பி.ஏ. கிருஷ்ணனின் (இனிமேல் பிஏகே) ‘அக்கிரகாரத்தில் பெரியார்’
புத்தகமும் ஒரு நண்பர் குழு பேசும் பலதரப்பட்ட விஷயங்களை ஆழமாக அவருக்கே
உரித்தான எளிய, சரளமான தமிழில் பேசுகிறது. இரண்டு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்ட புத்தகத்தில் நிறைய புத்தகங்கள் ஆக்கிரமிக்கின்றன. எரிக்
ஆம்ப்லர். ப்ரான்ஸிஸ் வீன், அலெக்ஸாண்டர் வெர்த், முத்துலிங்கம்,
அசோகமித்திரன், சுரா, ஜெமோ, ஜான் கேய், பாகிஸ்தானின் கல்வி ஆராய்ச்சி,
ஜூடித் பிரவுன் என பலரும் ஆக்கிரமிக்கின்றனர். பிஏகே-வின் ஒரே
குறிக்கோள் படிக்கும் ஆர்வமுள்ள வாசகனின் இலக்கிய ரசனையை மேல் நோக்கி
மெதுவாக ஏற்றி விடுவதுதான். ’இதையெல்லாம் படிக்கலைன்னா நீ வேஸ்ட்’ என்ற
மிரட்டலான தொனியில்லை. சுய அனுபவம் என்ற பெயரில் போலி நெகிழ வைத்தல்
இல்லை. தெரிதா, காண்ட், ஃப்பூக்கோ போன்ற பெயர் தெளிப்புகள் இல்லை.
அங்கங்கே தான் பங்குகொண்ட நிகழ்ச்சிகள், உதா. கிரிக்கெட் போட்டிகள்,
அவரின் சிறு வயது கால சாதி சம்பந்தமான பதிவுகள், சு.ரா-வோடு பொழுது
போக்கியவை என பலதரப்பட்ட பதிவுகள் இதில் உள்ளன. பல இடங்களில் அநாயாசமாக
சங்க இலக்கியத்தைப் பொருத்தமாகக் கையாள்கிறார்.
பிஏகே-வின் சரளமான தமிழ் நடையை சொன்னேன். அவரின் மொழிபெயர்த்தலை
சொல்லவேண்டும். ஆங்கிலத்திலிருந்து தமிழில் வெகு எளிதாகப் புழங்கும்
வார்த்தைகளைப் போட்டு நாம் படிக்கும்போது நெருடாமல் தாண்ட வைக்கிறார்.
உதாராணம்: ‘முத்துக் காதணி அணிந்த பெண்’ அத்தியாயம்.
அவர் சொன்னவற்றையெல்லாம் படிப்போமா என்றால் அது அவ்வளவு எளிதல்ல, முதலில்
அவரின் இரசணையில் தேர்ந்தெடுத்து நமக்கு அறிமுகம் செய்கிறார். அதில்
நாம் நமக்குப் பிடித்தவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதுவே அந்தப்
புத்தகத்திற்கு வெற்றி நான் அவர் பட்டியலிட்டதில் ‘Russia at War' -
Alexander Werth (இப்போது அச்சில் இல்லை, ஆனால் அமேசானில் பழைய பிரதி)
முக்கியமாகக் கருதியதால் வாங்கினேன்.
படிக்கவேண்டிய புத்தகம். புத்தக மதிப்புரைகளுக்காக மட்டுமல்ல. எப்படி
ஒரு புத்தகத்தை நீங்கள் உன்வாங்கி அதை பலதரப்பட்ட கண்ணிகளோடு
தொடர்புபடுத்தி எழுதுவதைக் கற்பதற்காகவும். NYTimes, NewYorker,
Atlantic புத்தக மதிப்புரைகள் தரத்திற்கு பிஏகே-வால் எழுத முடிகிற ஒரே
காரணம் தமிழில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த வாசிப்பை அப்படியே
ஆங்கிலத்துக்கும் அமைத்துக் கொண்டதுதான்.
பதிப்பாளர்: காலச்சுவடு
கிடைக்கும் இடம்: http://udumalai.com/?prd=&page=products&id=1180