வள்ளுவரும் கணியரும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

169 views
Skip to first unread message

இரவா

unread,
Jun 16, 2009, 7:28:57 AM6/16/09
to தமிழாயம்

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களும், பல பொருளை உணர்த்த ஒரு சொல்லும் நிறைய வழக்கில் உள்ளன. அகராதிகளும், நிகண்டுகளும் இந்த அடிப்படையில்தான் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பின்னணியில் வள்ளுவர், கணியர் ஆகிய இரு சொற்கள் உணர்த்தும் பொருளை-தொழிலை விளக்குவது இன்றியமையாததாகும்.

கணியர்கள் பெரும் துறவிகளாகவும், அரசவையின் உள்படு கருமத்துள் பொறுப்பு வகிப்போராகவும் விளங்கியவர்கள். அத்துடன் வானியல், அறிவியல் துறைபோகி, காலத்தைக் கணிப்பவர்களாகவும் நாளும் கோளும் அறிந்து நிமித்தம் கூறுவதில் வல்லவர்களாகவும் விளங்கியவர்கள் என்பது இவ்வியலின் தொடக்கத்துள் விளக்கப் பட்டுள்ளது.

கணியர்களைப் போன்றே வள்ளுவர் என்போரும் அத்தகைய தொழிலைச் செய்பவர்களாகவே வாழ்ந்து வந்தனர். சீவக சிந்தாமணி ‘தப்பாமல் நிமித்தம் கூறுதலில் வல்லவர்கள் இவ்வள்ளுவர்கள்’ என்பதை,

வாய்த்த வந்நிரை வள்ளுவன் சொனான்

என்று குறிக்கும்.

புள்வாய்ப்புச் சொன்ன கணிமுன்றில் நிறைந்தன

எனச் சிலப்பதிகாரம் நிமித்தம் சொல்வானைக் கணி என்ற பெயரில் சுட்டும்.

பெருங்கதை, வள்ளுவனை அரசியல் செய்திகளைப் பறை அறைந்து அறிவிப்போனாகச் சுட்ட, பிங்கல நிகண்டு, ‘உள்படு கருமத் தலைவன்’ என்று விளக்கம் தரும்.

அரசர்கள் படைகொண்டு செல்லும் போது கணியர்கள் உடன் செல்வர் என்பதும், காலத்தை அறிந்து கூறுவர் என்பதும் பின்வரும் சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.

அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த

மேற்காட்டிய சான்றுகள் கணியருக்கும் வள்ளுவருக்கும் இடையேயுள்ள ஒற்றுமையினை உணர்த்தும். இன்றளவும் வள்ளுவர் என்போர் கல்வி புகட்டும் ஆசிரியராகவும், நாள்கோள் பார்க்கும் சோதிடராகவும், பஞ்சாங்கம் பார்க்கும் காலக் கணிதராகவுமே தொழில் செய்து வருகின்றனர். ஆல்பர்ட் சுவைட்சர் குறித்ததைப் போன்று அவர்கள் இன்றைய சமூக அமைப்பில் அதாவது இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோராகவே வாழ்கின்றனர். இத்தொழிலைச் செய்பவர்களைக் கணியுரைப்போர் என்று அழைக்கும் மரபு மக்கள் நடுவே இன்றும் நிலவுகின்றது. இக் கணியுரைப்போரும் தாழ்த்தப் பட்டவர்களே.

மேலும் சங்க காலத்தில் ‘நாஞ்சில் வள்ளுவன்’ என்ற வள்ளல் புலவர்களால் மதிக்கப் பெற்ற பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றான். ஒளவையார் அவனைப் பாடியுள்ளதாலும், ஒளவையாரால் பாடப்பட்ட அதியமான், அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாலும் நாஞ்சில் வள்ளுவனின் காலமும் அசோகனுக்கு உரிய கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆதல் வேண்டும். எனவே தமிழகத்தில் வள்ளுவன் என்ற பெயர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவிலும் வழக்கில் இருந்தமை தெளிவு.

கணியர்-வள்ளுவர் என்ற இரு பெயர்களும் ஒரே தொழிலைச் செய்து வந்தவர்களைக் குறிக்கின்றன. மேலும் நன்கணியார் இந்தியச் சிந்தனையில் அணுவியற் கோட்பாட்டிற்குரியவராக மதிக்கப்படுபவர். திருக்குறளும் ஒளவையாரால்,

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

என்ற பாராட்டைப் பெற்றுள்ளது.

பழந்தமிழகத்தில் அணுபற்றிய கோட்பாடு மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த ஒன்று. பொருட்கள் அணுக்களின் திரட்சியே என்பதைத் தெளிவாகவே உணர்ந்திருந்தனர். அத்துடன் மிகவும் நுண்ணியதான அணு கண்ணுக்குப் புலப்படாத ஒன்று என்பதையும், ஆனால் அணுக்களின் திரட்சியாகிய பொருட்களை (பூதங்களை)க் கண்ணால் காணமுடியும் என்பதையும் அறிந்திருந்தனர். இதனை மணிமேகலை அழகிய உவமை ஒன்றால் விளக்கும். ‘மாலை இருளில் தனி மயிரைக் காண முடியாதவர்கள் மயிர்க் கற்றையைக் காண முடிவதைப் போல, அணுவைக் காண இயலாதவர்கள் அணுக்களின் திரட்சியாகிய பொருட்களைக் காண்பர்’ என்பதனை,

ஓரணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒருமயிர் அறியார்
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்

என்ற அடிகளால் அறியலாம்.

அணுவை தெய்வக் கண்ணோர் உணர்வர் என்பதால் அன்றைய அறிவு வளர்ச்சிக்கேற்ப அணுவைப் பற்றிய ஆய்வு நடந்திருக்க வேண்டும் என்பதும், அத்தகைய ஆய்வை மேற்கொண்டிருந்த ஆன்றோர்களே ‘தெய்வக் கண்ணாரா’கப் போற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் தெளிவு. எனவே திருக்குறள் அணுவைப் போன்ற நுட்பம் கொண்டது எனும் கூற்றில் உண்மை உள்ளது என்பதை அறிய முடிகின்றது.

ஒளவையாரைப் போன்றே வள்ளுவ மாலையில் வரும் புலவர்கள் அல்லது அவர்களின் பெயரில் உள்ள பாடல்கள் ஆகியவற்றுள் அடங்கியுள்ள வரலாற்று உண்மைகள் ஆய்விற்குரியன. இருப்பினும் பக்குடுக்கை நன்கணியாரின் அணுக்கோட்பாட்டை எதிரொலிக்கும் வகையில் அமைந்துள்ள ஒளவையாரின் பாராட்டுரையைப் புறக்கணித்து விட முடியவில்லை.

மேலும், கணியர்-வள்ளுவர் ஆகிய இரண்டு பெயர்களுக்கும், அப்பெயர்கள் உணர்த்தும் தொழில்களுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைப் போலவே, நன்கணியார்-திருவள்ளுவர் இருவரின் பாடல் கருத்துக்களும் மிக ஒப்புமையுடன் அமைந்துள்ளன.

பக்குடுக்கை நன்கணியாரின் கோட்பாடு தனிமனித வாழ்விலிருந்து சமூக வாழ்வைக் காண்கிறது. வள்ளுவம் தனிமனித வாழ்வின் வறுமைக்கு அதன் சமூகப் பின்புலத்தைக் காரணமாகக் காட்டுகின்றது. இருவரது சிந்தனையும் இயல்பான நிலையில் இயல்பான உண்மைகளுடன் அமைந்தவை. அத்துடன் கடவுட் கோட்பாட்டை மறுப்பதிலும் இருவருக்குமிடையே எவ்வித மாறுபாட்டையும் காண முடியவில்லை.

அணுக்கோட்பாட்டாளராகவும் கடவுள் மறுப்பாளராகவும் விளங்கிய பக்குடுக்கை நன்கணியார் என்ன காரணத்தால் விதிக் கோட்பாட்டை உருவாக்குவதில் தன் பங்களிப்பைச் செலுத்தினார் என்பதை அறிய எவ்விதத் தடயங்களும் கிடைக்கவில்லை. சமூக வாழ்வில் போரினால் ஏற்பட்ட தாக்கங்களும் அதன் விளைவால் ஏற்பட்ட அவலங்களும் இத்தகைய பின்புலத்தை உருவாக்கியிருக்கலாம். எனினும் திராவிடச் சிந்தனையை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றவர் என்பதில் அவரது பங்களிப்பு தலையாயதாகும். புத்தரின் சமகாலத்தவர் பக்குடுக்கை நன்கணியார், புத்தரின் சீடர்களான சாரிபுத்தன், மொக்கலன் ஆகிய இருவரும் பூதவியலைத் தென்னாட்டில் கற்றவர்கள். பூதவியலாகிய அய்ந்திரம் தொல்காப்பியத்தைப் போன்றே திருக்குறளிலும் முழுமை பெற்றுள்ளது. எனவே, அய்ந்திர மரபு செழித்து நின்ற காலத்தில் அதாவது, அம்மரபு பல கூறுகளாகக் கிளைக்காத ஒரு கால கட்டத்தில் வள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அக்காலம் தொல்காப்பியர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியோரின் காலமாகிய கி.மு. 6ஆம் நூற்றாண்டாகவும் இருக்க வேண்டும்.
 

இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages