“நாகசாமி ‘நூலின்’ நாசவேலை”
முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் நேர்காணல்
தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (Mirror of Tamil and Sanskrit) என்ற சமீபத்தில் வெளிவந்த முனைவர் இரா. நாகசாமியின் ஆங்கில நூல் தமிழறிஞர்கள் பலரிடம் முணுமுணுப்பையும் சிலரிடம் பெரும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் அறிவோம். இந்நூல் முன்வைத்திருக்கும் அனைத்துக் கருத்துக்களும் ஏற்கெனவே விவாத்தித்து ஓய்ந்துப்போனவையாக தெளிவுப்படுத்தப் பட்டவையாக இருந்தபோதிலும் இன்று மீண்டும் ஒருமுறை சரியான விளக்கத்தைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் காற்றில் கலந்து மறைந்துவிடும், கால ஓட்டத்தில் நிலைக்காது, எனவே, எழுத்துவடிவில் பதிவுசெய்தாக வேண்டியுள்ளது. பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட்டும் பேராசிரியர் டீக்கனும் முனைவர் நாகசாமிக்குப் தங்களின் மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழின் ஆகஸ்ட்டு 1-15 2012 தேதியிட்ட பதிப்பில் இந்நூல் குறித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் பேராசிரியரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரும் திருச்சியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமாகிய முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் நேர்காணல் “நாகசாமி ‘நூலின்’ நாசவேலை” என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது (பக்.17-21). அந்நேர்காணல் இதோ:
--------------------------------------------------------------------------
கேள்வி: தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் இரா. நாகசாமி ‘தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி’ (Mirror of Tamil and Sanskrit) என்ற பெயரில் ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார். அதைப் பற்றிய நூலறிமுகம் இந்து நாளிதழில் வந்தது. அந்நூல் குறித்து சர்சைகள் எழுந்துள்ளன. அந்நூலைப் பார்த்தீர்களா?
பார்த்தேன்; படித்தேன். ஒரு நூல் எப்படி இருக்கக்கூடாது என்பதற்குக் தொல்காப்பியர் பத்துவகைக் குற்றங்கள் கூறுகிறார். முனைவர் நாகசாமி நூல் அப்பத்து வகைக் குற்றங்களின் கொள்கலனாக உள்ளது. அக்குற்ற்றங்களுள் ஒன்று, இல்லாத ஒன்றை இருப்பதாக நூலாசிரியர் தானே கற்பித்துகொண்டு அதற்கான சான்றுகளைத் தவறான முறையில் காட்டுவதாகும்.
எடுத்துக்காட்டாக இந்நூலில் 11வது இயல் ‘சங்க இலக்கியத்தில் யமகம்’ என்ற தலைப்பில் உள்ளது. ‘யமகம்’ என்ற செய்யுள் உறுப்பு தமிழுக்குரியதன்று . மிகவும் பிற்கால வழக்கான அதனைச் சங்க இலக்கியத்தில் பொருத்திக் காட்ட முனைந்து, சங்கப் பாடல்களை தவறாகப் பிரித்துக் காட்டுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
கேள்வி: தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்றும், இலக்கியம், இலக்கணம், அறம், அரசுச் சட்ட திட்டங்கள் என அனைத்தையும் சமஸ்கிருத்த்திடமிருந்துதான் தமிழ் பெற்றது என்றும் நாகசாமி எழுதியுள்ளார். நீங்கள் தமிழர் மெய்யியல், தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு முதலியவற்றை ஆய்வு செய்துள்ளீர்கள். நூல்கள் எழுதியுள்ளீர்கள். நாகசாமியின் மேற்கண்ட கூற்றுகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
கோயபல்சு பரப்புரை பற்றிப் படித்திருக்கிறோம். அதை நேரடியாகப் பார்த்ததில்லை. நாகசாமி நூலில் அதைப் பார்க்க முடிகிறது.
நாகசாமி எப்போதும் இரண்டு முகம் வைத்திருப்பார். இந்நூல் அவரது அசல் முகத்தைக் காட்டுகிறது. 1980இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டு ஆய்வரங்கில், பூலாங்குறிச்சி கல்வெட்டு பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரை தந்தார். தமிழில் எழுதிய கட்டுரையில் தமிழை உயர்த்தி இருந்தார். அதே பொருள் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் தமிழைத் தாழ்த்தியிருந்தார். தமிழில் எழுதிய செய்திக்கு முரணாக எழுதியிருந்தார்.
தன் விருப்பப்படி வரலாற்றைத் திரிக்கும் போக்கு நீண்ட காலமாகவே இங்கு இருக்கிறாது. கபிலர் அகவல் என்னும் நூலை மறுபதிப்புச் செய்தவர், முதற் பதிப்பில் இல்லாத கதைகளை இணைத்ததைப் பண்டிதர் அயோத்திதாசர் கடுமையாகக் கண்டித்தார். வள்ளுவர், கபிலர், ஔவையார், அதியமான் முதலானோர் “ஆதி” என்ற பறையர் குலப்பெண்ணுக்கும் “பகவன்” என்ற பார்ப்பனருக்கும் பிறந்த பிள்ளைகள் என்று ஆறேழு வரிகளைச் சேர்த்திருந்தார் இரண்டாம் பதிப்பின் ஆசிரியர். அயோத்திதாசர் அதனை மிகவும் கண்டித்தார்.
தமிழின் மீது தீராத பற்றும் மிகுந்த அக்கறையும் கொண்ட ஆங்கில அதிகாரியான எல்லீசுக்குக் கிடைத்த புறநானூற்றுப் பாடல்களில் 34ஆம் எண் உள்ள, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடிய பாடலில், “குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்று இருந்தது. பிறகு உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் புறநானூற்றைப் பதிப்பித்த போது மேற்படி அடியை “பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்று மாற்றி விட்டார். இவ்வாறான திரிபு வேலைகளின் நீட்சியே இப்பொழுது நாகசாமி எழுதியுள்ள நூலும் ஆகும்.
டீக்கன் என்ற செர்மானிய ஆய்வாளர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவைதாம் தமிழ் இலக்கியங்கள் என்றும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் அனைத்தும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்றும் எழுதி அண்மையில் ஒரு நூல் வெளியிட்டார். 2010 ஆம் ஆண்டு நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு மலரில் டீக்கனின் கூற்றுகளையெல்லாம் இதே நாகசாமிதான் வலிமையாக மறுத்து ஆய்வுக் கட்டுரை தந்தார். அக்கட்டுரை அம்மாநாட்டு ஆய்வரங்க மலரில் 127-133 பக்கங்களில் உள்ளது. அக்கட்டுரையின் தலைப்பு “சங்கத் தமிழ் இலக்கியங்களின் கால வரையறுப்பில் தொல்லியல் சான்றுகள்” (Epigraphical Evidence on Dating Sangam Tamil Literature ).
பிற்காலப் பாண்டியர்கள் சமஸ்கிருதம் கலந்து வெளியிட்ட்ட கல்வெட்டுகளுக்கும் சங்க இலக்கியங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அக்கட்டுரையில் நாகசாமி கூறியுள்ளார். அதற்கு முன் தொடக்ககாலப் பல்லவர்கள் வெளியிட்ட ஆவணங்கள் யாவும் பிராகிருத மொழியில் இருந்தனவே தவிர சமஸ்கிருதத்தில் இல்லை என்றும் அவர் உறுதி செய்தார். எனவே, தமிழ் எந்த வகையிலும் சமஸ்கிருதத்திற்குக் கடன் படவில்லை என்ரு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மலரில் எழுதியுள்ளார். அப்படி எழுதியவர் இப்பொழுது தலை கீழாக மாற்றி எழுதுவதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்க வேண்டும்.
தொல்லியல் துறை சார்ந்த நூல்களுக்குப் பெரிய விருதுகள் வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேலை இழித்தும் சமஸ்கிருத்த்தை உயர்த்தியும் நூல் எழுதினால்தான் அவ்விருது கிடைக்கும் என்று கருதி நாகசாமி இப்படி ஒருநூலை எழுதியிருக்கலாம்.
கேள்வி: தமிழுக்குச் சொந்தமாக எழுத்து முறை இல்லை. அசோகன் தம் கருத்துகளைப் பரப்ப ஓர் எழுத்துமுறையை உருவாக்குமாறு பிராமணர்களைக் கேட்டுக் கொண்டார். அப்பிராமணர்கள் உருவாக்கிய எழுத்து முறைக்கு அசோகன் பிராமி என்று பெயர். அந்த அசோகன் பிராமியிலிருந்து உருவானதுதான் தமிழ்ப்பிராமி என்று நாகசாமி அந்நூலில் கூரியுள்ளார். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட்து என்று இதைத் தான் சொல்வார்கள். தமிழின் மூலம் சமஸ்கிருதம்; சமஸ்கிருதத்தின் மூலம் பிராமணர்கள் என்று நிறுவி பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதுதான் நாகசாமியின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாக வெளிவந்துவிட்டது.
அசோகன் பிராமணர்களைக் கூப்பிட்டுப் புதிதாக எழுத்து முறை உருவாக்குமறு கேட்டுக்கொண்டார் எனில் ஏற்கெனவே பிராமணர்க்கு என்று எழுத்துமுறை இருந்ததா? அவ்வாறு பிராமணர்களுக்கென்று எழுத்து முறை இருந்திருந்தால் அவர்கள் வேதங்களை அவ்வெழுத்து முறையில் எழுதி வைத்திருக்க வேண்டுமே!
கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக சமஸ்கிருத எழுத்தில் வைதிகம் சார்ந்து எந்த ஒரு நூலும் இயற்றப்பட்டதாக வரலாறு இல்லை.
கேள்வி: “சமவயங்க சுத்த” என்னும் சைன நூல் இந்தியாவில் வழங்கிய 18 வகையான எழுத்து முறைகளைக் குறிக்கிறது. அவற்றுள் “பம்மி” என்பது பிராகிருதத்தின் எழுத்துமுறை, இதைத் தான் பின்னர் பிராமி என்று அழைக்கின்றனர். பிராமணர்கள் உருவாக்கியதால் அவ்வெழுத்து முறை “பிராமி” என்று பெயர் பெறவில்லை. “பம்மி” தான் “பிராமி” என்று ஆனது. பம்மிக்கும் பிராமணர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
பம்மியை வலிந்து பிராமி என்று திருத்தவர்கள், தமிழியைத் தமிழ் என்று இயல்பாக ஏன் சொல்லவில்லை?
அசோகன் இருவகை எழுத்து முறைகளைப் பின்பற்றினார். வடமேற்கு எல்லைப் புற மாநிலங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் “அராமிக்” வரிவத்தைப் பின்பற்றி வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது. இவ்வெழுத்து முறை “கரோஷ்டி” எனப்படும். பிராமியைப் பார்ப்பனர்களிடமிருந்து பெற்றார் எனில் அசோகர் கரோஷ்டியை யாரிடமிருந்து பெற்றார்? பிராமி என்று சொல்லப்படும் எழுத்து முறையின் அசல் பெயர் பம்மி. அது பிராகிருதச் சொல். அதற்கும் பிராமணர்களுக்கும் எந்தத் தொடர்பு மில்லை.
கேள்வி: அப்படியானால் “அசோகன் பிராமி” என்று சொல்லப்படுகின்ற அந்த எழுத்து முறை எங்கிருந்து வந்தது? அதன் மூலமென்ன?
இந்திய எழுத்துமுறை வரலாற்றை ஆராய்ந்த அறிகர்களின் முதன்மையானவராக எண்ணத் தக்கவர் ஏ.சி.பர்னல். அவர், இந்திய எழுத்து முறைகளுக்கெல்லாம் முன்னோடியானது தமிழ் எழுத்துமுறையே என்று நிறுவினார். தமிழ் எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டு, பாலி, பிராகிருத மொழிகளுக் கென்றுள்ள சில ஒலிகளுக்கான எழுத்து வடிவங்களையும் இணைத்துக் கொண்டு உருவானதே அசோகன் பிராமி என்கிறார் பர்னல். அத்துடன் அமையாது சமஸ்கிருத இலக்கண இலக்கிய ஆசிரியர்கள் தமிழகம் வருவதற்கு முன்பாகவே தமிழுக்கென்று தனித்த வரிவடிவம் இருந்ததென்றும் அவ்வரிவடிவம் முழுமைப் பெற்றுத் திகழ்ந்தது என்றும் உறுதிப்படுத்தினார் பர்னல். (நூல். South Indian Paleography)
இந்தியத் தொல்லியல் துறை இயக்குநராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற முனைவர் கே.வி. இரமேஷ், அசோகன் பிராமிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியத் தீபகற்பத்தில் தென்கோடிப் பகுதியில் பாண்டிய நாட்டில் தமிழ் எழுத்து முறை சீர்மை பெற்று விளங்கியது, என்று கூறுகிறார். (கட்டுரை: Jaina Art and Architecture in Karnataka – K.V. Ramesh).
இத்தகைய சிறந்த அறிஞர்களின் கருத்தை பேராசிரியர் க. இராஜன் அவர்களின் அண்மைக் கால ஆய்வுகளும் உறுதி செய்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கம்பம் அருகே புலிமான்கோம்பையில் அகழ்ந்தெடுத்த நடுகல்லில் உள்ள எழுத்து முறையும் தொடரும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தியது என்று உறுதி செய்தார் இராஜன்.
சென்ற ஆண்டு பழனிக்கருகே பொருந்தல் ஆற்றங்கரை அகழாய்வில் இராஜனுக்கு கிடைத்த பானை வைக்கப்பட்டிருந்த மண் புரிமனையில் உள்ள (கலவடை) எழுத்தும் பானைக்குள் இருந்த நெல்லும் அமெரிக்க நாட்டுக்கு அனுப்பி ஆராயப்பட்டன. அங்கு உறுதி செய்த ஆய்வு முடிவின்படி கி.மு. 700 முதல் கி.மு. 490 வரைக்குமான காலப் பகுதியைச் சேர்ந்தவை அவை என்பது உறுதியாயிற்று. அசோகன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்பதைக் கவனிக்க வேண்டும். அசோகன் காலத்துக்கு முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழ் தனக்கென்று தனித்த முழுமை பெற்ற வரி வடிவத்தைப் பெற்றிருந்தது என்பது உறுதியாகிறது. எனவே அசோகன் பிராமிக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சென்னை அருங்காட்சியகக் காப்பாட்சியாளராகப் (கியுரேட்டர்) பணியாற்றிய வி. கண்ணையன் தாம் எழுதிய ‘இந்தியாவிற்குள்ளும் இந்தியாவைச் சுற்றியும் காணப்படும் வரிவடிவங்கள் (scripts in and around India) என்ற நூலில் இந்தியா முழுவதும் காணப்படும் வரிவடிவங்கள் அனைத்தும் அசோகன் பிராமி உட்பட தமிழ் வரிவடிவத்தையே பின்பற்றியுள்ளன என்று கூறுகிறான். இதுவே என் விடையுமாகும்.
கேள்வி: வேதங்கள் கூறும் நால் வருணப் பாகுபாட்டை அப்படியே ஏற்று பரபியலில் தொல்காப்பியர் கூறியுள்ளார் என நாகசாமி கூறுகிறார். இது பற்றி உங்கள் கருத்தென்ன?
ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் இது. மரபியலில் நால் வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச்செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றைக் காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.
தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் தமிழரின் அறிவியல், உயிரியல், தருக்கவியல் ஆகிய துறைகளின் மூல ஊற்று. உயிரின்ங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71வது நூற்பாவாக வருணம் பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85வது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திளே கூறப்படுகின்றன. 86வது நூற்பா, விடுபட்டுப்போன மரபியலின் தொடர்ச்சியாக “புறக் காழனவே புல்லெனப் படுமே” என விளக்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது, முற்றிலும் பொருத்தமாக இல்லை.
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நூல் வணம் பற்றி பேச வாய்ப்பில்லை. அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச்செருகலே!
கேள்வி: தொல்காப்பியத்தில் கூறப்படும் ஐந்திணைப் பண்பு, சமஸ்கிருதத்தின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது என்கிறார் நாகசாமி. அதுபற்றி?
பரதரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் நாட்டிய சாஸ்திரம் கூட ஒரு மொழி பெயர்ப்பே ஆகும். பரதரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அண்மைக்கால ஆய்வுகளின்படி தொல்காப்பியர் காலம் 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பரத முனிவர் காலத்தில் எழுத்து வடிவில் சமஸ்கிருத நூல் ஒன்றுகூட இல்லை. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கென்று எழுத்து வடிவம் அப்போது இல்லை. அத்துடன் நாட்டியக் கலையை வைதிகம் ஏற்கவில்லை; அக்கலையைக் கண்டித்து ஒதுக்கியது.
பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்த சிருங்கட்டூர் நடாதூர் எஸ். என். ஸ்ரீராம தேசிகன், வேள்வியின் வழியாக இறைவழிபாட்டை வலியுறுத்துவது வேத நெறி. உருவ வழிபாடு சிந்துவெளி நாகரிகத்தைச் சார்ந்தது. நாட்டியம் உருவ வழிபாட்டின் ஓர் அங்கம் என்றார்.
நாட்டியத்திற்கென்று ஆகம முறைகள் வகுக்கப்பட்டிருந்தன. சிவனின் ஆனந்ததாண்டவத்துடன் தொடர்புடையது. இந்த நாட்டியக் கலை ஆகமங்களும், சிவ வழிபாடும் அடிப்படையில் வேதத்திற்கெதிரானவை. வேதங்களை எதிர்த்தவன் சிவன் என்பதைத் தக்கனின் வேள்விகளை அவன் அழித்ததிலிருந்து புரிந்துக்கொள்ளலாம். பரதக் கலையை வைதிகம் எதிர்த்தது என்பதும் வரலாற்று உண்மை.
கேள்வி: தொல்காப்பியர் கூறும் முதல் பொருள்களாகிய இடம், காலம், பருவம் ஆகியவை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைப் பின் பற்றி அமைந்ததாகக் கூறுகிறாரே, அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பரதரின் நாட்டிய சாஸ்திரம் 25வது அத்தியாயத்தில் பருவங்கள் இடம் பெற்றுள்ளன. குளிரில், பனியில் நடுங்கும் ஒருவனின் உடலசைவுகளை மெய்ப்பாடுகளாகா ஆடிக் காட்டுவது குறித்து விளக்கும் பகுதியாகும் இது. அந்த அளவுதான் அங்கே திணையும் பொழுதும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களில் திணையும் பருவமுமே அடிப்படை. நிலமும் பொழுதும் இல்லையென்றால் அகத்திணையே இல்லை. இந்த நுட்பம் உலகம் அறியாதது. சமஸ்கிருதத்திற்கும் தெரியாதது.
கி.மு. 14ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தொல்காப்பியம் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத சாஸ்திரத்தைப் பார்த்து எழுதப்பட்டது எனபது எவ்வளவு பெரிய மோசடி. பரத நாட்டியத்தை தமிழில் மொழிபெயர்த்த இராமதேசிகன் தொல்காப்பியர் கி.மு. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை உறுதி செய்கிறார். எனவே நாகசாமியின் கூற்று பிழையானது. உள்நோக்கம் கொண்டது.
கேள்வி: தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை, வளர்ச்சி அனைத்தும் சமஸ்கிருதம் போட்ட பிச்சை என்பது போல நாகசாமி கூறியுள்ளாரே?
இதுதான் புரட்டல் வாதம். வேதமொழிக்கு முதல் முதலாக எழுத்து வடிவத்த்டிஅ உருவாக்கியது தமிழகம். அதங்கோட்டாசானுக்கு நன்கு புரியும் படி மயக்கம் தராத மரபினை உடைய தமிழ் எழுத்து முறையை விளக்கியவர் தொல்காப்பியர். இதனைப் பனம்பாரனார் தமது தொல்காப்பியப் பாயிரத்தில் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளார். தமிழின் எழுத்து முறையைப் பின்பற்றி அமைந்ததே சமஸ்கிருத எழுத்து வடிவம்.
தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் மாத்திரையை (ஒலியளவு) லொல்லும் போது, ‘வேதம் ஒலிக்கின்ற முறையினச் சொல்லவில்லை. மாறாக உடல் உறுப்புகளிலிருந்து ஓசையாக வெளிப்பட்டு, வரிவடிவம் பெற்றுள்ள தமிழின் எழுத்துகளுக்கே அளவு கூறுகிறேன்’ என்று உறுதிசெய்கிறார். எனவே சமஸ்கிருதம்தான் தமிழைப் பின்பற்றித் தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டதே தவிர தமிழ் சமஸ்கிருதத்தைப் பின்பற்றவில்லை, அவ்வாறான தேவையும் தமிழுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை.
கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறள் முதல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபாலிகரான திருநாவுக்கரசர் காலம் வரை தோன்றிய தமிழ் இலக்கியங்கள் அனைத்தின் உள்ளீடாக விளங்குவது வேதவைதீக எதிர்ப்பே!
ரிக் வேதத்தை முழுமையாக ஆய்ந்த அறிஞர் எம். சுந்தர்ராசன், “நாடோடிகளாக வந்த ஆரியர்களுக்குப் பண்பாட்டைக் கற்று கொடுத்தவர்கள் தமிழர்களே என்பதை “Gems From Pre-Historic Past” (வரலாற்றுக்கு முந்தையகால மாணிக்கங்கள்) என்னும் ஆங்கில நூலில் விளக்கியுள்ளார். இப்படிப்பட்ட வரலாற்று உண்மைக்கு நேர் எதிராக நாகசாமி எழுதுவது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.
கேள்வி: தமிழும் சமஸ்கிருதமும் நெருங்கிய உறவுடன் ஒன்றையொன்று வளர்த்தன. கடந்த 50 ஆண்டுகளாகத்தான் தமிழ் வேறு, சமஸ்கிருதம் வேறு, என்ற பிரிவினைக் கருத்து தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டது என்கிறார் நாகசாமி. அது உண்மையா?
அப்பட்டமான பொய். “ஆரியம் நன்று, தமிழ் தீது” என்றவனுக்கு சாகும்படி சாவம் கொடுத்தார் நக்கீர்ர் என்ரு ஒரு தனிப்பாடல் உண்டு.
“ஆரியம் நன்று தமிழ் தீதென் றுரைத்த
காரியத்தால் காலக் கோட் பட்டானை”
என அமைந்தது அப்பாடல். இப்பாடல் ஐம்பதாண்டுகளுக்குள் எழுதப்பட்தன்று. பழமையான பாடல்.
“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?”
எனக்கேட்ட திருநாவுக்கரசர்,
“பார்ப்பனர் அர்ச்சகராக இருக்கும் நாட்டில்
அரசன் அழிந்து படுவான்” என்று எச்சரித்த திருமூலர்,
“வேதம் ஓதும் வேதியா சாதியாவதேதடா?”
எனச்சாடிய சிவ வாக்கியர்,
“வேதத்தை விட திருவாசகம் உயர்ந்தது”
எனச் சொன்ன சிவப்பிரகாசர்,
தம்மைச் சந்தித்த சங்கராச்சாரியார் ‘உலக பாஷைக் கெல்லாம் தாய் பாஷை சமஸ்கிருதம்’ என்று இறுமாப்போடு கூறியபோது, அப்படியானால் “தந்தை பாஷை ஒன்று இருக்க வேண்டுமே. அந்த தந்தை பாஷைதான் தமிழ்” என்றுரைத்த அருட் பிரகாச வள்ளலார் ஆகியோரெல்லாம் நாகசாமி சொல்வது போல் கடந்த 50 ஆண்டுகால அரசியலுக்கு உரியவர்களா? இல்லையே!
“ஆரியம் போல் உலக வழக் கழிந்து ஒழிந்து
சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்து துமே” என்று தமிழை வாழ்த்திய மனோன்மணியம் சுந்தரனார் 50 ஆண்டு கால எல்லைக்குள் அடங்காதவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களின் உள்ளீடு என்பதே வைதிக எதிர்ப்புதான். “பார்ப்பன் மாந்தர்கள் பகர்வது கேண்மின், நால்வகைச் சாதியை நாட்டினில் நாட்டினீர்” என சாதிகளை உருவாக்கிய பார்ப்பனர்களைக் கைநீட்டிக் குற்றம் சாட்டிய கபிலர் போன்றவர்கள் எல்லாம் 50 ஆண்டு கால அரசியலுக்கு உட்பட்டவரா?
கேள்வி: சிலப்பதிகாரம் ஒரு காப்பியமல்ல, அது நாடகச் செய்யுள் நாட்டியத்திற்காக எழுதப்பட்டது என்றும் சமஸ்கிருத பாரத சாஸ்திரத்திலிருந்து எழுதப்பட்டது என்றும் அந்நூலில் நாகசாமி கூறுகிறார். இது பற்றி...?
அறிஞர் அண்ணா சொன்ன வெளிநாட்டுக் கதை ஒன்றுண்டு. புகழ் பெற்ற சிற்பி குதிரை வீரன் சிலையை வடித்திருந்தார். சிலையில் ஏதேனும் குறையிருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார். அதனைப் பார்த்த செருப்புத் தைக்கும் தொழிலாளி அந்த வீரனின் காலில் அணிந்திருந்த செருப்பின் பட்டை தவறாக செதுக் கப்படிருப்பதைச் சுட்டிக் காட்டினார். சிற்பி நன்றி கூறினார்; திருத்தினார். அதன்பிறகு அத்தொழிலாளி குதிரையின் பிடரி மயிர் இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லத் தொடங்கினார். இப்பொழுது சொன்னது தவறானதாக இருந்தது. “முதலில் நீ சொன்னது சரியாக இருந்தது, அதற்காக, நீ தவறான முறையில் இப்பொழுது கூறும் திருத்தத்தை ஏற்க முடியாது” என்றார் சிற்பி. நாகசாமி கல்வெட்டாய்வோடு நின்றிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் பேசியிருக்கக் கூடாது.
“அரசியல் பிழைத்தோற்கு அறங்கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந் தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்”
ஆன மூன்று கோட்பாடுகளை விளக்கவே சிலப்பதிகார காப்பியம் இயற்றப்பட்ட்தாக அதன் பதிகம் கூறுகிறது. அக்காப்பியத்தை வெறும் நாட்டியச் செய்யுள் என்று நாகசாமி கூறுவது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
கேள்வி: தமிழகத் தொல்லியல் ஆய்வுத் துறையில் இயக்குநராக இருந்த நாகசாமியே தமிழர் வரலாற்றை மறுப்பதன் மர்மம் என்ன?
கடந்த கால வரலாறு இல்லாத எந்த இனத்திற்கும் வருங்கால வரலாறு இல்லை. தமிழர்களுக்குக் கடந்த கால வரலாறு இல்லை என்று நிலைநாட்ட வேண்டும் என்ற ஏக்கம் தான் நாகசாமி போன்றவர்களுக்கு இருக்கிறது.
தமிழிய நாகரிகம்தம் சிந்துவெளி நாகரிகம் என்ற உண்மையை உலகம் முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளது. அக்கருத்தை மாற்ற அங்கு கிடைத்த காளைச் சின்னத்தைக் குதிரைச் சின்னம் என்று காட்டி அது ஆரிய நாகரிகம் என்று கூறினார் ஒருவர். அவருக்கு என்ன பின்புலமோ என்ன நோக்கமோ அதே பின்புலமும் நோக்கமும் தான் நாகசாமிக்கும்! அறிவு நாணயமில்லாத எந்த ஒன்றும் ஆராய்ச்சியாக ஏற்கப்படாது. தமிழிலக்கியங்கள் யாவும் சம்ஸ்கிருதத்திலிருந்து மிகவும் பிற்காலத்தில் பிறந்தவை என்று நூலெழுதிய டீக்கனை (Tieken) மறுத்த நாகசாமி தற்போது டீக்கனாகவே மாறிவிட்டார். இது அவரின் ஆராய்ச்சித் திறனின் வீழ்ச்சியையே காட்டுகிறது.
--------------------------------------------------------------------------
பேராசிரியரின் க. நெடுஞ்செழியன்
இயக்குநர்
உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம்
திருச்சிரப்பாள்ளி
தொலைபேசி: 9894967911 / 8903838356 / 0431-2459738

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!