உலகாய்தம்

362 views
Skip to first unread message

இரவா

unread,
Jun 16, 2009, 7:24:54 PM6/16/09
to தமிழாயம்

உலகாய்தம் பெயர்க்காரணம் - முனைவர் க.நெடுஞ்செழியன்

மனித வாழ்வை அடித்தளமாகக் கொண்டதோர் உலகியல் கோட்பாடே உலகாய்தம். இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகக் குறிக்கப்படுவதைப் போன்றே தமிழகத்தில் வழங்கிய மெய்ப்பொருள்களிலும் காலத்தால் மிகவும் முந்தியதாக இக்கோட்பாடு திகழ்ந்துள்ளது.

இக்கோட்பாட்டிற்கெனத் தனியாக நூல்கள் வழங்கி வந்ததாகவும், அரசர்கள் கற்க வேண்டிய தலையாய கல்வித் துறைகளை இது உள்ளடக்கி இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். இருப்பினும் இக்காலத்தில் உலகாய்தத்தை அடிப்படையாகக் கொண்ட மூலநூல்கள் ஏதும் இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் இதனை எதிர்த்தோரும் மறுத்தோரும் குறித்துள்ள குறிப்புகளாகவே உள்ளன.

தொன்மை

ஆரியர் வருகைக்கு முன்னரே இக்கோட்பாடு இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்தது. “கடவுளை மறுப்பவர்களாகவும் வேத வேள்விகளைப் புறக்கணித்தவர்களாகவும் இருக்கு வேதத்தில் குறிக்கப்படுபவர்கள் இம்மெய்யியலைச் சார்ந்தவர்களே” என்பார் சதீச் சந்திரா. பிரகதாரண்ய உபநிடதத்திலும் உலகாய்தம் பற்றிய குறிப்பு உண்டு.

ஆரியர் வருகைக்கு முன்னரே இக்கோட்பாடு இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்தது. “கடவுளை மறுப்பவர்களாகவும் வேத வேள்விகளைப் புறக்கணித்தவர்களாகவும் இருக்கு வேதத்தில் குறிக்கப்படுபவர்கள் இம்மெய்யியலைச் சார்ந்தவர்களே” என்பார் சதீச் சந்திரா. பிரகதாரண்ய உபநிடதத்திலும் உலகாய்தம் பற்றிய குறிப்பு உண்டு.

உலகாய்தம் குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பலரும், வடமொழி இலக்கியச் சான்றுகளைக் கொண்டே தங்களின் ஆய்வை மேற்கொண்டனர். ஆனால், தமிழ் இலக்கியங்களில் பரந்து கிடக்கும் மெய்யியலின் மூலச் சான்றுகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. தமிழ் இலக்கியங்களின் சான்றுகளைக் கொண்டு இம் மெய்யியலை ஆராய்ந்த வானமாமலை, இந்திய தத்துவவாதிகள் அனைவருடைய நூல்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதால், அம்மொழியில் புலமை உடையவர்கள் வட இந்தியாவில் வழங்கி வந்த உலகாயதத்தைப் பற்றி ஆராய்ந்து அதனை விளக்கியுள்ளார்கள். இதே போன்று தென்னிந்தியச் சான்றுகளை ஆராய்ந்து உலகாய்தத்தை விளக்கிய ஆய்வாளர்கள் யாரும் இல்லை. எனவே, வடமொழி ஆய்வாளர்கள் செய்திருப்பதைப் போன்று பூர்வ பட்சமாகவும், பழந்தமிழ் நூல்களில் காணும் நேரடிச் சான்றுகளைத் தொகுத்தும் தமிழ்நாட்டில் வழங்கிய உலகாய்தத்தின் தத்துவக் கூறுகளை ஆராய முற்படலாம்...... இவ்வாராய்ச்சியில் வடமொழிச் சான்றுகளில் காணப்படும் உண்மையோடு ஒப்பிடுவதும் அவசியமாகலாம்.என்று குறிப்பது இம் மெய்யியல் பற்றி வந்துள்ள ஆய்வின் தன்மைகளை விளக்கும்.

பெயர்க்காரணம்

பூதவாதம், சாருவாகம், நாத்திகம், ஏதுவாதம், இயல்புவாதம், பொருள்முதல் வாதம் (பிரகிருதி வாதம்), விதண்டா வாதம் போன்ற பல பெயர்களால் உலகாய்தம் குறிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பாயிரத்துள் பனம்பாரனார், “அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனச் சுட்டுவதும் இம்மெய்யியலையாகும்.

உலகாய்தம் என்னும் இம் மெய்யியல் வடமொழி இலக்கியங்களுள் ‘லோகாயதா’ என்றும் ‘லௌகாயதா’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞரான உமாபதி சிவாச்சாரியார்,

உலகாய்தம் - புறப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று

உலோக, ஆயதம் - பற்றுடைமை, ஆ+யத;

ஆ - முற்றாக என்னும் பொருள்படும் உபசர்க்கம்.

யத் - ஆசைகூர்தல், அவாக் கொள்ளுதல்.

என்று உலகாய்தத்தை வடசொல்லாகவே கொண்டு பொருள் விளக்கம் தந்துள்ளார். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, ‘லோகேசு+ஆயதா=லோகாயதா எனப் பிரித்து, மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்ற ஒன்று’ என்று பொருள் விளக்கம் தருகின்றார்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவரும் சமண உரையாசிரியருமாகிய குணரத்னா, “பண்பாடு அற்ற சிந்திக்க மறுக்கும் ஒரு கூட்டத்தாரே லோகாயதர் (லோகாயதிகா)” என்று குறித்துள்ளார். பிரும்ம சூத்திரத்திற்கு உரை கண்ட சங்கராச்சாரியும், ‘சர்வதர்சன சங்கிரகம்’ என்னும் நூலின் ஆசிரியரான மாதவரும் உலகாய்தர்களை இழிவுபடுத்தியே கூறியுள்ளனர்.

மெய்யியல் அகராதி தரும் விளக்கமாவது:

லோகாயதா: பண்டை இந்தியாவில் திகழ்ந்த ஒரு பொருள்முதல் வாதக் கோட்பாடு. இது பற்றிய மிகவும் தொன்மையான குறிப்புகள் பௌத்த அறநூல்களில்தான் முதன்முதல் காணப்படுகின்றன. மரபு வழியாக இக் கோட்பாடு பிரகஸ்பதி என்னும் புராண மாந்தரோடு இணைத்துப் பேசப்படுகின்றது. வேதங்களில் நாத்திகர்கள் என்ற தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் சார்வாகர்கள் எனப்படுவோராவர். பல்வேறு பழைய நூல்களும் இப் பொருள்முதல் வாதக் கோட்பாட்டை சார்வாகம் என்றே குறித்துள்ளன. நிலம், நீர், தீ, வளி ஆகிய மூலக்கூறுகளின் கலப்பால் உருவானதே இவ்வண்டம் என்பது இதன் அடிப்படை. (சில நூல்களில் விசும்பை அய்ந்தாவது மூலப்பொருளாகக் குறித்துள்ளன.) பொருள்களின் இயல்பு, அவற்றுள் கலந்துள்ள மூலப்பொருள்களின் அளவிற்கேற்பவே அமையும்...... கடவுள், மோட்சம், நரகம், ஆன்மா ஆகியவற்றை முற்றாக மறுப்பது; இன்பியல் கோட்பாடு இம் மெய்யியலில் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்பதாகும்.

“இராதாகிருட்டினன் உலகாய்தம் என்ற சமற்கிருதச் சொல் ‘பார்க்கப்படும் புலனுலகு’ என்ற பொருளில் வழங்கும் பொருள்முதல் கோட்பாட்டை உணர்த்தும் என்பார். தாசு குப்தா, ‘மக்கள் வாழ்வில் காணப்படும் ஒரு வாழ்க்கை நெறி’ என்றும், ‘சார்வாகத்தைத் தழுவிய அனைத்துக் கோட்பாடுகளையும் குறித்த ஒரு பொதுப் பெயர்’ என்றும் இச்சொல்லிற்கு விளக்கம் தருகின்றார்.

தேவநேயப் பாவாணர், ‘லோக என்னும் வடசொல் பார்க்கப் படுவது என்ற பொருளில்தான் வழங்கப்பட்டுள்ளது’ என்பார். உல்-உலக்கை (நெல்குற்றும் கழி) உல்-உலா, உலவு (காலார உலவுதல்) உல்-உருண்டை உல்-உலகம் சுழல்வது (உருண்டையானது) என்பது அவரின் விளக்கம்.

மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றிருந்ததாலேயே ஒரு மெய்யியலுக்கு ‘உலகாய்தம்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கும் என்ற தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் கருத்து பொருந்துமாறில்லை. கடவுள் மறுப்பையும் ஆன்மா, வீடு, வேதம், வேள்வி, பாவம், புண்ணியம் ஆகிய அனைத்தையும் முற்றாகக் கண்டித்த இக் கோட்பாடு மக்கள் கூட்டத்தின் அனைத்துப் பிரிவிலும் செல்வாக்குப் பெற்றிருக்க வழியில்லை. மாறாக, உலகாய்தம் இந்தியாவில் தோன்றிய அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களாலும் பெரிதும் கண்டிக்கப்பட்டே வந்துள்ளது.

உமாபதி சிவாச்சாரியார் கூறுவது போன்று உலகத்தின் மீது பற்றுடைமை என்ற பொருளும் இம்மெய்யியலின் தன்மைகளை முழுதும் உணர்த்துவதாக இல்லை.

பவுத்த அற இலக்கியங்களில் உலகாய்தம் என்ற சொல் அறிவியலை உணர்த்தி நிற்கின்றது. திக்க நியாயம், அங்குத்தாரா, திவ்வியவதனா ஆகிய நூல்கள் உலகாய்தத்தைச் சிறந்த அறிவியல் கலையாகவும் கற்க வேண்டிய சிறப்பிற்குரிய பாடத் திட்டமாகவும் குறித்துள்ளன. அத்துடன் உலகாய்த சாத்திரங்களுக்குச் சிறந்த உரை நூல்கள் இருந்ததையும் குறிக்கின்றன.

சாணக்கியர் தம் பொருள் நூலில் குறித்துள்ள ‘ஆன்வீக்சி’ என்ற தருக்க சாத்திரமும் உலகாய்தக் கோட்பாட்டையே உணர்த்துகின்றது.

சொல்லும் பொருளும்

உலகாய்தம் ஒரு கூட்டுச்சொல். இது உலகு+ஆய்தம் எனப் பிரியும் ‘உலகைப் பற்றிய ஆராய்ச்சி’ என்பது இச் சொல்லின் பொருளாகும். ஆய்தம் என்ற சொல் ‘ஆய்’ என்ற அடிச் சொல்லின் வழியாகப் பிறந்தது. ஆய்-ஆய்தல்-ஆராய்ச்சி-ஆய்தம் ஆகிய சொற்கள் நுண்மை, ஒரு பொருளின் நுண்மை குறித்த ஆய்வு என்னும் பொருள்களில் வழங்குவன. தொல்காப்பியர்,

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்

என்பார்.

இந்நூற்பாவிற்குத் தெய்வச் சிலையார், ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள அளவின் நுணுக்கத்தைக் காட்டும்.

என்று விளக்குவார்.

ஆய்தம் என்ற தமிழ்ச் சொல் நுண்மை வாய்ந்த ஒலியமைப்புடைய எழுத்தின் பெயராக வருவதும், அவ்வாய்தம் சார்பெழுத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவதும் அதன் நுண்மை கருதியே யாகும்.

நா. கதிரைவேற் பிள்ளை அகராதியும் ஆய்தம் என்ற சொல்லிற்கு அஃகேனம், சிறுமை, நுண்மை என்றே பொருள் கூறும். உலகம் உருண்டையானது, சுற்றுவது, சுழல்வது போன்ற பொருள்களைத் தரும் ‘உல்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததே உலகம் என்ற சொல்லாகும். உலகத்தைச் சுட்டும் வேறொரு பெயராகிய ‘ஞாலம்’ என்ற சொல்லிற்கும் ‘எந்தப் பிடிப்பும் இல்லாமல் தொங்குவது’ என்பது பொருள். உலகத்தைக் குறிக்கும் இத்தகைய சொற்கள் இவ்வுலகின் இயக்கத்தையும், அதன் இயல்பையும் முற்றாக அறிந்திருந்த ஆய்வின் வெளிப்பாடு என்பது உறுதி.

எனவே, உலகாய்தம் என்ற பெயர் உலகைப் பற்றிய ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு மெய்யியலின் காரணப் பெயர் என்பது தெளிவு. இக் கருத்தை அரண் செய்யும் வண்ணம் குணா,

‘உலகாய்தம்’ என்னும் சொல்லே வடமொழியில் ‘லோகாய்தம்’ என மருவியது. ‘உலகாய்தம்’ உலகினை ஆய்கின்ற முறை எனப்படும். என விளக்குவார்.

உலகாய்தத்தை உணர்த்தும் மற்றொரு பெயராகிய பூதவாதம் என்பதும், பூதம் என்ற தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஆகும். மெய்யியல் வரலாற்றில் இது மிகவும் தொன்மை வாய்ந்தது. இதன் சிறப்பினை,

“பூதம்” என்னும் தமிழ்ச் சொல் ‘பூ-பூத்தல்’ என்னும் வேர்ச் சொற்களிலிருந்தே அரும்பியது என்று பாவாணர் சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார். அச்சொல்லுக்குப் பின்னால் ஒரு மெய்யியல் பள்ளியே மறைந்து கிடக்கின்றது. ‘பூதங்களை’ (தனிமங்களை) நடுவமாக வைத்துப் பின்னப்பட்ட “உலகாய்தம்” எனப்பெறும் மெய்யியல் முழுவதுமே பார்ப்பனியச் சிந்தனைக்குப் பரிசிலாகத் தரப்பெற்றது. முன்னோடி அறிவுப் பள்ளிகளில் ஒன்றாகிய சாங்கியமும், அதனை ஒட்டிப் பிறந்த அத்துணை அறிவுப் பள்ளிகளும், அன்றைய அய்ம்பெரும் தனிமங்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டதில்லை. அவை யாவும் பூதவியலின் தொன்மையையே உரைப்பன.

என்று குணா கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கது.

கலந்த மயக்கம் உலகம்

ஐந்து வகையான பூதங்கள் அல்லது மூலப்பொருட்களால் ஆனது இவ்வுலகம். கூட்டுப் பொருள்களான பூதங்கள் அவற்றின் இயல்புகளிலிருந்து மாறுபடுதலே அழிவு என்பது. ஐந்து வகை மூலப் பொருள்களையும் அவற்றின் இயல்புகளையும் நன்கு ஆராய்ந்த அறிஞர்கள் அக்காலத் தமிழகத்தில் நிறைந்திருந்தனர். அத்தகைய அறிஞர்களைப் பவுத்த இலக்கியங்கள் பூதவாதிகள் என்றும், சமற்கிருத நூல்கள் லோகாயதர்கள், லௌகீகதர்கள் என்றும் சுட்டின. தமிழ் இலக்கியங்கள் அவ்வறிஞர்களை ‘உயர்ந்தோர்’ எனப் பாராட்டின.

தொல்காப்பியர்,

வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான.

என்பார்.

உலகைப் பற்றிய ஆராய்ச்சியைக் குறித்தே உலகாய்தம் என்ற தமிழ்ச் சொல் வழங்கப்பட்டது என்பதை மேற்காட்டிய சான்றுகள் நிறுவுகின்றன. அறிவியலுக்கும் உலகாய்தத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை சார்சு பொலிட்சர், விஞ்ஞானங்களுடன் பிறந்தது லோகாயதவாதம். அது அவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது. லோகாயதவாதம் விஞ்ஞானங்களைச் சார்ந்து நிற்பது. எனவே, விஞ்ஞானங்கள் வளர வளர, அவற்றோடு கூடவே லோகாயதவாதமும் முன்னேறி வளர்ந்து பரிணமித்தது. அப்படி வளர்ந்த லோகாயதவாதத்தின் வாரிசாக நவீன காலத்திய லோகாயதவாதமாக மார்க்சு, ஏங்கெல்சு வகுத்த இயக்கவியல் லோகாயதவாதம், மெய்ஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் மீண்டும் புதிதாய் ஒன்றுபடுத்தி வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. என்று விளக்குவார்.

முனைவர் க.நெடுஞ்செழியன், திருச்சி, தமிழ்நாடு
மின்னஞ்சல் : ka.nedun...@gmail.com


--
இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages