குஷ்வந்த் சிங்கின் டெல்லி புத்தகமும் ஒரு பேரரசின் வேர்களைத் தேடி
அலைகிறது. ஒரு நகரத்தின் வரலாறு என்பது அந்த சமூகத்தின் முகம். கதையின்
நாயகன்/நாயகி டெல்லி நகரம். ஆண்மையும், பெண்மையும் இனைந்த ஒரு உருவம்.
இதை ஒரு சுற்றுலா வழிகாட்டி(சீக்கியர்) மூலம் அதன் சொரூபத்தைக்
காட்டுகிறார். வழிகாட்டியின் தோழியாக ஒரு அரவாணி. Delhi நகரத்தைப்
போன்றவள்.
கதையானது, 1265, சுல்தான்கள்(பால்பன், கில்ஜி போன்றவர்கள்) காலத்தில்
தொடங்கி, 1984 அக்டோபர் 30-ந் தேதியோடு முடிகிறது. நகரம் சந்தித்த
மகோந்நதங்கள், தோல்விகள், சோகங்கள், துரோகங்கள், போர்கள், அபத்தங்கள்,
கொடூரங்கள் அந்த அந்த காலப் பாத்திரங்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.
நாவல், பல பாத்திரங்கள் மூலம் வரலாற்றைப் பார்க்கிறது. முஸாதி லால்
சுல்தான்களையும், தைமூர் இந்தியப் படையெடுப்பையும், ஒரு சீக்கியர்
ஔரங்கசீப் பற்றியும்(குரு கோபிந்த் சிங்கின் தலை சீவப்படும் நிகழ்ச்சி
உட்பட), பின் ஔரங்கசீப் தன் வரலாற்றைப் பதிவு செய்வது, 1857 சிப்பாய்
கலகத்தில் நடந்த அட்டூழியங்கள்(ஆங்கில மற்றும் இந்திய தரப்பு- சுஜாதாவின்
'ரத்தம் ஒரே நிறம்' கதையும், இதைப் பற்றிப் பேசியிருக்கிறது), பின்
ஆங்கில ஆட்சியில் புது தில்லி எவ்வாறு உருவானது, சுதந்திரக் கலவரங்கள்
தொடங்கி, இந்திராகாந்தி கொலையின் இனக் கலவரங்களில் முடிகிறது.
புத்தகத்தில் குஷ்வந்த் சிங் மிகவும் ஒன்றி எழுதியப் பகுதி மீர் தஹ்வி
மீர் என்ற உருதுக் கவிஞரின் (மகோந்நததையும், காமத்தையும், தன் அழிவையும்)
டெல்லி நகரத்தோடு பிணைந்து எழுதப்பட்ட ‘தன் வாழ்க்கை’ பாணி வரலாறு.
குஷ்வந்த் சிங் தானே அந்தக் கவிஞராக மாறினாரோ என்று தோன்றும் அளவிற்கு
authenticity தெரியும். இந்தப் புத்தகத்தை முடிக்க அவருக்கு 20
வருடங்கள் ஆயின் என்பதில் ஆச்சரியமில்லை.
பொதுவாகவே உர்து குறும்பாடல்களில் சிங் விருப்பமுடையவர். கதையோ உர்து
ஆட்சி செலுத்தியக் காலக்கட்டம். கேட்கவேண்டுமா? மனிதர் நின்று
விளையாடுகிறார். என்னால் முடிந்தது (மீர் மன்னிப்பாராக):
மீர்...இரவின் துயரத்தில்
காதலில் நெருப்பாக
அது தீர்ந்தபின் சாம்பலாக.
இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு அடுத்த முறை நீங்கள் பழைய டெல்லி
நோக்கி வரலாற்றைத் தேடி சென்றீர்கள் என்றால் அதற்கு குஷ்வந்த் சிங்கும்
ஒரு காரணம்.
பதிப்பகம்: பெங்வின்
கிடைக்கும் இடம்: http://bit.ly/qbXhB6