அன்புடையீர் வணக்கம்,
தமிழ் நாடு அரசும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து
பல்கலைக் கழக மாணவர்களுக்காக
விக்கிப்பீடியாவில் கட்டுரைப் பக்கங்கள் உருவாக்க
ஒரு பெரும் போட்டி நடைபெறவுள்ளது.
ஏழு பெரும் அறிவுத் துறைகளில் போட்டிகள்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு கொள்வார்கள்
என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு அரசு 21 பரிசுகள் தரவிருக்கின்றன.
தமிழ்நாடு அரசு, 2010 சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூர் நகரில்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத்
தமிழ் இணைய மாநாட்டையும் நடத்துகிறது.
இதனை ஒட்டி இப்போட்டிகள் நடக்கின்றன.
இணைக்கப்பட்ட விளம்பர அறிவிப்பைப் பார்க்கவும்.
இப்போட்டியில் பங்குபெற வந்துள்ள அனைத்து மாணவர்களையும்
தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வரவேற்கிறோம்..!
பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்...!!
தமிழ் விக்கிப்பீடியா
==================
தமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்.
இன்று 70 இலட்சம் சொற்கள் அடங்கிய, 21,700+ கட்டுரைகள்
கொண்ட இலவசமாக இணையத்தில் கிடைக்கும்
கலைக்களஞ்சியம். தன்னார்வலர்களால் உருவாகிவரும்
களஞ்சியம்.
விரைவில் ஒரு கோடி சொற்கள் அடங்கிய களஞ்சியமாக
வளர உள்ளது. நாள்தோறும் 80,000+ (ஆம் எண்பதாயிரம்) முறைக்கும்
கூடுதலாக பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை!!
தற்பொழுது 16,500+ பேர் பதிவு செய்துள்ள தளம்.
தமிழ்மீது நல்ல ஆர்வம் கொண்ட அன்பர்கள் வந்து
கூட்டுழைப்பு தர வேண்டுகிறேன். இராசராசன்
கோவிலைக் கட்டினான், நம் முன்னோர்கள் பேரிலக்கியம்
படைத்தார்கள் என்று பெருமைப்படும் நாம்,
நம்மால் ஆன அளவு, அறிவுக்கோயிலை எழுப்புவோம்.
உலகில் உள்ள அத்தனை பறவை, பாலூட்டிகள்,
புழு பூச்சிகள், மரஞ்செடிகொடிகள், அறிவியல் கொள்கைகள்,
அறிவாளிகள், அருஞ்செயலாளர்கள், வாழ்க்கை வராலாறுகள்,
இடங்கள், பொருள்கள் என்று எழுத மில்லியன்
கணக்கில் உள்ளன. ஆனால் ஊர் கூடி இழுத்தால்,
அத்தனை பெரிய தேரும் அசைந்து வரும் காணீர்
நண்பர்களே.
சிறுதுளி பெருவெள்ளம். வாருங்கள்!
வந்து நல்லாக்கங்கள் தாருங்கள்!
அன்புடன்
செல்வா