You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamil...@googlegroups.com
ஐந்தாவது முறை உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதைப் பாராட்டும் விதத்தில் ரூ. 2 கோடி பரிசுத்தொகை அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதுவரை விளையாட்டு வீரர்களுக்குத் தமிழக அரசு அளித்துள்ள பரிசுத் தொகையிலேயே மிக அதிகமானது இதுதான்.
எப்போதும் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே இத்தகைய பெரும் பரிசுத்தொகை கிடைப்பது வழக்கமாக இருக்கும்போது, செஸ் விளையாட்டு வீரருக்கு இத்தகைய உயர்வான பரிசுத்தொகை அளிப்பது மற்ற விளையாட்டுகளும் முக்கியமானவைதான் என்பதை இளைஞர்கள் மனதில் பதிய வைக்க இன்றியமையாதது. குறிப்பாக, "செஸ்' விளையாட்டை நோக்கி நமது இளைஞர்களின் கவனம் திரும்ப இது வழிகோலும்.
கிரிக்கெட் விளையாட வேண்டுமானால் அதற்கான மட்டைகள், கட்டைகள், பந்து, கால்களுக்குப் பட்டைகள், கைகளுக்கு உறைகள் என எல்லாம் வாங்க சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது. டென்னிஸ், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தனி இடம் தேவைப்படுகிறது. இதற்கான மன்றங்களில் உறுப்பினராகச் சேர்ந்தால் மட்டுமே விளையாட முடியும். இதற்கும் சில ஆயிரம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். ஆனால், செஸ் விளையாட இந்தச் செலவுகள் ஏதுமில்லை.
செஸ் விளையாட்டிலும்கூட சிலர், தனிப்பயிற்சிகள் அளிப்பதாகவும், மாநில மற்றும் அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம்பெறச் செய்வதாகவும் உறுதி அளித்து, தரவரிசை மூலம், விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் அல்லது நல்ல வேலை கிடைக்கும் என்று கூறி கணிசமான தொகையை வசூலிக்கிறார்கள். இருப்பினும், இவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
இந்த ஆசையின் காரணமாகத்தான் தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் அனுமதி இருக்கிறதா, இல்லையா என்றுகூட விசாரிக்காமல், எந்த அமைப்பு செஸ் போட்டி நடத்தினாலும் குழந்தைகளைப் பங்குகொள்ள வைக்கின்ற போக்கும் வளர்ந்தது. அண்மைக்காலமாக, அத்தகைய அங்கீகாரம் பெறாத போட்டிகள் பெரிதும் குறைந்து விட்டன என்பது சற்று ஆறுதலளிக்கும் விஷயம்.
தரவரிசை, வேலை என்பதைவிட செஸ் விளையாட்டு மூளைக்குத் தரப்படும் பயிற்சி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னை எதிர்த்து ஆடுபவர் நகர்த்தும் ஒவ்வொரு நகர்வுக்கும் அந்த 64 கட்டங்களில் ஏற்படும் மாற்றங்களையும், தான் நகர்த்தும் ஒரு நகர்வு ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் சிந்திக்க வைக்கிறது.
இசையில் மனம் ஆழ்ந்துவிடுவதைப் போல, செஸ் விளையாட்டிலும் தனியொருவராக மனதை லயிக்கச் செய்ய முடியும். அதற்கான, 2 நகர்வுகளில் அல்லது நான்கு நகர்வுகளில் ஆட்டத்தை முடிக்கும் செஸ் விளையாட்டுகள் உள்ளன. சு-டோ-கு போல இந்தக் காய் நகர்த்தலை மனதிலேயே போட்டு முடிக்க முடியும்.
மூளைக்குப் பயிற்சி தரும் இத்தகைய தமிழர் விளையாட்டுகள் பல்லாங்குழியும், ஆடு-புலி ஆட்டமும். பல்லாங்குழி ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் எந்தக் குழியில் காய்களை எடுத்துத் தொடங்கினால், அதிக காய்கள் உள்ள குழியை அள்ளிச் செல்ல முடியும் என்பதை மனக்கணக்குப் போடும் திறன் படைத்தவர்களாகப் பெண்கள் இருந்தார்கள். பல்லாங்குழி இல்லாத வீடுகளில், வெறும் தரையில் கட்டம்போட்டு காய்கள் நிரப்பி விளையாடவும் முடியும். ஆடு-புலி ஆட்டமும் இப்படியானதொரு மூளைக்கு வேலை தரும் விளையாட்டே. ஆனால், இன்று இவற்றை விளையாடுவோர் யாருமில்லை.
பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டில் ஆர்வத்தையும் திறனையும் வளர்க்க 38,000 சதுரங்க மன்றங்களை பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சிகள் பள்ளி விளையாட்டு ஆசிரியர் அளவில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த செஸ் மன்றங்கள் உருவாக்கப்பட்டுவிடும் என்றும் அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். ஏன் இதில் தனியார் பள்ளிகள் சேர்க்கப்படவில்லை? தனியார் பள்ளிகளும் இணைவு கொண்டதாக இந்த செஸ் மன்றங்கள் பாரபட்சமின்றி அமைய வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவிலும், சில மாவட்டங்களைக் கொண்ட மண்டலப் போட்டிகளாகவும் நடத்தி, பிறகு மாநில அளவில் போட்டிகள் நடத்துவதைப்போலவே செஸ் போட்டிகளும் அனைத்துப் பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும், கிராமப்புற மாணவர்களுக்கு பலஅடுக்குச் சிந்தனையோட்டம் எளிதானது. நகர்ப்புற மாணவர்களை செஸ் விளையாட்டில் வெற்றி கொள்ளவும், அதன் மூலம் தங்களது தாழ்வு மனப்பான்மையை வெற்றி கொள்ளவும் அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.
ரூ.2 கோடி காசோலையைப் பெற்றுக்கொண்ட ஆனந்த், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடங்கவிருக்கும், 7 வயது முதல் 17 வயதினருக்கான சதுரங்க மன்றங்களுக்குத் தான் எந்தவிதமான உதவியையும் செய்யத் தயார் என்று கூறியுள்ளார். இத்தகைய முயற்சியில் பெருநிறுவனங்களையும் இணைத்துக்கொண்டால், போட்டிகள் நடத்துதல், மேலதிகமான பரிசுத்தொகை ஆகியன சாத்தியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அவரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழகத்தின் எந்தத் தெருக்கள், திடல்கள், காலிமனைகள் அல்லது காய்ந்த வயல் என எங்கு பார்த்தாலும் சிறார்களும் இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவதையே பார்க்க நேரும் சூழலில், செஸ் ஆட்டத்துக்குக் கொடுக்கப்படும் ஊக்கம் அடுத்த தலைமுறையை, ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்ய வைக்கும்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் நகர்ப்புற மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. இன்று அது பலமணி நேர மனித உழைப்பை கிராமங்கள்வரை வீணாக்கும் பணம் கொழிக்கும் விளையாட்டாகி விட்டது. இந்த நிலையில் செஸ் விளையாட்டை கிராமப்புறங்களில் பிரபலப்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் மூளைக்கு வேலை கொடுத்தது போலவும் இருக்கும், சர்வதேச அளவில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும் உதவும்.