- தினம் ஒரு பாடல் - 1 Update
AKR Consultants <akrcons...@gmail.com>: Sep 24 02:43PM +0530
தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 23, 2014
இவ்வுலகில் பூதவுடல் கொண்டு வந்து விழுந்த நாள் முதல் என்றென்றும் ஓர் நாளும்
தவறிடாது இசையிலே மிதந்து என்தன் துயரெலாம் இசையென்னும் துணியினால் துடைத்தே
வாழ்ந்து வருகிறேன். இசையில் நான் மேதையில்லை எனினும் பல இசைமேதைகள்
வாய்ப்பாட்டும் வாத்தியங்கள் கொண்டும் வாசிக்கும் பாட்டெலாம் என் வாய்ச்
சொற்கள் வழியினானும் மனதினுள்ளும் எப்போதும் வாசித்தே மகிழ்ச்சியுடன்
வாழ்ந்திருக்க, குடந்தை மாநகரில் குடியிருந்தேன் சில காலம் (1980 முதல் 1985
வரை) என் அண்ணனுடன். அப்பொழுதொரு சமயம் அருகிலுள்ள திருவையாறு நகரில்
தியாகபிரம்மோற்சவம் நடைபெறக் கேட்டு அங்கே சென்று ஒரு நாள் முழுதும் பல பிரபல
இசை மேதைகள் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் பொழிந்த இசை மழையில் சுகமாய்
நனைந்து திரும்பினேன்.
சில காலம் கழித்து அக்குடந்தை மாநகர் தன்னில் நற்செயல் புரிந்து சேவை செய்வதே
தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழும் ஊர்ப் பெரியோர் ஒன்று சேர்ந்து தியாகராஜர்
நினைவைப் போற்றும் விதமாகக் குடந்தையிலே ஓர் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
அவ்விழாவில் டி.கே. பட்டம்மாள் அவர்களது சகோதரர் டி.கே. ஜெயராமன் மற்றும்
மஹாராஜபுரம் சந்தானம் முதலான பல இசை மேதைகள் வயலின் இசை மேதை குன்னக்குடி
வைத்தியநாதன் தலைமையில் பங்குபெற்று இசை மழை பொழிந்தனர். இடையில் ஓர்
அற்புதமான இசைக் கச்சேரியை அங்கு நான் கண்டும் கேட்டும் மனம் மிக மகிழ்ந்தேன்.
அது மாண்டொலின் ஸ்ரீநிவாசன் இசைமழை பொழிந்த கச்சேரி! என் வாழ்நாளிலேயே மறக்க
முடியாத அளவு மகிழ்ச்சியை அடைந்த நாள் அன்று தான்.
மாண்டொலின் எனும் மேல் நாட்டு இசைக் கருவியில் நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க
விஞ்ஞான ரீதியில் பன்னெடுங்காலமாக மேதைகள் பலர் கூடிப் பயிற்று வைத்த கர்நாடக
சங்கீதத்தைக் கரைத்துக் குடித்த பத்துப் பன்னிரண்டு வயதே நிரம்பிய மேதையாம்
ஸ்ரீநிவாசன் எனும் அச்சிறுவன் வாசித்த இசையைக் கேட்டு அங்கிருந்த மற்ற இசை
மாமேதைகள் உட்பட மக்கள் கூட்டமும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் திளைத்து ஒவ்வொரு
பாடல் முடிவிலும் இடையில் முக்கியக் கட்டங்களிலும் எழுப்பிய கரகோஷ ஒலி
இன்னமும் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
அதன் பின்னர் 1985 முதல் 1995 வரை சென்னை மாம்பலம் மற்றும் அம்பத்தூரில் நான்
என் மனைவியுடன் குடி புகுந்து வாழ்ந்து வந்தேன்.
1983 ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து பல்லாண்டுகள் குழந்தைப் பேறின்றியிருந்த
நானும் என் மனைவியும்
"நானொரு குழந்தை நீயொரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி"
என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி படத்திற்காகக் கவிஞர் வாலி
இயற்றி டி,எம். சௌந்தரராஜன் பாடிய பாடலுக்கேற்ப அது குறித்துப் பெரும்
கவலையேதும் கொள்ளாமல் வாழ்ந்து வரும் நாளில் என் மனைவி, பிள்ளைப் பேறு
வேண்டிப் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வரலாமென அழைத்ததால்
சென்றேன். அவ்வாறு செல்கையில் ஓர் நாள் வலசரவாக்கத்தில் உள்ள ஓர் ஆலயத்தில்
தன் மனிவியுடன் வந்த ஸ்ரீநிவாசனைக் கண்டோம். அழகிய மனைவி. திருமணமாகி சில
தினங்களே ஆகியிருக்கும் எனப் புரிந்து கொண்டேன்.
என்னைக் கண்டதும் புன்முறுவல் பூத்து அடையாளம் கண்டுகொண்டான் ஸ்ரீநிவாசன்.
வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்திச் சென்றோம். சில நாட்கள் கழித்துக்
காஞ்சிபுரம் சென்று காஞ்சிமாமுனிவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
மற்றும் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி பெற்ற பின்னர் எனக்கொரு மகன்
பிறந்தான். அதன் பின்னர் காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களது
100வது ஆண்டு நிறைவன்று அவருக்குத் தங்கக் காசுகளால் கனகாபிஷேகம் செய்வதைத்
தொலைக் காட்சியில் ஓர் நாள் கண்ட பின்னர் காலத்தின் கட்டாயத்தால் காஞ்சியில்
குடிபுகுந்தேன். காஞ்சியில் இருக்கும் கோவில்களிலும் சங்கர மடத்திலும்
ஆண்டாண்டு தோறும் ஸ்ரீநிவாசனின் மாண்டொலின் கச்சேரி தவறாது இடம் பெற்று வருவது
வழக்கம். என் மகன் அவனது பரம ரசிகன். கச்சேரி எப்பொழுது நடந்தாலும் தவறாது
சென்று முழுவதும் கேட்டுப் பின்னர் ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சில நிமிடங்கள்
அளவளாவி விட்டே வீடு திரும்புவது என் மகனின் வழக்கம்.
என் மகனுக்கொப்பான அந்த மாமேதை ஸ்ரீநிவாசனின் மரணச் செய்தி கேட்டு மனம்
மிகவும் நொந்தேன். நான் தமிழ் இலக்கணம் படித்திருந்தாலும் ஒரு கவிஞன் என்று
சொல்லுமளவு பயிலவில்லை. இருப்பினும் என் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவிதை
வடிவிலே ஸ்ரீநிவாசன் நினைவுக்காக அர்ப்பணிக்கிறேன்.
குடந்தையில் வாழ்ந்தகாலை கோபுரத் தரிசனம் பல்
குறையிலாக் கலைகள் கோவில் பூசைகள் தேரோட்டங்கள்
திருவிழாக் கோலம் பூண்ட உலகினில் மகிழ்ந்த நாளில்
திருவையாறு சென்றே தியாகபிரம்மோற்சவம் கண்டேன்.
தியாகோற்சவம் முடிந்து சிலதினம் கழிந்த காலம்
தியாகராஜர் நினைவில் நடந்ததோர் இசைவிழா அக்
குடந்தைமா நகரிலேயே கொண்டாட்ட மாகவன்றோ!
அவ்விழா தன்னிலேயோர் பாலகன் இசைத்தான் அந்த
மாண்டொலின் என்று சொல்லும் கருவியில் நம் சங்கீதம்
மனதிலே மகிழ்ச்சி பொங்க ரசித்திட்டேன் இசைவிழாவை
மாண்டொலின் ஸ்ரீநிவாசன் மனம்குடி புகுந்தான் பின்னர்,
நீண்டநாள் கழிந்தகாலை காஞ்சிமாநகரில் வாழ்ந்தேன்.
காஞ்சியின் கோவில் மற்றும் காஞ்சிமா முனிவர் வாழும்
கடவுளர் தொழுதென்றேத்தும் மடமதில் அவ்வப்போழ்து
மீண்டுமக் கருவிதன்னை மீட்டியே இசை பொழிந்தான்
மாண்டொலின் கருவி கண்ட மாமேதை ஸ்ரீநிவாசன்!
கலைமகள் ஈந்த மைந்தன் கண்மணி போன்ற பிள்ளை
கைகளில் மந்திரத்தை வைத்தது யார் என்றெண்ணி
மலைத்திட்ட காலமுண்டு முன்பொரு சமயந்தன்னில்
மலைப்புமே நீங்கி மைந்தன் இசையிலே மகிழும் நாளில்
திருமணம் முடிந்த பின்னர் இறவனின் அருளை வேண்டி
இருவரும் வந்த அந்த ஆலயம் தன்னில் என்றன்
மனவியும் நானும் வந்த சமயத்தில் என்னைப் பார்த்தே
மனமகிழ்ச் சிரிப்பு ஒன்றால் அறிந்திட்டான் என்னை மைந்தன்.
வாழ்கவே மனிவியோடும் பன்னெடுங்காலம் என்றே
வாழ்த்தினேன் அன்று பின்னர் ஒரு சில ஆண்டு காலம்
கடந்திற்றே கவலையேதும் இன்றியே வாழ்க்கை செல்ல
காலனின் கழுகுக் கண்கள் கடிதென வீழ்ந்ததாலோ
மைந்தனும் மனிவியோடு வாழ்ந்திட இயலாதென்னும்
மாபெரும் துன்பம் வந்தே மகனுமே துயரிலாழ்ந்தான்
இப்படிச் சிறிது காலம் ஏக்கமே மனதில் கொண்டே
இருந்திருந்தென்றும் வாடி என்ன செய்தானோ மைந்தன்?
திடுமென ஓர்நாள் அந்தச் செய்தியும் வந்ததே அத்
தீமையே தந்த செய்தி திடுக்கிட வைத்ததே என்
சிந்தையும் கலங்கிச் செய்கை மறந்திடும் நிலைவந்தே நான்
சிலையென ஆனேன் என்னுள் செய்வதறியாமையாலே.
"மாண்டொலின்" என்னும் சொல்லே மாண்டது இன்றே யென்று
மாபெரும் கலைஞன் சங்கர் மஹாதேவன் சொல்லக் கேட்டு
மனதிலே துயர வெள்ளம் மடைதிறந்தோடக் கண்டேன்;
மயக்கத்தில் மதியிழந்தேன் மற்றெஃதும் நாடா நின்றேன்.
இசையிலே மூழ்கி என்றும் உலகினை மறந்திருந்தேன்
இம்சைகள் ஒன்றே சேர்க்கும் அரசியல் மறக்கவென்றே;
இசையில் நான் வந்ததாலே ஏற்பட்ட மாற்றமிஃதோ?
என் விதி இசையுமிங்கே மாண்டதே இனி என் செய்வேன்?
அம்மாமேதை ஸ்ரீநிவாசன் இசைத்த பாடலொன்றை இன்றைய பாடலாகத் தருகிறேன். கருணை
தெய்வம் கற்பகவல்லி
You have received this digest because you're subscribed to updates for this group. You can change your settings on the group membership page.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizisai+...@googlegroups.com.