Re: [வல்லமை] Re: [MinTamil] Re: வாலறிவன்

44 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 20, 2017, 6:09:02 AM9/20/17
to vallamai, mintamil, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, Raji M
அன்பின் 
திரு பானுகுமார் அவர்களுக்கு 

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணைந்து.                 (23)

இப்பாடலில் வாலறிவன் எனும் சொல் பயன்பாடு உள்ளது 

இஃ து இன்னிலை எனும் நூலினை சார்ந்தது 

இது மதுரைத்திட்டத்தில் உள்ளது எனினும் இங்கேயே உங்களுக்கு 
எளிதில்கிட்ட  இணைப்பில் வைத்துள்ளேன் (மற்றவர்க்கும் பயன்) 
 
இதனில் 45 பாடல்களே இருந்தாலும் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் இணைப்பாகும் கடவுள் வாழ்த்துப்பாடலும் முதல்  பாடலாக பெற்றுள்ளது (%%) 
எனினும் பாடல்களின் பொருள் நோக்கு நடை மகடூஉ முன்னிலை இவற்றினைக்
காண 18 கீழ் கணக்கு நூல்களின் காலத்தினது ஆகலாம் என கொள்ளத்தக்கதே.
 மேலும்
 1 அறப்பால் 2 பொருட்பால் 3 இன்பத்துப்பால் 4 வீட்டுப்பால் = இல்லியால் / துறவியல்
 எனும் தலைப்புகளுடன் காண்கின்றமையும் நூலினுள் பல சொல்லாட்சி பொருளாட்சி நோக்க திருக்குறளையே சார்ந்து எழுந்தது எனலாம் 

புல்லங்காடனாரின் கைந்நிலை  என்பதுதான் 18 கீழ்க்கணக்கு நூல் களில் கா ட்டப்
படுவது. அதனுடன் ஓலைச் சுவடிகளில் இன்னிலையும் இணைந்து வந்துள்ளது அதற்கு ஓக்க அறம் பாடும் ஓர் சிறந்த நூலென்று வைக்கலாம் என ஓலைச்சுவடி பேணுபவர் கொண்டனர் போலும் 
-------------------------------------------------
(%%) கடவுள் வாழ்ந்துகொண்டு  இந்நூல்
 சைவம் சார்ந்தது என மறை முகமாக
காட்ட நினைக்கவில்லை அய்யா)
பெருந்தேவனாரின் கடவுள்வாழ்த்து இத்தகையது  
குறுந்தொகை முருகன் 
நற்றிணை       திருமால் 
 இன்னிலை      சிவன் 
புறநானூற்றின் முதல் பாடல் =ஆசிரியர் வேறு பெருந்தேவனார் 


--------------------------------------
இன்னிலை
ஆசிரியர் : பொய்கையார்

கடவுள் வாழ்த்து
0
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே
             பாரதம் பாடிய பெருந்தேவனார்

                    1. அறப்பால்
அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள்கேட்டு அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு
1
பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல் பாலஆக்கார் ஆம்ஆறு
அருள்இழையார் தாமும் அது
2
கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார்
3
கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்து - அழிமுதலை
இல்லம்கொண்டு ஆக்கார் இடும்பைத் தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார்
4
திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்
5
அம்மை இழைத்த தலைப்பட்டு அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயலாம் - மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்
6
தாம்ஈட்டு அருவினைகள் தண்டா உடம்புஒன்ற
நாம்மீட்டு ஒறுக்குஒணா ஞாங்கரடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்புஇறப்புப் போகா
கதுப்போடு இறுத்தல் கடன்
7
தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு
8
கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு
9  மூன்று அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா

இடிப்பதென்று எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு
10
உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார் போழ்வாள்
இருபால் இயங்கலினோடு ஒப்பு
11
உடைமையறாது ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம்
உடையவரும் வேறு படும்
12
மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் - உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய்
13
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூஒழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கையிலார் - வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணைதோள் சேய்திரங்க
ஒல்குஉயிர்நீத்து ஆரும் நரகு
14
குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டாயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான்
நல்லறமும் பேணானாம் நாரமிவர்த் தானாம்
பொல்லாங்கு உறைவிடமாம் புல்
15
                        2 பொருட்பால்(??)
முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறைஆங்கு
முப்பொருள் உண்மைக்கு இறை
16
கால்கலத்தால் சேர்பொருளும் கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளும் - கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணந்து
17
ஆம்போன் வினையான் அணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்புஒம்பு எனமறை கூறத் தலைப்பெயல்என்
எம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ்து அலறும் தகைத்து
18
பட்டாங்குத் தூயர் பழிச்சற்கு உரியராய்
ஒட்டின்று உயர உலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை யின்றி அமையாராம் மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க உடம்பு
19
                           3 இன்பப் பால்
அறங்கரை நாவானம் ஆய்மயிலார் சீர்இல்
லறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம்ஈண்டு
எண்நிலைக்கு உய்வாய் இது
20
துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காதார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டுங் கடுமிகையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ்து ஆகும் அணி
21
ஒப்பாவில் வேட்டோன் ஒருநிலைப்பட்டு ஆழ்ந்தசெயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிய -துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து
22
பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணைந்து
23
அழக்குடம்பு யாத்தசீர் மெல்லியவை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மனஅரசால் மாண்பூப்பு உலகு
24
இன்ப இயல்ஓரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செல்விதாம் - தன்மேனி
முத்த முறுவல் முயக்குஒக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பேறும் பேறு
25
தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்கு அவரோர் கரி
26
காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம் - ஏமத்துஈண்டு
ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பரவில்
தெற்றித் தெறிப்பாம் ஒளிஒளிபாய் கண்ணேசீர்த்து
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு
27
கறங்குபறை காணா வுறுவூனைக் காதல்
பிறங்கறை நாவாகும் அஃதே - திறம்இரங்கி
ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில தோர்இன்ப விருந்து
28
தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழல்தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி
29
காதல் விரிநிலத்து ஆரா வகைகாணார்
சாதல்நன் றென்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவ தெலன்
30
அளகும் அளிநாகைப் பேண அணியார்
அழகரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தனியாளர்
பெற்ற பிறத்தெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது
31
4 வீட்டுப் பால் / இல்லியல்
ஒத்த உரிமையனர் ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒருஉங் குணத்தளாக் சுற்றறிஞர்ப்
பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்
32
மனைக்கொளிசேய் நாற்பணியோன் நாரப் புலக்கார்
விளக்கொளியாம் கட்காம் அனலி முனைக்குஅஞ்சா
வீரர் ஒளியா மடமே அரிவையார்க்காம்
ஏரொளியாம் இல்லுடையான் துப்பு
33
எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரை வில் கூட்டிடுக - கைப்பொருள்வாய்
இட்டில்உய் வாய்இடுக்க வீங்க விழையற்க
வட்டல் மனைக்கிழவன் மாண்பு
34
ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மனையைப் பேணிக் - கடாவுய்த்த
பைம்புல் நிலைபேணி யூழ்ப்ப வடுஅடார்
ஐம்புலர்ஈர்த் தாரில் தலை
35
உள்ளவா சேறல் இயைபெனினும் போம்வாய
வெள்ளத்து அனசேறல் வேண்டல் - மனைக்கிழவன்
நள்அளவின் மிக்காய கால்தொழிலை ஓம்பலே
தெள்அறிஞர் கண்ட நெறி
36
ஐங்குரவர் ஓம்பல் இனல்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூடு களைகணாப் பார்த்தளித்தல் = நையுளத்தார்க்கு
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்கு அறநெறியில்
உத்த புரிதல் கடன்
37
நல்லினம் சாரல் நயணுணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய்
இன்னார்க்கு இனிய புரிதல் நெறிநிற்றல்
நன்னாப்பண் உய்ப்பதோர் ஆறு
38
முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போல்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்று
இனியனா வான்மற் றினி
39
            4 வீட்டுப் பால் / துறவியல்
முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாவை
முப்பால் மயக்குஏழ் பிறப்பாகி - எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஒரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாய்ப் போந்து
40
உண்மைமால் ஈர்ந்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுனர்நான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றம் விழப்புலனை
ஒண்பொருட்டு ஊர்இயலைச் சார்ந்து
41
மாக்கல் வீறும் ஒளியன்ன நோன்புடையார்
மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆர்சுற்றி
இன்னல் இனிவாயாம் கொள்வார் பிறப்புஇறப்பில்
துன்னார் அடையும் நிலன்
42
பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனா நீங்காப் பெரும்பொருளை
யேரா அறிந்துய்யும் போது
43
மெய்யூணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம் ஓருங்கு அழியும்
ஐயுணர்வாம் ஆயந்து அறஞ்சார்பாச் சார்புஒறுக்க
நையா நிலைவேண்டு வார்
44
ஒண்றுண்டே மற்றுடலிற் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உயர்ந்தார்
புல்பாலாற் சுற்றப் படார்
45
இன்னிலை முற்றிற்று



நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-09-18 6:08 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நல்தாள் = நல்த்தாள்= நற்றாள்

17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:22 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
நன்றி, பானுகுமார். இந்த வலைக்கண் பதிவை அறிவேன். அதில் இல்லாத வாலறிவன் பாடல்கள் சில காட்டவே இந்த இழையைத் தொடங்கினேன்.
ஸ்ரீ. ஜலஸயநன் போன்றோருக்கு உதவும் என நம்புகிறேன். 

சலசயனன் திருக்குறள் கடவுள்வாழ்த்தை தாண்டிவிட்டால் திருக்குறள் சமணர் இயற்றியது என்பது கடினம் என்கிறார். எல்லோருக்குமாக எழுதியது
குறள். பொதுமறை. பெ. சுந்தரனார் தமிழ்த்தாய்வாழ்த்திலும் குறிப்பிடுகிறாரே.

ஆனால், ஒரு பத்துப், பன்னிரண்டு குறள்கள் திருக்குறளின் உள்ளேயும் இருக்கின்றன. அவற்றுக்கு உரைகண்டு ஒருநூல் வெளியிட ஆவல். பார்ப்போம்.

சலசயனன் கடவுள் வாழ்த்து என்பதை முதல் நான்கு அதிகாரம் என்று சொல்லலாம். சைவர்களுக்கு சிக்கல் அளித்தது இந்த முதல் நான்கு
அதிகாரங்கள். வ.உ.சி. போன்றோருக்கு.

இலங்கை தேசிய கீதம் பற்றிய வரலாறு ஒன்று நினைவுக்கு வருகிறது. நல்லதம்பிப் புலவர் தமிழில் மொழிபெயர்த்து அதுவும்
தேசியகீதமாக ஏற்கப்பட்டது. சமரக்கோன் தாகூரின் மாணவர். தாகூரால் தான் இலங்கை தேசிய கீதம் உருவானது. மாணவர் ஸமரகோன்.
ந்யுமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளில் ஆர்வம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகள் முதல்வரியை மாற்றினர். ஸ்ரீலங்கா என்று சேர்த்தனர்.
ஆனால், சமரக்கோன் இறுதிவரை சம்மதிக்கவே இல்லை. தாகூர்-தன்னுடைய பாடலை தலையைவெட்டக் கூடாது என்றார்.

அதுபோல, திருக்குறளின் தலை. தலைமையான முதல் நான்கு அதிகாரங்கள் அவர் சமணர் என்று அறிவிப்பவை. இதை திருவள்ளுவர் சமயம்
எது என்று எழுதுவோர் கருத்தில் கொள்ளவேண்டும்.

பிற பின்,
நா. கணேசன்


2017-09-16 23:40 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

வாலறிவன்



பிறவியும் ஞானமும்



உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.


குணஸ்தானப் படிகள்

வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.

உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.

உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.

ஞானம் அல்லது அறிவு

சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.

1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.

2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.

3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.

4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.

5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.


குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.



கேவல ஞானம் 

பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.

இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்



வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!



சமண இலக்கியத்தி வாலறிவு


வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!



1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச் 
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத் 
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள 
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157) 

இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!


அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!


இரா.பானுகுமார்,
சென்னை.



குறிப்புகள்:

1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி

2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி

3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்

4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்

5. தமிழ் அகராதி
========================================

2017-09-14 11:45 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தனது இறைவனை  வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.

தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.
அதனைச் சொல்கிறார்.

வாலறிவன், அறிவன் என்று வரும் சைவப் பாடல்கள் உண்டா? எந்த நூற்றாண்டு?

யாப்பருங்கல விருத்தி மேற்கோள்:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி                  [அசை]
     மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை                    [சீர்]
     முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை                    [அடி]
     அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
     துன்னிய மாந்தரஃ தென்ப                             [எழுத்து]

     பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’.1 


திருந்தொளி அறிவன் = தூய்தான அறிவன் = வாலறிவன்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages