கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு நினைவிடம் அமையுமா?
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கம்பனுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்ப ராமாயணத்தை எழுதி அழியாப்புகழ் பெற்ற தமிழ்க் கவிச்சக்கரவர்த்தியான கம்பனின் சமாதி சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூரில் பிறந்து திருவெண்ணெய் நல்லூரில் கம்பன் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என கூறப்படுகிறது. தான் எழுதிய ராமாயணத்தை கி.பி. 886ல் அரங்கேற்றினார். அதன் பின்னரே கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார்.
சோழ நாட்டிலிருந்து வெளியேறி நாடோடியாய் பல்வேறு இடங்களில் சுற்றித்திறிந்த கம்பன் இறுதியாக சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டைக்குச் சென்றார்.
அங்கு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனின் கவிநயம் மிகுந்த பேச்சால் கவரப்பட்டு அந்த ஊரிலேயே தன் இறுதிகாலத்தைக் கழிக்க எண்ணினார்.
வறுமையில் வாடிய கம்பர் நாட்டரசன்கோட்டை கிராமத்தின் எல்லையில் மரணமடைந்தார். கம்பர் இறந்த இடத்தில் சிறிய அளவில் சமாதி அமைக்கப்பட்டு இன்றளவிலும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பன் சமாதி உள்ள இடத்தில் இருந்து மண் எடுத்து நாக்கில் வைப்பது வழக்கம். இதனால், குழந்தை நல்ல தமிழாற்றல் மிகுந்த குழந்தையாக வளரும் என்பது பெற்றோரின் நம்பிக்கை.
நாட்டரசன்கோட்டையில் இருந்து சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடியில் கம்பனுக்கு மணிமண்டபம் உள்ளது. ஆனால், கம்பர் சமாதி உள்ள இடம் தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதால் அந்த இடத்தில் அரசால் இதுவரை வேறு எந்த கட்டிடங்களும் கட்ட முடியவில்லை.
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழுக்கு அழியாப் புகழ் சேர்த்த கம்பனுக்கு வெளிநாடுகள் உட்பட பல ஊர் களில் பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவர் இறந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் கம்பனுக்கு பெரிய அளவில் விழா எதுவும் நடத்தப்படுவதில்லை.
ஏற்கனவே இவ்வூரில் உள்ள கோயில்களோடு சேர்த்து கம்பர் சமாதியை யும் கோயிலாக கருதி வருவதால் கம்பருடைய உண்மையான தமிழ்ப் பற்று, கம்பர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஆகியன நாளடைவில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மறையும் நிலை உள்ளது.
எனவே சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்களின் கீழ் கம்பன் நினைவிடத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார் இடத்தில் உள்ள கம் பன் சமாதியை அரசே ஏற்றோ அல்லது சமாதியிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள அரசு நிலத்தில் நினைவிடம் அமைத்து வருடந்தோரும் அரசே கம்பன் விழாவை நடத்த முன்வர வேண்டும்’ என்றனர்.