அ. சிவசங்கரன்
உலகப் பராமரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இச்சுற்றுலாத் தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும்
ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால்
அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது.
பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டொன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 ஆம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டு விழா காண்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள் ளன. இக்காலத்தில் உள்ளது போல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/2 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும்.
அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந் நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சி யின் கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.
மற்றொரு கல்வெட்டின் மூலம் ‘ராஜராஜேச்சுவர நாடகம்’ இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ் மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப்பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம்.
பெரிய கோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்ப வடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும்.
தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயில் “பெருவுடையார்கோயில்” என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் அயல் நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளார். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளார். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது.
ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழப்புரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளார். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன.
பெருவுடையார் கோயில், பத்மா சுப்ரமணியம், பிரகதீசுவரர் கோயில், UNESCO
பெரிய கோயில் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.
சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பெரிய கோயில் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.
கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமா ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.
தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.
லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.
மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.
சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.
இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
பெரிய நந்தி: இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.
மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது
இராஜராஜ சோழ மன்னனின் சமாதி