குண்டலகேசி புகட்டும் யாக்கை நிலையாமை

2,456 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 7, 2008, 7:57:25 AM12/7/08
to தமிழாயம்

குண்டலகேசி புகட்டும் யாக்கை நிலையாமை

வி.நாகசுந்தரம்

கி.மு.4, 3-ம் நூற்றாண்டுகளில் பண்டைத் தமிழ் நாட்டிற்கு வடஇந்திய மதங்களான சமணம், பெüத்தம், ஆசீவகம், வைதிகம் ஆகியவை வந்தன. இச்சமயங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தபோது அக்காலத்தில் வடஇந்திய சமயங்களில் இருந்து வேறுபட்டதும், தனிப்பட்டதுமான மாபெரும் சமயத்தைத் தமிழர்கள் மேற்கொண்டிருந்தனர். அந்தத் தமிழர் சமயம் சைவம், வைணவம் என்று பிளவு பட்டு நிற்காமல் தமிழ்நாடு மிக அமைதியாக இருந்தது. ஆனால் வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த சமயங்கள் நான்கும், ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று அழிக்க முயன்றன. எனவே அச்சமயங்கள் வந்தபிறகு, தமிழ்நாட்டில் சமயப் பூசல்களும், கலகங்களும் ஏற்பட்டன. இக்கலகங்களை அடக்க "மன்னவனே பறையறைவித்தான்' என்று மணிமேகலையில் காண்கிறோம். எனினும் சமயப்போர் நிற்கவில்லை.

இச்சமயப் போராட்டத்தில், பிற மூன்று சமயங்களின் தாக்குதலைச் தாங்காது தமிழ்நாடு வந்த சிறிது காலத்திலேயே "ஆசீவக சமயம்' மறைந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கிய பெüத்தம், சமணம், வைதிகம் பிற்காலத்தில் சைவம், வைணவம் என்று பிளவுபட்ட தமிழர் சமயம் ஆகிய அனைத்துச் சமயங்களும் தொடுத்த தாக்குதல்களால் மறைந்தது.

பெüத்த சமயம் மிகவும் சிறப்புற்று விளங்கிய காலத்தில் அநேக பெüத்த இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அவைகள் கடல்கோள்களுக்கும், கரையான்களுக்கும், பிற சமயங்களின் காழ்ப்புணர்ச்சிக்கும் இரையாகி, மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் தவிர ஏனைய பெüத்த நூல்கள் அழிந்தன; அழிக்கப்பட்டன. குண்டலகேசி என்ற பெüத்த இலக்கியத்தில் தற்போது எஞ்சி இருப்பவை, குண்டலகேசியே பாடியதாகக் கருதப்படும் 5 பாடல்களைச் சேர்த்து 19 பாடல்கள் மட்டும்தான்.

இதன் ஆசிரியர் நாதகுத்தனார். காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு என்பர். பெரும்பாலும் விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட காரணத்தால் "குண்டலகேசி விருத்தம்' என்றும் இந்நூல் வழங்கப்பட்டது. குண்டலகேசியின் இயற்பெயர் பத்தா, பத்தரை மற்றும் பத்தாதீசா என்று வழங்கப்பட்டன. பத்தா சமண சமயம் சார்ந்தபொழுது தனது தலைமுடியைப் பனங்கருக்கு மட்டையால் களைந்தாள். ஆனால் பின்னர் வளர்ந்த தலைமுடி "சுருண்டு சுருண்டு' குண்டலம் போன்று இருந்தது. எனவே பத்தாவின் பெயர் "குண்டலகேசி' என்று வழங்கலாயிற்று.

மணிமேகலையைப் போன்றே காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியம் குண்டலகேசி. இவ்விலக்கியம் முழுவதுமாக அழிந்துவிட்ட நிலையில், இப்போது நமக்குக் கிடைக்கும் கதைப் பகுதியைத் தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை, பெüத்த கதை கூறும் தேரி காதையின் 46-ம் கதை, நீலகேசி, அங்குத்தர நிகாய, தம்மபதாட்டகதா, புத்தகேசரின் தம்மபத உரை, வைசிக புராணத்தில் 34-ம் இயல் போன்ற நூல்களிலிருந்து பெறுகிறோம். மேலும் திவாகரவாமன முனிவர் நீலகேசிக்கு எழுதிய உரையில், குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்பு மட்டும் காணப்படுகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் குண்டலகேசியின் 19 பாடல்களும் புறத்திரட்டிலிருந்து கிடைத்தவை. குண்டலகேசியே பாடியதாகக் கூறப்படும் பாடல்கள் பிற நூல்களிலிருந்து கிடைத்தவை.

குண்டலகேசி முழுக்க முழுக்க ஒரு தருக்க இலக்கியம். அக்கால கட்டத்தில் தருக்க வாயிலாக சமணம், வைதிகம் ஆகிய சமயங்களைப் புறங்கண்ட இலக்கியம்.

நீலகேசி என்ற சமண இலக்கியம் குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றியது. மேலும், குண்டலகேசி, நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற சமயவாதத் தருக்க இலக்கியங்களைக் காணும்போது சமய வாதம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் "கேசி' என்று அழைக்கப்பட்டனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

குண்டலகேசியை மறுக்கப் பிறந்த காப்பியமான நீலகேசியில், "மொக்கலன்' என்பவனிடம் நீலகேசி, "யான் இரண்டு பெüத்த சமயக் கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி குண்டலகேசி. மற்றொருவர் அருக்கச்சந்திரன் காண்' என்றாள். உடனே, மொக்கலன், "குண்டலகேசி பேராசிரியை, அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்' எனக் கேட்க, நீலகேசி குண்டலகேசியை வென்ற வகையை விளக்கினாள், என்று நீலகேசி கூறும் குண்டலகேசியின் வரலாற்றில் இக்கூற்றுக்கு எந்த விதமான சான்றுகள் ஆதாரமாக இல்லையாதலால், இக்கூற்றை சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுந்தது எனக்கொண்டு நீலகேசியின் கூற்றை ஒதுக்கிவிடலாம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றே குண்டலகேசியின் காப்பியத் தலைவியின் தந்தையாரும் வணிகரே! வளையாபதி காப்பியத் தலைவனும் வணிகரே!.

ஒருநாள், புரோகிதன் ஒருவனுடைய மகனான சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளையடித்ததால், அரசன் ஆணையின்படி அவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். சாளரத்தின் வழியே அக்கள்வனை அழைத்துச் செல்வதைக் கண்ணுற்ற பத்தாதீசா அவன்மேல் காதல் கொண்டாள். அவனையே தன் நாயகனாக அடைய வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தந்தையிடம் வற்புறுத்திக் கூறினாள். அதனைக் கேட்ட பத்தாவின் தந்தை, அரசனுக்கு தண்டனைத் தொகையாக ஆயிரம் பொன் செலுத்தி, அக்கள்வனை மீட்டு வந்து, தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். சத்துவானுக்கு "காளன்' என்ற பெயரும் உண்டு.

இருவரும் இல்லற இன்பம் துய்த்து வந்த காலத்தில் ஒருநாள், பத்தா ஊடல் கொண்டு, "நீ கள்வன் அன்றோ?' என்று சினந்து பேசினாள். விளையாட்டாகக் குண்டலகேசி கூறியதைக் கேட்ட காளன், மிகவும் சினம் கொண்டு அவனைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினான்.

தன்னைக் கள்வனென்று கூறியவளைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் காளன், அண்மையில் உள்ள மலை உச்சிக்கு அவளை அழைத்துச் செல்கிறான். வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் காண்பித்து, கடைசியில் அவளுடைய நகைகளைப் பறித்துக் கொண்டதுடன், அவளை கீழே தள்ளி உயிரை மாய்க்கப் போவதாகக் கூறுகிறான். "தற்கொல்லியை முற்கொல்லல் தகும்' என்று முடிவுசெய்த, குண்டலகேசி, ""எனக்கு உம்மைத் தவிர வேறு இறைவன் கிடையாது; நான் உயிர் துறக்குமுன் மும்முறை உம்மை வலம் வர வேண்டுமென'' அனுமதி கோருகிறாள். காளனும் அதற்கு இசைய, குண்டலகேசி, அவனை வலம் வருவது போல் நடித்து, தனது கணவனை மலை முகட்டிலிருந்து கீழே தள்ளிக் கொன்றாள்.

அதன் பின்னர், வாழ்வில் வெறுப்பு கொண்டு சமண சமயம் சார்ந்து சமய வாதம் புரிந்து, பிற சமயத்தவரை வாதில் வென்று வாகை சூடுகிறாள். முடிவில் புத்தபிரானின் சீடரான சாரி புத்தரிடம் வாதிட்டுத் தோற்றதால், புத்த சமயம் சேர்ந்து, தன் வாழ்நாளின் கடைசிவரைப் புத்த சமயக் கருத்துக்களை பரப்பி, இறுதியில் புத்தர் பிரானின் திருவடிகளை அடைகிறாள் என்ற குண்டலகேசியின் வரலாற்றை நீலகேசி உரையினால் அறிகிறோம்.

குண்டலகேசி நூலில் கிடைத்திருப்பது 19 பாடல்கள்தான். இந்த 19 பாடல்களும், ஆழ்ந்த கருத்தோடு மனதைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளன. யாக்கை நிலையாமை குறித்து குண்டலகேசி தரும் கருத்துக்கள், தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னான எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியவை.


""பாளையாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி

நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாதது என்னோ!''


எது எப்படி இருப்பினும், நாம் இழந்த இலக்கியங்களுள் மிகச்சிறந்த பெüத்த இலக்கியம் "குண்டலகேசி' என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

 

நன்றி: தினமணி

--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages