிப கோத்திரம் காசிபர் ரிசியை குறிக்கும். காசிபர், மரீசி முனிவரின் மகன் ஆவார். காசிபருக்கு இந்திரன், திருமால் (வாமனர்), அக்கினி, நாகர்கள் என்று பல மகன்கள் உண்டு. கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்த இரேணாட்டுச் சோழன், கடப்பை மாவட்டம் ஜம்மல் மடுகு தாலுகாவில் கோசினெ பள்ளி கிராமத்தில் கருங்கற்றூண் தூணில் தெலுங்கு எழுத்தில் உள்ள சாசனம் "சோழ மகாராசன் என்னும் அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான் (408 டிக 1904). இதே வேங்கடத்தில் இருந்து வந்த தொண்டைமான் மன்னர்களும் தங்களை காசிப கோத்திரம் என்று கூறிக்கொள்கின்றனர்.
வாகை மாலை: வெற்றி பெறும் செயலில் மேம்பட்டு அரசர்களுடன் போரிட்டுப் போர்த் தொழில்களில் வெற்றி பெற்றபின் மணமுடைய வாகைமாலை சூடி, தோற்ற அரசர்களின் வளம் பொருந்திய நாடுகளைக் கைக்கொண்டார்கள், அரசர்க்கு உரிய முடி நீங்கலாக ஏனைய அரசர்க்குரிய செல்வங்கள் எல்லாவற்றையும் உடையவரானார். தொண்டைமான்களும் வாகை மாலை சூடி இந்திய தேசம் உருவான பின்னும் இவர்கள் மட்டும் இந்த மண்ணை தனி ராஜ்யமாக ஆண்டார்கள்.
திருமங்கையாழ்வார்: சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்த 'காராளர் கற்பகம்’ எனப்பட்ட திருமங்கையாழ்வார் வழி வந்தவர்களாக தொண்டைமான்கள் குறிப்பிடுவதற்கு ஏற்ப, இவர்கள் பூர்விக பகுதியான திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர்மேல் மங்கைபுரக் கோவில் (இளங்கோவில்) சோழர் காலத்தில் பெரிய நாட்டவர் ’திருமங்கையாழ்வார்க்கு நாட் பூசை செய்து வந்ததை மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறுகிறது.
மிகவும் பழமை வாய்ந்த தொண்டைமான் பரம்பரையில் வந்த தொண்டைமான்களில் ஆவுடை ரகுநாத தொண்டைமான், விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கராயவுக்கு ராணுவ சேவை செய்துவந்தார் (1640 – 1661). "அனுராகமாலை" என்னும் நூல் "இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை" என்று கூறுகிறது.
புதுக்கோட்டை தொண்டைமான் யானைக்கான தொடர்பு, பண்டைய தொண்டைமான் இளந்திரையன் பற்றிய பாடல் நமக்கு உணர்த்தும். “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213).
விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் செல்லும்போது, அவரது யானைகளில் ஒன்றுக்கு மதம் பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஆவுடை ரகுநாத தொண்டைமான் தீரத்துடன் போராடி யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர், தொண்டைமானுக்கு "ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா" எனும் பட்டத்தை அளித்தார்.