கண்ணனது ஆயர்பாடியை அழகு செய்வோம் வாரீர்
பாகம் - 1 வ்ரஜபூமி ஒரு அறிமுகம்.......லீலாஸ்தலங்களின் மகிமை, காலப்போக்கிலான சீர்கேடு இதனை சீரமைக்க முயற்சிகள்.
அறிமுகம் :-
கண்ணன் மற்றும் ராதாராணி இவர்கள் பிறந்து வளர்ந்த வடமதுரையும் அதற்கடுத்த பகுதிகளான ப்ருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம், பர்ஸானா, நந்த்காவ் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ப்ரதேசம் வ்ரஜபூமி என்று அறியப்படுகிறது. எண்ணிறந்த குளங்கள், வனங்கள், மலைகள், கோவில்கள் மற்றும் மிகவும் பாவனமான யமுனா நதி போன்றவற்றால் சூழப்பட்ட பகுதி இது. காலப்போக்கில் இந்த ஸ்தலங்கள் பராமரிக்கப்படாது பாழடைந்து போய்விட்டன. பல்லாண்டுகளாக இவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு ஆசை இருப்பினும் முறையான கட்டுக்கோப்பான தலைமையும் விக்ஞானபூர்வமான அணுகுமுறையும் இல்லாமையால் இந்தப் பணி நிறைவேறாது இருந்தது. பர்ஸானாவில் வசிக்கும் பூஜ்ய ஸ்ரீ ரமேஷ் பாபா ஜீ மஹராஜ் அவர்கள் இந்தப்பணிகளுக்காக கடந்த நாற்பது வருஷங்களாகப் பாடுபட்டு வருகிறார். ப்ருந்தாவனத்தில் வசிக்கும் ஸ்ரீ விநீத் நாராயண் ஜீ என்ற புகழ் வாய்ந்த பத்திரிக்கையாளர் அவர்களுக்கும் இப்பணி ஒரு தணியாத தாகமாகும். பூஜ்ய பாபா ஜீ மஹராஜ் அவர்கள் ஸ்ரீ விநீத் நாராயண் ஜீ அவர்களது செயலூக்கத்தைக் கண்டு மகிழ்ந்து அவரை இப்பணிகளை நிறைவேற்ற ஊக்கப்படுத்தியுள்ளார். மிகவும் கடினமான இந்தப்பணி ஸ்ரீ பாபா ஜீ அவர்களது வழிகாட்டலிலும் ஸ்ரீ விநீத் நாரயாண் ஜீ அவர்களது தலைமயிலான ப்ரஜ் ஃபவுண்டேஷன் என்ற ஸ்தாபனத்தில் இணைந்து பணியாற்றும் ஒரு குழுவினராலும் முழுமையான ஆய்வுகளுடன் முறையாகவும் துரிதமாகவும் நடந்து வருகிறது.
இவற்றைப் பற்றிய அனைத்து விபரங்களையும் 15-20 நிமிடங்களில் விவரிக்கும் காணொளிகளாக / விழியங்களாக இது வரை 19 விழியங்கள் வலையேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்ரீ விநீத் நாராயண் ஜீ அவர்கள் விருந்தாவனத்து லீலா ஸ்தலங்களின் இன்றைய சீர்கேடான நிலை மற்றும் இவற்றை சீர் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளை விவரிக்கிறார். ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் நம்மை விழியங்களின் மூலம் அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு ஸ்தலமும் புனரமைக்கப்படுமுன் எவ்வாறு இருந்தன? புனரமைப்பதற்கு செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்ன? புனரமைக்கப்பட்ட பின் இந்த ஸ்தலங்கள் பின்னர் எவ்வாறு காட்சியளிக்கின்றன போன்ற விபரங்கள் படக்காட்சிகளாக இந்த விழியங்களில் காண்பிக்கப்படுகின்றன.
இந்த விழியக்காட்சிகள் அனைத்தும் ஹிந்தி மொழியில் ஸ்ரீ விநீத் நாரயண் ஜீ அவர்களால் விவரிக்கப்படுகின்றன. அதன் தமிழாக்கம் கண்ணன் கழலிணையை நண்ணும் மனமுடைய பரம பாகவதோத்தமர்களின் திருவடித்தாமரைகளில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த வ்யாசத் தொடர் இந்த விழியங்களின் சாராம்சமாகப் பகிரப்படுகிறது. இந்தப் பகிர்வின் உத்தேசம் இந்த உயர்வான பணியாகப்பட்டது இதில் அக்கறையுள்ள பல அன்பர்களை சேர வேண்டும் என்பதாகும். ஸ்ரீ வனத்தின் ஒவ்வொரு நீர்நிலையும் ஒவ்வொரு தருவும், செடி கொடிகளும், வனங்களும், ஆவினமும் மேலும் காலத்தை வென்று இன்றைக்கும் தீனமாக நிற்கும் கோவில்களும், கட்டிடங்களும், பாவனமான யமுனா நதியும்........ பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆர்வமுள்ள ஒவ்வொரு அன்பருக்கும் இந்த லீலா ஸ்தலங்களைப் பற்றிய விபரமும் இதைப் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றிய விபரமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்த வ்யாசம் பகிரப்படுகிறது.
அதற்கு மேலே......ஒவ்வொரு விழியத்திலும் காட்டப்படும் லீலா ஸ்தலங்களும் அதன் பின்னணியும் மனதை சொக்க வைக்கின்றன.
ஹிந்தி பாஷை தெரிந்தவர்கள் நேரடியாக விழியத்தைப் பார்க்கலாம். தெரியாதவர்கள் இந்த வ்யாசத்தை வாசித்து........ விழியக்காட்சிகளைப் பார்த்து மகிழலாம். ஸ்ரீ வினீத் நாராயண் ஜீ அவர்களும் மற்ற வ்ரஜவாஸிகளும் பகிரும் விஷயங்களை மேற்கொண்டு பார்ப்போம். நாம் பார்க்கும் விஷயத்தைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவினை நல்க வேண்டி ....... தேவையான கட்டங்களில் சற்று விரிவான விளக்கங்களை மேலதிகமாக கொடுத்திருக்கிறேன்.
முதல் விழியத்தின் உரல்
ராதே ராதே. ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா.
காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமாரி வரை குஜராத்திலிருந்து ஆஸாம் வரை கண்ணனுடைய பக்தர்கள் கோடானுகோடிப்பேர் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று விட்டாலும் கூட கண்ணன் பிறந்து வளர்ந்து ஆடிப்பாடிய ஆயர்பாடியையும் விருந்தாவனத்தினையும் யாரே மறப்பர்.
வ்ரஜபூமி என்று சுட்டப்படும் இந்த நிலப்பரப்பு, கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்த்தனம், நந்தக்ராமம் (நந்த்காவ்), பர்ஸானா போன்ற பல லீலா ஸ்தலங்களை உள்ளடக்கியது. இந்த லீலா ஸ்தலங்களைப் பற்றிய வர்ணனை ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது.
நம்முடைய குட்டிக் குட்டிக் குழந்தைகள் கண்ணனுடைய ஆனந்தம் தரும் பல லீலைகளைக் கேட்டுக் கேட்டு மகிழ்கிறார்கள் அல்லவா. அந்த லீலைகளுடன் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான லீலா ஸ்தலங்கள் அனைத்தும் இந்த வ்ரஜ பூமியில் உள்ளன. ஆயினும் காலப்போக்கில் பல ஸ்தலங்களும் பராமரிக்கப்படாது அழிந்து போய் வருகின்றன. அன்றாடம் கட்டப்பட்டு வரும் பல அடுக்கு குடியிருப்பு வீடுகளும், ஆச்ரமங்களும் புதிது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கோவில்களும் கண்ணனுடைய மூல லீலா ஸ்தலங்களை மறைத்து வருகின்றன என்றால் மிகையாகாது.
பல இடங்கள் சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு அவை இருந்த இடம் தெரியாது மறைந்து போகின்றன. இந்த லீலா ஸ்தலங்களைத் தேடிக் கண்டுபிடித்தல், அவற்றை புனர் நிர்மாணம் செய்தல் மேலும் அவற்றை மேற்கொண்டு பராமரித்து வருதல் என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் முடியாத பணியன்று.
த ப்ரஜ் ஃபவுண்டேஷன் (The Braj Foundation) என்ற ஸ்தாபனம் கடந்த சில வருஷங்களாக இந்தப்பணியில் ஈடுபட்டு வருகிறது. மேற்கொண்டு வரும் விழியங்களின் வாயிலாக கண்ணனுடைய பற்பல லீலா ஸ்தலங்களையும் இந்த ஸ்தாபனம் தர்சனம் செய்து வைக்கிறது. இந்த லீலா ஸ்தலங்களைப் பற்றி நாம் பலரும் பற்பல சாதுக்கள் மற்றும் சான்றோர்களின் சொற்பொழிவுகள் வாயிலாகக் கேட்டிருப்போம்.
வாருங்கள் இந்த வ்ரஜபூமியினுடைய மகிமைகளைப் பற்றியும் இதனுடைய இன்றைய நிலைமையைப் பற்றியும் விபரமாகப் பார்ப்போம். இந்த வ்யாசம் விழியத்தின் சாராம்சத்தைப் பகிருகிறது. கூடவே ஒவ்வொரு ஸ்தலத்தைப் பற்றிய விபரம் வருகையில் அங்கு நிகழ்ந்த லீலைகளைப் பற்றியும் சில வாசகங்களால் விளக்கி மேலே செல்லுகிறது. மேலதிகமான குறிப்புகள் அனுபந்தமாகக் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
....................
व्रजन्ति कावो यस्मिन्निति व्रजः
வ்ரஜந்தி காவோ யஸ்மின்னிதி வ்ரஜ:
எந்த இடம் பசுக்களின் வசிப்பிடமோ எங்கு பசுக்கள் மேய்கின்றனவோ அவ்விடத்தை ஸம்ஸ்க்ருதத்தில் வ்ரஜம் என்று அழைக்கின்றனர். புராணங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் சொல்லப்பட்டு இருக்கும் மதுராபுரியின் அருகில் இருக்கும் வ்ரஜ பூமி......... அதாவது நந்த மஹாராஜாவுடைய வ்ரஜ பூமி என்றழைக்கப்படும் நிலப்பரப்பு ......பசுக்கள் பெருமளவு பராமரிக்கப்படும் *கோஷ்டம்* என்றபொருளில் அறியப்படுகிறது.
இப்படி கோஷ்டம் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில் பசுக்கள் மட்டுமின்றி புள்ளிமான்களும் ஆடுமாடுகளும் மயில், குயில், குருவி போன்ற பறவையினங்களும் வசித்து இதை அழகு படுத்துகின்றன.ஆயினும் ஏனைய விலங்குகளை விட பசுக்களே இந்த வ்ரஜபூமியில் அதிகமாய் வசிப்பதால் *வ்ரஜ* என்ற சொல்லின் பொருள் பசுக்களுடன் சம்பந்தப்பட்டதாகவே அறியப்படுகிறது.
...................
நமது சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய கோதை நாச்சியாரும் கூட திருப்பாவையினிலே வ்ரஜபூமியை ஆய்ப்பாடியாகவும் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனால் ஆட்சி செய்யப்படுவதாகவும் கூறுதல் காண்க.
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
என்று இளஞ்சிங்கமான கார்மேனியுடைய அழகிய சிங்கத்தினை ஏத்துகிறாள் அன்றோ
......................
விருந்தாவனத்தினைச் சார்ந்த பரம பூஜ்யரான சாது ஸ்ரீ ராஜேந்த்ர தாஸ் தேவாசார்ய மஹராஜ் அவர்கள் ........அஷ்டசாப் கவிகளுள் ஒருவரான ஸ்ரீ சித் ஸ்வாமிஜி மஹராஜ் அவர்களுடைய வ்ரஜபூமியைப் பற்றிய ஒரு பாடலை வ்ரஜபாஷையில் பாடுகிறார் :-
आगे गाय पाछे गाय
इत गाय उत गाय
गायन मे गोविन्द को
बस वो हि भावे
ஆகே காய பாசே காய
இத் காய உத் காய
காயன் மே கோவிந்த கோ
பஸ் வோ ஹி பாவே
சுமாரான தமிழாக்கம் :-
முன்னும் பசுக்கள் பின்னும் பசுக்கள்
இங்கும் பசுக்கள் அங்கும் பசுக்கள்
பசுக்களிலே கோவிந்தனவன்
உறைவதாய் காண்பீர்ஐயே
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்ததாகிய வ்ரஜபூமி 84 கோச நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது கண்ணனுடைய உறைவிடமாகிய பரமதாமமாகிய கோலோகத்தினுடைய ஒரு அங்கமாகவே அறியப்படுகிறது. புராணங்களின் பாற்பட்டு வைகுண்டாதிபதியாகிய கண்ணன் தன்னுடைய மெய்யடியார்களுடன் கூடி எங்கு அவதரித்தானோ அந்த இடம் வ்ரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.
விருந்தாவனத்தில் உள்ள ஒவ்வொரு மண்ணின் துகளும் கூட கண்ணனுடைய லீலையுடன் சம்பந்தப்பட்டது என்றால் மிகையாகாது. கண்ணனுடைய பக்தர்களுடைய எண்ணப்பாங்குப் படி வ்ரஜபூமியில் வசிக்கும் ஒவ்வொரு க்ஷணமும் முக்திக்கும் கூட முக்தியளித்து விடும் என்ற நம்பிக்கை உடைத்தது.
मुक्ति कहे गोपाल को
मेरी मुक्ति बताओ
व्रज रज उड मस्तक लगे
मुक्ति मुक्त हुइ जावे
முக்தி கஹே கோபால் கோ
மேரீ முக்தி பதாவோ
வ்ரஜ ரஜ் உட் மஸ்தக் லகே
முக்தி முக்த் ஹுயி ஜாவே
முக்திதேவி கோபாலனிடம்
முக்தியெனக்கருள்வாயென்றாள்
வ்ரஜமண்துகளையுன் சிரஸில் சூடி
முக்தி நீ பெறுவாயென்றான்
இன்றைய திகதியில் வ்ரஜபூமியாகப்பட்டது மூன்று மாகாணங்களில் பரந்து விரிந்துள்ளது. உத்தரப்ரதேசத்தின் மதுரா ஜில்லாவிலும் ராஜஸ்தானத்தின் பரத்பூர் ஜில்லாவிலுள்ள தீக்(Dheeg) தாலுகாவிலும் (Tehsil) அடுத்துள்ள காமா (kama) தாலுகாவிலும் ஹரியாணாவின் பல்வல் (Palwal) ஜில்லாவில் உள்ள ஹோடல் (Hodal) தாலுகாவின் ஒரு பகுதியிலும் வ்ரஜபூமி பரந்து விரிந்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலையை வலம் வருதல் போல இங்கும் வ்ரஜபூமியில் உள்ள ஒவ்வொரு ஸ்தலத்தையும் வலம் வரும் வழக்கம் உள்ளது. அதன் படி விருந்தாவனம், கோவர்த்தனம், மதுரா மற்றும் பர்ஸானா போன்ற லீலா ஸ்தலங்களை பல பக்தர்களும் ஏகாதசி, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களிலும் மற்றும் மிகவும் ச்ரத்தையுள்ள பக்தர்களோவெனில் தங்களது நித்தியக் கடமையாகவே தினந்தோறும் கூட வலம் வருதலை ஒரு வழமையாகக் கொண்டுள்ளனர். முழு வ்ரஜபூமியும் 84 கோசம் அல்லது க்ரோசம் சுற்றளவு உடையது. ஒரு கோசம் / க்ரோசம் = 3.66 கி.மீ. முழு வ்ரஜபூமியையும் வலம் வருதல் என்ற வழமையும் கூட பக்தர்களிடத்தே காணப்படுகிறது. இப்படி வலம் வருதலை 84 கோஸ் யாத்ரா (சொராஸி கோஸ் யாத்ரா) என்று அழைக்கின்றனர். இது மிக நீண்ட நிலப்பரப்பாதலால் வாரக்கணக்காக மாதக்கணக்காக அந்தந்த லீலாஸ்தலங்க்ளில் தங்கி இந்த வலம்வருதலை பக்தர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.
முழு வ்ரஜபூமியிலும் கிட்டத்தட்ட 1300 க்ராமங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 600 க்ராமங்களோ எனில் கண்ணனுடைய லீலைகளுடன் சம்பந்தப்பட்டவையாக அறியப்படுகின்றன. அவற்றில் சிலக்ராமங்களின் பெயர்களைப் பார்க்குங்கால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட லீலைகள் நினைவுக்கு வரும்.
கண்ணனுக்கும் பலராமனுக்கும் பெயர் சூட்டியவர் கர்க முனிவர். இவர் வசித்த க்ராமம் காங்க்ரோல் (gangrol) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் சதுர்முக ப்ரம்மா கண்ணனுடைய பசுக்களைக் கவர்ந்து ப்ரம்மலோகத்தில் எடுத்துச்சென்று விட்டார். ஆயினும் அதை அறிந்த கண்ணனோவெனில் அவனே அத்தனை பசுக்களாகவும் ஆகி எதுவும் களவு போகாதது போல ஒரு லீலையைச் செய்தான் ஆய்ப்பாடியில். தன்னிடம் தான் களவு செய்து ப்ரம்மலோகத்துக்கு எடுத்துவந்த பசுக்களையும் விருந்தாவனத்தில் உள்ள பசுக்களையும் ஒருசேரப்பார்த்த ப்ரம்மாவுக்கோவெனில் ஒருக்ஷணம் தன்னிடமுள்ளவை அசலான பசுக்களா அல்லது விருந்தாவனத்தில் உள்ள பசுக்கள் அசலான பசுக்களா என்றே மதிமயக்கம் ஏற்பட்டதாம். அறியாப் பிள்ளையைப் போல விருந்தாவனத்தில் பசுக்களிடையே காட்சி அளித்த நந்தகோபன் குமரனது காலில் தன்னுடைய அபராதத்தை க்ஷமிக்குமாறு விழுந்து சதுர்முக ப்ரம்மா வணங்கியவுடன் அங்கிருந்த அனைத்து பசுக்களிலும் பக்ஷிகளிலும் மரங்களிலும் இலை கொடி செடிகளிலும் கண்ணனையே கண்டார். இந்த அற்புதமான காட்சியைக் கண்ட தருணத்திலேயே அவையாவும் மறைந்து பசுவைக் காணது அழும் சிறுபிள்ளை கண்ணனையும் கண்டார். இப்படி சதுர்முக ப்ரம்மாவுக்கு கண்ணன் காட்சி அளித்த இடம் சௌமுஹா (chaumuha) என்ற பெயரைத் தாங்கிய க்ராமமாக இன்று உள்ளது.
ராதாராணியினுடைய அஷ்ட சகிகள் என்று அறியப்படும் எட்டு தோழி மார் ஒரு சமயம் அவளுடன் யமுனைத்துறையில் உலாவுகையில் அருகில் இருந்த மலை ஒன்றின் மீதான பாறையில் தங்களுடைய விரல்களால் கீறி அதனின்று எடுக்கப்பட்ட மையினால் ராதையின் கண்களில் மையாக / அஞ்சனமாக அதை அலங்கரித்தனர். அஞ்சனத்தை ராதை கண்ணில் அலங்கரித்த இந்த லீலா ஸ்தலம் ஆஞ்ச்னோர் (aanjnor) என்ற க்ராமமாக அறியப்படுகிறது.
ஆய்ப்பாடியில் ஒரு சமயம் இந்த்ர விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அண்டா அண்டாவாக அன்னமும் வ்யஞ்சனங்களும் தயார் செய்யப்பட்டன. சிறு பிள்ளையான கண்ணன் இந்தப் பெரிய ஏற்பாடுகள் எதற்காக என்று நந்தபாபாவிடம் வினவினான். அவரும் இவையெல்லாம் இந்த்ர பூஜைக்காக என்று அவனுக்கு விளக்கினார். கண்ணனோவெனில் கடவுள் நமக்கிட்ட கட்டளைகளின் படி நாம் நம் வாழ்க்கையை நடத்தி வந்தால் தேவர்கள் அனைவரும் அவரவரது வேலையையும் கூட முறையே நடத்திவர வேண்டும் அல்லவா? பருவத்தே மழை பொழிய வேண்டும். காற்றடிக்க வேண்டும். வயல்களில் தானியங்கள் விளைய வேண்டும். அப்படி இருக்க இந்த்ரனுக்கு ஏன் தனியாக நாம் பூஜை செய்ய வேண்டும். இங்கு சமைத்த அத்தனை பொருட்களையும் இதோ நம்கண்முன் தெரிகிறாரே மலைவடிவினில் ஆன கடவுள். அவருக்கே நிவேதனம் செய்யுங்கள் என்றான். ஆயர்பாடியினிலோ எனில் கண்ணன் இட்டதே சட்டம். அவன் சொல்லை அனைவரும் அப்படியே ஏற்பர். அவன் சொல்லிய படி நந்தகோபனும் கிரிராஜன் எனப்படும் கோவர்த்தன மலைக்கே தயார் செய்யப்பட்ட அத்தனை அன்னத்தையும் வ்யஞ்சனங்களையும் நிவேதனம் செய்து வினியோகம் செய்தான். அதனால் பெருங்கோபம் அடைந்த இந்த்ரனோ எனில் ப்ரளய காலத்தில் பொழியத்தக்க அனைத்து மேகங்களையும் ஒருசேர ஏவி அவை அனைத்தையும் ஆயர் பாடியில் மழைபொழியச் செய்தான். ஆகாசத்தில் இருந்து மழைத்துளிகளோ எனில் ஒவ்வொரு தூண் தூணாக புவியில் விழ ஆரம்பித்தது. அனைத்து ஆய்க்குடியினரும் செய்வதறியாது கண்ணனையே சரண் புகுந்தனர். கண்ணனும் அருகே இருந்த கோவர்த்தன மலைக்குன்றினை தனது சுண்டு விரலால் தூக்கவும் அனைத்து ஆயர்குடிப்பெருமக்களும் அதன் அடியில் சரண் புகுந்தனர். தொடர்ந்து ஒரு வாரம் மழை பொழிந்து பொழிந்து மழையே ஆயாசம் அடைந்தது. கண்ணனால் ரக்ஷிக்கப்பட்ட ஆயர்பாடியினிலோ எனில் ஒரு குட்டிச்சுவர் கூட மழையினால் இடிந்து விழவில்லை. இதனால் கர்வம் அடங்கிய இந்த்ரனும் விருந்தாவனத்துக்கு வந்து கோவர்த்தன மலையின் மீது கண்ணனை சிங்காதனத்தில் அமர்த்தி தன் கரங்களாலேயே அபிஷேகம் செய்து கோக்களுக்குத் (பசுக்களுக்கு) தலைவன் .......இந்த்ரன்.... கண்ணனே ...... இவனே கோவிந்தன் என்று அறிவித்தான். அந்த கோவிந்த பட்டாபிஷேகம் நடந்த இடம் கோவர்த்தனம்.
கண்ணன் இந்த கோவர்த்தன மலையை எந்த இடத்தில் தன் சுண்டு விரலால் தூக்கியிருப்பான்? கோவர்த்தனத்தில் இருக்கும் ஒரு க்ராமமான பேடா (pEtha) இந்த லீலையுடன் சம்பந்தப்பட்டது. புராணங்கள் இந்த க்ராமத்தை ப்ரவிஷ்டிபுரம் என்று குறிப்பிடுகின்றன. இங்கு ஒரு சுரங்கம் இருக்கின்றது. இச்சுரங்கம் கோவர்த்தன மலையின் கீழே கிட்டத்தட்ட அதன் மத்ய பாகம் வரை செல்கிறது. பாலக்ருஷ்ணன் இந்தச் சுரங்கத்தில் சென்று அங்கிருந்து கோவர்த்தன மலையைத் தன் சுண்டுவிரலால் தூக்கினான் என்பது செவிவழி நம்பிக்கை.
இப்படி ஒவ்வொரு க்ராமத்தைப் பற்றியும் கண்ணனது லீலைகளுடன் சம்பந்தப்பட்ட சுவையான சம்பவங்கள் உண்டு.
வ்ரஜபூமியில் 84 கோச யாத்ரை என்று முழு வ்ரஜபூமியை வலம் வரும் வழமை உண்டு என்று பார்த்தோம் அல்லவா. அந்த யாத்ரையில் பங்கு பெற்று வ்ரஜத்தின் பல க்ராமங்களைக் கண்டு தரிசித்தவர்கள், இப்பகுதிகளில் சுதந்திரம் கிடைத்து 65 வருஷங்களுக்கு மேலாகியும், இன்னமும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்பதனையும் காணலாம்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த க்ராமங்களைப் புனரமைத்தால் அங்கு வசிக்கும் வ்ரஜவாசிகளுக்கு மட்டிலும் நன்மை உண்டாகாது. மாறாக உலகெங்கிலும் வசிக்கும் கண்ணனுடைய பக்தர்களுக்கு கண்ணனுடைய லீலா ஸ்தலங்களை தரிசிப்பதில் மன நிறைவு கிட்டும்.
வ்ரஜபூமியில் கிட்டத்தட்ட 1000 குண்டங்கள் (குளங்கள்) உள்ளன. ஹிந்தி பாஷையில் இவற்றை குண்ட் (kund) என்றும் ஸரோவர் (sarovar) குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு குண்டத்திற்கும் ஸரோவரத்திற்கும் ராதாக்ருஷ்ண யுகளம் (கண்ணன் ராதையுடைய ஜோடி) நிகழ்த்திய லீலைகளுடன் சம்பந்தமுண்டு.
உதாரணத்திற்கு இங்கு நாம் காணும் குஸும் சரோவர். ராதாராணி கண்ணனை இவ்விடத்தில் புஷ்பங்களால் அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறாள். இதைத் தவிர இக்குண்டத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. கண்ணன் தன் அவதார கார்யம் முடிந்தபிறகு த்வாரகையிலிருந்து தன் தாமமாகிய கோலோகத்திற்கு எழுந்தருளிய பின்னர் கண்ணனுடைய கொள்ளுப்பேரனான மதுராவின் அரசன் வஜ்ரநாபன் கண்ணனுடைய 16108 பட்டராணிகளுடன் இங்கு வந்து அவர்களை ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தைக் கேட்கச்செய்தர். புராணத்தைக் கேட்டல் நிறைவு பெறுகையில் கண்ணன் அவர்களுக்கு விச்வரூப தரிசனம் அளிக்க அவனது பட்டராணிகள் அனைவரும் அந்த ரூபத்தில் லயமாயினர் என்று சொல்லப்படுகிறது. ஆக இந்த ஸ்தலத்தை ஸதீ ஸ்தலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதைப்போல ஒவ்வொரு குண்டமும் ஸரோவரங்களும் ராதாக்ருஷ்ண லீலைகளுடன் சம்பந்தப்பட்டவை.
இவ்வாறான 1000 குண்டங்களில் இன்றைக்கு கிட்டத்தட்ட 200 குண்டங்களே எஞ்சியுள்ளன. மிகப்பல குண்டங்களில் பேருக்குக் கூட ஒரு சொட்டு நீரும் இல்லை. அவற்றின் கரைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. குண்டங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை குப்பைமேடுகளாக்கப்பட்டுள்ளன. க்ராமங்களினுடைய சாக்கடை பல குண்டங்களுக்கு மடை மாற்றப்பட்டு மிச்ச சொச்சம் குண்டங்களில் இருக்கும் மிச்ச சொச்ச நீரும் மாசுபடுத்தப்படுகிறது
இந்த அத்தனை குண்டங்களுடைய புனரமைப்பும் விஞ்ஞான ரீதியாக செய்யப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இக்குண்டங்களை புனரமைப்பதால் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயரும். அப்படி இவை புனரமைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் வ்ரஜவாசிகளது வாழ்வு பெருமளவில் முன்னேற்றம் காணும். வ்ரஜபூமிக்கு வரும் கண்ணனது பக்தர்களது மனமும் முறையாகப் பராமரிக்கப்பட்ட கண்ணனது லீலா ஸ்தலங்களைக் கண்டு களிப்புறும்.
இந்த வ்யாசத்தை வாசிக்கும் அன்பர்களில் பலரும் ராதாக்ருஷ்ண லீலைகளுடன் சம்பந்தப்பட்ட பல ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். சற்றே யோசித்துப்பாருங்கள். எந்த லீலையாவது ஒரு மாளிகையினுள்ளே அல்லது ஒரு கட்டிடத்தின் பின்னணியில் தீட்டப்பட்ட ஓவியமாக உள்ளதோ? இல்லையல்லவா? ஒவ்வொரு லீலையும் ஏதாவது குண்டத்திலோ ஸரோவரத்திலோ யமுனைக்கரையிலோ அல்லது ஏதேனும் ஒரு வனத்திலோ நிகழ்ந்தாதகவே நாம் சித்திரங்களில் பார்த்திருப்போம் அல்லவா? மேலும் இது பற்றிய விவரணங்களை நாம் பக்தி இலக்கியங்களிலும் கூட இவ்வாறே காண முடியும். ஆனால் மிகவும் விசனம் தரும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் குளங்களும், வனங்களும், மலைகளும் இன்றைய தினங்களில் மிக துரிதமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
வ்ரஜபக்தி விலாஸம் என்ற வ்ரஜ க்ரந்தத்தில் 137 வனங்களைப் பற்றி ப்ரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாமெல்லோரும் அறியும் ஸ்ரீ ப்ருந்தாவனம் இந்த வனங்களுள் ஒரு வனமாகும். இவற்றில் 48 வனங்கள் மிகவும் முக்யமானவை. 12 வனங்கள். 12 உபவனங்கள். 12 ப்ரதி வனங்கள் மற்றும் 12 அதிவனங்கள். காலத்தின் கோலத்தால் இந்த வனங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன. மரங்களாலும் செடிகொடிகளாலும் நிரம்பிய இந்த வனங்களெல்லாம் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக் கட்டிடங்களாலும் விண்ணை எட்டும் புதுப்புதுக்கோவில்களாலும் புதுப்புது ஆச்ரமங்களாலும் தன்னுடைய அசலான சோபையை இழந்து வருகிறது. வ்ரஜபூமி அதனுடைய புராணங்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றத்தை முழுதுமாக இழந்து வருகிறது.
வ்ரஜ பக்திவிலாஸத்தில் சொல்லப்பட்டுள்ள 137 வனங்களில் இன்று மூன்று வனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கேட்டால் உங்களது மனம் மிகவும் விசனமுறும். எஞ்சிய மூன்று வனங்களுடைய இன்றைய நிலையைச் சொன்னால் இன்னமும் ஆயாசமே மிகும். இவற்றினுள்ளும் இரண்டு வனங்கள் மிகச் சமீபத்திலேயே புனரமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒவ்வொரு வனங்களையும் குண்டங்களையும் நாம் மீட்டெடுக்க வேண்டும். அவற்றை அழகு படுத்த வேண்டும். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். கண்ணனும் ராதையும் ஒரு காலத்தில் இங்கு உலவிய போது இவை எந்த அழகுடன் விளங்கியது அதே அழகுடன் இந்த வனங்களையும் குண்டங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.
விருந்தாவனத்திற்கு சென்றுள்ள நம்மில் எத்தனை பேரில் கோவர்த்தனத்தைத் தவிர இங்குள்ள மற்ற பர்வதங்களை (மலைகளை) தரிசித்திருக்கின்றோம். நாம் இப்போது சொல்லப்போகும் இந்தச் செய்தியைக் கேட்டால் பலரும் வியப்புறுவார்கள். பாரதத்தில் எத்தனை மலைகள் உள்ளனவோ அவை அனைத்தின் நகல்களும் வ்ரஜபூமியில் உள்ளன. அது ஹிமாலயமாக இருக்கட்டும் விந்த்யாசலமாகட்டும், சேஷாசலமாகட்டும், த்ரிகூடமாகட்டும், கந்தமாதனமாகட்டும், மைனாகமாகட்டும். இவையனைத்திற்கும் நகல் உருவமான மலைகள் இங்கு வ்ரஜ பூமியில் உண்டு. இதைக்கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும் ஹிமாலயம் வடகோடியில் விந்த்யாசலம் மத்யபாரதத்தில் சேஷாசலம் (திருப்பதியை ஒட்டிய ஏழுமலைகளில் ஒன்று) தென் கோடியில். இப்படி இருக்கையில் இம்மலைகள் வ்ரஜபூமியை எப்படி வந்தடைந்தன.
இது ஒரு புராண ரஹஸ்யம். கடவுள் படைத்த படைப்புகள் 84 லக்ஷம் யோனிகள் அதாவது 84 லக்ஷ வகை ஜீவ ஜந்துக்கள் என்பது வைதிக சமய நம்பிக்கை. மலைகளும் இவற்றுள் ஒன்று. மலைகளும் பிறந்து வளர்ந்து முதுமை அடைந்து இறப்புக்கும் உள்ளாகின்றன என்பது வைதிக சமய நம்பிக்கை.
முதலாவது யுகமான ஸத் யுகத்தில் பெருமை வாய்ந்த மலைகள் பலவும் இறைவனிடம் தாங்களும் அவனது லீலைகளைக் காணவேண்டும் என்று வணங்கித் தெரிவித்தன. பகவானோ எனில், "என்னுடைய லீலைகளை வ்ரஜத்து கோப கோபியரே காண்பர்". ஆகையால் நீங்கள் அனைவரும் வ்ரஜத்துக்குச் செல்லுங்கள் என்றான். த்வாபர யுகத்தில் எப்போது நான் உங்களது அணுக்கத்தில் பசுக்களை மேய்ப்பேனோ எப்போது புல்லாங்குழல் இசைப்பேனோ எப்போது ராஸ நடனம் ஆடுவேனோ அப்போது என்னுடைய லீலைகளை நீங்களும் காண்பீர்களாக என்று வரமளித்தான். இதைக்கேட்டு அகமகிழ்ந்த அனைத்து ஆன்மீக உலகுடன் சம்பந்தப்பட்ட மலைகளும் வ்ரஜத்திற்கு வந்து அங்கேயும் உறைந்தன.
இதைப்பற்றி விவரிக்கிறார் ப்ருந்தாவனத்தை ஒட்டி இருக்கும் ராதாராணி பிறந்த ஊரில் நாற்பது வருஷங்களுக்கு மேலாக வசித்து வரும் பூஜ்ய ஸ்ரீ ரமேஷ் பாபா மஹராஜ் அவர்கள்.
வ்ரஜ பூமியில் காணப்படும் பர்வதங்கள் (மலைகள்) ப்ரம்மகிரி பர்வதங்கள் என்று அறியப்படுகின்றன. இந்த பர்வதங்களின் சிகரமோ எனில் ப்ரம்மதேவனின் முகமாக முகமாக பாவிக்கப்படுகிறது. சிவபெருமானின் வாகனமாகிய நந்திதேவரே நந்தக்ராமம் (நந்த்காவ்) என்ற க்ராமமாக உள்ளதாக அறியப்படுகிறது.
ஸ்காந்த புராணத்தில்
யத்ராஹம் பர்வதோ பூய பலக்ருஷ்ண ஸுதே நம : என்று சொல்லப்பட்டுள்ளது.
யசோதே நான் உன்னுடைய குழந்தையான கண்ணனின் திருவடிகளை தரிசிக்க பர்வதத்தின் உருவத்தில் இங்கு உறைந்து இருக்கின்றேன் என்று நந்தீஸ்வர பர்வதம் சொல்கின்றது.
ஸாக்ஷாத் கிரிராஜன் எனப்படும் கோவர்த்தன மலையோவெனில் விஷ்ணு ஸ்வரூபமாகும்.
இதைத் தவிர இங்குள்ள அனைத்து மலைகளும் கண்ணனின் லீலா ஸ்தலங்களாகவே அறியப்படுகின்றன. உலகத்தில் உள்ள அனைத்து உன்னதமான பர்வதங்களுக்கும் பகவான் வ்ரஜவாஸத்தை வரமாக அருளியிருக்கிறான். ஆதிபத்ரி, விந்த்யாசலம், கந்தமாதன பர்வதம், த்ரிகூட பர்வதம், மைனாக பர்வதம், ரோஹிதாசல பர்வதம், ஹிமாலயத்தின் நர பர்வதம், நாராயண பர்வதம் போன்ற உன்னதமான அனைத்து பர்வதங்களும் இங்கு வ்ரஜவாஸம் செய்கின்றன.
ஆனால் காலத்தின் கோலம் மிகவும் அவலமானது. கட்டிடங்கள் கட்டுவதற்காக நில மாஃபியாக்கள் டைனமைட்டுகள் வைத்து கண்ணனுடைய ஒவ்வொரு லீலா ஸ்தலமான மலைகளையும் வெடிக்கச் செய்து துண்டு துண்டுகளாக்கி அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு மிக நீண்ட போரட்டம் நடந்து வருகிறது.
வ்ரஜபூமியின் தீக் மற்றும் காமா பகுதிகளிலுள்ள மலைகள் சாஸ்த்ரங்களிலும் புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன.
யமதர்மராஜனுடைய சஹோதரியும் பகவான் கண்ணனது பட்டராணியுமான யமுனாதேவி ராதாக்ருஷ்ணர்களது பல லீலைகளை தரிசித்திருக்கிறாள். யமுனை நதியினில் யுகள்ஜோடி ஸர்க்கார் எனப்படும் கண்ணன் மற்றும் ராதையினது ஜோடி ஒருவரின் மீது ஒருவர் தண்ணீரை அடித்து ஜலக்ரீடை என்று சொல்லும்படியான லீலைகளை செய்திருக்கின்றனர். ராஸ நடனம் நடந்தது யமுனைக்கரையில் தான். கோபியரின் ஆடைகளைக் கண்ணன் களவு செய்ததான சீரஹரணம் (cheera haraNam - cheer haraN) லீலை நடந்தது யமுனைக்கரையிலேதான். ஆய்ப்பாடியில் உள்ள கோபியர் மண்குடங்களில் நீரை நிரப்பி தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் செல்கையில் அவற்றை கண்ணன் பின்னால் இருந்து கல்லால் உடைத்து குறும்பு மிக விளையாடியது இந்த யமுனைக்கரையில் தான்.
மோஹே பன் கட் பே நந்த்லால் சேடுகையோரே
மோரே நாஜுக் கலையா மரோட் கயோரே
யமுனைக்கரையில் கண்ணன் என்னை சீண்டி விட்டானே என்று கோபியர் சிணுங்குவதான மேற்கண்ட பாடல் கண்ணனது குறும்பான இந்த லீலையை வர்ணிக்கிறது.
யமுனைத்துரையாகப்பட்டது யமுனைத்துறைவன் மற்றும் ராதாராணி என்ற யுகள்ஜோடி ஸர்க்காரது பல லீலைகளுக்கும் சாக்ஷியாக இருந்தது. இன்றும் என்றும் இருந்து வருகிறது. யமுனையின் நீர் மிகவும் பவித்ரமானது. இது வெறும் நீர் மட்டுமன்று. ராதாக்ருஷ்ண யுகள ஜோடியின் திருமேனியில் சந்தனம் மற்றும் குங்குமப்பூவால் குழைத்து எழுதிய அங்கராகம் இவர்களுடைய வியர்வைத்துளிகளில் கலந்து ..........அந்த வியர்வைத் துளிகளை தன்வசம் வாங்கி...... பரிமளமான .....மிகவும் பவித்ரமான அமுதம் இந்த யமுனையின் தண்ணீர். இவ்வளவு பவித்ரமான மற்றும் மனிதர்களது யமபயத்தைக் கூட போக்க வல்ல யமுனா நதியாகப்பட்டது இன்றைய தினத்தில் மிகமோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ளது.
தில்லிமாநகரத்தில் மாசுபடுத்தப்படும் யமுனை தனது சுயசுத்திகரிப்புத் தன்மையை இழந்து சொல்லொணா அளவுக்கு அசுத்தமாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் யமுனையை இறந்த நதியாகவே குறிப்பிடுகின்றனர். இதில் தூய யமுனா நதியின் ஒரு சொட்டு கூட காணப்படுவதில்லை. தில்லியிலிருந்து யமுனை மாசுபடுத்தப்படுவது மட்டுமின்றி ஊரில் உள்ள அனைத்து சாக்கடைகளும் யமுனையிலேயே கலக்கப்படுகின்றன.
மஹேந்த்ர நாத் சதுர்வேதி என்ற சுற்றுச்சூழல் முனைப்பாளர் சொல்கிறபடி இப்போது ஓடும் யமுனை நதியில் கேட்மியம், க்ரோமியம், லெட் போன்ற உலோக தாதுக்கள் காணப்படுகின்றன. இவையாவும் புற்றுநோயை உண்டுபண்ணத்தக்கவை. கிட்னியைப் பழுது செய்யக்கூடியவை. இதய நோய் உண்டாக்கத்தக்கவை. மேலும் ஆர்ஸனிக் என்ற விஷக்கெமிகலும் இதில் காணப்படுகிறது. இது வெகு விரைவில் ரத்தத்தில் கலந்து பல தோல்நோய்களையும் உண்டு பண்ணுகிறது.
இங்கு வசிக்கும் வ்ரஜவாஸிகளும் சாதுக்களும் யமுனையை சுத்திகரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த இருபது வருஷங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். பற்பல அரசுகளிடம் மன்றாடி வருகின்றனர்.
இந்த இயற்கை எழில் மிகுந்த நதி, குண்டங்கள், ஸரோவரங்கள், வனங்கள் இவற்றைத் தவிர வ்ரஜபூமியில் 6000த்துக்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுக்காலங்களில் இவை கட்டப்பட்டன். கடவுள் நம்பிக்கையற்ற ஆததாயிகளான பல அரசர்களால் இவை தாக்குதலுக்கு உள்ளாகியும் காலப்போக்கில் மேற்கொண்டு முறையான பராமரிப்பு இல்லாமல் போனதாலும் இந்தக் கோவில்கள் பலவும் பாழடைந்து வருகின்றன. இந்தக் கோவில்களின் புனரமைப்பும் கூட வெகுகாலமாக செய்யப்படாமல் உள்ளது. இவை விரைந்து செய்யப்பட வேண்டும். இயற்கையுடன் ஒன்றிய வ்ரஜபூமியின் பாரம்பர்யத்தை யாருமே லட்சியம் செய்வதில்லை என்பது மிகவும் துரத்ருஷ்டமான விஷயம்.
இவை அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
பரம விரக்தரான பூஜ்ய ஸ்ரீ ரமேஷ் பாபாஜீ மஹராஜ் அவர்கள் இவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று துடிப்புள்ள பல அன்பர்களை ஒருங்கிணைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். உலகிற்கு இந்த நிலமையை எடுத்துச் சொல்லுவதற்காக, "ஊதௌ மோஹே ப்ரஜ் பிஸ்ரத் நாஹீம்" என்ற பெயரில் 2003 ம் வருஷம் வ்ரஜத்தின் நிலைமை ஒரு குறும்படமாக எடுக்கப்பட்டு பல டி.வி சேனல்களில் இது ஒளிபரப்பப்பட்டது.
இதற்குப்பின்னர் த ப்ரஜ் ஃபவுண்டேஷன் என்ற நமது ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு உடனேயே வ்ரஜத்தில் உள்ள ஒவ்வொரு கோவில், குண்டம், ஸரோவர், வனம், பர்வதம் இவற்றைப்பற்றிய விக்ஞான பூர்வமாக ஸர்வே எடுக்கப்பட்டது; இந்த அனைத்து ஸ்தலங்களைப் பற்றி முழுமையான ஆய்வு நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு ஸ்தலமும் ஒன்றன் பின் ஒன்றாக ஜீர்ணோத்தாரணம் (புனர்நிர்மாணம்) செய்யப்பட்டது. செய்யப்பட்டு வருகின்றது. புனரமைக்கப்பட்ட ஒவ்வொரு ஸ்தலமும் முறையாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. இவை ப்ரஜ் ஃபவுண்டேஷன் (The Braj Foundation) என்ற ஸ்தாபனத்தின் மேற்பார்வையில் நிகழ்ந்து வருகின்றன. இந்த விழியங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுமுன்னர் இவை பொதுமக்களுடைய பார்வைக்கு முறையாக எடுத்துச்செல்லப்படவில்லை.
நமது ஸ்தாபனமான ப்ரஜ் ஃபவுண்டேஷன் தன் பணியைத் துவக்கியது முதல் மிகப்பல பணிகள் நிகழ்ந்துள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் மற்ற பாகங்களில் வ்ரஜபூமியில் உள்ள கண்ணனது ஒவ்வொரு லீலா ஸ்தலங்களின் மகிமையைப் பற்றியும் விவரிப்போம். அந்த ஸ்தலங்கள் எவ்வாறு பாழ்ப்பட்டு இருந்தன என்பதனைக் காண்போம். இவற்றின் புனரமைப்பு, அழகுபடுத்தல் மற்றும் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விபரமாகக் காண்போம்.
பாகவதக் கதைகளை நீங்கள் பந்தல்களில் சொற்பொழிவாளர்கள் மூலமாகவும் தொலைக்காட்சிச் சேனல்கள் வழியாகவும் கேட்டிருக்கலாம்; பார்த்திருக்கலாம். ஆனால் கண்ணன் நிகழ்த்திய லீலைகள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஸ்தலத்தையும் நமது விழியங்கள் மூலமாக முதன்முறையாக நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள்.
இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு வ்ரஜபூமி ஏன் இப்படி பாழடைந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி எழும். இந்த நிலைமை சீர்செய்யப்பட முடியுமா என்ற கேள்வியும் எழும். இதுவரை இந்த ஸ்தலங்கள் சீர்செய்யப்படாததன் காரணம் நிதிப்பற்றாக்குறையாலா? இவற்றை சீர்செய்ய வேண்டும் என்ற மன உந்துதல் இல்லாமையாலா? அல்லது இவை அனைத்தும் இருந்தும் இவற்றை செய்து முடிக்கக் கூடிய ஒரு கட்டுக்கோப்பான தலைமை இல்லாமையாலா? என பல கேள்விகள் எழும். இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்களும் விளக்கங்களும் வர இருக்கும் மற்ற விழியங்களில் உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் நாமும் இந்த விழியங்களைப் பார்க்கும் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கண்ணனது ஆய்ப்பாடியை புனர்நிர்மாணம் செய்து அதை அழகு படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இதை அடுத்து வரும் ஒவ்வொரு விழியத்தையும் காணத் தவறாதீர்கள். ராதே ராதே.
அனுபந்தம் :-
1. விருந்தாவனத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட கண்ணனின் பக்தர்களுள் பெருமை வாய்ந்த அஷ்டசாப் கவிகள் என்று அறியப்படும் எட்டுகவிகளும் அடங்குவர். இவர்களுள் ஸ்ரீ சூர்தாஸ் ஜி, ஸ்ரீ கும்பன தாஸ் ஜி, ஸ்ரீ க்ருஷ்ணதாஸ் ஜி, ஸ்ரீ பரமானந்த தாஸ் ஜி ஆகிய இவர்கள் நால்வரும் ஸ்ரீ வல்லபாசார்யருடைய சீடர்கள் ஆவர். ஸ்ரீ கோவிந்தஸ்வாமி ஜி, ஸ்ரீ சித்ஸ்வாமி ஜி, ஸ்ரீ நந்ததாஸ் ஜி, ஸ்ரீ சதுர்புஜ தாஸ் ஜி ஆகிய இவர்கள் நால்வரும் ஸ்ரீ குஸாய்ஜி அவர்களுடைய சீடர்கள் ஆவர். புஷ்டி மார்க்கம் என்று அறியப்படும் க்ருஷ்ணபக்தி இயக்கத்தை நமக்கு அருளிய மஹான் ஸ்ரீ வல்லபாசார்யார் ஆவார். அவருடைய இளைய மகனாகிய ஸ்ரீ விட்டலநாதர் அவர்களையே குஸாய் ஜி (Gusainji) என்று அழைக்கிறோம்
2. வ்ரஜ பூமியில் இருக்கும் பன்னிருவனங்களாவன. பத்ரவனம், பில்வவனம், லோஹவனம், பாண்டீரவனம், மஹாவனம், மதுவனம், தாலவனம், குமுதவனம், பஹுலவனம், காம்யவனம், காதிரவனம், ப்ருந்தாவனம் (விருந்தாவனம்)