(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010):தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010)
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். செம்மொழி ஏற்பளிப்பால் விளையும் நன்மைகள் யாவை என நான் உட்படப் பலரும் எழுதிய கட்டுரைகளைப் படித்தாலே அவை யாவும் காற்றில் கட்டிய கோட்டைகளோ என்று எண்ணத் தோன்றும். எனினும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது இவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் அரசுகள் இறங்கும் என நம்பிக்கை வைப்போம்.
? இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் கொடுத் துள்ளார்களே. அது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே?
# நாம் மேம்போக்காக எண்ணுவதால் நமது உரிமைக்கு ஊறு நேர்வதை உணராமல், உலகின் மூத்த மொழியான செந்தமிழுக்கு உரிய சமநிலை மறுக்கப்படுவதை உணராமல் பெருமையாக எண்ணுகிறோம். 2005-06 முதல் மூன்றாண்டுகளுக்கு ஆண்டிற்கு ஐவர் என்ற அளவில் பதினைந்து இளம்அறிஞர்களுக்கு விருதுத்தொகை நூறாயிரம் உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பிற மொழிஅறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் அவர்கள்தாம் வழங்குகின்றார். குடியரசு நாளன்று வழங்க முடியாமல் போனாலும் பிறகு பல்வகை விருதுகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றது போல் இளம்தமிழறிஞர் விருது வழங்குவதை நிகழ்த்தியிருக்கலாம். மாண்புமிகு முதல்வர் தில்லி சென்ற பொழுதுகூட இந்நிகழ்ச்சியை வைத்து இருந்திருக்கலாம். அவ்வாறு தராமல் காலந் தாழ்த்தியதால் தமிழக அளவில் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன; ஆனால் விருதுச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. 2004-05 ஆம் ஆண்டிற்கான விருதுகளும் சேர்க்கப்படவில்லை. 2005-06 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதும் 2006-07 ஆம் ஆண்டிற்கான குறள்பீட விருதும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஆண்டு வழங்கப்பட வேண்டிய விருதுகள் தரப்படவில்லை. இவ்வாறு விடுபட்டமைக்கு ஏதும் நடைமுறைக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதைவிட முதன்மையான ஒன்றாகும். ஆண்டிற்கு 15 சமற்கிருத அறிஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் தொடர் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பாலி அல்லது பிராகிருத அறிஞர் ஒருவருக்கும் அரபு அறிஞர் மூவருக்கும் பெருசியன் அறிஞர் மூவருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் ஆண்டுதோறும் மதிப்பூதியம் 50,000 உரூபாய் வழங்கப்படுகிறது. 2002 இலிருந்து, 8 சமற்கிருத இளம் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை விருதுத்தொகையாக உரூ1.00 நூறாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சமற்கிருதத்திற்கு ஒருமுறை மதிப்பூதியமும் ஆண்டுதோறும் மதிப்பூதியமும் என 23 பேருக்கு வழங்குகையில் தமிழுக்கு ஒருமுறை மதிப்பூதியம் மட்டும் ஐவருக்கு மட்டுமே வழங்கப்படுவது அநீதியல்லவா? எனவே, ஒரு வேளை தமிழுக்குச் செம்மொழி ஏற்பால் நிதியுதவி வழங்கப்படுகின்றது என்றால் அவ்வுதவி தமிழைத் தாழ்த்தும் வகையிலும் நம் உரிமையைப் பறிக்கும் வகையிலும்தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
? வேறு ஏதும் சமற்கிருத மொழி வளர்ச்சிக்கென உதவிகள் வழங்கப்படுகின்றனவா?
# தமிழுக்கு இளம்அறிஞர் விருதுகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. ஆனால், சமற்கிருதத்திற்கு எண்ணற்ற வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மற்றொரு சமசுகிருத அமைப்பின் மூலம் ஏழு பிரிவுகளில் எண்மருக்கு ஆண்டுதோறும் உரூபாய் 21,000 முதல் உரூபாய் 51,000 வரை பொற்கிழியும் வெள்ளிக் கலசமும் பொன்னாடையும் மேலாடையும் பாராட்டுரையும் வழங்கப்படுகின்றன. அகில பாரதிய சமசுகிருதச் சேவை சன்மானம், அகில பாரதிய ஆயுர்வேதச் சன்மானம், அகில பாரதிய சோதிட சன்மானம் எனப் பலவகைகளில் சமற்கிருதம் படிப்பவர்கள், அறிந்தவர்கள், படிப்பிப்பவர்கள், எழுதுபவர்கள், பதிப்பவர்கள், மொழிபெயர்ப்பவர்கள் என அனைத்துத் தரப்பாருக்கும் நிதி யுதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமசுகிருத் சன்மானம் மூலம் நிதியளிக்கப்படுகின்றது. 100 விழுக்காட்டுத் தேர்ச்சியைத் தரும் சமசுகிருத ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. இந்தியா முழுமையும் 30 நிறுவனங்களுக்குச் சமசுகிருதப் பயிற்சிக்கும் பரப்புதலுக்கும் என ஆண்டுதோறும் பத்துக்கோடி உரூபாய்க்கும் மேலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. பகுதிநேரம் சமசுகிருதம் கற்பிப்போருக்கான ஊதியத்தை மத்திய அரசே தருகின்றது. நூல்கள், குறுந்தகடுகள், ஒளிப்பேழைகள், அட்டவணைப் படங்கள், விளம்பர ஒட்டிகள் முதலான பல்வகை வெளியீடுகளுக்கென கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துவருகின்றது. சாத்திர சூடாமணித் திட்டம் என்ற பெயரில் ஓய்வு பெற்ற சமசுகிருத ஆசிரியர்களுக்குப் பணிநீட்டிப்பு வழங்கி சமசுகிருதம் கற்றுத் தரச் செய்வதற்கு எனத் திட்டச் செலவில் 17.00 கோடியும் திட்டம் சாரா செலவில் 16.50 கோடியும் ஒதுக்கப்படுகின்றன.
இவை தவிர சமற்கிருத வளர்ச்சித் திட்டத்திற்கென நடைமுறையில் உள்ள திட்டங்களுக்காக 11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 32,985 நூறாயிரம் உரூபாய் ஒதுக்குவதற்குத் திட்டம் தீட்டியுள்ளார்கள். புதிய திட்டங்கள் தலைப்பில், சமசுகிருதம், பாலி, பிராகிருதம், பெருசியன், அரபி, திபேத்தியன் மொழிகளுக்கான கல்விக்கென ஒதுக்கீடு கோரியுள்ளனர். இதில் தமிழுக்கு ஒதுக்கீடு இல்லை. இவ்வாறாகச் செவ்வியல் மொழி என்ற போர்வையில் சமசுகிருத வளர்ச்சிக்குச் செலவிடும் ஒட்டு மொத்தத் தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுகூடத் தமிழுக்கு ஒதுக்கப்படவில்லை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 714 -718 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 719 -722
கற்பழிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற அளவுகடந்த பேரச்சம் கன்னிமை வெருளி.
கற்பழிப்பு வெருளி, கற்பிழப்பு வெருளி, கன்னியமை யழிப்பு வெருளி, கன்னிமை வெருளி என நால்வகையாகக் குறிப்பிட்டாலும் பொருள் ஒன்றுதான். எனவே சேர்த்தே தரப்பட்டுள்ளது.
தனியாகவோ, கூட்டாகவோ கற்பழிக்கப்படுவோம் என்ற பேரச்சத்திற்கு ஆளாகி இரவில் வெளியே செல்வதைத் தவிர்ப்பர். இது போன்ற செய்திகளைப் படிப்பதாலும் பார்ப்பதாலும் அறிந்தவர்க்கு இத்துன்பம் நேர்ந்துள்ளதை அறிய வருவதாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
வாடகை ஊர்தியில் செல்லும் பொழுது, தனியே பேருந்திற்குக் காத்திருக்கும் பொழுது, தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது எனப் பல சூழல்களிலும் கயவர்களாலும் ஒருதலைக்காதலால் கேடுறு மனத்தினராலும் நிருபயா போன்றவர்களுக்கு நேர்ந்த கதி தனக்கும் ஏற்படும் என்று மிகையான பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
கற்பித உயிரி(cryptid)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கற்பித உயிரி வெருளி.
(கற்பித உயிரி – ஆதாரமற்ற வாழ்வுயிரி )
சில வகை அச்சுறுத்தும் உயிரிகள் வாழ்வதாகவும் அவற்றைப் பார்த்ததாகவும் அவற்றால் துன்பங்கள் நேரும் என்றும் கற்பித்துக் கொண்டு சொல்வோர் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றைக் கேட்டு நம்புபவர்களுக்கும் பேரச்சம் வருகிறது.
00
கற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கற்றல் வெருளி.
Sophia என்னும் கிரேக்கச் சொல்லுக்கு அறிவு எனப் பொருள். இங்கே அறிவைப் பெறுவதற்கான கற்றலைக் குறிக்கிறது.
00
கனமாழை இசை(Heavy Metal music) குறித்த வரம்பற்ற பேரச்சம் கனமாழை இசை வெருளி.
கனமாழை இசைகேட்பவர்களுக்குச் சினமும் மனஅழுத்தமும் வருகிறது எனக் கேள்விப்பட்டு இவ்விசை குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5