நலம் தரும் சொல் - சிறுகதைக் குறுந்தகடு விமர்சனம்

11 views
Skip to first unread message

Arvind Swaminathan

unread,
Aug 15, 2011, 7:21:58 AM8/15/11
to tamilvasagan
இந்த முறை சிறுகதைக் குறுந்தகடு ஒன்று பற்றிய விமர்சனம்.

சிறுகதை ஆசிரியரும், சிறுகதை ரசிகருமான எழுத்தாளர் பூரம். சத்தியமூர்த்தி, தனது பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தின் சார்பாக ‘நலம் தரும் சொல்’ என்ற தலைப்பில் சிறுகதைக் குறுந்தகடு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 1960களில் சுதேசமித்திரன், மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களில் அவர் எழுதி பரிசுகள் பெற்ற சிறுகதைகளான ’நலம் தரும் சொல்’, ’சங்கரம்’, ’ஸ்தல விருக்ஷம்’, ’அந்தி வேளை’ என்னும் நான்கே தற்போது குறுந்தகடு வடிவில் வெளிவந்துள்ளது.

துறவறம் மேற்கொள்ள வேண்டிய இலட்சியத்தில் திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டிருக்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது. காஷாய ஆடை தரிக்க விரும்புவன், கல்யாண மாலை பூண நினைக்கிறான். அந்தக் காதல் நிறைவேறியதா, இல்லை அவன் லட்சியம் நிறைவேறியதா என்பதை ”நலம் தரும் சொல்” விளக்குகிறது. பாம்பே கண்ணன் நாயகனுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. அவர் குரலும் பாவமும் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வை மட்டுமல்ல; கதை நடக்கும் திருமாலிருஞ்சோலைக்கே அழைத்துச் சென்று விடுகிறது என்று சொல்லலாம். உறுத்தாத பின்னணி இசையும், தெளிவான, உச்சரிப்புச் சுத்தத்துடன் கூடிய பின்னணிக்குரல்களும் வலு சேர்க்கின்றன (சிறுவயதில் ஞாயிறு தோறும் மாலையில் வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகங்கள் கேட்ட உணர்வு வருவது உண்மை)

அடுத்து, காதலும் இசையும் கலந்த சிறுகதை சங்கரம். கதாநாயகன் ஒரு அநாதை. அவனை அன்புகாட்டி வளர்க்கும் மாமாவுக்கும், மாமிக்கும் என்றும் நன்றியோடு இருக்க விரும்புகிறான். அவர்களின் ஒரே மகள் கல்யாணி. மாமி திடீரென்று மறைய, சங்கரன் மனமொடிந்து போகிறான். கல்யாணி கவலையில் வீழ்கிறாள். அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்வதை தனது கடமையாக நினைக்கிறான். சங்கரன். ஆனால் கல்யாணியோ அவனையே மணம் செய்து கொள்ள நினைக்கிறாள். சங்கரன் அதை மறுக்கிறான். பின்னர் சம்மதிக்கிறான். திடீரென அவன் மாமா, அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுமாறும் கூறுகிறார். அவர் கூறுவதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட சங்கரன், கல்யாணியின் மீதான காதலைத் துறந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது, கல்யாணிக்கும் அவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதை ”சங்கரம்” என்னும் தலைப்பில் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். கதையின் தலைப்பிலேயே முடிச்சு உள்ளது.

குடும்ப உறவுகளை, அண்ணன் தங்கை பாசத்தை, நகர வாழ்க்கையின் உதாசீனத்தை, பணம் வந்தால் மனிதர்கள் மாறிப் போய் விடுவதை உணர்ச்சி பொங்கக் கூறுகிறது அடுத்த சிறுகதையான ஸ்தல விருஷம். இந்தச் சிறுகதையின் மைய இழையாக இருப்பது சாதி. இறைவன் படைப்பில் அனைவரும் சமமே! ஆனால் மனிதர்கள் தங்கள் தவறான புரிதல்களினாலும், கற்பிதங்களினாலும் தங்களுக்குள் உயர்வு, தாழ்வு கருதிக் கொள்கின்றனர் என்பதை இக்கதை விளக்குகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தக் கதை ஒரு முதலியார் பெண் எப்படி ஐயங்கார் பெண்ணாக மாறுகிறாள் என்பதைச் சொல்கிறது எனலாம்.

அடுத்து வரும் ’அந்திவேளை’ கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. வெகு சாதாரணமான கதை.  கிராமத்தில் மிகப் பணக்காரக் குடும்பங்கள் இரண்டு. ஒற்றுமையாக இருந்த அக் குடும்பங்கள் ஏதோ காரணத்தால் பிரிந்து, பேச்சு வார்த்தையே இல்லாமல் போய் விடுகிறது. கதையின் தலைவிக்கு, பிரிந்து போன அந்தக் குடும்பத்தின் வாரிசு மீது காதல். மேலும் ஏதோ காரணத்தால் பிரிந்த அந்த இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்கவும் அவள் விரும்புகிறாள். ஏன் அந்தக் குடும்பம் பிரிந்தது, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, மீண்டும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா என்பதுதான் கதை. இந்தக் கருவை அடிப்படையாக வைத்து நிறைய திரைப்படங்கள், நாடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. என்றாலும் பண்டாரம், அம்மன் அருள், மல்லிகை வாசம் என்றெல்லாம் சேர்த்துக் கோர்த்து கதைக்கு ஒருவித மாந்திரீக யதார்த்தத் தன்மையைக் கொண்டு வந்திருகிறார் ஆசிரியர்.

மேற்கண்ட கதைகளை 1960கால கட்டத்தில் நான் படிக்கவில்லை. (அப்போது நான் பிறக்கவே இல்லை என்பது வேறு விஷயம்) இப்போதுதான் படித்தேன். காலம் கடந்து, தற்போதைய கலாசார மாற்றக் காலத்தில் இக்கதைகளை அவதானிக்கும் போது சாதாரணமாகவே தோன்றக் கூடும். ஆனால் அந்தக் காலத்தில் இவை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டவை எனும் விதத்தில் கவனிக்கத் தகுந்த ஒன்றுதான். இவற்றை எழுதியிருக்கும் பூரம் சத்தியமூர்த்தி  ஒரு சிறுகதை ஆசிரியர். கலாரசனை மிக்கவர். 80 வயதைக் கடந்தவர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும்சென்னை பார்த்தசாரதி கோவிலில் மாலை நேரங்களில் தினந்தோறும் இலவசமாக வேதம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சிறுகதை இலக்கியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார்.

சிறுகதைகளுக்கான வாசக ஆதரவுகள் குறைந்துபோய் விட்ட கால கட்டத்தில், 1960-70களில் வெளிவந்த தனது சிறுகதைகளை குறுந்தகடாகப் பூரம் வெளிக் கொணர்ந்திருப்பது தைரியமான முயற்சி. இந்தக் குறுந்தகட்டின் விலை ரூ. 100. பாம்பே கண்ணன் அவர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். 

தொடர்புக்கு : bombay...@hotmail.com.

பூரம் சத்திய மூர்த்தி - 9444452202 

ஒருங்கிணைப்பாளர் - பி.வெங்கட்ராமன் - 9841076838

”கருவளை” என்ற தலைப்பில் மற்றொரு சிறுகதைக் குறுந்தகட்டையும் பூரம் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி பின்னால் எழுத முயற்சிக்கிறேன். 

(முன்பு என் வலைப்பதிவில் எழுதியதன் சுருக்கம்)

Bala Boston

unread,
Aug 16, 2011, 6:53:14 AM8/16/11
to tamilv...@googlegroups.com
உங்க பதிவு எங்கே இருக்கு? நீங்க எழுதற விஷயமும் விமர்சனமும் நல்லா இருக்கு. நன்றி
பாலாஜி

Arvind Swaminathan

unread,
Aug 18, 2011, 1:03:53 AM8/18/11
to tamilv...@googlegroups.com
ஹா.. ஹா... பாலாஜி நீங்கள் கூட அதை ஃபாலோ செய்வதாக ஞாபகம். ஆனால் நான் பதிவு போடுவதை நிறுத்தி (சோம்பேறித்தனத்தால்) பல மாதங்கள் ஆகி விட்டது. விமர்சனம் பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

இதோ முகவரி -----


அரவிந்த்

2011/8/16 Bala Boston <bsu...@gmail.com>
உங்க பதிவு எங்கே இருக்கு? நீங்க எழுதற விஷயமும் விமர்சனமும் நல்லா இருக்கு. நன்றி
பாலாஜி

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msg/tamilvasagan/-/VYdBuv--gqIJ.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.

Reply all
Reply to author
Forward
0 new messages