உலக மெய்யியல் தினம்

235 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Nov 19, 2010, 7:21:13 AM11/19/10
to tamilwi...@googlegroups.com

இன்று உலக மெய்யியல் தினம்

Thursday, 18 November 2010 05:31
இன்று உலக மெய்யியல் தினம்.மனிதனது நாளாந்த வாழ்வில் மெய்யியல் அறிவின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்கும் மெய்யியல் அறிஞர்களினை கௌரவப்படுத்தும் முகமாகவும் உலக மெய்யியல் தினமானது 2002 ஆம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் கார்த்திகை மாதத்தின் மூன்றாம் வியாழக்கிழமையில் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இவ்வருடம் உலக மெய்யியல் தினமானது உலகில் பலரையும் கவர்ந்த தினமாக 9 ஆவது வருடமாக யுனெஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
இருந்தபொழுதிலும் ஈரானில் காணப்படுகின்ற அரசியல் ஸ்திரமற்ற சூழல் மற்றும் இஸ்லாமிய சமய நம்பிக்கைகளுக்கு சவாலாக சமகால மெய்யியல் விளங்குவதனால் அதனை மீள் திருத்தம் செய்வதற்கு அந்நாட்டு அரசு எடுத்த முயற்சியினை கண்டிக்கும் நோக்குடன் இவ்வருடம் இவ்விழா ஈரானில் கொண்டாடுவதற்கு மெய்யியலார்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இத்தினத்தின் பிரதான நோக்கமாக உலகின் மக்கள் மத்தியில் மெய்யியல் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகவும் புதிய சிந்தனைகளுக்கான வழிவகைகளினை ஆராய்வதாகவும் அதேவேளை, சமூகத்தில் இழையோடிக் காணப்படும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் ஓர் மெய்யியல் ரீதியான தீர்வினை திறனாய்வின் அடிப்படையில் முன்வைக்கும் ஓர் திட்டமாகவும் அமைகின்றது.
உலக மெய்யியல் தினத்தினது வரலாற்றினை நோக்கும் பொழுது 2002 ஆம் ஆண்டில் இருந்து க்NஉகுஇO நிறுவனத்தினால் அதன் தலைமையகத்தில் 2004 ஆம் ஆண்டுவரை கொண்டாடப்பட்டு வந்த பொழுதிலும் 2005 ஆம் ஆண்டில் இருந்து இதன் முக்கியத்துவத்தினை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன் இவ் உலக மெய்யியல் தினமானது பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது.இந்த வகையில் 2005 ஆம் ஆண்டு சிலிநாட்டிலும் 2006 மொறொக்கோ நாட்டிலும் 2007 இல் துருக்கி நாட்டிலும் 2008 இல் இத்தாலியிலும் 2009 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மெக்சிக்கோ என்ற இடத்திலும் இவ்வருடம் பிரான்ஸில் க்NஉகுஇO வின் தமையகத்தில் அதன் இயக்குநரான ஐணூடிணச் ஆணிடுணிதிச் என்பவரது தலைமையில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படுகின்றது.இவ் வருட மெய்யியல் தினமானது மெய்யியலும் பண்பாட்டுப் பல்வகைமைகளுக்கிடையிலான நட்புறவினை உருவாக்குதலும் எனும் தலைப்பில் பின்வரும் விடயங்களை கருப்பொருளாகக்கொண்ட விவாதமாக காணப்படுகின்றது.
பல்வகை பண்பாடுகளுக்கு இடையில் அறிவுப்பாலத்தினை கட்டியெழுப்புதல்
பெண் மெய்யியலாளர்களும் அரசியல் சரிப்படுத்தல்களும்
பகுத்தறிவான உரையாடல்கள்
அறிவும் அதன் போராட்டங்களும்
போன்ற விடயங்களைஉள்ளடக்கியதாக அமையவுள்ளது.
மெய்யியல் தினத்தைப்பற்றி அறிந்த நாம் இத்தினத்தில் மெய்யியல் என்றால் என்ன?மனித வாழ்வுச்சக்கரத்தில் இதன் முக்கியத்துவம் என்ன? இலங்கையில் மெய்யியல் கல்வியின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது.சமகால அரசியலில் பகுத்தறிவுடன் சிந்திக்கவேண்டிய தேவைப்பாடு என்ன? என சற்று சுருக்கமாக நோக்குவது பொருத்தமாக அமையும் என நான் நம்புகின்றேன். மெய்யியல் என்ற சொற்பதத்திற்கு சரியான துல்லியமான வரைவிலக்கணத்தை வழங்குவது ஓர் இயலாத விடயமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் மெய்யியலானது அனைத்து அறிவியல் துறைகளுக்கும் ஓர் அடிப்படை ஊற்றாக காணப்படுவதுடன் மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்ததாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக விஞ்ஞானம்,அரசியல்,பொருளாதாரம்,மொழியியல்,உளவியல்,சமூகவியல் போன்ற பல்வேறுபட்ட அறிவியல் துறைகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதுடன் மேற்கூறப்பட்ட துறைகள் மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகின்றது.
உண்மையில் மெய்யியலின் தோற்றமானது கிரேக்கம் என்று கூறப்பட்டு வந்த பொழுதிலும் மனிதனிடத்தில் உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆர்வம் எப்போது தோன்றியதோ அன்றில் இருந்து மெய்யியல் தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அந்த வகையிலேயே மெய்யியல் என்ற சொற்பதமானது ஞானத்தின் விருப்பு அல்லது அறிவின் மீதான தீவிரப்பற்று(ஃOஙஉ Oஊ ஙிஐகுஈOM) எனக் கூறப்படுகின்றது.ஒருவருடைய புதுமை நாட்டத்தினையும் நுண்ணறிவினையும் பிரயோகிப்பதற்கான விருப்பு என்பதனை குறித்து நிற்கின்றது. இருந்த பொழுதிலும் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பல மெய்யியலாளர்கள் மெய்யியலுக்கு விளக்கம் கொடுப்பதற்கு மெய்யியலில் இலக்கினையும் அதன் பண்புகளையும் மையப்படுத்தி முறையியல் அடிப்படையில் பல்வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.அந்த வகையில் மெய்யியல் என்றால் என்ன என்பதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கணமாக சிந்தனையுடன் கூடிய வினாக்களை கொண்டமைந்த உலகு பற்றியும் மனித வாழ்வின் அர்த்தம் பற்றியதுமான உண்மை.அறிவினை தேடும் ஓர் அறிவியல் துறையாக கூறிக்கொள்ளலாம்.
மெய்யியலின் முக்கியத்துவம்
அடுத்து நாம் மனித வாழ்வில் மெய்யியலின் முக்கியத்துவத்தை நோக்கும்பொழுது மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் செல்வாக்கினை செலுத்தி வருகின்றது. உதாரணமாக எமது வாழ்வில் நாம் பயன்படுத்தும் அர்த்தத்துடன் கூடியதான மொழியானது மெய்யியலில் இருந்தே தோன்றுகின்றது. சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு நிறுவனங்களும் மெய்யியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே கட்டியமைக்கப்படுகின்றது.உதாரணமாக மெய்ப்பொருள் காண்பது அறிவு,உனை நீ அறி போன்ற மகுட வாக்கியங்கள் இன்று பாடசாலைகளிலும் பல்கலைக்கழங்களிலும் இலட்சணைகளில் சித்திரிக்கப்படுகின்றது.மெய்யியலானது உண்மையினை பொய்யிலிருந்தும் மூடநம்பிக்கைகள், முற்கற்பிதங்கள்,வியாக்கியானங்கள் போன்ற மாயை இருளை அகற்றும் ஓர் ஆயுதமாகவும் விளங்குகின்றது.அதேவேளை,அறிவினையும் தெளிவினையும் பெற்றுக்கொள்வதற்கு முக்கிய கருவியாகவும் காணப்படுகின்றது.மேலும் மெய்யியல் கல்வியானது ஒருவருடைய கூற்றினை விமர்சன ரீதியில் பகுத்தாராய்வதற்கும் எமது வாதத்திற்கு தர்க்க ரீதியான உதாரணங்களை முன்வைப்பதற்கும் உதவுகின்றது.பொதுவாகவே மெய்யியல் அறிவு இல்லாதவனை முட்டாளுக்கு சமம் என்றே கூறலாம். யார் என்ன கூறினாலும் அதுதான் உண்மை என எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஏற்றுக்கொள்வனாயின் அவன் முட்டாளாகவே கருதப்படுவான். மெய்யியல் அறிவினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஒருவன் ஒரு விடயம் பற்றி திறனாய்வின் அடிப்படையில் பல வினாக்களை பல கோணங்களில் அலசி ஆராய்வதன் ஊடாக உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்வதுடன், தனது புத்திசாலித்தனத்தை நிலைநாட்டுபவனாக காணப்படுகின்றான்.
மெய்யியல் அறிவு இல்லாதவனின் வாழ்க்கையானது உயிரோட்டம் அற்ற சலிப்புத்தன்மையுடையதாகவும் மொத்தத்தில் அர்த்தம் இல்லாத வாழ்க்கையாகவுமே காணப்படும்.மேலும் மெய்யியல் அறிவானது மற்றவர்களின் சிந்தனையினை விமர்சன ரீதியில் மட்டுமன்றி மற்றவர் கூற்றினை நம்புவதற்கு பதிலாக எவ்வாறு சிந்திக்கவேண்டும் என்ற கற்றல் முறையினையும் எமக்கு காட்டுகின்றது.மேலும் மெய்யியலை கற்பதன் மூலம் மனித இருப்பின் முக்கியத்துவத்தினை உணர்வதுடன் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற யதார்த்தத்தையும் காட்டி நிற்கின்றது.தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக ஐக்கியத்தையும் புரிந்துகொள்ளலையும் உருவாக்க முனைகின்றது.
இலங்கையில் மெய்யியல் கல்வியின் வளர்ச்சி நிலை
இலங்கை சுதந்திரம் அடைய முன்னரே சேர் பொன் இராமநாதன்,ஆனந்த குமாரசாமி போன்ற அறிஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை மெய்யியலுக்கு செலுத்தி வந்த போதிலும் மெய்யியல் தனித்த ஒரு துறையாக வளர்ச்சியடையவில்லை.சுதந்திதரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியிலேயே பல்கலைக்கழகங்களில் மெய்யியல் கல்வியானது ஓர் தனித்துறையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.குறிப்பாக முதன்முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே மெய்யியல் துறை தனித்துறையாக ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மாணவர்களுக்கு மெய்யியல் அறிவினை வழங்கி வருகின்றது.1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்கான விசேட துறையாக மெய்யியலினை மிகவும் ஆர்வத்துடன் கற்று வந்தனர் என்பதனை வரலாற்றுப் பதிவேடுகள் மூலம் காணமுடிகிறது.
இக்காலப்பகுதியில் சிங்கள அறிஞர்களான பேராசிரியர் கே.என்.ஜெயதிலக, பேராசிரியர் டேவிட் களுபகான போன்றவர்களின் பங்களிப்பு மாணவர்கள் மத்தியிலும் சமூகத்தின்மத்தியிலும் மெய்யியல் பரவலடைய காரணமாக இருந்தார்கள்.70 களின் பிற்பகுதியில் இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மேலும் விருத்தியடைய களனி,யாழ்ப்பாணம்,கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கங்களினூடாக மெய்யியல் கல்வியானது வளர்ச்சியடைந்து வருகின்றது.சமகாலத்தில் பேராசிரியர் என்.ஞானகுமாரன்,பேராசிரியர் க.சிவானந்தமூர்த்தி,கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ், பேராசிரியர் டெஸ்மன் மல்லிகாராச்சி,பேராசிரியர் தயா எதிரிசிங்க,இளைப்பாறிய கலாநிதி காசிநாதன்,கலாநிதி இராமகிருஷ்ணன் அண்மையில் மறைந்த பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா மற்றும் வளர்ந்து வரும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மத்தியில் மெய்யியல் அறிவினை விருத்தி செய்வதில் பாரிய பங்களிப்பினை செய்து வருவதானது இன்றைய நாளில் பாரட்டப்படவேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
எனினும் மேற்கத்தேய சமூகங்களில் மெய்யியல் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று இலங்கையில் மாணவர்கள் மத்தியிலோ அல்லது சமூகத்தின் மத்தியிலோ உணரப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது. உலகமயமாக்கலின் விளைவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாப் பிரச்சினையின் தாக்கமும் இலங்கையில் மெய்யியல் கல்வியின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது.மேற்கூறப்பட்ட காரணங்களினால் மெய்யியலினை ஒரு விசேட துறையாக கற்பதற்கு மாணவர்கள் முன்வராவிடினும் மெய்யியலானது வாழ்க்கையின் ஒரு வழிகாட்டியென உணர்ந்து தமது பட்டப்படிப்பிலும் பட்டப்பின்படிப்பிலும் ஓர் துணைப்பாடமாக தேர்வு செய்ய இந்நாளில் வேண்டிக்கொள்கின்றோம்.
சமகால அரசியலில் பகுத்தறிவின்முக்கியத்துவம்
சமாதானத்துக்கும் ஜனநாயகத்திற்குமான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் வடமாகாணத்துக்கான தேர்தல், உள்ளூராட்சி தேர்தல்கள் எம்மை நாடிவரும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். மக்கள் அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களை நோக்கி சென்ற காலம்மாறி அரசியல்வாதிகள் மக்களை நோக்கி வரும் காலம் வரப்போகின்றது.இதுவரை காலமும் புரையோடிப்போயிருந்த இனமுரண்பாட்டுக்கு முடிவுகட்டவேண்டிய தருணமிது.இத்தகைய பொன்னான சந்தர்ப்பத்தினை நாம் எமது பகுத்தறிவு சிந்தனை கொண்டு அணுகப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.பொய்யையும் புழுகையும் மூலதனமாகக்கொண்டு வெறும் பசப்பு வார்த்தைகளினை மக்கள் முன் வைத்து மீண்டும் மக்களினை ஏமாற்றும் நாடகம் அரங்கேறப்போகிறது.வெறும் வார்த்தைகளினை நம்பாது எது சரி எது பிழை ஏற்கக்கூடியது எது நிராகரிக்கவேண்டியது என தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் சக்தி மனிதனுக்கே உண்டு.ஏன்,எதற்கு,எப்படிபோன்ற கேள்விகளை எழுப்பி சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து உண்மையினை உணருவோமாக.ஊழலும் இலஞ்சமும் ஒழித்திட, நாட்டில் சமாதானமும் ஜனநாயகமும் மலர்ந்திட, பொருளாதார அபிவிருத்தியடைந்திட, சிறந்த தலைமைத்துவத்தினை உருவாக்கிட, சிறந்த எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்பிட இனவாதத்தினையும் மதவாதத்தினையும் பயங்கரவாதத்தினையும் பூண்டோடு அழித்திட பகுத்தறிவுடன் இன்றைய நன்நாளில் சிந்திப்போமாக.
கட்டுரையாளர்
யாழ்.பல்கலைக்கழக மெய்யியல் துறை
விரிவுரையாளர்
 
நன்றி: தினக்குரல், நவம்பர் 18, 2010
Reply all
Reply to author
Forward
0 new messages