புத்தகமேசை: கறுப்பாக இருப்பது... பிறக்கும்போது நான் கறுப்பாக இருக்கிறேன்
பின் வளரும் போதும் கறுப்பு
பனிக்காலத்திலும் கறுப்பு
வெயிலில் நடக்கையிலும் கறுப்பு
காய்ச்சலடித்துக் கிடக்கும் போதும் கறுப்பு
சாகும் தறுவாயிலும் நான் கறுப்பு தான்..
ஆனால் நீ
பிறக்கும்போது ரோஜா நிறத்தில் இருக்கிறாய்
வளர்கையில் வெள்ளை
பனிக்காலத்தில் நீலம்
வெயிலில் செல்கையில் சிவப்பு
காய்ச்சலில் பச்சை நிறம்
இறக்கும்போது நீ சாம்பல் நிறம்
இந்த லட்சணத்தில்
என்னைப் போய் 'நிறத்துக்காரன்' என்று
அழைக்கத் துணிய முடிகிறது உனக்கு!
மால்கம் எக்ஸ் அவர்களது மேற் கோளாகவும், யாரோ ஆப்பிரிக்கச் சிறுமி எழுதிய 2007-ம் ஆண்டின் சிறந்த கவிதை என்றும் விதவிதமாகச் சொல்லப்படும் மேற்படி கவிதை நிறவெறியின் வலியை - பல மணி நேர ஆவேச உரையோ, ஒரு நீண்ட நெடும் கட்டுரையோ சொல்லத் துடிக்கிற செய்தியை, காத்திரமாகச் சொல்லி விடுகிறது. அப்பன் பெயர் தெரியாத கொடுமையைப் போல் ஒரு குழந்தை யை வாட்டத்தக்க கொடுமை இன் னொன்று இருக்க முடியுமா என்று தெரி யவில்லை. அப்பனாக இருக்கக் கூடு மென்று சொல்லப்படுகிற வெள்ளைக் கார எஜமானன் ஒருவனின் கையா லேயே அந்த உறவு காட்டிக் கொள்ளப் பட முடியாத நிலையில், கீழ்த்தரமாக நடத்தப்படுகிற சிறுவனின் உள்ளத் தில் பிறக்கிற ஆவேசம் அவனை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை அந்த வலிகளோடும், அவஸ்தைகளோடும், அவ மானத்தின் பதிவுகளோடும் சொல்வது தான் பிரெ டரிக் டக்ளஸ் அவர்களின் சுயவரலாறு.
மனிதர்களை அடிமைப்படுத்தி நாடு விட்டு நாடு பலவந்தமாக இடம் பெயர்த்து வழிவழியாக - நூற்றாண்டு களாக அடிமைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்க முடியும் என்று வெள்ளைக்கார ஆணவம் நிரூபித் ததன் சோக வரலாற்றை ஒரு சிறிய சாளரத்தின் வழியே பார்த்துக் கூட அதிர்ந்து போய்விட முடியும் என்பதன் அனுபவமாக இருக்கிறது கறுப்பின அடிமையின் சுயவரலாறு.
பொதுவாக, தந்தையைக் குழந் தைக்குத் தாய் தான் அறிமுகப்படுத் துகிறாள். அருகருகே இருந்தும் கூட தாயின் முகத்தைப் பதிய வைத்துக் கொள்ளக்கூட வாய்ப்பில்லாத தொலைவில், வாழ்க்கையின் முதல் 7 ஆண்டுகளைக் கடக்கிற டக்ளஸ் அவள் இறந்த செய்தியைக் கூடக் காலம் கடந்து அறிகிற 'வரம்' பெற்று வந்தவனாக இருக்கிறான். அதற்குள் தனது நிறமும் தனது பிறப்பும் தனக்கு எத்தகைய இருண்ட எதிர்காலத்தை வழங்க இருக்கிறது என்பதைச் சுய மாகவும், அடுத்தவர்கள் மூலமாகவும் சுவைத்து விடுகிறான்.
எதிர்த்துப் பேச அல்ல, பேசவே கூடாத சூழலில் உணர்வுகளை முடக் கிக் கொண்டு தாங்கள் வாழ அனு மதிக்கப்படுகிற காலம் வரை கறுப்பின மனிதர்கள் உழைத்துக் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நன்னடத்தையின் இன்னொரு நுனியில் காத்திருப்பது விடுதலை என்ற புரிதலில் அல்ல - வேறு வழி என்ன இருக்கிறது என்ற சலிப்பில் தான்! விடுதலை அவர்களுக்கு மர ணம் ஒன்றின் மூலம் மட்டுமே வந்து சேருகின்றது. பெரும்பாலும் அது இயற்கையாக நிகழ்வது அல்ல. அத்தகைய கொலைகளைப் புரிகிற வன் ஆராதிக்கப்படுவது, மிஞ்சி இருப் பவர்களின் ஆன்ம பலத்தை அரிக் கிறது. அல்லது அவர்களையும் வழிக் குக் கொண்டு வருகிறது.
எல்லோரும் அப்படி இருந்துவிட முடியாது அல்லவா? ஒடுக்குமுறை எவ்வளவிற்குத் தீவிரம் பெறுகிறதோ அந்த அளவிற்குக் கலகக் குரல்க ளும் எழும்பவே செய்கின்றன. கலகக் குரல்கள் எல்லாமும் பதிவு பெற்று விடுவதில்லை. அப்படி ஆகாது பார்த் துக் கொள்கின்றன ஆதிக்க சக்திகள். தப்பி வெளிப்பட்டுவிடுகிற கலகக் குரல்களின் வலு சமூகத்தின் உரத் தைப் பல மடங்கு கூட்டிப் பெருக்கு கிறது. ஆண்டுகளைக் கடந் தும், நூற் றாண்டுகளைக் கடந்தும் கூட, எதிரே அமர்ந்து பேசுவதைப் போல ஒலிக் கிறது. பிரெடரிக் டக்ளஸ் அவர்களின் குரல், அப்படியான குரல் களில் ஒன்று.
மொழிபெயர்ப்புக்குப் பல்வேறு இலக்கணங்கள் சொல்லப்படு கின் றன. வெற்றிகரமான மொழி பெயர்ப்பா ளர்களின் உத்திகள் ஒன்று போல் இருப்பதுமில்லை. ஆனால் அடிப்படை யில் ஓடுகின்ற நீரோட்டம் ஒன்றாக இருக்க வேண்டும். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் வேட்கையன்றி அது வேறென்னவாக இருக்கக் கூடும்? இரா. நடராசன் சொந்த சாகித்தியத்தை இசைக் கும்போது என்னென்ன பிரயாசைகள் மேற்கொள்கின்றாரோ, அதற்கு ஒரு படி மேற்சென்று இசைக்கும் தன் மையதாய் மொழிபெயர்ப்புகளைச் செய்கிறவர். ஒரு சின்னஞ்சிறு கவி தையோ, மேற்கோளோ, நோபல் பரிசு பெற்றவரின் ஏற்புரையோ ஒவ்வொரு சொல்லின், முடிந்தால் அதன் உட் கூறின் உள்ளே ஆழ்ந்திருக்கும் பொருள் சிதையாமல் தமிழில் இதம் பதமாக வழங்கி வருகிறவர். பிரெ டரிக் டக்ளஸ் நூல், ஒடுக்கு முறைக்கு எதி ரான கிளர்ச்சி பொங்கும் உள்ளங்க ளுக்கு அவரது மதிப்பிற்குரிய கொடை.
ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்ட இந்நூலை, தேடல் நிறைந்த வாசகர் களுக்கு மட்டுமல்ல, வாசிப்பின் சுவையை உணர்த்தி ஈர்க்கும் புதிய வாசகர்களுக்காகவும் இயங்கும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இந்த நூல் மறுவடிவம் பெறுவது மானுட விடுதலைக்கான தாகத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாகும்.
ஒரு ரயில் பயணத்திற்கிடையே தோழர்களிடம் முக்கிய பகுதிகளைப் படித்துக் காட்டிப் பகிர்ந்து கொண்டே வாசித்து முடித்த இந்த நூல், வாசிப்பின் போதும், முடித்துவிட்ட பின் னும் கறுப்பின அடிமைகள் பற்றிய வர லாறாக மட்டும் பதியவில்லை. தீண் டாமைக் கொடுமை ஆழமான வேரூ ன்றி, சாதிய ஒடுக்குமுறை மண்டிக் கிடக்கும் இந்தியச் சமூகத்தின் வர லாற்றை - நிகழ்காலத்திலும் தொட ரும் அராஜகத்தை வேறு வடிவத்தில் நடித்துக் காட்டிய காட்சிகளாகவே உறைந்து போய் நிற்கிறது.
(நூல் அறிமுகமாகமுகப்பில் எழுதப்பட்டதிலிருந்து..)
அமெரிக்க கறுப்பு
அடிமையின் சுயசரிதை
பிரெடரிக் டக்ளஸ்
தமிழில்: இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, சென்னை- 600 018. பக். 96, விலை ரூ.50/-
- எஸ்.வி.வேணுகோபாலன்,