கருத்துக்கு நன்றி.  ஒவ்வொரு அத்தியாயத்திலும், இடமும், காலமும் குறிப்பிட்டுள்ளேன்.
முதல் பாகம் பொதுஆண்டு 2411 என்றும் குறிப்பிட்டுள்ளேன்.
அதிர்ச்சி நாடகத்துக்கான காரணங்கள்:
1.  நான் சென்னையில் குழந்தைகளுக்கான தமிழ்ப்புத்தகங்கள்  வாங்கச் சென்றபோது நிகழ்ந்தவை:  ஒரு புத்தகக் கடையில் நான் தமிழில் பேசினும், விற்பனையாளர் ஆங்கிலத்தில் பேசினார்.  அப்பெரிய கடையில் தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் இல்லை.  இரண்டாவது கடையில் தமிழ்ப் புத்தகப் பிரிவை நிர்வகித்த பெண்ணுக்கு இந்தியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.  அங்கிருந்த ஒரு தமிழ்ப்பணிப்பெண்ணிடம் அதைப்பற்றி விசாரித்தபோது, தான் கருப்பாக இருப்பதால், தனக்கு அந்த வேலை கிடைக்காது என்றும், அக்கடைக்கு வருபவர்களுக்கு இந்தி தெரிவதால், இந்தி மட்டும் தெரிந்த பெண் வேலை செய்வது விற்பனையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தாள்.
2.  கனடாவில் வசிக்கு என் நண்பர் தனது தமிழ்பேசும் மகனுக்கு மணமகள் தேடிச் சென்றபோது, தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த அப்பெண்ணுக்குத் தமிழ் தெரிவில்லை என்று அந்த நண்பர் என்னிடம் அலுத்துக்கொண்டார்.
3.  என் உறவினர் மகன் ஒருவன் என்னுடன் துணிக்கடைக்குச் சென்றபோது அங்கிருந்த விற்பனையாளர்களுடன் இந்தியில் பேசினான்.  அவர்களுக்கு நன்றாகத் தமிழ் தெரிந்தும்கூட.  அத் துணிக்கடை மேலாளர் வடவராக இருந்தும் நல்ல தமிழில் என்னுடன் பேசினார்.  
இக்காரணங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன.  நான் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற இருபத்தைந்தாண்டுகளில் சென்னையில் இப்படி நிகழ்ந்தால், நானூறு ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி மாறும் என்று எண்ணினேன்.  புதினத்தின் முதல்பாகத்தின் கரு உருவாகியது. இருபத்தைந்தாம் நூற்றாண்டில் அது நிகழ்கிறது.
தென்னகத்தையே ஒருகுடைக்குள் கோலோச்சிய மன்னர்களின் பேரரசு எப்படி அழிந்தது என்ற வரலாற்றைப் படித்தேன்.  இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகங்களுக்கான கரு கிடைத்தது.
தமிழன்னையுடன் கற்பனையில் பயணித்துப் புதினத்தை உருவாக்கினேன். அது பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை செல்கிறது.
அதிர்ச்சியுடன் தொடங்கினால்தான் வாசகர்கள் தொடர்ந்து படிப்பர்.  ஆகவேதான் முதலில் அதிர்ச்சி கொடுக்கும் முதல் பாகம் உருவாகியது.  தொடர்ந்து படியுங்கள்.  
நிறை குறைகளை எழுதுங்கள்.  அதுதான் எழுதிய எனக்கு உற்சாகத்தைத் தரும்.