
ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத மகாசபைக் கூட்டத்தில் ஸ்வாமிஜியின் பங்கு, இந்த மாநாடு பற்றிய முக்கிய தகவல்கள் ஆகியவை அடுத்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. 19 அத்தியாயங்களில் ஸ்வாமிஜியின் பணிகள் ஒவ்வொன்றாக, காலவரிசைப்படி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
1990 முதல் ஸ்வாமிஜியின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டி, சதாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.
இரண்டாவது பகுதி, ஸ்வாமிஜியின் எழுத்துப் பணிகளைத் தொகுத்துத் தருகிறது. சின்மயா மிஷனின் தியாகி பத்திரிகையில் எழுதிய தலையங்கங்கள் இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்வாமிஜியின் எழுத்துநடை மிகவும் எளிமையானதாகவும், கருத்தாழம் மிக்கதாகவும், அதே நேரத்தில் சொல்ல வரும் விஷயத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதாகவும் இருப்பதை இந்தத் தலையங்கங்கள் மூலம் அறிய முடிகிறது.
இந்த இரண்டு பகுதிகளில் முக்கியமான விஷயங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, ஏராளமான தகவல்கள் இவற்றில் இடம்பெற முடியவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்கிறது, மூன்றாம் பகுதி. இதில், பல்வேறு கேள்விகளுக்கு ஸ்வாமிஜி அளித்துள்ள பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வேதாந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த அவரது பார்வையும் இப்பகுதியில் முக்கிய அம்சமாகும்.
புகைப்படங்கள் இல்லாத பக்கமே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன; சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கும் மெருகூட்டுகின்றன.
நூலுக்கான விஷயங்களை முடிவு செய்தது முதல், அவற்றைத் தொகுத்துள்ள விதம், முக்கியப் பகுதிகளில் விடுபட்டுப் போகும் விஷயங்களை வேறு பகுதிகளில் பொருத்தமாக இணைப்பது, தேவைப்படும் இடங்களில் தொகுப்பாசிரியரின் விளக்கம், பிழைதிருத்தத்தில் அதீத கவனம், அடக்கமான லே-அவுட், அழகான அச்சு, தரமான பைண்டிங்! என நூல் உருவாக்கத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் அக்கறை மிளிர்கிறது.
மொத்தத்தில் ஸ்வாமி தயானந்தரின் பக்தர்களுக்கு, இது அவரைப் பற்றிய பயனுள்ள ஆவணம். ஸ்வாமிஜியைப் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு, அவரைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை ஏற்படுத்தித் தரவல்ல அருமையான தொகுப்பு.Swami Dayananda Saraswati Contributions & Writings -
தொகுப்பு: திருமதி ஷீலா பாலாஜி, வெளியீடு: அர்ஷ வித்யா ரிஸர்ச் அண்டு பப்ளிகேஷன் ட்ரஸ்ட், 4, ஸ்ரீநிதி அபார்ட்மெண்ட்ஸ், சர்தேசிக சாலை, சென்னை - 4. ஃபோன்:044-2499 7023 பக்கம் : 343 விலை: ரூ 3000/
- வேதா டி.ஸ்ரீதரன்