Fwd: தினம் ஒரு பாடல்

3 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Sep 4, 2014, 10:57:51 AM9/4/14
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 3, 2014
வாழ்க்கை வாழ்ந்தேயாக வேண்டும். வேறு வழி கிடையாது. பிறப்பில் தொடங்கிய எவ்வுயிரும் இறப்பினையடையவே வேண்டும் என்பது விதி. அதை மாற்றுமளவு சக்திவாய்ந்த மதி அந்த இறைவனுக்கும் கிடையாது. அந்த இறைவனே இந்த விதிக்குக் கட்டுப்பட்டு தேவைப்படுகையில் பிறப்பெடுக்க வேண்டும். ஒவ்வொரு பிறப்பிலும் மரணத்தையும் அடைந்தே தீர வேண்டும். இதன்படியே கடவுளர்கள் பல அவதாரங்கள் எடுப்பதாகப் புராண இதிகாசக் கதைகளில் எழுதப்பட்டிருக்கிறது. 

வாழ்ந்தேயாக வேண்டுமென்பது விதியானாலும் எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இவ்விருப்பத்தைத் தன் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. ஆயினும் அவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வழி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. மலை மேல் ஏறி மலை உச்சியில் வாழ விரும்புவோர் அவ்வளவு உயரமாயுள்ள இடத்தில் நிலவும் குளிரையும், காற்றுக் குறைபாட்டையும் போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும்.

அவ்வாறே நல்ல காரியங்களை மட்டுமே செய்து பிறர் யாவருடனும் அன்போடு பழகி மகிழ்ந்து இன்புற விரும்புவோர் தமது ஆணவத்தையும், சுயநல எண்ணங்களையும் மாற்றிக் கொள்வது அவசியம். பிற உயிர்களோடு கலந்து மகிழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல. எவனொருவனும் தனக்காக மட்டுமே வாழ முடியாது. தன் சுயநலத்தைத் தியாகம் செய்து பிறர் நலத்தைப் பேணும் பெருமனதுள்ளோர் தலைவர்களாகவும் வழிகாட்டியாகவும் பிறரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு என்றும் போற்றப் பட்டு இறைத் தன்மையை எய்துகின்றனர். ஏமாற்று வழிகளில் தலைவர்களாகிப் பிறரை சுரண்டி வாழும் பாபாத்மாக்கள் தாம் பாப வழியில் ஈட்டிய பொருள் எதனையும் அனுபவிக்கு முன்னரே இவ்வுலவை விட்டு இழிவுடன் சாகின்றனர் என்பதை நாம் அனைவரும் அன்றாடம் பார்க்கிறோம். ஆயினும் நமக்கும் அத்தகைய நிலை ஒரு நாள் நிச்சயம் வரும் என உணர்ந்து பிறர் நலம் போற்றி வாழ்ந்து புண்ணியம் தேடத் தவறுகிறோம்.

பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் அப்பிறவியின் பலனான முக்தியை எய்த வேண்டும். இல்லாவிடில் பிறந்த பிறவி பாழாகிப் போய்ப் பின்னர் குற்றறிவுப் பிறவிகளை அடைய நேரிடும். இதை யாரும் நம்ப வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. நம்பினோன் மோக்ஷமடைவான்; ஐயமுற்றோன் அழிவான்! அதில் எவ்வித ஐயமுமில்லை. முத்தி என்பது எல்லா வித துக்கங்களும், ஆசைகளும், பயங்களும், ஐயங்களும் அகன்ற ஓர் பேரின்ப நிலை. அதை இவ்வுடம்பினுடனேயே நாம் ஒவ்வொருவரும் அடைதல் சாத்தியமே! மனமிருந்தால் மார்க்கமுண்டு. முயற்சி செய்யுங்கள், முக்தி பெறுவீர்கள். இது உறுதி!

முக்தி பெறும் முயற்சியில் முதல் படி மனக் கட்டுப்பாடு. அதற்கு தெய்வபக்தி தேவை. பக்தியென்றால் இடையறாத பக்தி. ஒரு கணமும் மறவாது இறையருளை நாடும் நிலையை மனத்திலிருத்தி ஆணவமகற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனாலேயே நம் முன்னோர்கள் சிறு குழந்தைகளுக்கு முதலில் இறை வழிபாட்டை சொல்லித் தந்தனர். நாமும் அவ்வாறே நம் குழந்தைகளுக்கு தெய்வ பக்தியைப் புகட்ட வேண்டுவதுடன் அவர்கள் நம்மைப் பின்பற்றி வாழுமளவுக்கு என்றும் நாம் பக்திமான்களாக விளங்க வேண்டும். அதுவே நமது முக்திக்கும் நமது சந்ததியினரின் முக்திக்கும் வழி!



திரைப்படம்: சாது மிரண்டால்
இயற்றியவர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா
இசை: மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா
ஆண்டு: 1966

ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
அன்பின் திருவே அழகின் உறவே!
எல்லோரும் மகிழ்ந்திடவே
உன் கருணை வேண்டும்
உன்தன் எல்லையிலே
உலகமெலாம் வாழ்ந்திட வேண்டும்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

கோடையின் நிழலே குளிர்த்தென்றலே!
ஓடையின் புனலே ஒளியின் கனலே!

தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
பாயும் புலியையும் பரிவோடு காக்கவும்
பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

அம்பலத்தரசே அருமருந்தே!
ஆனந்தத் தேனே அருள் விருந்தே!

நீதிப் பாதையில் நேராகப் போகவும்
நேற்றுப் பாவங்கள் தூளாகப் போகவும்
சோதிக் கடலில் எந்நாளும் நீந்தவும்
சோதனை நதியில் வீழாமல் காக்கவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

--


Reply all
Reply to author
Forward
0 new messages