காலம் திருநெல்வேலியில் நடக்கும் கதை. கதாநாயகன் நெல்லையப்பன் ஒரு
வக்கீலிடத்தில் வேலை செய்கிறான். கதை களம் நெல்லையப்பனின் தினசரி
வாழ்க்கை கோர்ட் வளாகத்திலும், வக்கீல் வீட்டிலும், அவன் நண்பர்கள்
வீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. அவனுக்கு பெரிய கற்பனைகள் இல்லை.
ஒரிரண்டு சமயம் திருநெல்வேலியை விட்டு வெளியே சென்று வேலை செய்ய ஏக்கம்
கொள்கிறான். அவ்வளவே. அதற்கு மேல் அவனின் வாழ்க்கையை அதன் போக்கிலேயே
விடுகிறான். எந்த ஹீரோயிஸமும் கிடையாது, எந்த் புது அனுபவமும்
கிடையாது. இடையில் ஒரே முறை ‘கன்றுக்குட்டி காதல்’ வந்து
அவதிப்படுகிறான். அப்பா சொல்லும் பெண்ணை மறுக்காமல் மணம் செய்துகொள்ள
ஒப்புவதோடு கதை முடிகிறது.
சிறு நகரங்களில் வளர்ந்ததால் நிறைய நெல்லையப்பன்களைப்
பார்த்திருக்கிறேன். தினமும் எழுந்து, அன்றாட வேலைகளை சலிக்காமல்
செய்து, பொழுது போக்கிற்கு திரைப்படங்களைப் பார்த்து (1980-கள்),
பண்டிகைகளில் புதிது உடுத்தி தினம் ஒரு நாள் கழிந்த்து என்று வாழும்
கொடுத்து வைத்தவர்கள்.
அதனாலேயே இந்த நாவல் என் மனதுக்கு நெருக்கமானது. வண்ணநிலவனின் பலம் அவர்
தன் எழுத்துக்களில் எங்கும் தன்னைத் திணிக்கமாட்டார். ஒரு தேர்ந்த
செய்தியாளர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைத் தள்ளி நின்று பார்த்துவிட்டு
அப்படியே அதை எழுத்தில் வடித்தாற்போல இருக்கும். அனாவசிய கதாபாத்திர
மிகையுணர்ச்சி, அபத்த வசனங்கள், வலிந்து திணித்த நிகழ்ச்சிகள்
என்றெல்லாம் கஷ்டப்படமாட்டார். ஒரு பாத்திரத்தை define செய்துவிட்டார்
என்றால் அது எக்காரணம் கொண்டும் அந்த வட்டத்தைத் தாண்டாது.
அவரின் ‘ரெய்னீஸ் ஐயர் தெரு’-வோடு ஒப்பிட்டால் மாற்று குறைவுதான். ஆனால
எடுத்துக் கொண்ட களம் நாயகனின் ஒரு குறிப்பிட்ட காலத்தை, வரையறுப்பதால்
நிகழ்ச்சிகள் ஒரு எல்லைக்குள்ளேயே நின்று விடுகின்றன.
இதைப் படிக்கும்போது என்னுடைய 5 வருட கல்லூரி வாழ்க்கையை (வீட்டிலிருந்து
கல்லூரிக்கு) ஒப்பிட முடிந்தது. அதே monotonous வாழ்க்கை. படிக்கும்
ஒவ்வொருவருக்கும் இதைப் போன்ற ஒரு காலம் இருந்திருக்கும். அதை
மீட்டுருவாக்கம் செய்வதில் வண்ணநிலவன் வெற்றி பெற்றிருக்கிறார்.