(சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 701-710
701. Actuary | பத்திரச் சான்றர் பத்திரச் சான்றாளர் காப்பீட்டு ஆலோசகர் காப்பீட்டு அறிவுரைஞர் காப்பீட்டு மதிப்பீட்டாளர் வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர். (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1) |
702. Actuate | தூண்டு செயல்படுத்து ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச் செயல் நிகழ உந்துதலாகவோ தூண்டுதலாகவோ இயக்குவதாகவோ அமைவதைக் குறிக்கும் குற்றச் செயலாகிறது. |
703. Actus Curiae Neminem Gravabit | நீதிமன்றச் செயல்பாடு ஒருசார்பற்றது. நீதிமன்றச் செயல்பாடுகள் ஒருதலைச்சார்பின்றி இருக்க வேண்டும் என்பதை இப்பொன்மொழி உணர்த்துகிறது. “ஒருதலை யுரிமை வேண்டியும்” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், 225). எனவே, ஒரு தலை என்பதற்கு உறுதி என்றும் பொருளுண்டு. திருவள்ளுவரும் ஒருதலை (திருக்குறள் 357) என்பதை உறுதி என்னும் பொருளில் குறித்துள்ளார். இங்கே ஒரு தலை என்பது முற்சாய்வு, ஒரு பாற்கோடல்(பாரபட்சம்), சார்பெண்ணம், முற்சார்பு, முற்கோள் என ஒரு பக்கமாக முடிவெடுத்தலை – நீதி வழங்கலைக் – குறிக்கிறது. அவ்வாறு நீதிமன்றச் செயல்பாடு இல்லை என்பதை இத் தொடர் குறிக்கிறது. ஆதலின் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு யாரும் ஒருதலைச்சார்பைக் கற்பிக்கக் கூடாது. ஒருதலைச்சார்பு என்பதே ஒருதலை என இங்கே குறிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தவறு அல்லது நடைமுறைக் காலத்தாழ்ச்சியால் எவரும் பாதிக்கப்படக்கூடாது. – புசிங்கு சுமிட்சு தனி வரையறுக்கப்பட்டது (Busching Schmitz Private Limited ) எதிர் பி.டி.மெங்கானி & பிறர்9 P.T. Menghani & Ors.,)( MANU/SC/0344/1977: AIR 1977 SC 1569: 1977 (2) SCC 835.) நீதிமன்றத்தின் எச்செயலும் வழக்காளிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது. ஒருவேளை, நீதிமன்றத்தின் பிழையால் ஒருவருக்குத் தீங்கு நேர்ந்தது எனில், அதைக் களைந்து உரிய நிலைக்கு மீளக் கொணரவேண்டியது நீதிமன்றத்தின் கட்டாயக் கடப்பாடாகும். – சங்குசிங்கு எதிர் பிரிசிலால் மற்றும் பிறர், 20.02.1963 (Jang Singh vs Brijlal And Ors on 20 February, 1963, AIR 1966 SC 1631: 1964 (2) SCR 145.) இலத்தீன் தொடர் |
704. Actus degis nemini Est Dam Nosis | சட்டச் செயல் எவருக்கும் தவறான எண்ணத்தை உண்டாக்காது. சட்டத்திலுள்ள ஒரு செயல் யாருக்கும் பாகுபாடு காட்டாது. சட்டச் செயற்பாடுகள்/நீதிமன்றச் செயற்பாடுகள் ஐயத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரும். |
705. Actus Dei Nemini Injuriam | சட்டம் கடவுளின் செயலுக்கு எந்த மனிதனையும் பொறுப்பாக்காது. மாலி இராம் மஃகதபீர் பிரசாத்து எதிர் சாந்தி டெபி & பிறர் வழக்கில் வேலைநிறுத்தத்தைக் கடவுளின் செயலாக நீதிமன்றம் கருதியது. (MANU/BH/0010/1992: AIR 1992 PAT 66.) வேலைநிறுத்தம் போன்ற இயல்பற்ற சூழலில் எந்தவொரு வழக்குரைஞரும் தன் சொந்தத் திறமை அல்லது திறனைப் பயன்படுத்தி எதிர்க்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. சட்டப்படியான கருத்தில் இத்தகைய நிகழ்வுகள்,”கடவுளின் செயல்கள்” என்ற வரையறையில் அடங்கும். எனினும் சிலர் கடவுளின் செயல்கள் என்பதை ஏற்பதில்லை. |
706. Actus Legis Nemini Facit Injuriam | சட்டச் செயல் எவரையும் ஊறுபடுத்தாது. மனிதர் செயற்பாடின்றி இயற்கையால் ஏற்படும் துன்பங்களையும் அவலங்களையும் குறிக்கையில் இவை எந்த மனிதரின் செயலுமல்ல, கடவுளின் செயல் என்பர். கடவுளின் செயல் யாரையும் குற்றவாளியாக்காது என்றும் இதற்கு விளக்குவர். இதனடிப்படையிலேயே சட்டத்தின் செயல் யாருக்கும் ஊறு நேர்விக்காது என்பர். சட்டத்தின்படியான தண்டனையை ஊறு ஏற்படுத்துவதாகக் கருதக் கூடாது எனப் பொருள். |
707. Actus me invito factus non est mens actus | குற்றமனமிலாச் செயல் குற்றமாகாது தன் விருப்பத்திற்கு மாறாகச் செய்யப்படும் செயல் (குற்றச்) செயல் ஆகாது. “என் விருப்பத்திற்கு மாறாக நான் செய்த செயல் என் செயல் அல்ல” என்பதே இதன் நேர் பொருள். தீங்கு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்தவர் அதனை எந்த வகைக் குற்ற நோக்கமுமின்றிச் செய்திருந்தார் எனில் , அச்செயல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. இ.த.ச.பிரிவு 94, அச்சுறுத்தல்களால் வற்புறுத்திச் செய்யப்படும் செயல், கொலையாகவோ, மரணத் தண்டனைக்குரிய அரசிற்கு எதிரான குற்றமாகவோ இருந்தாலன்றிக் குற்றமாகாது என்பதைத் தெரிவிக்கிறது. இம் முதுமொழியை உள்வாங்கியே இச்சட்டப்பிரிவு உள்ளது. இலத்தீன் தொடர் |
708. Actus non facit reum nisi mens sit rea | குற்றமனமில்லாச் செயல் குற்றமாகாது. குற்ற உணர்வில்லாச் செயல் குற்றவாளி யாக்காது. எனவே, சட்டத்திற்கு எதிரான அல்லது தீயன விளைவிக்கக் காரணமான மனப்போக்கும் உடற்செய்கையும் இணைந்ததே குற்றமாகிறது. ஒருவரைக் குற்றவாளியாக்கச், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு செயல், அவரது செயலால் நிகழ்ந்தது என்பதையும் இந் நடத்தையானது, சட்டத்தால் கண்டிக்கத்தக்க மனப்போக்குடன் இருந்தது என்பதையும் மெய்ப்பிக்க வேண்டும். குற்றத்தை உருவாக்கும் எண்ணம், செயல் இரண்டும் ஒத்திருத்தல் வேண்டும். குற்ற உணர்வு இல்லாமல் எந்தக் குற்றமும் நடக்காது என்பதை இது குறிக்கிறது. இவ்வாறு எந்த ஒரு குற்றத்திலும் இரண்டு கூறுகள் உள்ளன; ஒன்று, உடற்பகுதி, மற்றொன்று மனப்பகுதி. இதுவே, ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது எனச் சொல்லப்படுகிறது. – ஆர்.பாலக்கிருட்டிணபிள்ளை எதிர் கேரள அரசு, MANU/SC/0212/2003: 2003 (9) SCC 700: 2003 (2) SCR 436. இது, தன்செய்கையை உணரா மனநோயர் குற்றம் செய்ததாகக் கூற முடியாது(furiosi nulla voluntus est) என வலியுறுத்துகிறது. அஃதாவது, மன நோயால் அல்லது மனக்கோளாறால் பாதிக்கப்படும் ஒருவர், தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவராக உள்ளதால், குற்றம்புரிந்ததாகக் கூற முடியாது. ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது. குற்றம் புரிவதற்கு எண்ணமும் செயலும் குற்றத்தின் பகுதிகளாகக் கருதப்படும். எண்ணம் என்பது தீய நோக்கம். செயல் என்பது அந்த எண்ணத்தை நிறைவேற்றும் தீய நடவடிக்கை. ஒவ்வோர் இயல்பான நல்ல மனநிலையுடைய ஒவ்வொருவரும் மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, அவன் அல்லது அவள் செய்கைக்குப் பொறுப்பாவார். ஆனால், மன வளமற்ற ஒருவர் அல்லது மனப்பிறழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் மனித நடத்தையின் இவ்வடிப்படை நெறியைக் கொண்டிருப்பார் எனக் கூற முடியாது. – இராசசுதான் அரசு எதிர் சேராராம், MANU/SC/1428/2011: AIR 2012 SC 1: 2012 (1) SCC 602. மன வளம் அல்லது மன நலமற்றவரை நாம் பித்து பிடித்தவர், பித்தா் என்று சொல்கிறோம். ஒருவரைக் குற்றச் செயலுக்குப் பொறுப்பாக்கும் போது, சட்டத்தால் விலக்கப்பட்ட ஒரு செயல், அவரின் நடவடிக்கையாலும் மனப்பாங்கினாலும் நிகழ்ந்தது என மெய்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு செயலும் உடற்சார்பு, மனச் சார்பு ஆகிய இரண்டாலும் மேற்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இதனையே குற்ற உணர்வில்லாச் செயல் குற்றவாளி யாக்காது என்கின்றனர். – சி.கே.சாபர் செரீபு எதிர் கு.பு.து.(CBI) மூலம் அரசு MANU/SC/0960/2012: AIR 2013 SC 48: 2013 (1) SCC 205 இங்கிலாந்தின் ஆல்சுபரி சட்டம்(Halsbury Laws of England), குற்றத்தை உருவாக்கும் கூறுகளை மேற்கொள்ள அல்லது பொறுப்பற்ற முறையில் செயலாக்குகிற நிலைப்பாட்டில் இருந்தாலன்றி ஒருவர் குற்றப் பொறுப்பிற்கு ஆளாக மாட்டார் என்கிறது. இதன் மூலம், ஒருவரின் செயலில் குற்ற உணர்வு இருந்தாலன்றி அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது எனப்படுகிறது. ஓர் உரிமையைச் செயல்படுத்துவதும் அதற்கு வழிவகை காண்பதும் தனிவகையான இயல்புகளாகும். – சுப்பிரமணிய சுவாமி எதிர் இந்திய ஒன்றியம் & பிறர். (MANU/SC/0621/2016: AIR 2016 SC 2728: 2016 (7) SCC 221.) இலத்தீன் தொடர் |
709. Active Capital | நடப்பு மூலதனம் செயற்பாட்டு மூலதனம்(Working Capital) என்பதும் இதுவே. பணம் அல்லது உடனடியாகப் பணமாக மாற்றப்படக்கூடிய சொத்து. அன்றாடச் செலவுகளை அல்லது எதிர்பாராச் செலவுகளைமேற்கொள்வதற்குரிய பணப்புழக்க நிலையைக் குறிக்கிறது. |
710. Actus Reus | குற்றச் செயல் Actus reus என்பது இலத்தீன் சட்டச் சொல் ஆகும்; āctus = செய்கை + reus =குற்ற உணர்வு. குற்றத்துக்குரிய நடத்தை எனப் பொருள்படும். குற்றத்தின் வெளியீட்டு உறுப்பாக இது கருதப்படுகிறது. ஒரு குற்றவாளியின் செயல் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் மெய்ப்பிக்கப்படும் பொழுது குற்றச்செயல் எனப்படுகிறது. குற்றச்செயல் புாிந்த ஒருவர் குற்றவியல் பொறுப்புக்கு உள்ளாகிறாா். தன்னியல்பிலான நடவடிக்கை/ செயற்பாடு/கடமைப் புறக்கணிப்பு. உள்நோக்கத்துடன் செய்யப்படும்போது சட்ட எதிர்க் குற்றமொன்றுக்குக் காரணமாகிறது |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்