இணையத்தின் தமிழ் குழுமங்களில் எழுதிக் கொண்டிருந்த நேரம் அறிமுகமானவர். பாலமுரளி என்ற குழும சகோதரர் மூலம் நான் ஆரம்பித்த தமிழ் பிரவாகத்திலும் எழுதத் தொடங்கினார். கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தார்.
இருவரும் அடிக்கடி கூகிள் சாட்டில் பேசிக் கொண்டிருப்போம். ஒரு குழந்தை அம்மா வடிவில் இருந்து பேசுவது போல் தான் அவருடன் சாட்டிங்கில் இருக்கும் போது உணர்வு வரும்.அத்தனை குதூகலமும், அன்புமாய் பொழியும் அவர் பேச்சில். என்னுடன் எப்போதுமே அரசியல் பேசாத ஒருவர் அவர் மட்டும் தான். இரட்டை அர்த்தங்களிலோ, பூடகமாகவோ யாரும் பேசினால் புரிந்து கொள்ள மாட்டார். அத்தனை குழந்தை மனசு. என்னைப் போலவே அவருக்கும் ஆஸ்துமா இருந்ததால் எப்பவும் என்னை அக்கறையாக விசாரிப்பார். ஆஸ்துமாவை மட்டுப்படுத்த வேண்டிய அறிவுரைகள் சொல்வார்.
மிகவும் ஸ்டைலிஷான பெண்மணி. சங்கீதம், நாகரீகம், அதே சமயம் கடவுள் பக்தி மிகுந்தவர்.
எத்தனையோ ஆன்மீக கட்டுரைகளும், கவிதைகளுமாய் எழுதியிருக்கிறார், பழைய குழுமப் பதிவுகளை எடுத்து படிக்கும் போதெல்லாம் விசாலம் அம்மாவின் ஒரு கட்டுரையோ கவிதையோ கண்ணுக்கு தட்டுப்படாமல் விடாது.
திடீரென்று ஒருநாள் விசாலம் அம்மா இறைவனடி சேர்ந்தார் என்று தகவலை குழுமத்தில் படித்த போது என்னவென்று சொல்ல முடியாத பாரம்..மனசை இறுக்கிவிட்டது. இன்று வரை நம்பவியலாத மறைவுகளில் அம்மாவின் மறைவும் ஒன்று.
நல்ல ஒரு பதிவாளர், பலவிதங்களில் கலைத் திறமை மிகுந்தவர், புதிய விசயங்கள் அறிவதில் மிகவும் ஆர்வமானவர். குழந்தை போல் புதியவற்றை பார்க்கும் குதூகலமான ஒரு அம்மா ! வெறும் கணனி உரையாடல்களும் , அவருடைய குழுமத்தில் அவரால் படைக்கப்பட்ட எழுத்துகளும் அவரை இந்தளவில் மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்தது. என்றாவது நாமும் ஒருநாள் தமிழகம் போவோம்...அங்கு ஒரு குழும நண்பர்கள் சந்திப்பு நிகழும். அப்போது விசாலம் அம்மாவையும் சந்திக்கலாம் என்ற ஒரு ஆசை கலந்த நம்பிக்கை , எதிர்பார்ப்பு வெறும் கனவாக போய்விட்டது..
இன்று அவருடைய பிறந்தநாள். வருடா வருடம் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்ததும் அவரிடமிருந்து நன்றி சொல்லி ஒரு கடிதம் பேர்ஸனலாக வரும். இப்போது அவர் நம்மோடு இல்லை. அவருடைய பிறந்தநாளான இன்று நான் எழுதும் இந்தப் பதிவை படிக்க அவரும் இல்லை. என்றாலும் அவரைப் பற்றி நினைக்காமலோ, அதை யாருடனாவது பகிராமலோ கடந்து செல்ல மனம் வரவில்லை…! என்னைப் போல் அவரை மறக்க முடியாதவ்ர்களின் மனநிலை இன்று இப்படித் தான் இருக்குமென்று நம்புகின்றேன்..!!
அம்மாவின் ஆத்மா எங்கிருந்தாலும் எங்களை ஆசீர்வதிக்கும் என்ற நம்பிக்கையுடன்…