Fwd: தினம் ஒரு பாடல்

14 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Jun 8, 2015, 2:12:41 PM6/8/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

ஐம்புலன்களின் வழியே ஆசைகள் நம் மனதினுள்ளே புகுந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆசைவசப்பட்டவர்கள் தன் சுய உணர்வையே இழக்கும் நிலைக்கும் சில சமயங்களில் விதியினால் தள்ளப்படுவதுண்டு. விதி என்றால் என்ன? ஒரு கல்லை மேலே எரிந்தால் அது பூமியை நோக்கிக் கீழே விழுந்தே தீர வேண்டும். அது ஒரு விதி. அதே போல் ஆசைகள் துன்பத்தை விளைவிப்பது உறுதி. அதுவே விதி. அந்த விதியின் வலிமையை இளமையில் யாரும் உணர்வதில்லை. ஆசைவயப்பட்ட உள்ளம் அந்த ஆசை நிறைவேறுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு நம்மை செயல்பட வைக்கிறது. ஆசை நிறைவேறி விட்டால் ஆணவம் வந்து அறிவைத் திரையிட்டு மறைக்கிறது. ஆசை நிறைவேறாத நிலை வந்தால் கோபமும் துக்கமும் மேலோங்கி அறிவை மழுங்கடிக்கின்றன. அத்தகைய மோஹ மாயையில் மூழ்கி உழலும் மனம் எளிதில் தெளிவடைவதில்லை.

தெளிந்த சிந்தையே அமைதிக்கு வழி, அறிவுக்கு வழி, இன்பத்துக்கு வழி. அத்தகைய தெளிந்த சிந்தை வேண்டின் ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். அவசியமான, நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்தியடைவதே ஆசைகளை அடக்குவதன் அடையாளம். ஒருவரும் உணவின்றி உயிர் வாழ்தல் அரிது. அவ்வுணவும் வயிறு நிறையுமளவே உண்ண இயலும். எண்ணிறந்த செல்வத்தை நியாயாற்ற முறையில் பேராசையால் சேர்த்து வைத்தவரால் அதிகம் உண்ண இயலுமா? உண்டால் செரிக்குமா? 

செல்வம் சேர்க்கும் ஆசையைக் காட்டிலும் அதிக வலுவானது காதல் ஆசை. அதுவும் வாலிப வயதில் அது எல்லை மீறவும் கூடும். ஆசை அறிவை மழுங்கச் செய்து தன் மேல் காதல் கொள்வதாகக் கூறும் ஒருவரது உண்மை நிலையை உணர மறுக்கும் நிலையில் மனம் ஆசைவயத்தில் செயல்படுகிறது. தன்னை உண்மையாகக் காதலிப்பதாக உறுதியளித்தவர் மனதில் உண்மையில்லை எனும் தீர்மானத்துக்கு மனம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வருகையில் அங்கே உயிர் துடித்து உள்ளம் துவண்டு வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு ஏற்படுமளவு அறிவு முற்றிலும் மழுங்கி விடுகிறது. 

ஒரு செல்வந்தரின் மகன் தன் தந்தையிடம் பணத்தை வாங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறான். தான் பார்க்கும் பெண்கள் பலரையும் தொடர்ந்து சென்று அவர்களோடு பழகிப் பொழுதைக் கழிக்கிறான். இடையில் தன் நண்பனின் தங்கையைக் கண்டு அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறான். இதுகாறும் தான் சென்ற பாதை தவறு என உணர்ந்து தன் காதலியுடன் சேர்ந்து வாழக் கனவு காண்கிறான். ஆனால் அவனது தந்தை அவனது தவறான போக்கைக் கேள்விப்பட்டு அவன் திருந்தி வாழத் தன் சகோதரியின் மகளை அவனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி அதை அவன் மறுக்கவிடாமல் செய்வதற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் சகோதரியின் மகள் பெயரில்  எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். இடையில் பழைய துஷ்ட சகவாசத்தால் ஏற்பட்ட சில சகாக்கள் இவனைப் பெரும் குற்றச் செயலில் மாட்ட வைக்க முயன்று அவனிடன் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதனால் அவன் தனது அத்தை மகளிடமிருந்து அவர்களுக்குத் தரத் தேவையான பணத்தைப் பெற வேண்டி அவளை விரும்புவது போல் காட்டிக் கொள்கிறான்.

இந்நிலையில் அவனது காதலியின் அண்ணன் இவனது செயல்களில் சந்தேகம் கொண்டு தன் தங்கையிடம் தனது நண்பனின் மோசத்தைப் பற்றிச் சொல்ல அந்தப் பெண்ணின் மனம் கதறுகிறது. கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவளுடன் சேர்ந்து அவளது அண்ணனும் அழுகிறான். அவர்கள் இருவரது உள்ளங்களுள் குமுறிப் பெருக்கெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தைக் கவிஞர் வார்த்தைகளால் வடிக்க இந்தத் துடிப்பு மிக்க பாடல் உருவானது.


திரைப்படம்: போலீஸ்காரன் மகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:  எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

இன்பமெனும் மொழியெதற்கு?
செல்வத்தில் மிதப்பவர்க்கு
துன்பமென்ற சொல்லெதற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

கையிலே வளைவெதற்கு?
காதலியை அணைப்பதற்கு
காலிலே நடையெதற்கு?
காதலித்து திரிவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பாசமென்ற சொல்லெதற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆசை கொண்ட வாழ்வெதற்கு?
அன்றாடம் சாவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பூவிலே தேனெதற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு


--


AKR Consultants

unread,
Jun 10, 2015, 3:00:15 PM6/10/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வை அனுபவித்து இயற்கையோடியைந்து நன்கு வாழ்வின்றன ஆனால் மனிதன் மட்டும் எத்துணை நலன்கள் இருந்த போதும் திருப்தியடையாமல் இல்லாததை எண்ணி ஏங்கி இருக்கும் இன்பங்களை அனுபவிக்காமல் துன்புறுகிறான். தன்னிடம் இருக்கும் நலன்களை எண்ணிப் பார்த்து மகிழாமல் பிறரிடம் தன்னிடமில்லாத நலன்கள் இருக்கக் கண்டு பிறர் மேல் பொறாமை கொண்டு மனம் புழுங்குகிறான். 

ஏனைய உயிரினங்கள் ஐந்தறிவிற்கும் குறைந்தவை என்றும் மனிதனுக்கு ஆறறிவென்றும் நம் ஆன்றோர்கள் வகுத்த உண்மையை உணராமல் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறுவதுடன் பிற ஐந்தறிவு ஜீவிகளுக்கு இருக்கும் அளவும் அறிவுத் தெளிவு பெறாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்து வாடுகிறான்.

இதன் காரணம் என்ன?

பிற உயிரினங்கள் தமக்கு இயல்பாகக் கிடைக்கும் உணவைத் தேடி உண்டு தன் உறவுகளோடும் பிற உயிரினங்களோடும் கலந்து பழகி மகிழ்கின்றன. இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவையும் தமது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அடுத்த வேளை உணவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உடலை மறைக்க உடையோ, வசிக்கப் பிரத்யேகமான விசேஷ இருப்பிடமோ வேண்டுவதில்லை. கிடைத்த உணவை அருந்திக் கிடைத்த இடத்தில் படுத்துறங்கிக் கவலையில்லாமல் வாழ்கின்றன. மனிதன் தனது தேவைக்கு மேல் பொன்னும் பொருளும், மாடி மனை வீடுகளும், நிலங்களும், வாகனங்களும், ஆடம்பர வசதிகளும் பெறுவதொன்றே பெரிய குறிக்கோளாகக் கொண்டு தன் அன்றாட வாழ்வில் பெறும் சிறு சிறு இன்பங்களைத் தொலைக்கிறான். 

வாழ்நாள் முழுதும் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பெரும்பாலும் மருத்துவச் செலவுகளுக்கும் வேண்டாத விஷயங்களுக்கும் வாரியிறைத்து விட்டுப் பெரும் துன்பமுற்று இறந்து போகிறான். தன்னுடைய வாழ்க்கை எத்துணை அற்பமானதாய்ப் போய்விட்டதே என மரணமடையும் தருவாயிலும் உணரத் தவறுகிறான். இத்தகைய அறியாமையில் மூழ்கி அல்லலுறும் வாழ்வு வாழ வேண்டுமா? அதனால் ஏதேனும் பலனுண்டா என எண்ணிப் பார்த்து மனிதன் பிற உயிர்களிடமிருந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்று அவற்றுடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ என்று பழகுகின்றானோ அன்றே துன்பம் நீங்கி இன்பம் பெற வழி பிறக்கும்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் 
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என்று பாடி இவ்வுலக வாழ்வைத் தான் உயிரோடிருந்த 35 வருட சொற்ப காலத்திலேயே முழுமையாக அனுபவித்து சொர்க்கத்தை இங்கேயே கண்டு வறுமை தன்னை வாட்டிய போதிலும் வருந்தாமல் நம் நாட்டு மக்கள் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலை மாறப் பாடுபட்ட மஹாகவி பாரதியின் அறிவுத் திறனை நாமெல்லோரும் அடைய வேண்டாமா? இவ்வுலகில் இருக்கும் வரை நாமும் சுகமடைத்து பிறரையும் சுகமடையச் செய்து இவ்வுலகிலேயே சொர்க்கம் காண நாம்  முயற்சி செய்ய வேண்டாமா?

இளம் காதலர்கள் இருவர் கடலலைகள் துள்ளுவதிலும், நண்டு, வண்டு முதலான உயிரினங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதையும், குருவிகள் கூடு கட்டி இன்பமாய் வாழ்வதையும் கண்டு தாமும் இன்பமாய் வாழப் பழகுகின்றனர் இன்றைய பாடலின் வாயிலாக.


திரைப்படம்: தலை கொடுத்தான் தம்பி
இயற்றியவர்: 
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1959

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?

கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது
கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது

தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது?
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது? அது
நில்லாத வேகத்திலே அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிகிட்டுக் குடும்பம் பண்ணுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?

கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் சிங்
கார மலர்த் தேன் நான்
கன்னி மலர் நாடியதும் வண்டு போலத்தான்

அஅஆ அஅஅஅஅஅ ஆ அஅஅஅஅஅ ஆஆஆ ஆஆ அஅஅஅஅஅஅஅ

பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும்பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது?
பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது? அது

வாழ்க்கை தன்னை உணர்ந்து கிட்டு மனசும் மனசும் கலந்து கிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

அஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ அஅஅ அஅஅஆ

AKR Consultants

unread,
Jun 16, 2015, 3:02:00 PM6/16/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

மங்கையரை மலர்களுக்கொப்பிடுவதுண்டு, அவர்கள் மலர்களைப் போல மென்மையான உடலும் மனமும் கொண்டு மலர்களைப் போல வாழ்வில் மணம் பரவச் செய்யும் மேன்மையினால். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் ஒரு பெண் வந்து வாழ்க்கைத் துணையாக அமைந்த பின்னரே வாழ்வு மலர்கிறது, வாரிசுகள் பிறக்கின்றன. குடும்பம் அமைகின்றது, இல்லறம் செழிக்கின்றது. தன் மனதுக்கிசைந்த பெண்ணை விரும்பிக் காதலித்து மணமுடித்து உடன் சேர்ந்து வாழும் வாழ்வு அமையப்பெற்ற ஆண்கள் பிற ஆண்களைக் காட்டிலும் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இருவர் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் தொடங்கித் தொடரும் வாழ்வில் தங்குதடைகள் எத்துணை வரினும் இருவரும் கூடி முயன்று அவற்றை வெல்லுவது மிக எளிது. 

கணவன் மனைவி உறவு முன்பின் அறிமுகமில்லாத ஆண் பெண் பாலரிடையே உருவாகுகையில் அத்தகைய மனம் ஒன்று பட்ட நிலை எய்துவது சற்றுக் கடினமே. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப் பழகுவதே பெரிய சவாலாக அமைகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்த போதிலும் அவற்றைத் தீர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்வதே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவர் நலனைப் பெரிதென எண்ணி சுயநல உணர்வை அகற்றி வாழப்பழகுகையில் அங்கே இல்லற உறவு மிகவும் மேம்படுகிறது, வாழ்வில் வெற்றி காண வழி பிறக்கிறது. இருமனம் ஒன்றுபட்டு இணைந்து வாழும் முறைமையைக் கற்றுத்தேர்ந்த தம்பதியருக்குத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது எளிதாகவும் இனிதாகவும் அமைகிறது. 

கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு எழுந்து அதைப் பெரிது படுத்தி இருவரும் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாக விட்டால் அவர்களது சிறு பிரச்சினைகளையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகிவிடுகிறது. ஒற்று பட்டு வாழப் பழகாத தம்பதியினர் தம் பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாமல் தவிப்பதுண்டு. பல சமயங்களில் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி நெறி கெட்டுத் தவறான வழியில் குழந்தைகள் செல்ல ஏதுவாகிறது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் இவ்வுலகமே சொர்க்கமாகிறது இல்லையேல் நரகமாகிறது.

முற்காலத்தில் அரசகுமாரர்களும் அரசகுமாரிகளும் காதல் வயப்பட்டு சரித்திரம் படைத்ததுண்டு. அவர்களும் உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் இன்பம் போல வேறில்லை என்பதை உணர்ந்து காதலைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அத்தகைய அரச பரம்பரைகளைப் பின்னணியாகக் கொண்டு பல திரைப்படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அக்கதைகளில் காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்து இன்னிசையும் நடனமும் ஒன்று கலந்து வடிவமைக்கப்பெற்றதால் மீண்டும் மீண்டும் கண்டு களிக்க விருப்பம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் அமைந்தன. 

நம் கதாநாயகி, "இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்." என்று கேட்க அவளது காதலனான இளவரசன், "ஓ, பாட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டுப் பாடுகிறான்.


திரைப்படம்: சாரங்கதாரா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஆஆஆ
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

AKR Consultants

unread,
Jun 19, 2015, 3:21:55 PM6/19/15
to thami...@googlegroups.com
ஆயுள் முழுவதும் பொருளீட்டுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் நாம் அவ்வாறு பாடுபட்டு ஈட்டிய பொருளை வாழ்க்கை சிறக்கப் பயன்படுத்துகிறோமா என எண்ணிப் பார்த்தோமெனில் அனேகமாக நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்கு மேல் இல்லையெனும் எண்ணத்தையே பெறுவார்கள். இதன் காரணம் பொருள் சேர்க்க செலவிடும் நேரத்தில் அப்பொருளை எவ்வாறு செலவிடுவது என்று திட்டமிடவும்  அவ்வாறு திட்டமிடும் செலவுகள் முறையானவை தானா, நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கத் தக்கவையா என ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவோர் எவ்வளவு குறைந்த பொருளை ஈட்டினாலும் அதனால் மகிழ்ச்சியடைவர். மாறாக ஈட்டும் பொருளை மதுவருந்துதல் போன்ற தவறான பழக்கத்தினால் வீணடித்து சிற்றின்ப நாட்டத்தில் வாழ்வைக் கழிப்போர் விரைவில் பெருந்துன்பமுற்று மகிழ்ச்சியை இழப்பர். 

மதுவிலக்கு நம் தமிழ்நாட்டில் 1971 வரை அமுலிலிருந்த போதிலும் கள்ளச் சாராய வியாபாரம் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது. இருப்பினும் மது அருந்துவோர் வெகு சிலரே இருந்தனர். எவரேனும் மது அருந்தி விட்டுத் தெருவில் நடந்தால் போலீஸ்காரர் அவரை ஊதச் சொல்லி சாராய வாடை வந்தால் கைது செய்வதுண்டு. இருப்பினும் மதுவின் கெடுதலை எடுத்துச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் விதமாகப் பல திரைப்படக் கதைகள் அக்காலத்தில் அமைந்திருந்தன.  மதுவிலக்கு அமுலிலிருந்த போதும் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி சாராயத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அரசு செயல்பட்டு வந்தது. 

1972ஆம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் பெட்டிக்கடைகளுக்கீடாக மது விற்பனையில் மும்முரம் காட்டித் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்கள் உழைத்து ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை மதுவருந்துவதற்காகவே செலவு செய்ய வைக்கும் நிலை அன்று முதல் இன்றுவரை நீடிக்கிறது. மதுவின் கெடுதியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் பணியில் அரசு சிறிதளவும் அக்கரை காட்டாமல் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

மதுவை ஆரம்ப காலத்தில் அற்ப சந்தோஷத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் நாளடைவில் மதுவிற்கடிமையாகி மது அருந்தாமல் சிறிது நேரமும் இருக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தன் வருவாய் மட்டுமின்றித் தன் குடும்பத்தாரின் பொருட்களையும் விற்று மதுவைக் குடிக்குமளவுக்கு அறிவு மழுங்கித் தன்னிலை குலைந்து நடைபிணமாக மிக இழிவான வாழ்க்கை நடத்துகின்றனர். இத்தகைய மது அடிமைகள் பெரும்பாலோர் மதுவிற்காகத் தம் ஓட்டுரிமையையும் அடமானம் வைக்கின்றனர். அதனாலேயே மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் உரிமையை சமூக விரோதிகள் அடைந்து மக்கள் விலைவாசி ஏற்றத்தாலும் சமூக சீர்கேடுகளாலும் பெரும் அவதியுறும் நிலை நிலவுகிறது. 

இவ்வாறு மதுவுக்கு அடிமையான தொழிலாளிகள் பலர் தங்களது குழந்தைகளை முறையாக வளர்த்த இயலாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலோரது குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர வழியின்றிக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்து தம் குடும்பங்களைக் காக்கும் கடமையை இளம் வயதிலேயே சுமக்க வேண்டிய நிலை வருகிறது. தாய்மார்களும் தம் கணவன்மார்கள் குடிகாரர்களாக சீரழிந்து கிடக்கும் நிலையில் பல வீடுகளில் குற்றேவல் புரிந்து தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தப் பாழாய்ப் போன மதுவை அருந்தி மயங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து மக்கள் என்று மீள்கின்றனரோ அன்றே அரசு நல்லரசாக இருக்க வாய்ப்பு வரும். அதுவரை சங்கடங்கள் மேலும் தொடருமேயன்றி விடிவு காலம் விரைவில் வாராது.


திரைப்படம்: அன்பு எங்கே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1958

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே இந்த
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமுமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும் தினம்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும் 
நிம்மதி வேண்டும் வீட்டிலே 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

AKR Consultants

unread,
Jun 25, 2015, 3:36:19 AM6/25/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

என மஹாகவி பாரதியார் வாழ்த்திய நம் செந்தமிழ் நாடு இன்று என்ன நிலையிலிருக்கிறது என எண்ணிப் பார்க்கையில் என் மனம் மிகவும் வேதனையுறுகிறது. காரணம் செந்தமிழ் நாடு செழிப்பாக விளங்கிய காலமொன்று இருந்தது அதனைப் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்கையில். கல்வி பட்டப் படிப்பு வரை முற்றிலும் இலவசமாக்கினார் காமராஜர். அதன் பின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிப்போருக்கு மாதா மாதம் உதவித்தொகையாக மிகவும் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இருக்கவில்லை. அரசாங்கம் அநாவசியச் செலவுகள் செய்யவில்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. விவசாயிகள் செழிப்பாக இருந்தனர். உணவுப் பொருட்கள் அனைவருக்கும் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.

சிறு தொழில்கள் சிறப்புற நடந்தன. வறுமை அறவே இருக்கவில்லை. இந்தியனாய் இரு, இந்தியப் பொருட்களை வாங்கு என அந்நாளில் மஹாத்மா காந்தி வகுத்த கொள்கை கடைபிடிக்கப் பட்டது. வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டியது. அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்த காலம் அது. பேராசை இல்லாத நேர்மையான வணிகம் நடந்தது.

ஆற்று மணற்கொள்ளை அறவே இல்லை. சாராயம் இல்லை, சச்சரவுகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. அரசாங்கம் தன் கடமையைத் தவறாமல் செய்தது. அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கடமை தவறாமல் மக்களுக்கு சேவை செய்தனர். ஆசிரியர்கள் மிகவும் அக்கரையாகப் பள்ளிகளில் கல்வி போதித்தார்கள். பெரும்பாலான கல்விக் கூடங்கள் தனியார் நடத்திய போதிலும் அரசு அவற்றுக்கு உதவியது. ஆசிரியர்களின் மாத சம்பளம் மற்றும் பராமரிப்புக்கென அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் கணிசமான தொகையை உதவியாக வழங்கியது.

ரேஷன் கடைகள் இருக்கவில்லை. அனைத்துப் பொருட்களும் வெளிச் சந்தையிலேயே நியாய விலையில் கிடைத்தன.  அரசு மருத்துவ மனைகள் மிகவும் சிறப்பாக இயங்கியதுடன் சகலருக்கும் இலவச மருத்துவ உதவியுடன் சத்தான உணவும் தினம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. என் இளைய சகோதரியை என் தாயார் 1963ஆம் வருடம் அரசு மருத்துவமனையிலேயே அன்று பெற்றெடுத்தார். தெருக்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன. வியாதிகள் அதிகம் இருக்கவில்லை. எனக்குச் சிறு காயங்கள் விளையாடுகையில் பட்டபோது சிறுவனான நானே அரசு மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது இன்றும் என் மனதில் நீங்காமல் நிழலாடுகிறது.

1964ஆம் வருடம் நாம் 6ஆம் வகுப்பு பயில்கையில் எனது பள்ளிக் கட்டணம் ஆண்டு முழுவதற்குமாக ரூ 5/- அன்று ஒரு இட்டிலி விலை 3 நயா பைசாக்கள். அரிசி விலை 1 கிலோ 50 நயா பைசாக்கள். பொதுக் குழாய்களில் தண்ணீர் தவறாமல் வந்தது. ஊர் மக்கள் யாவரும் அதிலிருந்தே குடிதண்ணீர் பெற்றுச் சென்றனர். பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 50 நயா பைசாக்கள். அன்று அம்பாசடர் கார் விலை ரூ 20,000/- இன்று ஒரு மொபெட் கூட வாங்க முடியாது அவ்விலையில்.

இத்தகைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் ஊழல். ரூ 1 விலையுள்ள பொருட்கள் அரசாங்கத்தால் ரூ 100, ரூ 1000 என அதிக விலைக்கு மக்கள் பணத்தில் வாங்கப் படுகின்றன. செய்யாத வேலைகளை செய்ததாக எழுதி செலவுக்கான பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற அரசியல்வாதிகளும். தெருவில் நடக்கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது, காரணம் அடைப்பெடுக்கப்படாத சாக்கடைகள், அள்ளப்படாத குப்பை மேடுகள். சுகாதாரத்துக்கென அரசு ஒதுக்கும் பணம் முழுவதும் வெகு சிலரால் கபளீகரம் செய்யப்பட்டு. வீட்டின் முன்னுள்ள குப்பையை அள்ள வேண்டுமெனில் அதற்கு ஒவ்வொரு வீட்டாரும் தனியே லஞ்சம் தர வேண்டியுள்ளது.  பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்க்க ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகவும் கட்டாய நன்கொடையாகவும் பள்ளிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. உடல் நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனையில் ஒரு நாள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறவே அவர் ஆயுள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்புத் தொகை செலவழிந்து விடுவதோடு மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை பூதாகரமாக மிரட்டுகிறது.

சிறு குறுந்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு நாட்டின் தொழில்கள் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளது தடையில்லா மின்சார வசதிகளுடன் ஆனால் நம் மக்கள் அன்றாடம் மின்வெட்டால் மிகவும் அவதியுறுகின்றனர். குடிநீர் மாசுபட்டு பாட்டில்களில் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கொகோகோலா, பெப்சி முதலிய குளிர் பான வகைகள் தயார் செய்யும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பெருமளவில் உறிஞ்சி சுற்று வட்டாரத்தில் விளைநிலங்கள் பாழ்படக் காரணமாவதுடன் நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் விஷப் பொருட்களைப் பானத்தில் கலந்து விற்பனை செய்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆலைக் கழிவு நீர் ஆற்றில் தாராளமாகக் கலக்க அனுமதிக்கின்றனர் லஞ்சம் வாங்கிக் கொண்டு.

அரசுத் துறை நிறுவனங்களில் லங்க ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டுமானாலும் அதற்குக் கையூட்டாகப் பெருந்தொகை தர வேண்டியுள்ளது. காவல் துறை மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் மக்களைச் சுரண்டி வன்முறை அரசியல் செய்யும் ஆட்சியாளர்களது ஏவல் துறையாகவே செயல்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி ஆண்டுகள் பலவான போதும் நீதி கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். சமுதாய சீர்கேடுகளையும் அரசுத் துறையின் அலட்சியப் போக்கையும் குறித்து யாரிடம் புகார் அளித்தும் பயனில்லா நிலை நிலவுகிறது.

இந்நிலை மாறி நம் செந்தமிழ் நாடு சுபிட்சம் பெற வேண்டும். அதற்கு என்ன செய்வதென்றே நமக்குத் தெரியவில்லை. காரணம் மக்களிடையே ஒற்றுமை இல்லை. சாதி மத ரீதியிலும் ஏழை, பணக்காரன் என்ற பேதத்தாலும் மக்கள் பிளவுபட்டு வலுவிழந்த நிலையில் உள்ளனர். அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் அநீதிகளை எதிர்த்துப் போராடினால் மட்டுமே தமிழ்நாடு பழைய சிறப்பை மீண்டும் அடைய வாய்ப்புள்ளது. இல்லையேல் அழிவு உறுதியே.


திரைப்படம்: மஸ் மாலினி
இசை: சலூரி ராஜேஸ்வர ராவ், பாரூர் எஸ். அனந்தராமன்
பாடியவர்: டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1947

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

தேனொடுபாலும் பெருக்கெடுத்தோடி
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி 
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
காதல் மணாளனை கருதியே நாடி
காதல் மணாளனை கருதியே நாடி
களித்துக் கூடியே பாடி ஆடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

AKR Consultants

unread,
Jul 3, 2015, 7:57:00 AM7/3/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல் 

ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் உலக விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்கிறது. அவ்வாறு கற்று ஒவ்வொரு விஷயமும் குழந்தையின் அறிவுக்குப் புலனாகுகையில் அது மகிழ்ச்சி கொள்வதுடன் தான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டதாகப் பெருமையும் கொள்கிறது. இதுவே ஆணவத்தின் அறிகுறி, அது தற்பெருமை வடிவத்திலே உருவாகி குழந்தை உடலாலும் மனதாலும் வளர்ச்சியடைகையிலே உடன் வளர்கிறாது.  இது ஒரு மயக்கமேயாகும். அறிவு மழுங்கி ஒரு மாயா உலகிலே மனிதன் சஞ்சரிக்கிறான். அம்மயக்கத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம் கிடைப்பதால் அவ்வின்பத்தை நுகரும் வேட்கையில் தன்னிலை மறக்கிறான். இவ்வாறு ஆணவம் வளர்கையில் மனிதன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணிக்கொண்டு பிறரை மதியாமல் தன் சுயநலம் பேணுவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அல்லல்படுகிறான். அத்தகைய லட்சியங்கள் நிறைவேறத் தடைகள் உருவாகும் போது கோபமுற்று அழிப் பாதையில் செல்லத் தலைப்படுகிறான்.

அறிவு மழுங்கி அழிவுப்பாதையில் பயணிக்கும் மனிதன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அதனால் ஏற்கெனவே இருக்கும் இவ்வுலக இன்பங்களை சற்றேனும் அனுபவிக்க முடியாமல் துக்கமுற்று வருந்தித் தீய செயல்களையே திரும்பத் திரும்பச் செய்து ஒரு மன நோயாளியாய் மாறிவிடுகிறான். துரதிருஷ்டவசமாக அத்தகைய மன நோயாளிகள் நாட்டை ஆளும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது, காரணம் மனிதர்களின் சுயநலம், காசு பணத்துக்காகவும், இலவச அரிசி, வேட்டி, சேலைகளுக்காகவும், சாதி மத உணர்வின் காரணமாகவும் மேலும் பல்வேறு அற்பக் காரணங்களுக்காகவும் தம்மை ஆள வருவோர் நல்லோராக இருக்க வேண்டும் எனும் அறிவை அறவே இழந்து தகுதியற்றவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதாலேயே இத்தகைய இழிநிலை உண்டானது.

மனிதன் இவ்வாறு ஆணவம் பெருகி அறிவிழக்கும் நிலையைத் தவிர்க்கவே பக்தி மார்க்கத்தை உலகெங்கிலும் முன்னோர்கள் அமைத்து நீதி நெறிகளையும் மனிதனது குறை நிறைகளையும் விளக்கி வந்தனர். அத்தகைய பக்தி மார்க்கத்தில் மனிதர்களில் மனம் செல்ல ஏதுவாகப் பல்விதமான புராண இதிகாசக் கதைகள் காலப்போக்கில் உருவாயின. அத்தகைய கதைகள் அவற்றை நூலாகத் தொகுத்து வழங்கிய புலமை மிக்க ஆன்றோர்களின் கைவண்ணத்தில் காவியங்களாக உருவாயின. 

அக்காவியங்களின் சொற்றிறம், பொருட்திறம் அவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கற்பனைச் சம்பவங்களை உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகவே யாரும் நம்புவதற்கேற்ற வகையில் மிகவும் உயர்வான நீதிகளுடனும் கவிநயத்துடனும் கருத்தாழம் மிக்கதாக அழகுடனும் விளங்கியதால் இடையில் சுயநலம் கொண்ட ஆஷாடபூதிகள் சிலர் அச்சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்தன என்றும், தங்களது மதத்தில் படைக்கப்பட்ட புராணங்களே சிறந்தவை என்றும் ஏனைய பிற மதங்களில் படைக்கப்பட்டவை பொய்கள் எனவும் பிரச்சாரம் செய்ய ஏதுவானது.

இத்தகைய ஆஷாடபூதிகளே இன்று நாடாள்கின்றனர். யோகம் என்றால் என்ன என்றே தெரியாத இவர்கள் உலகுக்கே யோகக் கலையைக் கற்றுத் தருபவர்கள் போல் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் பிற மதத்தினரை இழிவுபடுத்தும் செயல்களை இப்பிரச்சாரங்களின் வாயிலாக மேற்கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்பவே பல்வேறு மதங்கள் உருவாகிப் பல நாட்டு மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இம்மதத்தின் கொள்கைகளை ஆதியில் உருவாக்கிய ஆன்றோர் அவற்றை மனிதர்களை நல்வழிப் படுத்தும் உயர்ந்த நோக்கத்துடனேயே உருவாக்கினர். இடையில் அக்கருத்துக்களைச் சில சுயநலவாதிகள் திரித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வண்ணம் மாற்றி அமைத்தார்கள். அத்தகைய மாற்றங்களினால் ஏற்றுக்கொள்ள இயலாத பலவிதக் கட்டுக்கதைகளையும் திணித்து மனிதர்களைச் சாதி மத ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இத்தகைய சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்ட பகுத்தறிவுவாதிகள் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈவெரா பெரியாரும் அவரது தொண்டர்களும் மதம் சார்ந்த பொய்ப் பிரச்சாரத்தை மக்களுக்கு விளக்கி அவர்கள் அறியாமையில் மூழ்கி வருந்தி அடிமைத் தளையில் உழல்வதிலிருந்து தடுத்து அவர்கள் சுயநம்பிக்கையோடு தம் உழைப்பால் உயர வழிகாட்டினர். அவர்களுள் சுயநலம் கொண்ட சிலர் அப்பெரியாரது மெய்யன்பர்கள் போல் நடித்துப் பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் சுரண்டிச் சொத்து சேர்த்து இன்று தமிழ்நாடே ஒரு சுடுகாட்டுக்கொப்பாகச் சீரழிந்து கிடக்கும் நிலைமையெய்த ஏதுவாயினர். சாராயமும், சாக்கடை நாற்றமும், ஆற்று மணல் கொள்ளையும் ஆள்வோர் அராஜகமும் மக்களைப் பாடாய்ப் படுத்தி வாட்டி வதைக்கின்றன இன்று. இத்தகைய போலிகள் அடையாளம் காணப்பட்டு அழித்தொழிக்கப் படுவதொன்றே இன்றைய தேவை தமிழ்நாட்டுக்கு. இவர்கள் தமிழை செம்மொழியாக்கியதாக மார்தட்டிக் கொண்டு தமிழர்கள் இலங்கையிலும் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளிலும் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் தங்களது குடும்பத்தாரும் கூட்டாளிகளும் பதவிகள் பெறுவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய மத்திய அரசின் சதிக்குத் துணை போய் துரோகம் செய்து வருகின்றனர். அத்தகைய துரோகிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். 

இவர்கள் திராவிடர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டு தமிழர்களை அடிமைப்படுத்தி வந்த நிலை மாறும் வகையில் தற்போது பெரும் விழிப்புணர்வு நம் தமிழ் மக்களிடையே பரவி வருகின்றது. திராவிடர்கள் என்றால் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எனும் நான்கு மாநிலத்தவரும் அடக்கமாகும். இது வரை திராவிடர்கள் எனும் பெயரில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள் பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு. தமிழர்கள் செத்து மடிந்தால் இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இத்தகைய கொடியோர்களின் பிடியிலிருந்து தமிழகம் மீள வேண்டுமாயின் தமிழ் மக்களைத் தமிழர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் நிலை உருவாக வேண்டும்.

முக்கியமாக நம் தமிழ் மக்கள் திருப்பதிக்கும் சபரி மலைக்கும் பெரும்பாலும் சென்று வழிபடும் வகையில் விளம்பரங்களும் கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வரும் நிலையை மாற்றி நம் தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தை மேற்கொள்ளும் வகை செய்தல் மிகவும் அவசியம். அவ்வழியில் தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானைத் தம் முப்பாட்டன் என அங்கீகரிக்கும் புரட்சிமிக்க மாற்றம் பெரியாரின் தொண்டர்களில் விழிப்புணர்வு எய்திய பலரிடையே உருவாகியுள்ளது. பக்தி மனிதனை மேம்படுத்த வேண்டுமேயல்லாது சாதி மத ரீதியில் பிரிக்கக் கூடாது. அவ்வகையில் தேவர்களின் தலைவனாக விளங்கும் முருகன் தீண்டத் தகாதவர்கள் என்று அற்ப மனிதர்களால் கருதி ஒதுக்கி வைக்கப்பட்ட குறவர் சமுதாயத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து தேவேந்திர குமாரியான தெய்வானையுடன் சரிசமமாகக் கருதி வணக்கத் தக்க பெரிய இடத்தைக் கொடுத்தமை மிகவும் சிறப்புக்குரியது. சாதி மத பேதம் நீங்க முருகனின் கதைகள் பெரிதும் உதவுவதால் முருகன் வழிபாடு மிகவும் சிறந்ததே.

கலியுகத்தில் முருகனே தெய்வம்.முருகனைப் பாடினால் முக்தியடையலாம். முக்தி என்பது எல்லா வித அச்சங்களும், கவலைகளும், ஐயங்களும் நீங்கித் தெளிந்த நல்லறிவு பெற்ற நிலையேயாகுமேயல்லாது வேறில்லை. 

அறிவில் உயர்வோம்! அன்பால் இணைவோம்! நல்வாழ்வு கண்போம்! தமிழ்நாட்டை மீட்போம்! அத்தகைய சீரிய பணியில் நமக்குச் சக்தி தர சக்தி குமாரன் முருகவேளைப் பணிவோம்!



பாரம்பரியப் பாடல்
பாடியோர்: : பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
இசை:டி.ஏ. கல்யாணம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்
மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன் 
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா 
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள் 
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன் 
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Reply all
Reply to author
Forward
0 new messages