முனைவர்
ம. இராசேந்திரன்.
தமிழ் வளர்ச்சி இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
சென்னை-600108.
மொழிவாரி மாநிலச் சீரமைப்பிற்குப்பின் மாநிலங்களின் நிருவாகம் அந்தந்த மாநிலத்தின்
பெரும்பான்மையான மக்களுக்குப் புரிகிற மொழியில் நடைபெற ஏதுவாக மாநிலங்கள் தங்கள்
சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டன. மொழிவாரி மாநிலச் சீரமைப்பு நடந்த அதே ஆண்டில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் (27-12-1956) ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 23-1-1957 முதல் செயலுக்கு வந்தது. செயலுக்கு வந்த அதே ஆண்டிலேயே ஆட்சிச் சொல் அகராதியின் முதல் பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து துறை சிறப்புச் சொல் துணை அகராதிகள், தமிழ் சுருக்கெழுத்து நூல், மாதிரி வரைவுகள், ஆட்சித் தமிழ், 'வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்'ஆகிய நூல்களையும் ஆட்சிமொழிச் சட்டத்தைச் செயற்படுத்த உதவும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.
ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்ற தமிழ் தட்டச்சுப் பொறிகள், தமிழ்த்தட்டச்சுப் பயிற்சி, சிறந்த வரைவுக்குக் கேடயங்கள், பரிசுகள், கணினியில் தமிழ் மென் பொருள், தமிழ் இணைய மாநாடு, விசைப் பலகைத் தரப்படுத்தல், நான்கு கட்ட நடவடிக்கைகள்,மூவாண்டு முனைப்புத் திட்டம் என்று அவ்வப்போது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.
முதன் முறையாக தமிழ் ஆட்சிமொழித் துறைக்கென்று தனியாக ஓர் அமைச்சகம் 1996 மே மாதம்
உருவாக்கப்பட்டதால் ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றும் பணிகள் முன் எப்போதையும்விடத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன. அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். சேலத்திலும், திருநெல்வேலியிலும் மண்டலத் தமிழ் வளர்ச்சி அலுவலகங்கள்
உருவாக்கப்பட்டன.
இவ்வாறு ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படும் அனைத்தையும் வழங்கி, தமிழ்
வளர்ச்சிக்கான பணிகளில் முனைப்புடன் செயற்பட அரசு வழி வகுத்தது. இவற்றின் அடிப்படையில் ஆட்சிமொழித் திட்ட இலக்கினை முழு அளவில் எய்திடும் வகையில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாய்வுத் திட்டம் வகுக்கப்பட்டு 2000 ஜூன் திங்களில் காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மாவட்ட உதவி இயக்கநர்களும் பணியாளர்களும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டக் காஞ்சிபுரத்திற்க்கும் திருவாரூருக்கும் அனுப்பப்பட்டனர். முன் அறிவிப்பின்றி அரசு அலுவலகங்களுக்குக் குழுவாகச் சென்று ஆட்சிமொழிச் சட்ட நிறைவேற்றத்தில் அவ்வலுவலகங்களின் செயற்பாட்டினையும் விழுக்காட்டினையும் கண்டறிந்து குறிப்பெழுதி அலுவலகங்களிடம் அன்று முதல் ஆட்சிமொழிச் சட்டத்தைநூற்றுக்கு நூறு விழுக்காடு நிறைவேற்ற உறுதிமொழி பெற்றனர். இவ்வாறு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான ஆறுமாத காலத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள் ஆய்வுக்கு உட்பட்டன.
அப்போது தமிழ் ஆட்சிமொழியாகப் பயன்பட அடிப்படைத் தேவையாக இருக்கும் ஆட்சிச்
சொல் அகராதிகளை அரசு அலுவலகங்களில் போதிய அளவிற்கு இல்லை என்றும் படிகள்
தேவை என்றும் பலநிலைகளிலிருந்தும் முனைகளிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்
அடிப்படையில் ஆட்சிச் சொல் அகராதி (பொது) எனும் ஆறாம் பதிப்பு இப்போது வேளிவருகிறது.
இதில் ஐந்தாம் பதிப்பில் (நான்காம் பதிப்பின் மருபதிப்பு) இடம் பெற்றுள்ள 8,927 சொற்களுடன் 521 புதிய சொற்களும் சேர்க்கப்பட்டு 9,448 சொற்கள் கொண்டதாக இப்பதிப்பு வெளிவருகிறது. வணிக நிறுவனப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எனும் நுலில் உள்ள 537 வணிக நிறுவனத் தமிழ்ப் பெயர்களும் இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அகராதியைத் தமிழ் வளர்ச்சித் தரவகத்தில் இடம்பெறச் செய்து இணையகத்தில் யார்
வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓர் ஆங்கில ஆட்சிச் சொல்லிற்குத் தற்பொது தரப்பட்டுள்ள தமிழச் சொல்லைவிட சிறப்பான மாற்று சொல் தர முன்வருகிறவரின் பெயர் அச்சொல்லுடன் தரவகத்தில் சுட்டிக்காட்டிச் சேர்க்கப்படும். இவ்வாறு சொல்லை எடுக்கவும் வைக்கவுமான ஓர் அமைப்பாக சொல் வங்கியாகச் செயற்படவும் இது உதவும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்துப் பணிகளும் செவ்வனே நடைபெற ஆற்றுப்படுத்தியும்
இந்நூல் சிறப்புற அணிந்துரை வழங்கியும் சிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி,
தமிழ் பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்
வளர்ச்சி பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் அவர்களுக்கும்,
தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், விரைந்து அச்சிட்டு உதவிய
அரசு எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் அவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றி.
(ம.இராசேந்திரன்)
அன்புடன் முனைவர் இரவா அவர்களுக்கு